Published : 13 Apr 2020 10:11 AM
Last Updated : 13 Apr 2020 10:11 AM

மேஷம் - தமிழ்ப் புத்தாண்டு சார்வரி வருடப் பலன்கள் 14.04.2020 முதல் 13.04.2021 வரை

மேஷ ராசி வாசகர்களே !

சின்னச் சின்ன விஷயங்களையும் கூர்ந்து கவனிப்பவர்கள் நீங்கள். உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் இந்த சார்வரி வருடம் பிறப்பதால் மற்றவர்கள் செய்ய முடியாத சவாலான காரியங்களையும் சாமர்த்தியமாகச் செய்து முடிப்பீர்கள். அடுக்கடுக்காகச் செலவுகள் வந்தாலும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இந்த வருடம் நிறைவேறும். அதிக வட்டிக் கடனைக் குறைந்த வட்டிக் கடன் பெற்று பைசல் செய்வீர்கள். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் புதிதாக வாங்குவீர்கள். அடிக்கடி பழுதான வாகனத்தைச் சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 07.7.2020 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகி அமர்ந்திருப்பதால் புதுத் தெம்பு பிறக்கும். என்றாலும், அவ்வப்போது காலநேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும். யாருக்காகவும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். சின்னச் சின்ன மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் உங்களுக்குள் இருந்து கொண்டேயிருக்கும். 8.7.2020 முதல் 12.11.2020 வரை குருபகவான் 9-ம் வீட்டில் நிற்பதால் உங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புது வீடு கட்டிக் குடிபோவீர்கள். வராதென்று நினைத்த பணம் கைக்கு வரும். வேலை வேலை என்றிருந்தீர்களே! இனி, குடும்பத்துக்காகச் சிறிது நேரம் ஒதுக்குவீர்கள். கணவன் மனைவிக்குள் தாம்பத்யம் இனிக்கும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். பால்ய நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொந்த ஊரில் மதிப்பு மரியாதை கூடும். 13.11.2020 முதல் வருடம் முடியும்வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு மகர ராசியான பத்தாம் வீட்டுக்கு வருவதால் அதுமுதல் சிறு சிறு அவமானங்களும், விமர்சனங்களும், வீண்பழியும் அதிகரிக்கும்.

யாருக்கும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வங்கிக் கணக்கில் போதிய பணம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டுக் காசோலை வழங்குங்கள். மனைவியின் குற்றம், குறைகளை அடிக்கடி குத்திக்காட்ட வேண்டாம். செப்டம்பர் மாதம் முதல் ராகு உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டுக்கு வருவதால் பேச்சில் கவனம் தேவை. அவசர முடிவுகளைத் தவிர்க்கப்பாருங்கள். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். ராசிக்கு எட்டாம் வீட்டுக்குக் கேது வருவதால் வீண்பழி, மன உளைச்சல் வரக்கூடும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். வீண் சந்தேகங்களைத் தவிர்க்கப் பாருங்கள். இரவு நேரப் பயணங்கள் வேண்டாம். சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

14.04.2020 முதல் 25.12.2020 வரை சனி 9-ம் வீட்டில் நிற்பதால் வழக்கில் நல்ல தீர்ப்பு கிட்டும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். தடைகளெல்லாம் நீங்கும். 26.12.2020 முதல் 10-ம் வீட்டுக்குள் சனி நுழைவதால் தந்தையாரின் உடல்நிலை சீராகும். அவருடன் பனிப்போர் விலகும். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் புது வேலை கிடைக்கும். கௌரவப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

23.10.2020 முதல் 17.11.2020 வரை உங்கள் ராசிக்கு சுக்கிரன் 6-ல் மறைவதால் கணவன் மனைவிக்குள் கருத்து மோதல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். தங்க நகைகள் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

18.06.2020 முதல் 12.8.2020 வரையான காலகட்டத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் 12-ம் வீட்டில் அமர்வதால் சொத்து விஷயத்தைச் சுமுகமாகப் பேசி முடித்து விடுங்கள். அவ்வப்போது தூக்கம் குறையும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடு செய்யுங்கள். புரட்டாசி, தை மாதங்களில் சொந்த இடத்தில் கடையை மாற்ற முயல்வீர்கள். போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும். ஊழியர்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். கொடுக்கல் வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உயர் அதிகாரிகள் வெளிப்படையாகவே உதவுவார்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு வைகாசி, ஆவணி மாதங்களில் உண்டு. தை, மாசி மாதங்களில் வேறு நல்ல வாய்ப்புகள் வரும்.

இந்தப் புத்தாண்டு விரக்தியாக இருந்த உங்களை வெற்றிக் கனியைச் சுவைக்க வைப்பதுடன் ஆண்டின் மையப்பகுதி முதல் அடுத்தடுத்து அதிரடி வளர்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: கோயம்புத்தூர் மாவட்டம், ஓதிமலை எனும் ஊரில் அருள்பாலிக்கும் குமார சுப்பிரமணியரைச் சென்று வணங்குங்கள். நோயுற்றிருக்கும் ஏதேனும் ஒரு நோயாளிக்கு மருந்து, மாத்திரை வாங்கிக் கொடுங்கள். நல்லது நடக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x