Published : 12 Apr 2020 09:13 AM
Last Updated : 12 Apr 2020 09:13 AM

கரோனாவை வெல்வோம்: தனிமையிலிருந்து விடுபடுவது எளிது

ஹஸ்னா பர்வீன்

‘கூட்டத்துடன் நிற்பது சுலபம், தனியாக நிற்கத்தான் தைரியம் தேவை’ என்றார் காந்தி. மற்ற எந்தத் தருணத்தை விடவும் இன்றைய சூழலுக்கு இது மிகச் சரியாகப் பொருந்துகிறது.

உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவிவரும் கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் அனைவரும் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர். இதன் பரவல் விகிதம் அதிகமாக இருப்பதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் மன நலம் சார்ந்த சிக்கல்களும் மக்களிடையே தலைதூக்கத் தொடங்கியிருக்கின்றன. தனிமையின் தகிப்பில் சிலர் மனநலச் சிக்கலுக்கு ஆளாவதாகச் செய்திகள் வலம்வரும் இந்தக் காலகட்டத்தில் அறிவியல்ரீதியாகவும் மருத்துவரீதியாகவும் ‘தனிமை’யை அலசுவது அவசியம்.

முகங்களைத் தேடும் மூளை

மனித மூளையிலுள்ள Right ITG எனும் பகுதிதான் முகங்களைக் கண்டறிய உதவுகிறது. 2018-ல் எலிகளை வைத்து மேற்கொள்ளப் பட்ட ஓர் ஆய்வில் எலிகள் தனித்திருக்கும்போது அந்த Right ITG அதிக வேலை பார்ப்பது கண்டறியப் பட்டது. அதாவது, பிற முகங்களைத் தரிசிக்க மூளை ஏங்குகிறதாம். இதைச் சீராக்குவதற்காக மூளை வெளியிடும் ரசாயனங்கள் அனைத்தும் மன உளைச்சலை உண்டாக்குபவை. தனிமையிலிருக்கும் போது ஏன் எப்போதுமே கடுப்பாக இருக்கிறது என்பதற்கான விடை இதுதான். என்னதான் குடும்ப உறுப்பினர் களோடு இருந்தாலும் ஊரடங்கு நாட்களில் சிலர் காரணமின்றி வெளியே சுற்ற நினைக்கவும் இதுதான் காரணம்.

நாள் முழுவதும் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடக்கும்போது எவ்வளவுதான் மன உறுதி கொண்டவர்களாக இருந்தாலும் சிலநேரம் சோர்வு ஏற்படக்கூடும். அது தற்காலிகமானதுதான். ஆனால், தனிமையின் சுமை கூடுகிறபோது எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். மனச் சோர்வு, பதற்றம், கோபம், எரிச்சல், அமைதியின்மை, தூக்கமின்மை போன்றவை எல்லை மீறுவதுபோல் தெரிந்தால் நாம் தனிமையால் ஏற்படும் மன உளைச்ச லுக்கு ஆளாகிறோம் எனப் பொருள். இது போன்ற சூழல் ஏற்படாமல் தவிர்ப்பதும் நம் கைகளில்தான் இருக்கிறது.

ஆரோக்கியமான விளையாட்டு

பள்ளி, கல்லூரிகள் செயல்படாமல் இருக்கும் இந்த வேளையில் குழந்தைகள் மொபைலே துணை என்று திரியக்கூடும். சில குழந்தைகளும் பெரியவர்களும் தொலைக்காட்சியிலேயே மூழ்கிக் கிடப்பார்கள். இது நல்லதல்ல. அவ்வப்போது உடலுக்கும் வேலை கொடுக்கலாம். உடற்பயிற்சி செய்யலாம். குழந்தைகளும் பெரியவர்களுமாகச் சேர்ந்து விளையாடும் உள்ளரங்க விளையாட்டுகளை விளையாட லாம். சில நேரம் குழந்தைகளுக்குத் தெரிந்த விளையாட்டு நமக்குத் தெரியாமல் இருக்கலாம்.

அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு விளையாடலாம். தாயம், பல்லாங்குழி, பரமபதம், ஆடு புலி ஆட்டம், ஐந்தாங்கல் என இந்தக் காலத்துக் குழந்தை களுக்கு அறிமுகமில்லாத விளையாட்டை அவர்களுக்குக் கற்றுக்கொடுத்து விளையாட வைக்கலாம். இவை மூளைக்கும் வேலை வைப்பதால் குழந்தைகள் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் இருப்பார்கள்.

குழந்தைகள் பாடப் புத்தகத் தையே கையில் எடுப்பதில்லை எனப் புலம்புவதைவிட அறிவு சார்ந்த செயல்பாடுகளில் அவர்களை ஈடுபடுத்தலாம். ஓரளவு வளர்ந்த குழந்தைகளாக இருந்தால் ஆன் லைன் வாயிலாகப் புதிய மொழிகளைக் கற்க உதவலாம். வானவீதியில் பிரகாசமாகத் தெரிவது வெள்ளி கிரகம் என்று வானவியல் கற்றுக்கொடுக்கலாம். பாக்டீரியாக்களால் பால் தயிராகும் வேதியியலைச் சொல்லித் தரலாம். தற்போதைய நெருக்கடியான சூழல் தவிர்த்துப் பிற நாட்களில் மனிதர்களை விலக்கினால் அது தீண்டாமை எனச் சமூகநீதியைப் புரியவைக்கலாம்.

வேண்டாமே இரட்டைச் சுமை

வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலையைச் செய்யும் பெண்கள் பெரும்பாலான நேரம் கணினி முன் உட்காரக்கூடும். அதற்கு ஏற்ற வகையிலான இருக்கையில் அமர்ந்து வேலை செய்வது கழுத்து வலி, இடுப்பு வலி போன்றவற்றைக் குறைக்கும். உடல் சோர்வும் சில நேரம் எரிச்சலை ஏற்படுத்தும். இல்லத்தரசிகளுக்கு இது கொஞ்சம் போதாத காலம்தான். அடுப்படியே கதி எனக் கிடக்காமல் குடும்பத்திலிருக்கும் மற்றவர்களுடன் வேலைகளைப் பகிர்ந்துகொள்ளலாம். அதிகமாக உதவும் வாண்டுவுக்குப் பிடித்த உணவு அடுத்த நாள் மெனுவில் இடம் பிடிக்கும் எனப் பரிசு அறிவித்து அவர்களைப் போட்டி போட்டு வேலை செய்யத் தூண்டலாம்.

வீட்டில் இருக்கிறார்களே என விதம் விதமாகச் சமைத்துக் கொடுப்பதைத் தவிர்த்து எளிமையான உணவைச் சாப்பிடக் குழந்தைகளைப் பழக்க வேண்டும். நெருக்கடி நாட்களில் உணவுப் பொருட்களை வரைமுறை இல்லாமல் செலவழிப்பது தவறு என்பதை நாம் உணர்வதுடன் குழந்தைகளுக்கும் எடுத்துச்சொல்ல வேண்டும். நெருக்கடி நிலையில் ஏதோவொரு வகையில் தங்கள் பங்களிப்பும் இருக்கிறது எனக் குழந்தைகளும் பெருமிதப்படுவார்கள்.

மூத்தோர் நலன் காப்போம்

பிள்ளைகளும் பேரக்குழந்தைகளும் வீட்டிலிருக்கும் இந்தச் சூழலில், தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்கும் முதியவர்கள் பயத்தையும் வெளிப் படுத்த முடியாமல் பாசத்தையும் வெளிப்படுத்த முடியாமல் தவிக்கக்கூடும். ஒருவகையில் அவர்களையும் குழந்தைகளைப் போலத்தான் கவனித்துக்கொள்ள வேண்டும். நமது சிறு உதாசீனம்கூட அவர்களை மனத்தளவில் பெரிதும் பாதித்துவிடக் கூடும். நாமாவது நண்பர்கள், உறவினர்கள் என்று போனில் பேசி ஓரளவுக்கு நிலைமையைச் சமாளிக்கிறோம்.

வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்கும் முதியவர்கள் என்ன செய்வார்கள்? அதனால் ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தை அவர்களுடன் பேசுவதற்காகச் செலவிட வேண்டும். இப்போது நாம் அனுபவித்துவரும் வசதிகள் ஏதும் இல்லாத நாட்களில் வாழ்க்கையை நகர்த்திய அவர்களது இளமைக்கால அனுபவங்களைக் கேட்டு மகிழலாம். அது அவர்களுக்கு உற்சாகத்தைத் தரும்; நமக்கும் குழந்தைகளுக்கும் வாழ்க்கைப் பாடமாக அமையும்.

கணவன் ஓர் ஊரிலும் மனைவி ஓர் ஊரிலும் சிக்கிக் கொண்டிருந்தால் அடிக்கடி தொடர்பில் இருப்பது நலம். அதற்காகக் காதிலிருந்து புகை வரும் அளவுக்குப் பேசிக்கொண்டே இருக்கத் தேவையில்லை. சரிபார்க்கப்பட்ட செய்திகளையும் அறிவிப்புகளையும் பரிமாறி ஒருவருக் கொருவர் ஆறுதலாக இருக்கலாம்.

ஹாஸ்டல்களிலும் மேன்ஷன் களிலும் மாட்டிக்கொண்டவர்கள் சிறைவாசம் முடிந்து நெல்சன் மண்டேலாவாக வெளியே வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய தொழில்நுட்பங்களைக் கற்கலாம். மாணவர்களாக இருந்தால் தங்கள் துறையில் நிபுணத்துவம் பெறுவதற்கான ஆன்லைன் வகுப்புகளில் சேரலாம். பாதியில் விட்ட நாவல்கள், பார்க்க விரும்பிய படங்கள், சொல்லத் தயங்கிய காதல்கள், கேட்கத் தவறிய மன்னிப்புகள், கூற மறந்த நன்றிகள் போன்று இதுவரை தவறவிட்டவற்றை எல்லாம் ஈடேறச் செய்தும் தனிமையைப் போக்கிக் கொள்ளலாம். இவற்றையும் மீறி தனிமையாக உணர்ந்தால், அரசாங்கம் வெளியிட்டிருக்கும் எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம்.

அரசின் பொறுப்பு

இவை எல்லாமே எல்லாருக்குமே பொருந்தும் எனச் சொல்லிவிட முடியாது. வீடும் வசதியும் இருக்கிறவர்களுக்குப் பொழுதை ஓட்டுவதற்கான வழிமுறைகள் இவை. ஆனால், நிரந்தர வருமானம் இல்லாமல் தவிக்கிறவர்களும், அடுத்த நாளை எப்படி ஓட்டுவது என்ற வழி தெரியாதவர்களும் அனுபவிக்கும் தனிமை இவற்றுள் சேராது. அவர்களிடம் உற்சாகமாக இருங்கள், உங்களை பிஸியாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதைவிட அறிவீனம் வேறில்லை.

அவர்களின் தனிமை தங்களது எதிர்காலம் குறித்தது. அது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்பதை அரசும் தொடர்புடைய அதிகாரிகளும் உணர்த்துகிறபோதுதான் அவர்களின் தனிமைத் தவிப்பு குறையும். அரசு அமைப்புடன் இணைந்து செயல்படும் தன்னார்வலர்களையும் சில பகுதிகளில் காண முடிகிறது. அதைச் சரியான வகையில் முறைப்படுத்தினால் அடித்தட்டு மக்களின் தனிமைக்கும் தீர்வு கிடைத்துவிடும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஊரடங்கு என்பது ஓர் உயரிய நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படும் தவம் என்பதை உணர வேண்டும். முகத்தில் கவசம் அணிந்து, சுத்தம் எனும் ஆயுதம் ஏந்தி, தனிமை எனும் வியூகத்தைக் கையாண்டு நாம் கரோனாவை வென்ற வரலாறு நம் சந்ததியினரால் படிக்கப் படும். அலெக்சாண்டரும் திப்பு சுல்தானும்தான் மாவீரர்களாக இருக்க வேண்டுமா என்ன? ஒரு மாற்றத்துக்கு நாமும் இருந்துபார்ப்போமே.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

தொடர்புக்கு: thariqmj@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x