Published : 13 Apr 2020 10:42 AM
Last Updated : 13 Apr 2020 10:42 AM

சார்வரி ஆண்டு பொதுப்பலன்

நிகழும் மங்களகரமான சார்வரி வருடம் சிசிர ருதுவுடன் உத்தராயணப் புண்ணிய காலம் நிறைந்த திங்கட்கிழமை இரவு மணி 7.20க்கு 13.04.2020 கிருஷ்ண பட்சத்தில் சஷ்டி திதி, மூலம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் தனுசு ராசியில், துலாம் லக்கினத்திலும், நவாம்சத்தில் கும்ப லக்னம், கடக ராசியிலும், பரிகம் நாமயோகம், சகுனி நாமகரணத்தில், புதன் ஓரையிலும், நேந்திரம், ஜுவனம் நிறைந்த நாளிலும், பஞ்சபட்சிகளில் கோழி வலிமை இழந்த காலத்திலும், கேது மகாதசையில் சனிபுத்தி, சுக்கிரன் அந்தரத்தில் சாதுரியமான சார்வரி வருடம் பிறக்கிறது.
சார்வரி வருஷத்திய வெண்பா பலன்

“சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே
திரமறு நோயால் திரிவார்கள் - மாரியில்லை
பூமி விளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமன்றிச் சாவார் இயம்பு.”

என்ற சித்தர்பிரான் இடைக்காடரின் பாடலின் படி சாதி, இன பேதமின்றி எல்லா மதத்தினரும் நோயால் பாதிக்கப்படுவார்கள். மழை குறையும்; பூமியில் விளைச்சல் குறையும்.

16.7.2020 வரை ராகு கேதுவின் கோரப் பிடியில் அனைத்துக் கிரகங்களும் அடங்கிக் கிடப்பதால், அதுவரை உலகெங்கும் அமைதி இல்லாத நிலையும் ஆரோக்கியமற்ற நிலையும், மக்கள் புதிய நோய்களால் பாதிப்படையக் கூடிய நிலையும் உண்டாகும்.

மூலம் நட்சத்திரத்தில் இந்த சார்வரி வருடம் பிறப்பதாலும், ஆடி மாதம் 5-ம் தேதி திங்கட்கிழமை வருவதாலும் நல்ல மழை உண்டு; விவசாயம் தழைக்கும்; விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகளால் பல சலுகைகள் கிடைக்கும். வங்காள விரிகுடாவில் கிழக்குப் பகுதியில் புதிய புயல்கள் உருவாகி மழை பொழியும். மரம், செடி, கொடிகள் தழைக்கும்.

சார்வரி வருடப் பிறப்பு ஜாதகத்தில் லக்னாதிபதி சுக்கிரன் 8-ல் நிற்பதால் ஆன்மிகம் வளர்ச்சி அடையும். குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். தன் சப்தமாதிபதி செவ்வாய் வலுவாக இருப்பதால் கரும்பு விளையும்; இந்தியாவின் ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கும். திருதிய சஷ்டமாதிபதியாகக் குரு வருவதால் மின்சார விபத்துகள் அதிகரிக்கும். வங்கிகள் பாதிப்படையும்; வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் அங்கே பெரிய பதவிகளில் அமர்வார்கள். மந்திரியாக சந்திரன் வருவதால் நன்செய் பயிர்கள் அபிவிருத்தி அடையும். பசுக்கள் விருத்தி அடையும். பூமிக்கு அடியில், நடுக்கடலில் அரசுக்குப் புதையல் கிடைக்கும். ஆட்சியாளர்களைப் பெண்கள் மறைமுகமாக ஆட்டிப் படைப்பார்கள்.

அர்க்காதிபதியாகவும், மேகாதிபதியாகவும், சேனாதிபதியாகவும் சந்திரன் வருவதால் மக்கள் கற்பனையில் மிதப்பார்கள். அழகு சாதனப் பொருட்கள் விற்பனை அதிகரிக்கும். மதுபானப் பயன்பாடும் உயரும். சுற்றுலா, சினிமா பொழுது போக்குகளில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள். மன இறுக்கம் மற்றும் மனநோயால் அதிகமானோர் பாதிப்படைவார்கள். அர்க்காதிபதியாக சந்திரன் வருவதால் பால் உற்பத்தி பெருகும்; ஆடை, ஆபரணங்களில் விலை உயரும். மேகாதிபதிபயாகவும் சந்திரன் வருவதால் புயல் காற்றுடன் மழை இருக்கும். இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் மழைப் பொழிவு அதிகரிக்கும். ஏரி, குளம் ஆழப்படுத்தப்படும்.

சேனாதிபதியாகவும் சந்திரன் வருவதால் ஜனநாயகம் தழைக்கும்; புதிய நோய்கள் பரவும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய் மற்றும் புற்று நோய்களுக்குப் புது மருந்துகள் கண்டறியப்படும். சஸ்யாதிபதியாகக் குரு வருவதால் புதிய மருத்துவ, சட்டக்கல்லூரிகள் திறக்கப்படும். இந்தியா, உலக அளவில் கல்வியில் சாதிக்கும். ரசாதிபதியாகச் சனி வருவதால் புளி, வெல்லம், மதுபான வகைகளின் விலை அதிகரிக்கும். இனிப்புப் பண்டங்ககளின் விலை உயரும். தொழில் விருத்தி அடையும். இரும்பு, பித்தளை உலோகங்களின் விலை சற்றே குறையும்.

தான்யாதிபதியாகப் புதன் வருவதால் பச்சைப்பயிறு, வேர்க்கடலை ஆகியவற்றின் விலை உயரும். மழை திட்டுதிட்டாகப் பொழியும். நீரசாதிபதியாகக் குரு வருவதால் மண்வளம் பெருகும், ஆர்க்கானிக் காய்கனிகள் உற்பத்தி வரவேற்புப் பெறும். மதுபானங்களின் விலை அதிகரிக்கும். சுகபஞ்சமாதிபதியாகச் சனி வருவதால் ரயில் விபத்து, சாலை விபத்து அதிகரிக்கும். ஜவுளி, இரும்பு, கெமிக்கல், நிலக்கரி ஆகிய தொழில் தொடர்புடையவர்கள் அதிக லாபம் அடைவார்கள். கலைத்துறை சூடு பிடிக்கும். அதிகப் படங்கள் வெளிவரும்.

புதன் பாக்கிய, விரயாதிபதியாக வருவதால் பல நடிகர்கள் அரசியலுக்கு வருவார்கள். புதிய கட்சி அதிக இடங்களைப் பெறும், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை குறையும், அங்கீகாரமில்லாத கல்வி நிறுவனங்கள் மூடப்படும். இந்த சார்வரி வருடம், மக்களிடையே தன்னம்பிக்கையையும், வைராக்கிய உணர்வையும், தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற மனப்போக்கையும் அதிகப்படுத்தும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x