Published : 18 Apr 2020 08:53 AM
Last Updated : 18 Apr 2020 08:53 AM

வவ்வால்கள் மீதுஏன் இந்த வீண்பழி?

இந்திய பறக்கும் நரி

மு. மதிவாணன்

எப்பொழுதெல்லாம் விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு தொற்றுகிற வைரஸ் நோய்கள் (Zoonotic Diseases) வருகின்றனவோ அந்த நேரத்தில் காட்டுத்தீபோல் வவ்வால்கள் குறித்த எதிர்மறையான செய்திகளும் தேவையின்றி பரப்பப்படுகின்றன. தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸும் வவ்வால்களை விட்டு வைக்கவில்லை. இது தொடர்பாக நிறைய செய்திகள் சமூகவலைத் தளங்களில் மட்டுமல்லாமல் ஊடகங்களிலும் பெருமளவில் பரப்பப்பட்டு வருகின்றன. வவ்வால்கள் மீது சுமத்தப்படும் வீண்பழி இது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களான தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் வவ்வால்களின் வாழ்க்கை முறை, அவற்றால் மனித குலத்துக்குக் கிடைக்கும் சூழலியல் நன்மைகள் குறித்து அகத்தியமலை இயற்கைவள பாதுகாப்பு மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாக ஆராய்ச்சிகளை மேற்கோண்டு வருகிறார்கள். இந்த ஆராய்ச்சியில் வவ்வால்கள் குறித்த நல்ல செய்திகளே கிடைத்துள்ளன.

தமிழ்நாட்டில் பல பகுதிகளில் பல நூற்றாண்டு காலமாக மனிதக் குடியிருப்புகளை ஒட்டியுள்ள மரங்கள், பாழடைந்த கட்டிடங்கள், பழமையான கோயில்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வாழ்ந்துவருகின்றன. அதேநேரம், அருகில் வாழும் மக்களுக்கு வவ்வால்கள் மூலம் எந்த வைரஸும் பரவியதாக இன்றுவரை எந்தப் பதிவும் இல்லை.

பறக்கும் பாலூட்டி

பாலூட்டிகளில் பறக்கும் திறனை பெற்றுள்ள ஒரே உயிரினம் வவ்வால். புவியில் 1,200 சிற்றினங்களைச் சேர்ந்த வவ்வால்கள் உள்ளன. புவியில் வாழும் மொத்தப் பாலூட்டிகளின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கு வவ்வால்களே. இந்தியாவில் 120 சிற்றி னங்களைச் சேர்ந்த வவ்வால்கள் உள்ளன. தமிழ்ச் சமூகமும் வவ்வால்களும் பல ஆயிரம் ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்துவந்துள்ளன என்பதை நற்றிணை பாடல்கள் 87, 279 உறுதிப்படுத்துகின்றன.

பழந்தின்னி வவ்வால்கள்

நமது கிராமப்புறங்களில் மரங்களிலும் பாழடைந்த கட்டிடங்களிலும் 3 வகையான பழந்தின்னி வவ்வால்களை ஆயிரக்கணக்கில் பார்க்கலாம். இவை பழங்கள், பூக்கள், தளிர்கள் போன்றவற்றைத் தின்று விதைப்பரவல், மகரந்தச் சேர்க்கைக்குப் பெரும் பங்காற்றுகின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் மலர்கிற இலவம் பஞ்சு மர மலர்கள் போன்றவற்றில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதில் இந்த வகை வவ்வால்களின் பங்கு முக்கியமானது. தாமிரபரணி ஆற்றங்கரையோரத்தில் அதிகளவில் உள்ள அத்தி, இலுப்பை, நாவல் போன்ற மரங்கள் வவ்வால்களால் விதைக்கப்பட்டவையே.

பூச்சியுண்ணும் வவ்வால்கள்

நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றினங்களைச் சேர்ந்த பூச்சியுண்ணும் வவ்வால்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றில் 6 சிற்றினங்களைச் சேர்ந்த வவ்வால்கள் கிராமப்புறங்களில் உள்ள குகைகள், பாழடைந்த கட்டிடங்கள், பாலங்கள், பழமையான கோயில்கள் போன்ற இடங்களில் பார்க்கலாம். இந்தப் பூச்சியுண்ணும் வவ்வால்கள் மீயொலி அலையை (Ultrasound)எழுப்பி பூச்சிகளைப் பிடித்து உண்கின்றன. விளைநிலங்களில் பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தும் பூச்சிகளை உண்பதன் மூலம், உழவர்களின் நண்பனாக விளங்குகின்றன. ஒரு சிறிய வவ்வால் ஓர் இரவில் 500 பூச்சிகளை உண்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை கொசுக்களையும் பெருமளவில் உண்கின்றன.

போலி காட்டேரி

வவ்வால்களும் வைரஸ்களும்

வவ்வால்களிடம் பல வகையான வைரஸ்கள் இருக்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், வவ்வால்கள் அசாதாரண நோய் எதிர்ப்பு ஆற்றலை கொண்டுள்ளதால் வைரஸ்களால் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், அந்த வைரஸ் வேறு உயிரினத்துக்குச் செல்லும்போது பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் வவ்வால்களிடமிருந்து நேரடியாக வைரஸ் மனிதர்களுக்குப் பரவுவது இல்லை.

தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் வவ்வால்கள் மூலம் அலங்கு அல்லது எறும்புதின்னி என்றழைக்கப்படும் உயிரினத் துக்குச் சென்று, அதன்மூலமாக மனிதனுக்குப் பரவியதாகக் கருதப்படுகிறது. இந்தத் தகவல் திட்டவட்டமாக உறுதிப்படுத்தப்படவில்லை. சீனாவின் வூகான் மாகாணத்தில் கடல் உணவு விற்கப்படும் சந்தையில் அலங்கு, வவ்வால், முள்ளம்பன்றி, ஆமை, முதலை போன்றவை உயிருடனும் இறைச்சியாகவும் கள்ளத்தனமாக விற்கப்படுகின்றன. இது போன்ற பெரிய சந்தைகளில் சுகாதாரமான முறையில் உயிரினங்கள் கையாளப்படுவதில்லை.

பலவகையான உயிரினங்கள் வலைக்கூண்டுகளில் அடைக்கப்பட்டு ஒன்றுக்கு மேல் ஒன்று வைக்கப்பட்டிருக்கும். மேல் கூண்டில் உள்ள உயிரினங்களின் சிறுநீர், மலம் போன்றவை கீழ் கூண்டில் உள்ள உயிரினங்களின் மேல் விழுவது இயல்பு. இது போன்ற சுகாதாரமற்ற கையாளும் முறையால் ஒரு உயிரினத்திடமிருந்து இன்னொரு உயிரினத்துக்கு வைரஸ் பரவுகிறது. பிறகு அதை நுகரும் மனிதனுக்கும் பரவுகிறது. இதற்கு குறிப்பிட்ட உயிரினத்தின் மீது எப்படிப் பழிபோட முடியும்? இது யாருடைய தவறு?

அது மட்டுமல்லாமல் தொடர்ந்து பல ஆண்டுகளாக காடழிப்பு, கிராமப்புறங்களில் உள்ள மரங்கள் அழிப்பு, கிராமப்புறங்களில் இருக்கும் குன்றுகளில் குவாரி அமைத்து பாறைகளை வெட்டுவது போன்ற இயற்கை அழிப்புச் செயல்பாடுகளை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மேற்கொண்டுவருகிறோம். இதனால் வவ்வால்களின் வாழிடம் பெருமளவு அழிக்கப்பட்டுவருகிறது. இதுபோன்று வவ்வால்களின் மீது மனிதர்கள் திணிக்கும் செயற்கை அழுத்தங்களின் விளைவால், வவ்வால்களின் இயற்கை நோய் எதிர்ப்பு ஆற்றல் சரியாகச் செயல்படாமல் போகலாம். இந்தப் பின்னணியில் வவ்வால்களின் சிறுநீர், மலத்தின் வழியாக வைரஸ் வெளியேறுவதற்கு சாத்தியம் உள்ளதாகவும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையில் வவ்வால் களிடம் நாவல் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது என்று கூறப்படவில்லை. கரோனாவில் பல துணை வகை வைரஸ்கள் உள்ளன. அவற்றில் ஒரு வைரஸ்தான் கண்டறியப்பட்டுள்ளது. அந்தச் செய்தியை இந்த வேளையில் ஊடகங்கள் பூதாகரமாக்குகின்றன. தற்போது நோயைப் பரப்பிவரும் நாவல் கரோனா வைரஸ், இந்திய வவ்வால் வகைகளிடம் இருப்பதாக அந்த ஆய்வு சொல்லவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

வவ்வால்களிடம் உள்ள வைரஸ் வகைகள் என்ன, அவை மனித குலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றனவா, அப்படி பாதிப்புகள் நேர்ந்தால் அதை எப்படிக் கையாள வேண்டும் என்ற கூட்டு ஆராய்ச்சி முடுக்கிவிடப்பட வேண்டிய நேரம் இது. இந்த ஆராய்ச்சியில் தொற்றுநோய் நிபுணர்கள், மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், கால்நடை மருத்துவர்கள், உயிரியல் நிபுணர்கள் ஆகியோரை உள்ளடக்கிய பல்துறை கூட்டு ஆய்வு முன்னெடுக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட கூட்டுமுயற்சிகள், தொடர் ஆய்வுகளால் மட்டுமே நாவல் கரோனா வைரஸ் போன்றவற்றிடமிருந்து மனித குலம் எதிர்காலத்தில் காப்பாற்றிக்கொள்ள முடியும். மாறாக பழிசுமத்துவதால் வவ்வால்களுக்கும் நன்மையில்லை, நமக்கும் நன்மையில்லை.

கட்டுரையாளர், ஏட்ரீ நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: mathi@atree.org

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x