Published : 15 Apr 2020 08:42 AM
Last Updated : 15 Apr 2020 08:42 AM

டிங்குவிடம் கேளுங்கள்: ஈன்ற குட்டியைத் தாய் சாப்பிடுமா?

டிங்குவுக்கு என்ன ஆனது? 2 வாரங்களாகக் காணவில்லையே?

- ஆர். நித்யா, 8-ம் வகுப்பு, கோவை. எம். அஸ்வத், புளியங்குடி.

நான் நலமாக இருக்கிறேன். விசாரித்த பலருக்கும் அன்பு. என்னைப் போலவே நீங்களும் பத்திரமாக வீட்டில் இருப்பீர்கள் என்று தெரியும். எத்தனையோ கிருமிகளிடம் இருந்து மீண்ட மனிதகுலம், கரோனாவிலிருந்தும் மீண்டுவிடும். அதுவரை கவனமாக இருப்போம். மாயாபஜாரின் பக்கங்கள் குறைந்துவிட்டதால் டிங்கு உட்பட வழக்கமான பகுதிகள் தொடர்ச்சியாக வராது. நிலைமை சரியாகும்போது வழக்கமான மாயாபஜார் வந்துவிடும், நித்யா, அஸ்வத்.

சூடான காபியைக் குடித்த உடன் நாக்கு மரத்துப் போகிறதே ஏன், டிங்கு?

- அ.ரா. அன்புமதி, 6-ம் வகுப்பு, மைக்கேல்ஜாப் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சூலூர், கோவை.

நாக்கு மென்மையான உறுப்பு. அதில் ஏராளமான சுவைமொட்டுகள் இருக்கின்றன. அதிக சூடான காபி, தண்ணீரைக் குடிக்கும்போது சுவைமொட்டுகள் பாதிக்கப் படுகின்றன. இதனால் அந்தப் பகுதி மரத்துவிடுகிறது. சிறிது நேரத்துக்குப் பிறகு புண்ணாகிவிடும். சில நாட்களுக்குச் சுவையும் தெரியாது. காயம் சரியான பிறகே இயல்பு நிலைக்கு நாக்கு வரும். சூடான பொருட்கள் மட்டுமல்ல, அதிகக் குளிர்ச்சியான பொருட்களும் நாக்கைப் பாதிக்கும், அன்புமதி.

விலங்குகள் தாம் ஈன்ற குட்டிகளில் சிலவற்றைத் தின்றுவிடும் என்கிறார்கள். உண்மையா, டிங்கு?

- அ. பிரியதர்சினி, 8-ம் வகுப்பு, சேது லட்குமிபாய் பெண்கள் அரசு உயர்நிலைப் பள்ளி, ராஜாக்கமங்கலம், குமரி.

உண்மைதான் பிரியதர்சினி. ஆனால், எல்லா விலங்குகளும் தாம் ஈன்ற குட்டிகளைச் சாப்பிடுவதில்லை. ஒருசில விலங்குகளே இவ்வாறு சாப்பிடுகின்றன. ஏன் இவ்வாறு செய்கின்றன என்பதற்கான குறிப்பிட்ட காரணத்தை இதுவரை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. சில காரணங்களை மட்டும் சொல்கிறார்கள். குட்டிகளை ஈனும்போது தாய் தன்னுடைய ஆற்றலை இழந்துவிடுகிறது. அந்த ஆற்றலை ஈடுகட்டுவதற்காகத் தான் ஈன்ற குட்டிகளில் நோயுற்ற, நோஞ்சான் குட்டியைத் தின்றுவிடுகிறது.

பிரசவத்தால் ஏற்படும் மன அழுத்தத்தாலும் இப்படிச் செய்யலாம். நிறைய குட்டிகள் பிறக்கும்போது, அவற்றில் நோயுற்ற நோஞ்சான் குட்டிகளைக் கவனித்துக்கொள்வதற்குச் சிரமமாக இருக்கும் என்பதாலும் அவற்றின் அழுகுரலைக் கேட்டு எதிரிகள் வந்துவிடலாம் என்பதாலும் அவற்றைக் கொன்றுவிடுகின்றன. கொல்பவற்றை எல்லாம் சாப்பிட்டுவிடுகின்றன என்றும் சொல்ல முடியாது. ஆரோக்கியமான குட்டிகளைக் கொல்வதில்லை என்றும் குட்டிகளை ஈனும்போதெல்லாம் கொல்வதில்லை என்றும் சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x