Published : 16 May 2020 08:31 AM
Last Updated : 16 May 2020 08:31 AM

நஞ்சைக் கக்கும் நரகங்கள்

சு. அருண் பிரசாத்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மே 7-ம் தேதி எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவு இந்தியத் தொழிற்சாலை களின் தரம் குறித்த விவாதத்தை மீண்டும் தொடங்கிவைத்துள்ளது. தென்கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. கெமிக்கல்கஸ் குழுமத்துக்குச் சொந்தமான இந்த ஆலை, ஊரடங்கு காரணமாக மார்ச் 25 முதல் மூடப்பட்டிருந்த நிலையில், உற்பத்திக்காக மீண்டும் திறக்கப்பட்டபோது ஸ்டைரீன் என்ற வேதி வாயுக் கசிவால் விபத்து நேர்ந்துள்ளது.

விசாகப்பட்டினத்தின் வேங்கடபுரம் கிராமத்தில் இந்துஸ்தான் பாலிமர்ஸ் நிறுவனத்தால் 1961-ல் இந்தத் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. பாலிஸ்டைரீன், பாலிமரின் துணை பொருட்கள், பொறியியல் ஞெகிழிக் கலவைகள் ஆகியவற்றைத் தயாரித்துவந்த இந்த நிறுவனம், 1978-ல் மெக்டோவல் நிறு வனத்துடன் இணைக்கப்பட்டது. 1997-ல் தென் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டு, 'எல்.ஜி. பாலிமர்ஸ் இந்தியா' என்று பெயர் மாற்றப்பட்டது.

நாள் ஒன்றுக்கு 415 டன் பாலிஸ்டைரீன் உற்பத்தி செய்துவந்த இந்த ஆலை, மேலும் 250 டன் உற்பத்தியைப் பெருக்க ரூ. 168 கோடி மதிப்பிலான திட்டவரைவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் 2018-ல் சமர்ப்பித்திருக்கிறது. சமீபத்தில் அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

விபத்தின் பின்னணி

பாலிமர், ஞெகிழி, ரெஸின் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படும் கரிமப்பொருளான ஸ்டைரீன், ஆக்ஸிஜனுடன் வினையாற்றும்போது, புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அபாயகரமான வாயுவான ஸ்டைரீன் டைஆக்ஸைடு ஆக மாறுகிறது. அபாயகரமான வேதிப்பொருட்களின் உற்பத்தி, சேமிப்பு, இறக்குமதி விதிமுறைகள் 1989-ன்படி நச்சுத்தன்மை கொண்ட, அபாயகரமான வேதிப்பொருளாக ஸ்டைரீன் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்டைரீன் காற்றில் பரவும்போது மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்றவற்றை உடனடியாகவும், மைய நரம்பு மண்டல பாதிப்பு, தலைவலி, சோர்வு, மன அழுத்தம், கேட்கும் திறன் குறைபாடு போன்றவைற்றை நீண்ட காலத்திலும் மனிதர்களுக்கு ஏற்படுத்தும். ஸ்டைரீனின் அளவு காற்றின் கன அளவில் பத்து லட்சத்தில் 800 என்ற அளவைக் கடந்தால், மனிதர்கள் கோமா நிலைக்குச் செல்லும் அபாயமும் உண்டு.

எல்.ஜி. பாலிமர்ஸ் தொழிற்சாலையில் சுமார் 2,000 மெட்ரிக் டன் அளவுக்கு ஸ்டைரீன் சேமிப்பில் இருந்திருக்கிறது. 20-22 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் ஸ்டைரீன் சேமிக்கப்பட வேண்டும். வெப்பநிலை உயரும்போது, ஆவியாதல் நடைபெறும். குளிரூட்டும் அமைப்பின் கணினியில் ஏற்பட்ட கோளாறு காரணாக, ஸ்டைரீனின் பாதுகாப்பான வெப்பநிலைக் கட்டுப்பாட்டை இழந்து, திரவ நிலையில் இருந்த ஸ்டைரீன் வாயு ஆவியாகிக் கசியத் தொடங்கியது.

மறுநாள் ஆலையைத் திறப்பதற்கான பராமரிப்புப் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த அதிகாலை 2.30 முதல் 3 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்தக் கசிவு ஏற்பட்டிருக்கிறது. ஸ்டைரீனைச் சேமித்துவைத்திருந்த கலன் பழையதாகவும் பரமாரிப்பின்றியும் இருந்திருக்கிறது. இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்பட்டதால் கண்காணிக்கும் அமைப்பும் பழுதடைந்து இருந்தது. இதனால் மூன்று டன் அளவுக்கு ஸ்டைரீன் வாயுக் கசிவு ஏற்பட்டு, சுற்றுப் பகுதிகளில் பரவியிருக்கிறது.

ஆர்.ஆர். வேங்கடபுரம், பத்மபுரம், பி.சி. காலனி, கோபாலப்பட்டினம், கம்பாரப்பாலம் ஆகிய 3 கி.மீ. சுற்றளவில் அமைந்துள்ள கிராமங்களுக்குப் பரவிய நச்சு வாயு, நூற்றுக்கணக்கானோரை உடனடியாக பாதித்தது. மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற விளைவுகளால் மக்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர். மேலும் பலர் நச்சு வாயுவின் தாக்கத்தால் மயங்கி, சுயநினைவின்றி தரையில் விழுந்து கிடந்தனர். விசாகப்பட்டினத்தில் இதுபோன்ற விபத்துகள் முதன்முறையாக நடைபெறவில்லை. கடந்த பத்தாண்டுகளில் இதுபோன்று நான்கு பெரிய விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

விதிமுறைகள்

1984-ல் மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட போபால் விஷ வாயுக் கசிவு விபத்துக்குப் பிறகு, சுற்றுச்சூழல் (பாதுகாப்புச்) சட்டம் -1986 தொடங்கி பல்வேறு சட்டங்களும் விதிமுறைகளும் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அபாயகரமான வேதிப்பொருட்கள் சேமிப்பு குறித்த விதிகளும் வரைமுறைகளும் தெளிவாக உள்ளன. ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்ற எல்.ஜி. தொழிற்சாலையும் அந்த விதிமுறைகள் அனைத்துக்கும் கட்டுப்பட்டது. ஆனால், மீண்டும் ஆலையைத் திறக்கும் அவசரத்தில், உற்பத்தியைத் தொடங்கும்முன் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்பட்டிருக்கவில்லை.

தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதிகளுடனான இணக்கம், விதிமுறைகள் குறித்த அலட்சியம், தொழிலாளர் நலனில் அக்கறையின்மை, பின்பற்றப்படாத பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை இதுபோன்ற விபத்துகளுக்கு முதன்மைக் காரணிகளாக விளங்குகின்றன. இந்த விபத்துகள் எதுவும் தானாக நிகழ்பவை அல்ல, மனிதர்களால் உருவாக்கப்பட்ட விபத்துகளே. விளைவாக மக்கள், விலங்குகள், தாவரங்கள் மடிய வேண்டியிருக்கிறது. அத்துடன் இதுபோன்ற வேதி விபத்துகள் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி தாவரங்கள், விலங்குகள், மனிதர்களின் வாழ்வாதாரத்தை சில பத்தாண்டுகளுக்கு இல்லாமல் செய்துவிடுகின்றன.

நாவல் கரோனா வைரஸ் ஏற்படுத்தியிருக்கும் பொருளாதாரப் பின்னடைவிலிருந்து மீள, முன்னைவிட தீவிர உற்பத்திச் செயல்பாடுகளை நிறுவனங்கள் முன்னெடுக்கும். ஆனால், அதற்கு முன்பு இத்தனை நாட்கள் செயல்படாமல் இருந்த கருவிகளின் பாதுகாப்புத்தன்மையை உறுதிசெய்யும் பராமரிப்புப் பணிகளை முதலில் தொடங்க வேண்டும். தொழிற்சாலை ஊழியர்களின் பாதுகாப்பு மட்டுமல்லாமல் அனைவருடைய பாதுகாப்பையும் உறுதிசெய்யும் செயல்பாடுகளை நிறுவனங்கள் மேற்கொள்வதே அனைவருக்கும் நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x