

கதைகளிலும் புதிர்களிலும் பார்த்திருப்போம். மூடப்பட்ட பகுதி, அதைச் சுற்றியுள்ள பகுதியும் வேறொரு பகுதியால் மூடப்பட்டிருக்கும், அந்தப் பகுதி வேறொரு பகுதியால் மூடப்பட்டிருக்கும். கதைகளிலும் புதிர்களிலும் இப்படி இருந்தால் பிரச்சினையில்லை, சுவாரசியமாக இருக்கும். நாடுகள் அப்படி இருந்தால்? நாடுகளின் பகுதிகள் அப்படி இருந்தால்? புதிர் போலக் கருதி மக்கள் விளையாடவா செய்வார்கள்! அப்படிப்பட்ட துயரப் புதிர்கள்தான் வங்கதேசத்துக்குள் இருந்த சில பகுதிகள்.
டஹலா காக்ரபாரி என்ற பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்தியாவுக்குச் சொந்தமான இந்தப் பகுதி வங்கதேசப் பகுதியால் சூழப்பட்டிருந்தது. அந்த வங்கதேசப் பகுதி இந்தியப் பகுதியால் சூழப்பட்டிருந்தது. அந்தப் பகுதி வங்கதேசப் பகுதியால் சூழப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட பகுதிகளை ‘என்கிளேவ்கள்’ என்று சொல்வார்கள். தமிழில் நிலத்திட்டுக்கள் எனலாம்.இப்படிப்பட்ட சிக்கலான எல்லைகள் உருவாவதற்கு என்ன காரணம்?
வரைபடம் உருவாக்கியவர்கள் போதையில் இருந்தபோது சிந்திய மைத்துளிகள் என்றும், ஒரு மகாராஜாவுக்கும் முகலாய ராணுவ அதிகாரிக்கும் இடையே நடைபெற்ற சதுரங்கப் போட்டியின் விளைவு என்றும் இந்தப் பகுதிகளைப் பற்றி நகைச்சுவையாகக் கூறுவார்கள். முகலாயர்களின் ஆதிக்கத்தால் இந்தப் பகுதிகளை ஊடுருவ முடியாததுதான் காரணம் என்று நவீன வரலாற்றாசிரியர்கள் கூறுவார்கள். இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து சில நாட்கள் முன்புவரை இந்திய அரசின் வெளிச்சமே படாத பகுதிகளாக இவை இருந்தன. தற்போது நிலப்பரிமாற்றம் மூலமாகத் தீர்வு ஏற்பட்டிருக்கிறது. இது குறித்த சுவாரஸ்யமான கட்டுரையொன்று ‘வாஷிங்டன் போஸ்ட்’ இதழில் வெளியாகியிருக்கிறது. அந்தக் கட்டுரைக்கான இணைப்பு: >https://goo.gl/gX8saK
கிரேக்கமும் இறக்கமும்
கிரேக்கப் பொருளாதாரத்தின் வீழ்ச்சி உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தொன்மைச் சிறப்புடைய கிரேக்கம் செல்வந்த நாடுகளுள் ஒன்றாகக் கருதப்பட்டது. அந்த நாடு இந்த நிலைக்கு ஆளாகியிருப்பது எல்லா செல்வந்த நாடுகளின் வயிற்றிலும் புளியைக் கரைத்துள்ளது. தங்களுக்கு உதவி செய்வதற்கு மற்ற ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் தயங்குவதைக் கண்ட கிரேக்கம், ‘நாங்கள்தான் உங்களுக்கு நாகரிகத்தைக் கொடுத்தோம். நீங்களோ இன்று எங்களுக்கு உதவி செய்யத் தயங்குகிறீர்கள்’ என்று கேட்டிருக்கிறது.
அரிஸ்டாட்டில் காலத்தில் கிரேக்கம் இப்படி இல்லை. தனிநபர் வருமானம் ஆரோக்கியமான அளவில் அப்போது இருந்தது. வறுமைக்கும் செல்வச் செழிப்புக்கும் இடையிலான வேறுபாடு இப்போது இருக்கும் அளவுக்கு அப்போது மோசமாக இல்லை. கிரேக்கத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் சுயேச்சையான நகர அரசுகள் இருந்தன. அவை ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு பக்கத்தில் இருந்த பாரசீகப் பேரரசுடனும் போட்டிபோட்டுக்கொண்டு வளர்ந்தன. இலக்கிய, வரலாற்றுச் சான்றுகளுடன் தொல்லியல் சான்றுகளையும் கொண்டு அந்தக் கால கிரேக்கத்தை அலசும் கட்டுரையை ‘ஃபாரீன் அஃபெயர்ஸ்’ இதழில் பார்க்க: https://goo.gl/U0LkfF
- தம்பி