Published : 20 Apr 2020 09:41 AM
Last Updated : 20 Apr 2020 09:41 AM

எதிர்காலம் எங்கே இருக்கிறது?

ஜெ.சரவணன்
saravanan.j@hindutamil.co.in

கடந்த வருடம் ஏப்ரல் காலாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி 5 சதவீதமாகக் குறைந்தபோது நாடே அதிர்ச்சிக்குள்ளானது. பொருளாதார அறிஞர்கள் அனைவரும் நாடு இருக்கும் நிலையில் 9 சதவீத வளர்ச்சி இருந்தால் மட்டுமே நம்மால் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியும் என்றனர். ஆனால், இன்று நிலைமை என்ன?

கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் கடந்த நான்கு மாதங்களில் எடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு நடவடிக்கையால் சர்வதேச வர்த்தகம் முற்றிலுமாகச் சிதைந்து போயிருக்கிறது. உலக வல்லரசாகத் தன்னை நினைத்துக்கொள்ளும் அமெரிக்காவே இந்த நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறுகிறது. எனில், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் நிலை என்னவாகப் போகிறது என்ற பெரும் கேள்வி எழுகிறது?

கரோனா வைரஸ் பரவல் தொடங்குவதற்கு முன்பே சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) உட்பட பல உலக அமைப்புகள் சர்வதேச பொருளாதாரம் நெருக்கடியில் இருப்பதாக எச்சரித்து வந்தன. ஆனால், எந்த நாடும் அதைப் பெரிதாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. பொருளாதார நெருக்கடியை உண்டாக்கும் காரணங்கள் பல இருந்தன. முக்கியமாக பருவநிலை மாற்றம், கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கிடையிலான அரசியல், குடியேற்ற எதிர்ப்பு அரசியல் ஆகியவை கூறப்பட்டன. இவற்றால் ஏற்படும் விளைவுகளைச் சமாளிக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், எந்தப் பயனும் இல்லை.

எப்போது பொருளாதார நெருக்கடி வரப்போகிறது என்று தெரியாமல் இருந்த நிலையில், கரோனா வைரஸ் பரவி நெருக்கடியை மேலும் தீவிரமாக்கிவிட்டது என்றே சொல்லலாம். அத்தியாவசிய தேவைகளைத் தவிர பிற தொழில் நடவடிக்கைகள் முற்றிலுமாக முடங்கியுள்ளன. தற்போதுள்ள பேரழுத்த காலம் முடிவுக்கு வந்தப் பிறகு மிக மோசமான அளவில் சர்வதேசப் பொருளாதாரம் வீழப் போகிறது. சர்வதேச வர்த்தகம் 32 சதவீத அளவுக்கு சரிவைக் காணும் என உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) எச்சரித்துள்ளது.

இப்போது உள்ள உயிர் பயத்தைவிட வேலை, ஊதியம், பசி போன்றவற்றின் பயம்தான் அதிகமாக மக்களை இனி கொல்லப் போகிறது என்கிறார் உலக வர்த்தக அமைப்பின் தலைவர் ரூபர்டோ. அமெரிக்காவில் இதுவரை 66 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கான உதவி தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். அமெரிக்கா இதற்கு முன் இப்படியான சூழலை கண்டதில்லை. அமெரிக்க 2 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவித் தொகையை வைத்துக்கொண்டு அதன் நெருக்கடி நிலையைச் சமாளிக்க முடியாது என்கிறார்கள் வல்லுநர்கள். அமெரிக்காவின் நிலையே இப்படியெனில் இந்தியா?

இந்தியாவுக்கு இருந்த ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக ஆர்டர்கள் 50 சதவீதத்துக்கும் மேல் ரத்து செய்யப்பட்டுவிட்டன. தகவல்தொழில்நுட்பத் துறைக்கு வெளிநாடுகளிலிருந்து வந்துகொண்டிருந்த புராஜக்ட்டுகள் வெகுவாகச் சரிந்துள்ளன. உற்பத்தி துறைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. முதலீடுகள் முடங்கியுள்ளன. இதனால் கடன் சுமை பெரிதும் அதிகரிக்கும். இழந்த சந்தையை மீண்டும் பிடிப்பது கடினமாகும்.

சந்தைப் பொருளாதாரம் பிரதானமாகி அது உலகமயமாக்கப்பட்ட பின் இதுபோன்ற நெருக்கடிகள் சர்வசாதாரணமானவை என்றே முதலாளித்துவம் கருதுகிறது. கரோனா வைரஸ் ஆபத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டதன் விளைவு தான் மரணம் லட்சங்களைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல எதிர்காலத்தின் மீது பேரிடியே விழுந்திருக்கிறது. ஏனெனில் எந்தவொரு நெருக்கடியிலும் பாதிக்கப்படப்போவது அவர்கள் இல்லையே. கடைக்கோடி சாமான்யர்கள்தான். அது எந்த நாடாக இருந்தாலும் சரி.

வழக்கமாக நெருக்கடி காலம் என்று வந்தாலே அதில் அரசியலும் சந்தையும் தனக்கான வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருக்கும். அப்படியானவர்களுக்கு ஒருபோதும் அதனால் விளையும் விளைவுகளைப் பற்றிய கவலை எப்போதுமே இருந்ததில்லை. இன்றைய நெருக்கடி காலகட்டத்தையும் முதலாளிகளும் அரசியல்வாதிகளும் அப்படித்தான் எதிர்கொள்கிறார்களோ என்ற அச்சம் உலகம் முழுவதும் இருக்கிறது. அதற்கான வெளிப்பாடாகவே உலக நாடுகளின் தலைவர்களின் பேச்சும் இருக்கிறது.

அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் பேசுவதெல்லாம் அப்பட்டமான அதிகாரத்துவம் அன்றி வேறில்லை. பரவலைத் தடுக்க ஊரடங்கு அவசியம்; அனைவரும் போரை எதிர்கொண்டிருக்கிறோம் என்று எல்லோரையும் போர் வீரர்களாக மாற்றியிருக்கிறார் பிரதமர் மோடி. அவ்வப்போது வீரர்களை உற்சாகப்படுத்த கொண்டாட்ட டாஸ்க்குகளும் வருகின்றன. ஆனால், இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும் மறுபுறம் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கிறது என்பதை உணர்ந்ததற்கான வெளிப்பாடு ஒரு சதவீத அளவுக்குக் கூட தெரியவில்லையே. ஏன்?

மூன்று மாத கடன் தவணை அவகாசம் கிட்டதட்ட ஒரு தண்டனைதானே தவிர அது எந்தவகையிலும் நிவாரணமாகாது. மூன்று மாத தவணை ஒத்திவைப்புக்கு, 12 மாதம் கூடுதலாக தவணை செலுத்தும் நிலைக்கு ஆளாக்குவதுதான் நிவாரணமா? இன்றைய வாழ்க்கை முறை நடுத்தர குடும்பங்கள் பெரும்பாலானவற்றை கடனாளி களாகவே மாற்றியிருக்கிறது. வேலைவாய்ப்பும் ஊதியமும் எந்தப் பிரச்சினையும் இல்லாத வரைதான் அவர்களெல்லாம் நிம்மதியாக வாழவே முடியும். உயிர் வாழ்தல் எந்த அளவுக்கு முக்கியமானதோ அதே அளவு முக்கியம் பசியின்றி வாழ்வதும், கடன் நெருக்கடி இன்றி வாழ்வதும் முக்கியமானது. ஆனால், இனிவரும் காலங்களில் நிலைமை எப்படி இருக்கும் என்பதே நிலையற்றதாக மாறியிருக்கிறது.

இதுவரையிலும் அரசு இந்த நோக்கத்தில் எந்தவொரு நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஒரு மாத ஊரடங்குக்கே நிறுவனங்கள் ஆட்குறைப்பு, ஊதியக் குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கிவிட்டன. ஊரடங்கு முடிந்து அலுவலகம் திரும்பும்போது எத்தனை பேர் மீண்டும் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்பது தெரியாது. அரசு நிறுவனங்களுக்கு இதுதொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்தாலும், நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகளை அரசால் தடுத்துவிட முடியுமா என்ன? அல்லது சாதாரண ஊழியர்தான் நிறுவனத்தை எதிர்க்க முடியுமா? இனி அரசும் தனிநபரும் செய்ய வேண்டியவை அதிகம் இருக்கின்றன. அரசு தான் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் யாரையெல்லாம் பாதிக்கிறது என்பதை அடையாளம் காண வேண்டும். முன்னேற் பாடுகள் செய்யாமல் திடீர் நடவடிக்கைகள் அமல்படுத்தக் கூடாது.

மக்களும் சந்தையும் இயல்புநிலைக்குத் திரும்ப வேண்டுமெனில், வெறும் அறிவிப்புகளோடு அல்லாமல், அவற்றை உத்தரவுகளாக மாற்றி செயல்படுத்தவும் வேண்டும். மிக முக்கியமாக இந்தியா தன்னளவில் எல்லா வகையிலும் தன்னிறைவு அடைய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது. மருத்துவ உபகரணங்கள், மருந்து, தொழில்நுட்பம் என அனைத்துக்குமே அயல்நாடுகளை நம்பியிருக்கிறோம். நமக்கு தேவையானவற்றை நம்மால் உருவாக்க முடிந்த நிலையிலும், அதற்கான வளங்கள், ஆதாரங்கள் இருந்தும் நாம் இறக்குமதி என்ற எளிமையான வழியைத் தேடுகிறோம். உற்பத்தி துறைகளின் வீழ்ச்சியை கடந்த 20 ஆண்டுகளில் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. 20 ஆண்டுகளில் நுகர்வு அடைந்த வளர்ச்சிக்கு இந்திய உற்பத்தி துறை பல மடங்கு வளர்ச்சி கண்டிருக்க வேண்டும். ஆனால்,20 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அதே நிலையில்தான் இன்றும் இருக்கிறது.

இப்போது அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கு முடிந்துமீண்டும் நுகர்வு பழைய நிலைக்கு மாறும்போது சந்தை தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும். எல்லாவகையிலும் துரிதமாக செயல்பட வேண்டிய கட்டாயம் அரசுக்கு இருக்கிறது. அரசுக்கு இத்தகைய பொறுப்புகள் இருப்பதுபோலவே, தனிநபர்களாகிய நமக்கும் சில பொறுப்புகள் உள்ளன. மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதேசமயம் சில பாடங்களையும் நாம் கற்றுக் கொண்டாக வேண்டும். நுகர்வு சீராக்கப்பட வேண்டியது அதில் மிக முக்கியமான ஒன்று. தேவைக்கு மீறி அதிகப்படியாக நுகரும் போக்கு குறைய வேண்டும். இதனால் தனிநபர் வருமான வளர்ச்சி விகிதம் குறையலாம். ஆனால், செலவுகள் குறையும்போது வருமானம் போதுமானதாகவே இருக்கும்.

நுகர்வு அதிகரிப்பதால் சந்தை வளர்ந்து வேலை வாய்ப்பு அதிகரிக்கும் அதனால் மக்கள் பயனடைவார்கள் என்பதில் பாதிதான் உண்மை இருக்கிறது. பயனடையும் மக்கள் யார் என்பதில்தான் இங்கு பிரச்சினையே. செல்வமும், அதிகாரமும் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினரிடம் மட்டுமே குவிந்திருப்பதுதான் இதன் பலன். தற்போதுள்ள சந்தைப் பொருளாதாரம் எல்லோரையும் வாழவைக்கும் பொருளாதாரமாக இல்லை என்பதை இன்னமும் நாம் உணரவே இல்லை. சந்தைதான் நாம் யார், எப்படி இருக்க வேண்டும், எதை நுகர வேண்டும் என்று தீர்மானிக்கிறது. உயிருக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இன்றைய சூழலை திட்டமிட்டு எதிர்கொள்ளவில்லை எனில் எதிர்காலம் மோசமாவதை தடுக்க முடியாது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x