Published : 17 Apr 2020 09:15 AM
Last Updated : 17 Apr 2020 09:15 AM

இணையத் திரை: ‘வலை’ வீசும் தொடர்கள்

இணையத்திரையின் பார்வையாளர்களில், காத்திரமான படைப்புகளைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கும் தேர்ச்சிமிக்க ரசனை கொண்டவர்கள் ஒரு பிரிவினர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் வலைத்தொடர் விரும்பிகளாகவும் உள்ளனர். தற்போது புதிதாக இணையத்திரைக்குப் படையெடுத்திருக்கும் ரசிகர்களாலும் வலைத்தொடர்கள் கவனம் பெற்று வருகின்றன. அந்த வகையில் மேற்கத்திய வலைத்தொடர்கள் மட்டுமன்றி ஐரோப்பிய, கிழக்காசிய வலைத்தொடர்கள் சப்-டைட்டில் உபயத்தால் அதிகம் ரசிக்கப்படுகின்றன. இவற்றின் ஊடாக உள்நாட்டின் படைப்புகள் பலவும் தனித்து அடையாளம் பெற்றுவருகின்றன.

திரில்லர், ஹாரர், காதல், நகைச்சுவை, வரலாறு, குடும்பம், சமூகப் பிரச்சினைகள் எனப் பல வகைமைகளில் வலைத்தொடர்கள் குவிந்து கிடக்கின்றன. இணையவெளியில் அமேசானின் கடும் போட்டிக்கு மத்தியில் தனது பரவலான வலைத்தொடர்களால் நெட்ஃபிளிக்ஸ் கவனம் ஈர்க்கிறது. மேற்கத்திய நாடுகளின் தொலைக்காட்சிகளில் பிரபலமான தொடர்கள், ஸ்ட்ரீமிங் தளங்களின் தேர்ந்தெடுத்த தொடர்கள் ஆகியவற்றுடன் ஹாட்ஸ்டார் தனித்து நிற்கிறது. வேறெதிலும் இல்லாத வகையில் பிராந்திய மொழிகளில் தயாரான வலைத்தொடர்களுடன் பார்வையாளர்களைத் தனித்து ஈர்க்க முயன்று வருகிறது ‘ஜீ 5’. வேறு சில, இணையத்தின் கட்டற்ற சுதந்திரத்தின் பெயரால் வயது வந்தோருக்கான தொடர்களால் கவனம்பெற முயல்கின்றன. இதுபோன்ற தளங்களைக் குழந்தைகள் வீட்டில் இருக்கும் இத்தருணத்தில் நாடாமல் இருப்பதே நலம்.

ஈர்ப்பு குறையாத தொடர்கள்

பல்வேறு சீஸன்களில் ஆண்டுக்கணக்கில் நீளும் பழம்பெரும் தொடர்களின் நிரூபிக்கப்பட்ட வெற்றியால், அவையே புதிய பார்வையாளர்களின் முதல் தேர்வாக அமைகின்றன. அமெரிக்க வெள்ளை மாளிகை அரசியலை மையமாகக் கொண்ட ‘டிசைனேட்டட் சர்வைவர்’, ‘ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ்’, ‘பாடிகார்ட்’ உள்ளிட்டவை இந்த வகையில் சேரும். அரியணைக்கான அரசியல் அக்கப்போர்களில் பிரபலமான மற்றொரு தொடர் ஹெச்.பி.ஓ. தயாரிப்பான ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’. அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட இந்தத் தொடர் எட்டாம் சீஸனைக் கடந்த ஆண்டு மத்தியில் நிறைவுசெய்தது. இந்தியாவில் இதை ஹாட்ஸ்டாரில் ரசிக்கலாம்.

இந்த வரிசையில் ‘வைகிங்ஸ்’, ‘தி லாஸ்ட் கிங்டம்’ (இதன் 4-ம் சீஸன் ஏப்ரல் 26 அன்று வெளியாக உள்ளது), ‘ஸ்பார்டகஸ்’ போன்றவற்றை நெட்ஃபிளிக்ஸ் வழங்குகிறது. கிரைம் திரில்லர் வரிசையில் ‘பிரேக்கிங் பேட்’, ‘தி பிளாக்லிஸ்ட்’, ‘ஃபர்கோ’ ஆகியவற்றுடன், கொலம்பிய போதை பொருள் கடத்தல் மன்னனான பாப்லோ எஸ்கோபர் கதையைக் கூராயும் பல்வேறு தொடர்களும் நெட்ஃபிளிக்ஸில் பிரசித்தி பெற்றவை. துப்பறிதலில் நெட்ஃபிளிக்ஸின் ‘ஷெர்லாக்’, ஹாட்ஸ்டாரின் ‘ட்ரூ டிடெக்டிவ்’, ஹாட்ஸ்டார் - அமேசான் பிரைம் இரண்டிலுமே கிடைக்கும் ‘தி மென்டலிஸ்ட்’ போன்றவை அதிகம் ரசிக்கப்படுபவை.

புதுவேகம் காணும் தொடர்கள்

அமேசான்: அல் பசினோ உள்ளிட்டோர் நடிப்பில், அமெரிக்காவில் ஊடுருவிய நாஜிகளின் பழிவாங்கல் பின்னணியிலான ஹாலிவுட் தொடர் ‘ஹன்டர்ஸ்’. ரசனையான காதல் கதைகளின் கதம்பம் ‘மாடர்ன் லவ்’. வித்தியாசமான அனிமேஷன் தொடர் ‘அன்டன்’ (undone). இவை அமேசானின் மேற்கத்திய தயாரிப்புகளில் அடங்குகின்றன. இந்தி(ய)த் தயாரிப்புகளில், டார்க் காமெடி வகைத் தொடராகத் தற்கொலை அபத்தத்தைத் தெறிக்கவிடுகிறது ‘அஃப்சோஸ்’ (Afsos).

தனிப்பட்ட வாழ்க்கை, பணி வாழ்க்கையின் நெருக்கடி ஆகியவற்றுக்கு இடையே ஓர் உளவாளி படும் பாட்டை ரசனையுடன் விவரிக்கிறது ‘தி ஃபேமிலி மேன்’. தங்கள் மீதான கற்பிதங்களை உடைத்துப்போடும் நான்கு பெண்களின் போராட்டமும் கலாட்டாக்களும் கலந்த கதை ‘ஃபோர் மோர் ஷார்ட்ஸ் ப்ளீஸ்!’ (இத்தொடரின் 2-ம் சீசன் இன்று (ஏப்ரல் 17) வெளியாக உள்ளது). கலகலக் காதல் கதையான ‘புஷ்பவள்ளி’ தொடரின் இரண்டாம் சீஸன் கடந்த மாதம் வெளியானது.

முன்னதாக வெளியானவற்றில் இளமை ததும்பும் காதலின் ஊடாடலைச் சிலாகிக்கும் ‘லிட்டில் திங்க்ஸ்’, திருமண வைபவங்களையும் தொடரும் இல்லறத்தையும் கேள்விக்குள்ளாக்கும் ‘மேட் இன் ஹெவன்’, கிரிக்கெட்டில் தறிகெட்டு விளையாடும் அரசியல், சூதாட்டம் இரண்டையும் சுவாரசியமாக அம்பலப்படுத்தும் ‘இன்சைடு எட்ஜ்’, இந்திய விடுதலைப் போரில் மறைக்கப்பட்ட தியாகங்களை வெளிச்சமிடும் ‘தி ஃபர்காட்டன் ஆர்மி’ போன்றவை கவனத்துக்குரியவை.

நெட்ஃபிளிக்ஸ்: வரலாற்றுடன் இழையோடும் தொடர்கள் நெட்ஃபிளிக்ஸில் வரவேற்பைப் பெற்றுவருகின்றன. அந்த வகையில் ‘ரைஸ் ஆஃப் எம்பயர்ஸ்: ஓட்டோமன்’, ‘ரோமன் எம்பயர்’, ரஷ்ய ஜார் மன்னர்களின் கடைசி அத்தியாயத்தை உருக்கமாக விளக்கும் ‘தி லாஸ்ட் ஜார்ஸ்’ போன்றவை சுவாரசியமானவை.

‘மணி ஹெய்ஸ்ட்’ தொடரின் வெற்றியை அடுத்து அதே போன்ற பரபரப்பான ஸ்பானிஷ் கிரைம் கதைகளான ‘லாக்டு அப்’, ‘ஹை சீஸ்’ (High Seas), ‘எலைட்’ போன்றவை கவனம் பெற்றுள்ளன. பகடியாகப் பாலியல் கல்வியைப் போதிக்கும் ‘செக்ஸ் எஜுகேஷன்’ தொடரின் இரண்டாம் சீஸன் ஜனவரி மத்தியில் வெளியானது. உளவியலின் தந்தையான சிக்மண்ட் பிராய்டின் இளம்பருவத்திலிருந்து கிளைத்த கற்பனைக் கதையான ‘பிராய்ட்’ தொடர், மார்ச் இறுதியில் வெளியாகியுள்ளது.

இந்தியத் தொடர்களில், செல்போனில் தந்திரமாகப் பேசியே பலரின் வங்கி இருப்பைத் துடைத்தெடுத்த வடக்கிந்திய இளைஞர்களின் போக்கை விவரிக்கும் ‘ஜம்தாரா’ தொடர் ஜனவரியில் வெளியானது. காதலைக் குறுக்குவெட்டாக அலசும் ‘தாஜ்மஹால் 1989’ தொடர் மார்ச் இறுதியில் வெளியானது. முன்னதாக வெளியானவற்றில், சாயிஃப் அலி கான், நவாஸுத்தின் சித்திக்கி நடித்த ‘சேக்ரட் கேம்ஸ்’, நிர்பயா வழக்கு குறித்த ‘டெல்லி கிரைம்’, அரசியல் சமூக சாடலான ‘லெய்லா’ உள்ளிட்டவை முக்கியமானவை. n எஸ்.எஸ்.லெனின் n

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x