Published : 29 Apr 2020 10:12 AM
Last Updated : 29 Apr 2020 10:12 AM

மாய உலகம்: எப்போது விடுதலை கிடைக்கும்?

மருதன்

ஒரு சிறிய அறை. முதன் முதலில் நெல்சன் மண்டேலாவை அதற்குள் தள்ளி கதவை அடைத்தபோது அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நீண்ட நேரத்துக்கு அப்படியே நின்றுகொண்டிருந்தார் அவர். மெல்ல, மெல்ல சுதாரித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார். ஒன்று, இரண்டு, மூன்று. மூன்று அடிகளுக்கு எடுத்து வைக்க முடியவில்லை. படுக்கவாவது முடியுமா இங்கே? தரையில் படுத்துப் பார்த்தார். சுவற்றின் ஒரு பக்கத்தைத் தலையாலும் இன்னொரு பக்கத்தைக் கால்களாலும் தொட்டுவிட முடிந்தது.

இனிவரும் பகல்களையும் இனிவரும் இரவுகளையும் இங்கேதான் நான் கழிக்க வேண்டும். விழித்திருக்கும் நேரம் எல்லாம் இந்த அழுக்கடைந்த சுவற்றை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். சாத்தியம்தானா அது? என் மனைவியை, என் குழந்தைகளை, என் நண்பர்களை, என் மக்களை, என் தென் ஆப்பிரிக்காவை என்னிடம் இருந்து பிரித்து வைத்திருக்கும் சுவற்றோடு எப்படி நான் என் வாழ்நாளைத் தனிமையில் கழிப்பது?

சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த என்னை இந்தச் சுவர் அல்லவா முடக்கிப் போட்டிருக்கிறது? என் கால்கள் நடக்க முடியாமல் போனதற்கு, நட்சத்திரங்களையும் நிலவையும் என் கண்கள் பார்க்க முடியாமல் போனதற்கு, எனக்குப் பிடித்த இசையை என் காதுகள் கேட்க முடியாமல் போனதற்கு சுவர் அல்லவா காரணம்? நீ ஒரு கைதி, நீ ஒரு கைதி என்று ஒவ்வொரு கணமும் என் நினைவுகளைக் குத்திக் குத்தி இந்தச் சுவர் அல்லவா கிழித்துக்கொண்டிருக்கிறது? சுவர்தான் என் பகை. ஆனால், அதுதான் நான்கு பக்கமும் என்னைச் சூழ்ந்துகொண்டிருக்கிறது. என்ன செய்யப் போகிறேன் நான்?

சுவரை நான் உளமாற வெறுக்கலாம். அதைப் பார்க்கும்போது எல்லாம் கடும் கோபம் கொள்ளலாம். ரத்தம் கொதிக்கக் கொதிக்க வசைபாடலாம். நீயா, நானா பார்த்துவிடுவோம் என்று மல்லுக்கட்டலாம். என் உடலிலுள்ள வலுவை எல்லாம் திரட்டி அதை முட்டித் தள்ள முயலலாம். இதை எல்லாம் செய்தால் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்? சில கற்களை என்னால் பெயர்த்தெடுக்க முடியும். மற்றபடி சுவர் அப்படியேதான் நின்றுகொண்டிருக்கும். என் கோபமும் என் ஆற்றாமையும் என் வெறுப்பும் சுவற்றை ஓரங்குலம்கூட அசைக்கப் போவதில்லை.

சுவற்றை அகற்றுவதற்கு இன்னொரு வழி இருக்கிறது. நான் உன்னைப் போல் இருக்கப் போவதில்லை, உன்னைப் போல் மாறப் போவதில்லை என்று சுவரிடம் அறிவிக்கப் போகிறன். என் நிறத்தை இழிவாகப் பார்ப்பதும் என்னை வெறுப்பதும் என் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதும் உனக்கு வேண்டுமானால் இயல்பானதாக இருக்கலாம்.

என் இயல்பு அதுவல்ல. என் உடலில் பாயும் ஆப்பிரிக்கக் குருதி எனக்கு வெறுப்பைக் கற்றுக்கொடுக்கவில்லை. நாங்கள் வனத்தில் வளர்ந்தவர்கள். ஒரு வேங்கையைப் போல் ஒரு யானையைப் போல் ஒரு புல்லைப் போல் ஒரு புதரைப் போல் மனிதனும் இயற்கையின் ஒரு சிறிய அங்கம் என்று எங்கள் மூதாதையர்கள் எங்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். தாக்கவரும் விலங்குகளைக்கூட நாங்கள் மதிக்கிறோம், தொழுகிறோம்.

பசியும் பட்டினியும் எங்களை வாட்டி வதைத்திருக்கின்றன. வெள்ளை மனிதர்கள் விலங்குகளைப் போல் எங்களை வேட்டையாடி எங்கள் உடல்களைச் சங்கிலியால் பிணைத்து அடிமைகளாக மாற்றியிருக்கிறார்கள். அது அவர்கள் இயல்பு. கறுப்பு மனிதர்களுக்கென்று ஓர் இயல்பு இருக்கிறது. என் உடலை நீ சிறைப்படுத்தலாம். என்னை ஓர் அறையில் தனிமைப்படுத்தலாம். என்னை என் குடும்பத்தினரிடமிருந்தும் தேசத்திடமிருந்தும் பிரிக்கலாம். ஆனால், எனக்குள் இருக்கும் காட்டை நீ என்னிடமிருந்து அகற்றிவிட முடியாது. நான் எனக்குள் பொத்திப் பாதுகாக்கும் விடுதலை வேட்கையை நீ அணைத்துவிட முடியாது. என் இயல்பை நீ மாற்றுவதற்கு நான் உன்னை அனுமதிக்க மாட்டேன்.

சுவரே, நான் உன்னை வெறுக்க மறுக்கிறேன். உன்னைவிட்டுத் தப்பிச் செல்ல மறுக்கிறேன். உன்னோடு நான் சண்டையிடப் போவதில்லை. உன்னோடு எந்த வகையிலும் மோதப் போவதில்லை. உன்னை வீழ்த்துவதல்ல என் கனவு. மாறாக, நான் உன்னோடு இணைந்து வாழ விரும்புகிறேன். உன்னை என் தோழனாக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். வெறுப்பைச் சுமந்து சுமந்து இறுக்கமாகிப்போன உன் இதயத்துக்கு அன்பென்றால் என்னவென்று நான் காட்டுகிறேன்.

என்னைச் சுற்றி மட்டுமல்ல, என் தேசத்தைச் சுற்றிலும் வலுவான சுவர்கள் எழும்பி நின்றுகொண்டிருக்கின்றன. அந்தச் சுவர்களுக்குள் என்னைப் போல் கோடிக்கணக்கான ஆப்பிரிக்க மக்கள் சிறைப்பட்டுக் கிடக்கிறார்கள். சுவர்களோடு போரிடுவதன் மூலம், சுவர்களை எல்லாம் இடித்துப் போடுவதன்மூலம் அவர்கள் விடுதலை அடைந்துவிட முடியாது. காரணம், அழிக்க அழிக்க சுவர்கள் முளைத்துக்கொண்டே இருக்கும். சுவர்கள் முளைத்துக்கொண்டே இருக்கும்வரை விடுதலை சாத்தியமில்லை.

ஒவ்வொரு வெள்ளை மனிதனும் தன்னை மாற்றிக்கொண்டால்தான் ஒவ்வொரு கறுப்பு மனிதனும் விடுதலை பெறமுடியும். சந்தேகம் இல்லாமல் இது பெரும் மாற்றம்தான். இந்த மாற்றத்தை எது கொண்டுவரும்? நிச்சயம் வெறுப்பல்ல. நிச்சயம் போரல்ல. நிச்சயம் பகையல்ல. வெறுப்பு மேலும் வெறுப்பையும் ஒரு போர் இன்னொரு போரையும் பகை மேலதிக பகையையும் மட்டுமே கொண்டுவரும்.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி. நான் என் உரையாடலை நிறுத்திக்கொள்ளப் போவதில்லை. ஒரு நாள் என் சுவர் என்னைப் புரிந்துகொள்ளும். ஒரு நாள் என்னை அது விடுவிக்கும். என்னோடு அது தன் கரங்களைக் கோத்துக்கொள்ளும். அப்போது நான் விடுதலை பெறுவேன். என் மக்களும் விடுதலை பெறுவார்கள். அப்போது என் தேசம் மீண்டும் உயிர்பெற்று எழும்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x