Last Updated : 13 May, 2014 03:39 PM

 

Published : 13 May 2014 03:39 PM
Last Updated : 13 May 2014 03:39 PM

விந்தை உயிரிகள்: ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்

ஈரப்பதம் நிறைந்த இலையுதிர் காடுகள், பசுமை மாறாக் காடுகள், உயரமான மலைப் பகுதிகளில் வளர்ந்து நிற்கும் காடுகள் என்று ஈரம் நிறைந்த எல்லாக் காடுகளிலும் நீக்கமற நிறைந்திருப்பவை ரத்தம் உறிஞ்சும் அட்டைகள் (Leeches).

கறுப்பு அல்லது பழுப்பு வண்ணத்தில் இருக்கும் இந்த அட்டைகள், வளையங்கள் கொண்ட பகுதிகள் ஒன்றாக இணைந்து நீளும் தன்மையுடன் மிருதுவான உடலமைப்பைக் கொண்டிருக்கும். இவை பாலூட்டிகளின் ரத்தத்தை உறிஞ்சி உணவாகக் கொள்ளும். மனித ரத்தத்தையும் விட்டுவைப்பதில்லை. இந்த அட்டைகள் நம்மைக் கடிக்கும்போது வலி ஏதும் தெரியாதிருக்க இதன் எச்சிலில் இருந்து சுரக்கும் ஒருவித ரசாயனம், கடிக்கின்ற இடத்தை மரத்துப் போகச் செய்துவிடும்.

அதனால் அட்டை நம்மைக் கடிக்கும்போது நமக்கு எவ்வித வலியும் தெரியாது. அது கடித்து நம் உடலிலிருந்து ரத்தத்தை உறிஞ்சி முடித்தவுடன்தான், உடலில் ஏதோ ஊர்வது போன்ற உணர்வு ஏற்படும். உடனே பயத்தில் அதை அகற்ற முற்படுவோம். அதுபோன்ற நேரத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும். வெறும் கையால் அட்டையைப் பிடித்து இழுத்துவிட முடியும்.

அதைவிடவும் பாதுகாப்பான முறைகள் பல உண்டு. குறிப்பாக வனத்துறையில் பணியாற்றும் அலுவலர்கள், வனங்களில் ஆய்வு பணி மேற்கொள்ளும் அறிவியலாளர்கள், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிவோர் இதுபோன்ற நேரத்தில், அட்டை கடித்த இடத்தில் உப்பு, டெட்டால், சோப்பு, எலுமிச்சைச் சாறு, மூக்குப்பொடி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைத் தடவினால், அட்டை தானே கீழே விழுந்துவிடும்.

உடம்பில் கடித்த அட்டையை இப்படி அகற்றியவுடன், கடித்த இடத்தை சோப்பு போட்டு நன்கு கழுவி, அங்கே ஒரு band-aidயை ஓட்டிவிடலாம். பொதுவாக அட்டை கடித்த இடத்தில் ஏற்பட்ட புண் ஆறும்போது அரிப்பு ஏற்படும். அதுபோன்ற நேரத்தில் அந்த இடத்தில் சொரியக்கூடாது. சிலருக்கு அட்டை கடியால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு. அதுபோன்ற நபர்கள் உடனடியாக மருத்துவரை நாடி சிகிச்சை பெறுவது நல்லது.

சிகிச்சை தேவை

அட்டை கடியை எந்தச் சிகிச்சையும் இன்றி அப்படியே விட்டுவிட்டால், கடித்த புண் ஆறுவதற்குச் சில ஆண்டுகள்கூட ஆகலாம். அது மட்டுமல்லாமல் கடித்த இடத்தில் ஏற்பட்ட தழும்பு எளிதில் மறையாது. அதனால்தான் வனத்துறை அலுவலர்கள் இதுபோன்ற காட்டுப் பகுதிகளுக்குச் செல்லும்போது, Hunter’s shoe என்று சொல்லப்படக்கூடிய shoeவை அணிவதுடன், அதற்கும் மேலே காக்கி நிறத்தில் பட்டியையும் இறுக்கமாகக் கட்டிக்கொள்வார்கள் (இது 4 அங்குல அகலமும், 2 அடி நீளமும் கொண்ட ஒரு தடிமனான காக்கி துணி). இதை அணிவதால், அட்டைகள் உடல் பகுதியை அணுக முடியாது. அப்படி ஒருவேளை அட்டைகள் கால் மீது ஏற முற்பட்டாலும், அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளமுடியும்.

இந்த அட்டைகள் கேரள மாநிலத்தில் ஒரு சில நோய்களைக் குணப்படுத்த ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. சில வெளிநாடுகளில் முதுமை யடைவதைத் தடுப்பதற்காகவும், ‘வெரிகோஸ் வெய்ன்’ என்று சொல்லப்படும் நரம்பு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தவும் இந்த அட்டைகளை மருத்துவர்கள் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.

- வ. சுந்தர ராஜு, முன்னாள் இந்திய வனப் பணி அலுவலர் தொடர்புக்கு: sundarifs.raju@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x