Published : 10 Apr 2020 09:10 AM
Last Updated : 10 Apr 2020 09:10 AM

கோடம்பாக்கம் சந்திப்பு: நடிப்பிலிருந்து சமையல்

பல நடிகர்கள் சமையல் கலை நிபுணர்களாக மாறி, ரசிகர்களுக்கு விதவிதமான சமையல் டிப்ஸ்களைக் கொடுத்து வருகிறார்கள். பிரெட், நட்ஸ், பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு சத்தான காலை உணவை எப்படித் தயாரிப்பது என்பதை தமன்னா காணொலி மூலம் ரசிகர்களுக்கு வகுப்பெடுத்திருக்கிறார்.

ஹேண்ட்மேட் ஐஸ் க்ரீம், சுவையான சாண்ட்விச் ஆகியவற்றை எப்படித் தயாரிப்பது என்பதற்கு ஸ்ருதிஹாசன் காணொலி பதிவிட்டிருக்கிறார். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, ஸ்ரேயா, ஜெனிலியா இருவரும் தங்கள் கணவன்மார்களுக்கு பத்துப் பாத்திரம் துலக்கும் பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள். ‘இதேபோல் சக நடிகைகளும் அந்த பொறுப்பைக் கணவர்களுக்கு வழங்க வேண்டும்’ என கோரிக்கை வைத்து கிச்சுக்கிச்சு மூட்டியிருக்கிறார்கள்.

தவிக்கும் குஷ்பு!

படத் தயாரிப்பாளர், தொலைக் காட்சித் தொடரில் நடிகர், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் எனப் பல தளங்களில் செயல்பட்டு வருபவர் குஷ்பு. அரசியல், சமூகம் குறித்த தனது கருத்துகளைச் சமுக வலைத்தள மேடைகளில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் கரோனா பரவல், அரசுகளின் நடவடிக்கைகள் குறித்து தனது ட்வீட்கள் மூலம் விமர்சித்து வந்தார்.

தற்போது தனது ட்விட்டர் கணக்கில் கடந்த இரு தினங்களாக எந்தப் பதிவையும் செய்யமுடியாத நிலையில் ‘அதை முடக்க முயற்சி நடந்திருப்பதாகவும் தனது ட்விட்டர் கணக்கை பழைய நிலைக்கு மீட்க உதவும்படியும்’ நெட்டிசன்களிடம் இன்ஸ்டாகிராம் வழியாகக் கேட்டுள்ளார் குஷ்பு.

காஜலின் வேண்டுகோள்!

‘கரோனா ஆபத்து முழுவதுமாக விலகிய பிறகு, நமது விடுமுறை நாட்களை இந்தியாவில் செலவிடுவோம், உள்ளூர் உணவகங்களில் சாப்பிடுவோம், உள்ளூரில் உற்பத்தியாகும் பழங்கள், காய்கறிகளை வாங்கு வோம், நம் நாட்டின் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் உடைகள், பொருட்களை வாங்குவோம், உள்ளூர் வியாபாரிகளை ஆதரிப்போம்.ஏனென்றால் நமது உதவியின்றி இவர்கள் மீண்டு வருவது கடினம்’ என்ற காஜல் அகர்வாலின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

பற்ற வைத்த இயக்குநர்

ரோகிணியைப் போலவே பல திரையுலகப் பிரபலங்கள் ஒளியேற்றும் நிகழ்வைப் புறக்கணித்த நிலையில் பிரபலத் திரைப்பட இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் காணொலிப் பதிவு தெலுங்குத் திரையுலகை அலற வைத்தது. ஒளியேற்றும் நிகழ்வன்று இரவு 9 மணிக்குத் தனது வீட்டின் மின் விளக்குகளை அணைத்துவிட்டு சிகரெட் பற்றவைக்கும் ஆறு நொடி காணொலி ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், ‘கரோனா எச்சரிக்கையை மீறுவது என்பது, புகை பிடிக்காதீர்கள் என்ற அரசின் உத்தரவை மீறுவதைவிட மிகவும் ஆபத்தானது’ என்று அந்த வீடியோவுக்கு விளக்கக் குறிப்பும் வெளியிட்டிருந்தார்.

இதற்கு முன்னர் ஏப்ரல் 1-ம் தேதி தனக்கு கரோனா இருப்பதாகக் கூறி ட்விட்டரில் பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த அவர், பின்னர் தனது அடுத்த பதிவில், ‘எனக்கு கரோனா தொற்று இல்லை; என் மருத்துவர் என்னிடம் இப்படிப் பொய் கூறி என்னை ‘ஏப்ரல் ஃபூல்’ ஆக்கிவிட்டார், இதில் என்னுடைய தவறு என்று எதுவும் இல்லை’ என்று தெரிவித்திருந்தார்.

ரோகிணியின் துணிவு!

நடிகர், செயற்பாட்டாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்- கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ரோகிணி, பாரதப் பிரதமரின் விளக்கேற்றும் நிகழ்வைப் புறக்கணித்து தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கும் நெட்டிசன்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. ‘லட்சக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளிகள் பிச்சைக்காரர்களைப் போல் இழிவுபடுத்தப்பட்டிருக்கும் சூழலில் ஒளி ஏற்றும் செயலைப் புறக்கணிப்பதில் பெருமை கொள்கிறேன்’என அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

‘சத்தான’ செய்தி!

சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் தமிழக முதல்வருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் ஒன்றை வைத்திருக்கிறார். அதில் ‘குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகளுக்கு இரும்புச் சத்துக்களை இலவசமாக வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். இரும்புச்சத்து குறைபாடுள்ள ரத்த சோகையை இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஊட்டச்சத்து நிபுணராக நான் உறுதியாக நம்புகிறேன்.

கரோனா காரணமாகப் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டிருப்பதால் அரசுப் பள்ளிகளின் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவு கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். நாள்பட்ட இரும்புச்சத்து குறைபாடுள்ள ஒரு குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மோசமானதாக இருக்கும். ஏழைக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளைக் காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்’ எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x