Published : 21 Aug 2015 12:56 PM
Last Updated : 21 Aug 2015 12:56 PM

சென்னையில் அரங்கேறும் ‘சில்லு’

தமிழ் நாடகங்களுக்கு மறுமலர்ச்சி வந்து கொண்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். சமீபத்தில் மேடையேறிய அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாடகத்துக்கும், இந்து மெட்ரோ ப்ளஸ் நாடக விழாவில் இந்த வருடம் முதன் முறையாக மேடையேற்றப்பட்ட தமிழ் நாடகத்துக்கும் கிடைத்த மாபெரும் வரவேற்பே இதற்குச் சான்று.

சென்னையில் நாடகங்களுக்குப் பஞ்சமே இல்லை. இங்கு பல நாடகக் குழுக்களும் தொடர்ந்து வித்தியாசமான, விறுவிறுப்பான நாடகங்களை மேடையேற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. சென்னை நாடக ஆர்வலர்களுக்கு பரிச்சயமான ஸ்ரத்தா அமைப்பு, அமெரிக்க விரிகுடாப் பகுதி நாடகக் குழுவான க்ரியாவுடன் இணைந்து ‘சில்லு’ என்ற நவீன அறிவியல் புனைவு நாடகத்தை வழங்கவிருக்கிறது. இதுவரை 18 நாடகங்களை மேடையேற்றியிருக்கும் ஸ்ரத்தாவின் குறிக்கோள், தரமான எழுத்தாளர்கள், இயக்குநர்கள், மற்றும் நடிகர்களை அறிமுகப்படுத்துவது. அதைச் சில்லு நாடகத்திலும் செயல்படுத்துகிறது.

எதிர்காலத்தில் நடப்பதாகச் சித்தரிக்கப்படும் விறுவிறுப்பான அறிவியல் புனைவு சம்பவங்கள்தாம் சில்லுவின் கதைக்களம். இதை எழுதியவர் பிரபல எழுத்தாளர் இரா. முருகன். இவர் ஸ்ரத்தாவுடன் இணைவது இரண்டாவது முறை. அவருடைய மூன்று குறு நாடகங்களை ஸ்ரத்தா ஏற்கனவே மேடையேற்றியிருக்கிறது.

சில்லு நாடகத்தை அமெரிக்காவை சேர்ந்த க்ரியாவின் தீபா ராமானுஜம் இயக்கவிருக்கிறார். கே. பாலசந்தரின் ‘ப்ரேமி’ உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்கள், பல மேடை நாடகங்கள் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். இதுவரை 9 முழு நீள நாடகங்களை இவர் இயக்கியிருக்கிறார். இவருடைய நாடகங்கள், அமெரிக்காவில் பல இடங்களிலும், சென்னையிலும் மேடையேறியிருக்கின்றன. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு- நயன்தாரா நடிப்பில் வெளிவர இருக்கும் ‘இது நம்ம ஆளு’, சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரஜினி முருகன், விஜய் ஆண்டனி நடிக்கும் ‘பிச்சைக்காரன்’ ஆகிய திரைப்படங்களிலும் இவர் நடித்துக்கொண்டிருக்கிறார்.

முக்கியமான எழுத்தாளர், கவனத்துக்குரிய இயக்குநர், நாடகக் கலா ரசிகர்களுக்கு பரிச்சயமான க்ரியா -ஸ்ரத்தா குழுக்களின் கூட்டணி என ‘சில்லு’ நாடகத்துக்கு எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

புதிய நாடக முயற்சி ஒன்றின் ஃபர்ஸ்ட் லுக் விளம்பரச் சுவரொட்டியை ஒரு முன்னணி நடிகர் வெளியிடுவது இதுவே முதல் முறை. நடிகர் விஜய் சேதுபதி ‘சில்லு’ நாடகத்தின் விளம்பரப் போஸ்டரை கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி வெளியிட்டார். அதற்கு முகநூலில் நல்ல வரவேற்பு இருப்பதாகத் தெரிவிக்கிறார் தீபா ராமானுஜம்.

‘சில்லு’ நாடகத்துக்குப் பிரபல திரைப்படக் கலை இயக்குநர் வி. செல்வகுமார் மேடையை வடிவமைக்க உள்ளார். பல ஆங்கில நாடகங்களுக்கு இசை அமைத்த அனுபவம் கொண்டவரான அமெரிக்காவைச் சேர்ந்த கவிதா பாளிகா இந்த நாடகத்துக்கு இசையமைக்கிறார். இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றியவர். இவர்களோடு ப்ரீதி காந்தன் ஆடை வடிவமைக்க, சுமார் 30 நடிகர்கள் இதில் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்க உள்ளனர். இந்த நடிகர்களின் சராசரி வயது 25. இவர்களில் சிலர் முதன் முறையாகத் தமிழ் நாடகத்தில் நடிக்கிறார்கள்.

அடுத்த மாதம் (செப்டம்பர் 10,11,12,13 -ம் தேதிகளில்) நாரத கான சபாவில் நடைபெறும் ‘சில்லு’நாடகத்தினை க்ரியா குழுவினர், பாரதி தமிழ் சங்கத்திற்காக நவம்பர் 22-ம் தேதி அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் மேடையேற்ற உள்ளனர். தி இந்து நாளிதழ் சில்லு நாடகத்தின் மீடியா பார்ட்னராகப் பங்காற்றுகிறது.

கூடுதல் விவரங்களுக்கு >www.facebook.com/ChilluThePlay என்ற முகநூல் பக்கத்தைப் பாருங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x