Published : 06 May 2020 10:53 AM
Last Updated : 06 May 2020 10:53 AM

மந்திர மரம்

யூமா வாசுகி

எட்டுத்திக்கும் பறக்கும் கதைகள் - சீனா

வெகுகாலத்துக்கு முன்பு சீனாவில் ஒரு கிராமம் இருந்தது. அங்கே, பேராசை கொண்ட ஒரு வியாபாரி இருந்தார். அவர் பெயர் ஹுவான். ஒரு நாள் அவர் பெரிய மரப் பெட்டியில் நிறையப் பேரிக்காய்களை எடுத்துக்கொண்டு சந்தைக்கு வந்தார். அவற்றை மிகவும் நல்ல விலைக்கு விற்க வேண்டும் என்று நினைத்தார்.

அவர் சந்தை நடுவில் நின்று, “பேரிக்காய்கள்... அழகான பேரிக்காய்கள்! சுவையான பேரிக்காய்கள்! வாருங்கள், வந்து வாங்குங்கள்” என்று கத்தினார்.

அதைப் பார்த்து, புத்த துறவி ஒருவர் ஹுவானிடம் வந்து கேட்டார்: “சகோதரா, என்னிடம் பணமில்லை. ஆனால், பசிக்கிறது. தயவுசெய்து ஒரு பேரிக்காய் தருகிறாயா?”

ஹுவானுக்குக் கோபம் வந்தது. அவர் கோபத்துடன், “என்ன, நான் பேரிக்காயைச் சும்மா தர வேண்டும் என்றா சொல்கிறீர்கள்? அதுவும் உங்களைப் போன்ற ஒரு முட்டாளுக்கா நான் பேரிக்காய் தர வேண்டும்? நீங்கள் உங்கள் ஆயுள் முழுதும் எந்த வேலையும் செய்யாமல் இப்படியே இருந்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

துறவி புன்னகையுடன் மீண்டும் மீண்டும் பேரிக்காய் கேட்டார்.

ஹுவானின் கோபம் அதிகரித்தது. அவர் துறவியைத் திட்டத் தொடங்கினார். இதைப் பார்த்து மக்கள் கூடினார்கள். துறவி மீண்டும் கேட்டார்.

“சகோதரா, உன்னிடமிருக்கும் எல்லாப் பேரிக்காய்களையும் நான் கேட்கவில்லை. என் பசியின் காரணத்தால் ஒன்று மட்டும்தான் கேட்டேன்.”

சுற்றிலும் கூடியிருந்த மக்கள் ஹுவானிடம் சொன்னார்கள்: “நீங்கள் இந்தத் துறவிக்கு ஒரு சிறிய பேரிக்காயாவது கட்டாயம் கொடுத்தே ஆக வேண்டும்!”

ஆனால், ஹுவான் சம்மதிக்கவில்லை. இதைப் பார்த்த ஒரு முதியவர், தான் விலை கொடுத்து ஒரு பேரிக்காய் வாங்கி அதை அந்தத் துறவியிடம் கொடுத்தார். துறவி தலை குனிந்து நன்றி தெரிவித்தார்.

“எனக்குச் சொந்தமாக இருந்ததை எல்லாம் விட்டுவிட்டுத்தான் நான் துறவியானேன். தானமாகக் கிடைப்பதை மட்டுமே நான் உண்பேன். ஆயினும் இந்த வியாபாரியைப் போல நான் சுயநலம் கொண்டவன் அல்ல. என் பேரிக்காய் மரத்தில் காய்க்கும் காய்களை எல்லோருக்கும் தர நான் எப்போதும் தயாராக இருக்கிறேன்” என்றார் துறவி.

இதைக் கேட்டதும் மக்கள், ‘இந்தத் துறவிக்குச் சொந்தமாக பேரிக்காய் மரம் இருக்கிறதா’ என்று நினைத்துக் குழம்பினார்கள்.

துறவி, தனக்குக் கிடைத்த பேரிக்காயைத் தின்ற பிறகு, அதன் விதையைத் தரையில் புதைத்தார். அந்த இடத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றினார். அங்கே, அதிசயம் நடந்தது! அப்போதே அந்த விதை முளைத்து, உடனடியாகச் செடி தோன்றியது. செடி மரமானது. அந்த மரத்தில், மின்னல் வேகத்தில் நிறையப் பேரிக்காய்கள் காய்த்தன. துறவி, அங்கிருந்த மக்களுக்கு பேரிக்காய்களைக் கொடுத்தார். பிறகு ஒரு கோடரியால் அந்த மரத்தை வெட்டினார். மரத்தின் துண்டுகளைத் தோளில் சுமந்துகொண்டு, எதுவும் நடக்காததுபோல அங்கிருந்து புறப்பட்டார்.

ஹுவான் அதை எல்லாம் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார். சற்று நேரத்துக்குப் பிறகு அவர், பேரிக்காய்கள் நிறைத்த தன் மரப் பெட்டியைப் பார்த்தார். இப்போது அங்கே அவரது பெட்டியும் இல்லை, பேரிக்காய்களும் இல்லை. துறவி, அவருடைய பெட்டியின் மரத் துண்டுகளையும் அதில் இருந்த பேரிக்காய்களையும் பயன்படுத்தித்தான் பேரிக்காய் மரத்தை உருவாக்கினார். இது கடைசியில்தான் அவருக்குப் புரிந்தது.

மரப் பெட்டியின் துண்டுகள் வழியோரத்தில் கிடந்தன. அந்தத் துறவியை மட்டும் எங்கும் காணமுடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x