Published : 15 Apr 2020 08:36 AM
Last Updated : 15 Apr 2020 08:36 AM

விடுமுறையில் என்ன செய்யலாம்? - சமையலறை அறிவியல்

உணவின்றி எந்த உயிரும் வாழ முடியாது. மனிதர்களைப் போல் விதவிதமான உணவு வகைகளை வேறு எந்த உயிரினமும் சாப்பிடுவதில்லை. சமையலறையில் இருக்கும் அறிவியலை இந்த விடுமுறையில் தெரிந்துகொள்ளலாமா? உணவைப் போலவே சமையலறையில் இருக்கும் அறிவியலும் சுவாரசியமாகவும் சுவையாகவும் இருக்கும்.

குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து உப்புமா செய்து பாருங்கள். 4 பேருக்கு 2 டம்ளர் ரவையைச் சுத்தம் செய்து ஒரு வாணலியில் போட்டு வறுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பெரிய வெங்காயம், 2 பச்சை மிளகாய், இஞ்சி சிறிது ஆகியவற்றை நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு போட்டுத் தாளியுங்கள். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலைப் போட்டு நன்கு வதக்குங்கள். சிறிது பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து , 4 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடுங்கள். வறுத்த ரவையைச் சிறிது சிறிதாகப் போட்டு, கட்டி இல்லாமல் கிளறி, குறைந்த தீயில் வேக வைத்து எடுத்தால் உப்புமா தயார்.

ஏன் ரவையை வறுக்க வேண்டும்? பச்சை வாசனைப் போவதற்காக வறுக்கிறோம். எண்ணெய் சூடான பின் ஏன் கடுகைப் போட வேண்டும்? கடுகு வெடிப்பதற்கு வெப்பம் தேவை. ஏன் முதலில் வெங்காயத்தைப் போடக் கூடாது? கடுகு வெடிக்காது, உளுந்து சிவக்காது என்பதால் முதலில் அவற்றைப் போடுகிறோம். 2 டம்ளர் ரவைக்கு ஏன் 4 டம்ளர் தண்ணீர் தேவை? ரவையை வேக வைக்க 2 மடங்கு தண்ணீர் தேவைப்படும். உப்புமாவின் அளவும் அதிகமாகக் கிடைக்கும்.

இப்படி ஒரு நாளைக்கு ஏதாவது ஓர் உணவைக் குடும்பத்தோடு தயார் செய்யுங்கள். கேள்விகளை உருவாக்குங்கள். பதில்களைத் தேடுங்கள். விடைகள் அறிய வரும்போது சமையலறையில் இருக்கும் அறிவியல் பிரமிக்க வைக்கும்.

அரிசி வேகும்போது கல் ஏன் வேகவில்லை? அப்பளம் பொரிவது போல் ஏன் மரக்கட்டைப் பொரியவில்லை? தானியங்களில் ஏன் புழு உருவாகிறது? மஞ்சள் ஏன் சிறிதளவே பயன்படுத்துகிறோம்? மிளகாயின் காரம் விதையிலா, தோலிலா? ஏன் சமைக்கப்பட்ட உணவு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு கெட்டுப் போகிறது? பெரும்பாலான சமையலறைகள் ஏன் காற்றோட்டம் அதிகம் இல்லாமல் சிறியதாக இருக்கின்றன? வீடுகளில் ஏன் சமையல் வேலை பெண்களுடையதாக இருக்கிறது? உணவகங்களிலும் கல்யாணங்களிலும் ஏன் ஆண்களே அதிகம் சமைக்கிறார்கள்?

இப்படி நீங்களே அறிவியல் மற்றும் சமூகக் கேள்விகளைக் கேட்டு, விடை தேடுங்கள். உங்கள் அனுபவத்தை எழுதி அனுப்புங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x