Last Updated : 14 Aug, 2015 11:11 AM

 

Published : 14 Aug 2015 11:11 AM
Last Updated : 14 Aug 2015 11:11 AM

மாற்றுக் களம்: புதைந்து கிடந்த அணிகலன்

தமிழ் இலக்கியங்களிலும் பாடல்களிலும் உள்ள தொன்மை வாய்ந்த இசைப் பண்களை ஆராய்ந்து அவற்றைப் பரப்பித் தமிழிசைக்கு அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தந்தவர் குடந்தை ப.சுந்தரேசனார். தமது வாழ்நாள் முழுவதும் தமிழ்ப் பண்களைப் பாடியும் இசைக் கட்டுரைகள் எழுதியும் நூல்கள் வெளியிட்டும் தமிழிசையின் நுட்பங்களை வெளிக்கொணர்ந்தவர். அவரது நூற்றாண்டை ஒட்டி முனைவர் மு. இளங்கோவன் ஆவணப்படம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

தமிழிசை மூவர் (முத்துத் தாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசலக் கவிராயர்) பிறந்த ஊரான சீர்காழியில் 28.5.1914-ல் பிறந்த சுந்தரேசனார் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளைக் கற்றவர். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்ததால் நகைக்கடையில் வேலை செய்துகொண்டே இசைத் தட்டுக்களைக் கேட்டும், மகாபாரதச் சொற்பொழிவுகளைக் கேட்டும் தமது இசைப் புலமையை வளர்த்துக் கொண்டவர். பின்னர் பிடில் கந்தசாமி தேசிகர், வேம்பத்தூர் பாலசுப்பிரமணியம், வேதாரண்யம் ராமச்சந்திரன் போன்றோரிடம் இசை பயின்றார்.

வாழ்நாள் முழுவதும் கும்பகோணத்தில் வாழ்ந்ததால் குடந்தை ப. சுந்தரேசனார் என்றே இவர் அழைக்கப்பட்டார். பல மொழிகளில் பரிச்சயம் கொண்டிருந்தாலும் தமிழிசை சார்ந்தே தமது கவனத்தைக் குவித்திருக்கிறார்.

தமிழின் பக்தி இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் புதைந்திருந்த தமிழிசை நுட்பங்களை அடையாளம் கண்டவர்களில் குடந்தை ப. சுந்தரேசனார் குறிப்பிடத் தக்கவர். எனவே இவரைத் ‘தமிழ்ப் பண்ணாராய்ச்சி வித்தகர்’ என்றும் ‘ஏழிசைத் தமிழ்மகன்’ என்றும் வழங்கிச் சிறப்பிக்கிறார்கள்.

சுந்தரேசனார் பற்றிய ஆதாரத் தகவல்கள் குறைவாகவே கிடைக்கின்றன. அவற்றைப் பெரிதும் முயன்று திரட்டிப் பெற்று இந்த ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார் இளங்கோவன்.

சுந்தரேசனார் வாழ்ந்த குடந்தை, தஞ்சை ஆகிய ஊர்களில் ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாணாற்றுப்படை, தேவாரம், திருவாசகம், சிலப்பதிகார மங்கல வாழ்த்து, கானல்வரி, ஆய்ச்சியர் குரவைபோன்ற இசைப் பண்களை சுந்தரேசனார் குரலிலேயே ஆவணப்படத்தில் சேர்த்திருப்பது சிறப்பாக இருக்கிறது. புதையுண்டிருந்த அணிகலனை நவீனத் தொழில்நுட்பத்தால் ஒளிவிடச் செய்திருக்கும் உழைப்பு அசாத்தியமானது.

மா. வைத்தியலிங்கம், செந்தலை கெளதமன், ஔவை நடராசன், சிலம்பொலி செல்லப்பன், அரிமளம் பத்மநாபன், ஊரன் அடிகளார் முதலிய அறிஞர்கள் சுந்தரேசனாரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்திருக்கிறார்கள். சுந்தரேசனாரை நேரில் கண்ட ஒரு சிலரின் பகிர்தல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வயல்வெளித் திரைக்களம் வெளியிட்டுள்ள இந்த ஆவணப்படத்துக்கு இசை வழங்கி படத்தொகுப்பு செய்திருப்பவர் ராஜ்குமார் ராஜமாணிக்கம். டத்தோ சூ. பிரகதீஷ்குமாருடன் இணைந்து சுந்தரேசனாரின் உழைப்பிற்கும் ஆராய்ச்சிக்கும் சிறப்பு சேர்க்கும் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறார் பொன்மொழி இளங்கோவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x