Published : 11 May 2020 10:11 AM
Last Updated : 11 May 2020 10:11 AM

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஓர் ஒளிக் கீற்று!

மார்ட்டி சுப்ரமணியம்
msubrahm@stern.nyu.edu

சங்கர் ஐந்து வருடங்களுக்கு முன்னால் மதுரையில் குழந்தைகளுக்கான சத்துணவு தயாரிக்கும் ஸ்டார்ட் அப் ஒன்றை தொடங்கினார். கிடுகிடு வளர்ச்சி. நான்கே வருடங்களில் விற்பனை ரூ.30 கோடி. அமேசான், பிக் பாஸ்க்கெட், குரோஃபர்ஸ் (Grofers) போன்ற ஈ காமர்ஸ் கம்பெனிகளுடன் ஒப்பந்தம் என விரைவில் ரூ.100 கோடி விற்பனையைத் தொடும் வண்ணக் கனவுகளுடன் இருந்தார். வந்தது கரோனா பாம்பு. அதன் வாயில் மாட்டிக்கொண்டார். பிசினஸ் பரமபதத்தில் தரைமட்ட வீழ்ச்சி.

சத்துமாவு வாங்கிய கடைக்காரர்கள் கையை விரிக்கிறார்கள். மூலப்பொருட்கள் சப்ளையர்கள் நெருக்குகிறார்கள். நூறு ஊழியர் குடும்பங்கள் அவரை நம்பி வாழ்கின்றன. மார்ச் சம்பளம் கொடுத்துவிட்டார். ஏப்ரல் மாதம் தரமுடியவில்லை. வந்த பணத்தையெல்லாம் பிசினஸில் போட்டுவிட்டதால், சொந்த சேமிப்பும் கிடையாது. வங்கியைத் தொடர்புகொண்டார். மேனேஜரும் கைவிரித்துவிட்டார். கரோனா பிரச்சினைக்கு எப்போது தீர்வு வருமோ? அதுவரை, தானும், பிசினஸும் தாக்குப்பிடிக்கமாட்டோம் என்னும் விரக்தி.

இது சங்கரின் பிரச்சினை மட்டுமல்ல, இந்தியாவின் ஒட்டுமொத்தத் தொழில்துறையின் பிரச்சினை. குறிப்பாக,எஸ்எம்இ எனப்படும் சிறிய, நடுத்தர பிசினஸ்களுக்கு இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. எஸ்எம்இ-கள் ஆண்டு விற்பனையின் அடிப்படையில், மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது; ரூ.5 கோடி ரூபாய் வரை மைக்ரோ, ரூ.5 கோடி முதல் 75 கோடி வரையில் சிறுதொழில்கள், ரூ.76 கோடி முதல் ரூ. 250 கோடி வரை.நடுத்தரத் தொழில்கள் ஆகும்.

இந்த வகையில் நம் நாட்டில் மொத்தம் 5 கோடி 58 லட்சம் எஸ்எம்இ –கள் இருக்கின்றன. இந்தியாவின் மொத்தத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் இது 90 சதவிகிதத்துக்கும் அதிகம். இவற்றுள் ஒரு கோடி 17 லட்சம் உற்பத்தித் துறையிலும், 4 கோடி 41 லட்சம் சேவைத் துறையிலும் ஈடுபட்டிருக்கின்றன. நம் நாட்டின் மொத்த “உள்நாட்டு உற்பத்தி”யில் எஸ்எம்இ–களின் பங்கு சுமார் 31 சதவிகிதம்; நம் ஏற்றுமதியில் சுமார் 45 சதவிகிதம். 12 கோடி 40 லட்சம் பேருக்கு வேலை தருவதோடு, ஆண்டுக்கு 13 லட்சம் பேருக்குப் புதிய வாய்ப்புக் கதவுகளையும் திறக்கிறது. ஆகவே, எஸ்எம்இ நம் பொருளாதாரத்தின் வலிமையான முதுகெலும்பு.

இந்த முதுகெலும்பு இப்போதுள்ள சூழலில் காக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால், இதில் பல நிதர்சனத் தடைக்கற்கள். மொத்தமுள்ள 5 கோடி 58 லட்சம் எஸ்எம்இ –களில், பதிவு செய்யப்பட்டவை வெறும் 1 கோடி 30 லட்சம் மட்டுமே. மற்ற 4 கோடி 28 லட்சமும் பதிவுசெய்யப்படாதவை. ஒரு லட்சம் ரூபாய் விற்பனையை எட்டாத பொட்டிக்கடையும் எஸ்எம்இதான்; ரூ.250 கோடி விற்கும் கம்பெனியும் எஸ்எம்இ தான். இரண்டையும் ஒரே உதவித் தராசில் எப்படி எடை போடுவது?

உலக வங்கியின் ஒரு அங்கமான இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் 2019 – இல் நடத்திய ஆய்வுப்படி, இவற்றைக் கரை யேற்ற ரூ.17 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். கரோனாவுக்கு முன்பாகவே, எஸ்எம்இ–களின் கடன் தேவையில் சுமார் 13 சதவிகிதத்தையே வங்கிகள் பூர்த்தி செய்கின்றன. வரும் நாட்களில், எல்லாத் துறையினரும் வங்கிகளிடம் அபயக்குரல் எழுப்புவார்கள். பணத்தேவை அதிகமாவதால், இந்த 13 சதவிகிதம் இன்னும் குறையும். இன்று மீதம் 87 சதவிகித உதவிக்கரம் நீட்டுபவர்கள், தனிப்பட்டோர்.

இவர்களின் வட்டி விகிதம் மிக அதிகம். வரும் நாட்களில் இந்த வட்டி இன்னும் எகிறும். ரிசர்வ் வங்கி தொழில் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக வங்கிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. இத்தோடு, கடனைத் திருப்பித்தர மூன்று மாதத் தள்ளிவைப்பு, வட்டிக் குறைப்பு என்னும் சலுகைகள். இவை பிரச்சினையைத் தள்ளிப்போட உதவுமே தவிர, நீண்ட நாள் தீர்வுகளல்ல. எஸ்எம்இ–களைக் கரையேற்ற வேறு என்ன செய்யலாம்? கடன்கள், சலுகைகள் என்னும் எல்லைகளைத் தாண்டி மாத்தி யோசிக்க வேண்டியதுதான். எங்கள் பரிந்துரை அரசு வழங்கும் ``பாவனைப் பங்கு முதலீட்டு நிதி உதவி” (Pseudo-equity Financing). அப்படி என்றால் என்ன, எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

உதவிபெறத் தகுதியானவர்கள் யார்?

அரசாங்கத்திடம் பதிவு செய்துகொண்டு, ஜி.எஸ்.டி -யும் வருமான வரியும் செலுத்தும் சுமார் 1 கோடி 30 லட்சம் எஸ்எம்இ–களுக்கு மட்டுமே இதில் பங்கேற்கும் தகுதி உண்டு. அவர்களிலும் அடுத்த வடிகட்டல் - கடந்த மூன்று ஆண்டுகள், அதாவது 2017, 2018, 2019 ஆண்டுகளில் லாபம் காட்டியிருக்க வேண்டும். ஏன் இந்த வடிகட்டல்கள்? ஏன் இந்தச் சில நிறுவனங்களுக்கு மட்டும் உதவி செய்யும் பாரபட்சம்?அரசாங்கம் தர்ம ஸ்தாபனமல்ல. இந்த உதவிக்கான நிதி மக்களின் வரிப்பணம். ஆகவே, அரசாங்கம் பொறுப்பாகச் செலவிட வேண்டும். அவர்கள் கஜானாக்களும் கரோனா போரால், தொழில் முடக்கத்தால் காலியாகிக் கொண்டிருக்கும் நிலை. ஆகவே திருப்பித்தரும் திறன் இருக்கிறதா என்று தெரிந்தபின்புதான் உதவி செய்யமுடியும். வரி கட்டுதல், லாபம் ஆகியவை இந்தத் திறனுக்கான அளவுகோல்கள்.

எத்தனை உதவி கிடைக்கும்?

கடந்த மூன்று ஆண்டுகளின் சராசரி லாபத்தில் 25 சதவிகிதம் வரை இந்த உதவி கிடைக்கும். எத்தனை சதவிகிதம் என்பதைச் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நிறுவனமும் முடிவு செய்துகொள்ளலாம்.

எப்போது திருப்பித் தரவேண்டும்?

இரண்டு ஆண்டுகளுக்குத் ‘‘திருப்பித்தருதலில் விலக்கு” (Repayment Holiday). அதாவது, 2020 –இல் உதவி வாங்கினால், 2022 –இல் தான் அரசாங்கத்தை நினைத்துப்பார்க்கவேண்டும்.

எவ்வளவு தொகை, எப்படித் திருப்பித் தர வேண்டும்?

இந்தத் தொகை கடனல்ல, முதலீடு. ஆகவே, அரசாங்கத்துக்குத் தரவேண்டியது வட்டி அல்ல, ”பங்கு ஆதாயம்” (Dividend). பாவனைப் பங்கு முதலீட்டுக்கான பங்கு ஆதாயத்தை எஸ்எம்இ–கள் தர என்ன வழிமுறை? நாங்கள் ஒரு சுலபவழி வைத்திருக்கிறோம். 2019 – இல் உங்கள் ஜி.எஸ்.டி. ஒரு லட்சம் ரூபாயா? அப்படியானால், 2022 முதல் 2028 வரை, அதாவது ஏழு வருடங்களுக்கு 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் கட்டவேண்டும். 2028 – க்குப் பின் ஒன்றும் கட்டவேண்டாம். உங்கள் லாபம் முழுக்க உங்கள் பணம். விற்பனைக்கேற்ப ஜி.எஸ்.டி. கட்டினால் போதும்.

7 வருடங்கள் திட்டத்தில் தொடர வேண்டுமா?

இல்லை. மூன்று வருடங்கள் கட்டியபின், பாக்கித்தொகையை அரசும், நிறுவனமும் சேர்ந்து நிச்சயித்து, நிறுவனம் அந்தத் தொகையைக் கட்டிமுடிப்பதன் மூலம், திட்டத்திலிருந்து வெளியேறலாம். ஏழு வருடங்கள் முடிந்தபின் திட்டத்தைப் புதுப்பிக்க முடியுமா? முடியும். தேவைப்பட்டால், நிறுவனங்கள் திட்டத்தில் மீண்டும் சேரலாம்.

எஸ்எம்இகளுக்கு என்ன அனுகூலம்?

எஸ்எம்இ–கள் சாதாரணமாக 15 சதவிகித வட்டி கொடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். தனியாரிடம் கடன் வாங்கும்போது வட்டியும் குட்டி போடும். விரைவில் வட்டிச்சுமை அசலைவிட அதிகமாகிவிடும். இந்தத் திட்டத்தில் அவர்கள் 20 சதவிகித ஜி.எஸ்.டி–யில் இருந்தால், 26 சதவிகிதம் கட்டவேண்டும். அதாவது, 6 சதவிகிதம் அதிகம். கிடைக்கும் நிதி உதவி கடந்த மூன்று வருடங்களின் சராசரி லாபத்தில் 25 சதவிகிதம். நாங்கள் சில நிறுவனங்களுக்கு மாதிரிக் கணக்குகள் போட்டுப் பார்த்தோம். கம்பெனிகள் கொடுக்கும் “பங்கு ஆதாயம்” கடன் வட்டியைவிடக் குறைவு.

அரசுக்கு என்ன அனுகூலம்?

கம்பெனிகள் இயங்கும்வரை, விற்பனை தொடரும்வரை, ஜி.எஸ்.டி தொடர்ந்து வருவதால், இந்தப் பங்கு ஊதியமும் தொடர்ந்து வரும்.

அரசுக்கு ரிஸ்க்கே இல்லையா?

எல்லா முடிவுகளிலும் ரிஸ்க் உண்டு. கம்பெனிகள் மூடிவிட்டால், பணம் போச். ஆனால், இந்த ரிஸ்க், வாராக் கடன்களில் இருக்கும் ரிஸ்க்கை விட மிகக் குறைவுதான். சில பொருளாதார நிர்வாக, அரசியல் நண்பர்களிடம் இந்தப் ‘‘பாவனைப்பங்கு முதலீட்டு நிதி உதவி” பற்றிப் பேசினோம். அவர்களின் முக்கியமான பயம் – தொழில் முனைவர்கள் கணக்கில் தகிடுதத்தம் செய்வார்கள், லாபம் காட்டமாட்டார்கள், அரசுக்குப் பணம் தருவதைத் தவிர்ப்பார்கள். ஊழல் பெருகும் என்பதுதான். இந்த பயம் ஓரளவு நிஜமே. ஒளவையார் தன் ``மூதுரை” நூலில் அன்றே சொன்னார்;

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம், தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை.

நேர்மையான எஸ்எம்இ–கள் என்னும் நெல்லுக்கு நாம் தரும் மழை Pseudo-equity உதவி. சில புல்(லுருவி) தொழில் முனைவர்களும், அரசியல்வாதிகளும் தவறாகப் பயன் பெறுவார்களே என்பதற்காக, நல்லோருக்குச் செய்யும் உதவியை நிறுத்தலாமா? வங்கிக் கடன்கள் தருவதில் ஊழல் இல்லையா? அதை நிறுத்திவிட்டோமா? ஊழல் இல்லாத நலத்திட்டத்தைக் கண்டுபிடிப்பது, அடர்ந்த வைக்கோல்போரில் குண்டூசி தேடும் வேலை.

பெரும்பாலான எஸ்எம்இ–கள் நேர்மையானவர்கள். இதை நம்புவோம். Pseudo-equity வெற்றி காணும். அரசு இதை வெற்றிகரமாகச் செயல்படுத்தினால் எஸ்எம்இகள் ஓரளவேனும் மீண்டு வர வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கையோடு இருப்போம். கிழக்கு வெளுக்காத நாள் என்று இதுவரை வந்ததில்லை. கரோனாவும் நம்மைக் கடந்துபோகும். மீண்டு வருவோம்.

(கட்டுரையாளர் மார்ட்டி சுப்ரமணியம், சென்னையைச் சேர்ந்தவர், நியூயார்க் பல்கலைக் கழகத்தின் ஸ்டேர்ன் பிசினஸ் கல்வி மையத்தில் பொருளாதார பேராசிரியர். எஸ்.எல்.வி. மூர்த்தி சென்னையில் வசிக்கும் நிர்வாகவியல் ஆலோசகர். இவர்களிருவரும் அகமதாபாத் ஐஐஎம் கல்லூரியில் எம்பிஏ வகுப்புத் தோழர்கள்).

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x