Published : 12 May 2020 09:37 AM
Last Updated : 12 May 2020 09:37 AM

கரோனா வாழ்க்கை: ஒரு ஹோட்டல்... ஒரு டேபிள்.!

கனி

கரோனா நோய்த்தொற்றை உலகம் எதிர்கொண்டுவரும் இந்தச் சூழலில், சமூக விலகல் என்பது நமது புதிய வாழ்க்கைமுறையாக இன்னும் சில காலத்துக்குத் தொடரவிருக்கிறது. இதை மனதில் வைத்து ஸ்வீடனில் ‘போர்டு ஃபார் அன்’ (டேபிள் ஃபார் ஒன்) என்ற பெயரில் ஓர் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகம் ஒரு மேசை, நாற்காலியுடன் ஒருவர் மட்டுமே அமர்ந்து உணவுச் சாப்பிடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. உணவு பரிமாறுபவர் யாரும் இல்லாமல் கயிறுகட்டி ‘பிக்னிக்’ கூடையில் வைத்து மேசைக்கு உணவு அனுப்பப்படுகிறது.

ஸ்வீடனைச் சேர்ந்த ரஸ்முஸ் பெர்ஸன், லின்டா கார்ல்ஸன் தம்பதி ஆரம்பித்திருக்கும் இந்த உணவகம் மே 10 முதல் ஆகஸ்ட் 1 வரை இயங்கவிருக்கிறது.

ஒரு நாளுக்கு ஒரு விருந்தினர் மட்டுமே காலை, மதியம் அல்லது இரவு விருந்துக்கு அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப வரவேற்கப்படுவார்கள் என்று இந்த உணவகம் அறிவித்துள்ளது. இந்தத் தம்பதியின் வீட்டு முற்றத்தில் இந்த ‘ஒரு நபர் உணவு மேசை’ உணவகம் அமைந்துள்ளது. சமையல் கலை நிபுணரான ரஸ்முஸ் பெர்ஸன், இந்த உணவகத்துக்காகத் தனித்துவமான உணவுப் பட்டியலைத் தயாரித்துள்ளார். ஆனால், உணவு வகைகளுக்கு அவர் விலை நிர்ணயம் செய்யவில்லை.

கரோனா தாக்கத்தால் பலரின் நிதி நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த உணவகத்தில் உணவருந்துபவர்கள் அவர்களாக விருப்பப்பட்டு, முடிந்த பணத்தை மட்டும் அளிக்கலாம் என்று இவர்கள் அறிவித்துள்ளனர்.

‘கோவிட்-19 பாதுகாப்பு உணவகத்தை’ வடிவமைக்கும் எண்ணம் தங்களுக்கு வருவதற்குக் காரணம், தன் மனைவி லின்டாவின் பெற்றோர்தாம் என்று சொல்லியிருக்கிறார் பெர்ஸன்.

ஒவ்வொரு நாளும் லின்டாவின் பெற்றோருக்கு ஜன்னல் வழியே உணவைப் பாதுகாப்பாக வழங்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகளே இந்த ‘ஒரு நபர் உணவு மேசை’ உணவகத்துக்கு வித்திட்டதாகத் தெரிவித்துள்ளார் பெர்ஸன். தனிமையில் அமர்ந்து உணவுக்காகக் காத்திருந்து உணவுச் சாப்பிடுவதை உணவகத்துக்கு வரும் விருந்தினர்கள் மிகவும் ரசிப்பதாகச் சொல்லியிருக்கிறார் பெர்ஸ்ஸன். ஸ்வீடன் வேர்ம்லாந்தில் அமைந்திருக்கும் இந்த உணவகத்துக்கு முன்பதிவுசெய்துவிட்டுத்தான் செல்ல முடியும்.

கோவிட்-19 தாக்கத்துக்குப் பிறகு, உலக மக்களின் வாழ்க்கை முறையில் மிகப்பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படவிருக்கின்றன. எல்லாத் துறைகளிலும் அந்த மாற்றங்களை நாம் எதிர்கொள்ளவிருக்கிறோம். அதற்கு ஒரு சிறிய முன்னுதாரணம்தான் இந்த ‘ஒரு நபர் மேசை’ உணவகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x