Published : 15 May 2020 09:54 AM
Last Updated : 15 May 2020 09:54 AM

கோடம்பாக்கம் சந்திப்பு: விண்ணைத் தாண்டும் த்ரிஷா!

கரோனாவால் வீடடங்கிய தொடக்கத்தில், குறும்புத்தனமான பல காணொலிகளைச் சமூக வலைப் பக்கங்களில் வெளியிட்டு வந்தார் த்ரிஷா. தற்போது அவரது உற்சாகத்தைக் ‘குறும்பட’ வடிவத்துக்கு மாற்றிவிட்டார் இயக்குநர் கௌதம் மேனன். ‘விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும்’ என்று கௌதம் மேனன், த்ரிஷா ரசிகர்கள் கேட்டு வந்தார்கள். இந்நிலையில் தான், அதற்கு ஒரு சோதனை ஓட்டம்போல ‘கார்த்திக் டயல் செய்த எண்’என்ற குறும்படத்தை ‘வீடியோ கால்’ வழியாகவே இயக்கி முடித்திருக்கிறார்.

வீட்டிலிருக்கும் த்ரிஷாவை ஐபோன் மூலமே அந்தக் குறும்படத்தை ஒளிப்பதிவு செய்ய வைத்து, அவரையே ஜெஸ்ஸி கதாபாத்திரத்திலும் நடிக்க வைத்திருக்கிறார். தற்போது அந்தக் குறும்படத்தின் டீஸரையும் வெளியிட்டுவிட்டார். அதில் தன்னைக் காதலிக்கும் உதவி இயக்குநர் கார்த்திக்குக்கு (சிம்பு) போன் செய்யும் ஜெஸ்ஸி (த்ரிஷா), ‘கரோனா காலம் விரைவில் முடிந்துவிடும். திரை யரங்குகளை விரைவில் திறப்பார்கள். அதுவரை திரைக்கதை எழுதிக்கொண்டிருக்க மறக்காதே. நம்பிக்கையுடன் இரு’ என்று சொல்வது போல் அந்த டீஸர் அமைந்திருப்பது ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ரசிகர்களை ஏகத்துக்கும் உற்சாகப்படுத்தியிருக்கிறது.

இணைந்த ஜோடி

கரோனா களேபரத்துக்கு நடுவில், முன்னணி நட்சத்திரம் ஒருவர் தனது வாழ்க்கைத் துணையை அறிவித்திருக்கிறார். ‘பாகுபலி’ படத்தில் பல்லாலத்தேவனாக நடித்து மிரட்டியவர் ராணா டக்குபதி. இவர், ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் தொழில்முனைவர் மிஹீகா பஜாஜ் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். மிஹீகா திருமணத்துக்குச் சம்மதித்துவிட்டதால் அதை மகிழ்ச்சியுடன் சமூக வலைத்தளம் வழியாகத் தனது ரசிகர்களிடம் கல்யாணச் செய்தியைப் பகிர்ந்திருக்கிறார். அவருக்கு, ரசிகர்களும் ஆந்திரத் திரையுலக பிரபலங்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

சூரியின் வேட்டை!

திரையுலக நட்சத்திரங்கள் பெரும்பாலும் வீட்டில் அடைந்து கிடக்க, துணிச்சலாக வெளியே அலைந்து கொண்டிருக்கும் சூரி போன்ற நடிகர்களும் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்கள். திடீரென்று சென்னை, திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்குள் புகுந்த சூரி, அங்கே பணிலிருந்த அதிகாரிகள், காவலர்களிடம் ‘ஆட்டோகிராப்’ வேட்டை நடத்தியிருக்கிறார். ‘மக்களைக் காக்கும் பணியில், காவல்துறையினர் தொடங்கி தூய்மைப் பணியார்கள் வரை முன்வரிசையில் நின்று போராடுபவர்கள்தாம் உண்மையான கதாநாயகர்கள்; சினிமாவில் நடிப்பதால் மட்டுமே நாங்கள் கதாநாயகர்கள் ஆகிவிட முடியாது’ என்று அவர்களை ‘ஆன் த ஸ்பாட்’ பாராட்டியிருக்கிறார். அதற்காக சூரிக்கும் பாராட்டுகள் குவிகின்றன.‘

அண்ணத்த’யும் ‘மாஸ்ட’ரும்

‘தர்பார்’ படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துவந்த படம் ‘அண்ணாத்த’. ‘இப்படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும்’என்று அதன் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது. இதற்கிடையில், விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’படத்தின் 95 சதவீதப் பணிகள் முடிந்துவிட்டதால், விஜயின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி படம் வெளியாகுமா என்று அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேட்டு நச்சரித்து வருகிறார்கள். ஆனால், தற்போதுள்ள நிலையில் தணிக்கைச் சான்றிதழ் பெறும் பணிகள் முடிக்கிவிடப்பட்டால் மட்டுமே ‘மாஸ்டர்’ படத்துக்கு விடுதலை கிடைக்கும். ‘ஜூன் மாதம் திரையரங்குகளைத் திறக்க அரசு அனுமதிக்குமா என்பதுதான் இப்போது பெரிய கேள்வி’ என்று அவர்களே புலம்பியும் வருகிறார்கள்.

மறுத்துவிட்ட பாரதிராஜா

கோடம்பாக்கம் பகுதியில் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றாலும் பரபரப்புகளுக்கும் அங்கே பஞ்சமில்லை. ஒருபக்கம், 20-க்கும் அதிகமான படங்களின் ‘குரல் சேர்ப்பு’, படத்தொகுப்பு உள்ளிட்ட பின் தயாரிப்புப் பணிகள் தொடங்கிவிட்டன. இன்னொரு பக்கம் ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’, சித்தார்த் நடித்த ‘டக்கர்’, கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’ ஆகிய படங்களை அமேசான் நிறுவனம் கைப்பற்றியிருப்பது திரையரங்க வட்டாரங்களில் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கிடையில், தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் கரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தேர்தல் வரை காத்திருப்பது சரியாக இருக்காது என்று கருதி, திரையுலக நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் பேசித் தீர்க்க, 40-க்கும் அதிகமான தயாரிப்பாளர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அதில் அனுமதிபெறாமல் தனது பெயரைச் சேர்த்துவிட்டதற்காக பாரதிராஜா கடிந்து கொண்டதுடன் அதில் தன்னால் இடம்பெற முடியாது என்றும் கூறிவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x