Published : 10 May 2020 09:47 AM
Last Updated : 10 May 2020 09:47 AM

மதுவைவிட மலிவானதா பெண்ணின் வாழ்க்கை

கரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் உயிரச்சம் இருக்கும் நிலையிலும் குடும்ப வன்முறை மட்டும் கொஞ்சமும் குறையவில்லை. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் நல்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, குடும்ப வன்முறை செழித்து வளர்கிறது.

இரண்டு மாதங்களை நெருங்கும் ஊரடங்கால் ஏற்கெனவே பொருளாதாரரீதியான தாக்குதலைச் சந்தித்துவரும் பெண்கள், வன்முறையால் உடலாலும் மனத்தாலும் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ஆனால், அந்தப் பாதிப்பு கடலில் விழுந்த மழைத்துளியாகக் காணாமலாக்கப்படுகிறதுஅல்லது வழக்கம்போல் அது இயல்பான நிகழ்வாக்கப்பட்டுப் புறக்கணிக்கப்படுகிறது. இந்தப் புறக்கணிப்புக்கு ஊரடங்கு வலுச்சேர்க்கிறது.

ஊரடங்கால் பொருளாதார முடக்கம் ஏற்படும் என்று கவலைப்படத் தெரிந்த மத்திய - மாநில அரசுகளுக்கு, பெண்களின் நிலை குறித்து யோசிக்க நேரமில்லை. பெண்கள் வீட்டு வேலைக்காகச் செலவிடுகிற உழைப்பையே உள்நாட்டு உற்பத்திக் கணக்கில் சேர்க்காதவர்கள், இதுபோன்ற இக்கட்டான காலத்திலா பெண்களைப் பற்றிச் சிந்தித்துவிடப் போகிறார்கள்? ஊரடங்குக்குப் பிறகு குடும்ப வன்முறை அதிகரித்திருப்பதாக ஏப்ரல் மத்தியில் தேசிய மகளிர் ஆணையம் அறிக்கை வெளியிட்டபோதுதான், அரசுகளின் கவனத்துக்கே இந்த விஷயம் வந்தது. அப்போதும் பெண்கள் அமைப்புகள்தாம் உடனடியாகக் களமிறங்கின. அதன் பிறகே மாநில அரசுகள் செயல்படத்தொடங்கின. ஆனால், அந்தவேகம் போதுமானதாக இல்லை.

பொறுப்புத் துறப்பும் வன்முறையே

இவ்வளவு நாட்களாகக் கணவரும் குழந்தை களும் அலுவலகத்துக்கும் பள்ளிக்கும் சென்றுவிட, பெண்கள் தனித்திருக்கும் நேரம் அவர்களுக்கு ஆசுவாசமாக இருந்ததா எனத் தெரியாது.குறைந்தபட்சம் வன்முறையிலிருந்து அவர்களைச் சிறிது நேரம் விலக்கிவைத்திருந்தது. ஆனால், இப்போதோ கணவன் - மனைவி இருவருமே நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பதால் இருவருக்குமே மனரீதியான தடுமாற்றங்கள் ஏற்பட்டாலும் பெண்களே அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

அடியும் உதையும் மட்டுமே குடும்ப வன்முறை என்று இந்தக் காலத்திலும் சிலர் நினைத்துக்கொண்டிருப்பது வேதனை. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருப்பதால் பெரும்பாலான வீடுகளில் மூன்று வேளையும் சமையல் செய்யப்படுகிறது. இடைவிடாத வீட்டு வேலைகள் பெண்களின் வேலைச் சுமையை அதிகரித்திருக்கின்றன. பல குடும்பங்களில் வருமானமே இல்லாத நிலையில் குடும்பத்தை நகர்த்த வேண்டிய பெரும் சுமையும் பெண்களின் தலையில்தான் விடிகிறது.

வீட்டு வேலைகளில் பங்கெடுக்கா ததன் மூலம் ஆண், தன் வீட்டுப் பெண் மீது வன்முறையைச் செலுத்துகிறான். வீட்டில் தன்னுடைய வேலைகளைச் செய்வதையும் குழந்தைப் பராமரிப்பில் ஈடுபடுவதையும்கூட மனைவிக்குச் செய்யும் மிகப் பெரிய சேவையாகவே பெரும்பாலான ஆண்கள் நினைக்கி றார்கள். அவை தங்களின் வேலையும் கூடத்தான் என்பதை ஆண்கள் உணராதவரை, பெண்கள் மீது குடும்பப் பொறுப்பு, கடமை என்ற போர்வையில் செலுத்தப்படும் வன்முறைக்கு விடிவே இல்லை. அந்த வன்முறை இதுபோன்ற ஊரடங்கு நாட்களில் அதிகரித்திருப்பது குறித்துப் பலருக்கும் அக்கறையில்லை. அவையெல்லாம் பெண்கள் அனுபவிக்க வேண்டியவைதானே என்று வழக்கம்போல்ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

குழந்தைகளுக்கும் பாதிப்பு

வார்த்தைரீதியான வன்முறையில் தொடங்கு வது சில வீடுகளில் எல்லைமீறிவிடுகிறது. இது சம்பந்தப்பட்ட பெண்களை மட்டுமல்லாமல், அந்த வீட்டுக் குழந்தைகளையும் பாதிக்கிறது. ஏற்கெனவே மனப் பதற்றத்தில் இருக்கும் குழந்தைகள் இதுபோன்ற சூழலில் கடும்பாதிப்புக்கு ஆளாகிறார்கள். சில வீடுகளில் குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். பெண்களும் குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியேற முடியாத இந்த ஊரடங்கு நாட்களில் வன்முறையில் ஈடுபடுகிறவர்களும் அதற்கு இலக்காகிறவர்களும் ஒரே கூரையின்கீழ் இருப்பது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

அதிகரிக்கும் பொருளாதாரச் சுரண்டல்

பொருளாதாரப் பற்றாக்குறையைச் சமாளிக்க முடியாததால் ஏற்படும் இயலாமையைப் பெரும்பாலான ஆண்கள் தங்கள் மனைவியிடம் கோபமாக வெளிப்படுத்துகிறார்கள். ஆணைச் சார்ந்திருக்கும் பெண்ணுக்கு அடங்கிப்போவதும் வன்முறைக்கு ஆளாவதுமான வழியைத் தவிர வேறு விடுதலையில்லை. எப்போதும் கணவனின் கண்காணிப்பிலேயே இருப்பதால் பெண்களால் உதவிக்கு யாரையும் கைபேசியில் அழைப்பதும் முடியாத காரியமாக இருக்கிறது.

இந்த ஊரடங்கின் மற்றொரு மோசமான விளைவு எதிர்பாராத அல்லது திட்டமிடாத கர்ப்பம். திருமண வல்லுறவும் இதில் அடக்கம். தன் விருப்பத்துக்கு இணங்காத மனைவியின் மீது ஆதிக்கம் செலுத்துவது, இங்கே ஆணுக்கான இலக்கணமாக வரையறுக்கப்படும்போது, அது சார்ந்த வன்முறையும் இயல்பானதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தங்களுக்கு வரும் அழைப்புகளில் பாலியல் விருப்பத்துக்கு இணங்கச் சொல்லி தங்கள் கணவன் துன்புறுத்துவதாக வந்த புகார்கள் கணிசமானவை என்கிறார் சென்னையைச் சேர்ந்த குடும்ப வன்முறை சட்டபாதுகாப்பு அலுவலர் ஒருவர்.

“தங்கள் அப்பா, அம்மாவை அடித்து பாத்ரூமில் வைத்துப் பூட்டிவிட்டதாகச் சென்னையைச் சேர்ந்த குழந்தையிடம் இருந்து புகார் வந்தது. காவல்துறை உதவியுடன் அந்தப் பெண்ணை மீட்டோம். 1091 எண்ணுக்கு வந்த அழைப்புகளில் 125 புகார்களை இதுவரை கையாண்டிருக்கிறோம். 15 நேரடிப் புகார்களுக்கும் தீர்வுவழங்கியிருக்கிறோம். குடிக்க முடியாததாலும் சில ஆண்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்” என்று சொல்லும் அவர், பணப்புழக்கம் இல்லாததால் ஏற்படுகிற பொருளாதாரச் சுரண்டலும் வன்முறையும் இந்த ஊரடங்கு காலத்தில் அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார். நீதிமன்றம், காவல்நிலையம், சமூகநலத் துறை போன்றவை சார்பில் பரிந்து ரைக்கப்படும் வழக்குகளைக் கையாண்ட பாதுகாப்பு அலுவலர்கள், ஊரடங்கையொட்டி குடும்ப வன்முறை வழக்குகளில் கவனம் செலுத்துகின்றனர்.

புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்

ஊரடங்கு நாட்களில் குடும்ப வன்முறை புகார்கள் அதிகரிக்கவில்லை என்று சொல்கிறார் விழுப்புரம் மாவட்ட‘ஒருங்கிணைந்த சேவை மைய’த்தின்(One Stop Centre)வழக்குப் பணியாளர் ஜெ.விமலா. “மனரீதியான துன்புறுத்தல், பணம் இல்லாததால் ஏற்படும் வன்முறை, கணவன் மனைவிக்கு இடையேயான பொதுவான கருத்து வேறுபாடு போன்ற வழக்குகளே அதிகமாகப் பதிவாகின்றன” என்கிறார் அவர். புகார் செய்யும் அளவுக்குத் தனிமையான சூழல் பெண்களுக்கு வாய்க்கவில்லை என்பதை கன்னியாகுமரி மாவட்ட வழக்குப் பணியாளர் அற்புத ஜானி ஜெனிதாவின் பேச்சு உறுதிப்படுத்துகிறது.

“181 எண்ணுக்கு வரும் அழைப்புகள் எங்களுக்குப் பரிந்துரைக்கப்படும். நாங்கள் திரும்ப அழைத்தாலும் பெண்கள் பலர் எதையும் வெளிப்படையாகச் சொல்வதில்லை. வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயத் தில் இருக்கும் பெண்களைக் ‘குறுகிய காலத் தங்கும் இல்ல’த்தில் தங்க வைப்போம். அவர்களுக்கு வேறு பாதுகாப்பான இடம் கிடைக்கும்வரை அங்கேயே தங்கிக்கொள்ளலாம். குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறும் பெண்களுக்கும் அங்கே அனுமதி உண்டு” என்கிறார் அவர்.

மதுவால் சீரழியும் குடும்பங்கள்

இத்தனை நாட்களாகக் குடிக்க முடியாத ஆத்திரத்தில் வன்முறையில் இறங்கிய 'குடிமகன் கள்', டாஸ்மாக் திறந்தபிறகு வேறுவிதமான பாதிப்புகளைத் தங்கள் குடும்பங்களுக்கு ஏற்படுத்தத் தொடங்கிவிட்டனர். குடிக்கக் காசு கேட்டு அடிப்பது, வீட்டுச் செலவுக்கு வைத்திருக்கும் பணத்தில் குடிப்பது, குடித்துவிட்டு மனைவியையும் குழந்தைகளையும் அடிப்பது என்று வன்முறைக்குக் குறைவில்லாத வகையில் பார்த்துக்கொள்கின்றனர். கணவன் குடித்துவிட்டு வந்ததால் மதுரையைச் சேர்ந்த அம்மாவும் மகளும் தற்கொலைக்கு முயன்றதெல்லாம் நமக்கு வெறும் செய்திமட்டும்தான். அது தொடர்கதையானாலும் அரசுக்குக் கவலையில்லை.

மாவட்டம்தோறும் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையங்களும் குறுகிய காலத் தங்கும் இல்லங்களும் பெண்களின் துயர் நீக்கும் பணியில் இருந்தாலும், அது குறித்த விழிப்புணர்வு பரவலாக்கப்படவில்லை. மேல்தட்டு மக்கள் ஓரளவு நிலைமையைச் சமாளித்துவிடுகின்றனர். அடித்தட்டு மக்களுக்கோ வன்முறை குறித்தும் அதற்குப் புகார் அளிக்கலாம் என்பது குறித்தும் எதுவும் தெரிவதில்லை. டாஸ்மாக் திறக்கப்படுவதை மாபெரும் திருவிழாபோல் பட்டிதொட்டியெங்கும் சென்று சேரும் வகையில் அறிவிக்க முடிந்த அரசுக்கு, குடும்ப வன்முறையில் இருந்து விடுபட பெண்களுக்கு வழிகாட்டுவது இயலாத காரியமாக இருக்கிறது.

மதுபானக் கடைக்கு எந்தெந்த வயதினர் எப்போது செல்ல வேண்டும், அடையாள அட்டை அவசியமா என்பது குறித்தெல்லாம் ஊடகங்கள் வாயிலாகவும் ஒலிபெருக்கி மூலமும் அறிவிக்கத் தெரிந்தவர்களுக்கு, ஓட்டுவங்கியில் சரிபாதி எண்ணிக்கை கொண்ட பெண்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைப் பரவலாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஏன் முடிவதில்லை?

கட்டுரையாளர் தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x