Published : 08 Apr 2020 08:29 AM
Last Updated : 08 Apr 2020 08:29 AM

இப்போது என்ன செய்கிறேன்: நண்பரின் குரலைக் கேட்கிறேன்!

ஊரடங்குக் காலம்

கும்பகோணத்துக்குப் பக்கத்தில் இருக்கிறது பட்டீஸ்வரம். அங்கே நெருக்கமான நண்பர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் கண்ணகன். தமிழாசிரியர். மிகச் சிறந்த கவிஞர். ‘பறவைக்குள் அடையும் கூடு’ எனும் தலைப்பில் அவரது கவிதைத் தொகுப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.

மனிதர்களின் மீதும், குழந்தைகளின் மீதும், இயற்கையின் மீதும் அளவற்ற அன்புகொண்டிருந்தவர். அவர் போன்ற மனிதர்களைப் பார்ப்பது அபூர்வம். இந்தப் பிரபஞ்சத்தின் குழந்தையைப் போன்றவர். உழைக்கும்போது வியர்வை வழிவதைப்போல, துக்கத்தின்போது கண்ணீர் பெருக்கெடுப்பதைப்போல அவர் இதயத்தில் எப்போதும் மாசற்ற அன்பு சுரந்துகொண்டிருக்கும். இதை மனப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

அவருடன் எனக்கு நெடுங்காலப் பழக்கம். சென்னையில் வசிக்கும்போது, என் சொந்த ஊரான பட்டுக்கோட்டைக்கு அடிக்கடிச் செல்ல நேரிடும். அப்போதெல்லாம் நான் கும்பகோணம் வந்து, அவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டுத்தான் என் ஊருக்குச் செல்வேன்.

நாங்கள் கவிதையைப் பற்றியும் புத்தகங்களைப் பற்றியும் பேசிக்கொள்வோம். அவர் தன் தோட்டத்தில் வளரும் தாவரங்கள், அங்கே வருகை தரும் பறவைகள், தினந்தோறும் இரவில் தன் வீட்டுக் கூரைமேல் நடமாடும் மயில்கள், விடியலில் அவை உதிர்த்துச் செல்லும் இறகுகள், அவரது பள்ளிக்கூடக் குழந்தைகள் என்றெல்லாம் நீண்ட நேரம் ஆர்வத்துடன் பேசிக்கொண்டிருப்பார். பரவசமாக நான் கேட்டுக்கொண்டிருப்பேன்.

அவருடன் இருக்கும்போது, வெயில் பளிச்சிடும் பச்சை வயலில் மகிழ்ந்து அலைந்துகொண்டிருக்கும் வண்ணத்துப்பூச்சியைப் போல உணர்வேன். ஒவ்வொரு சந்திப்பிலும் பல மணி நேரம் பேசுவோம். ஆயினும் கடைசியில், பிரிவதற்கு மனமின்றிதான் விடைபெற்றுச் செல்வோம். அவருடைய நட்பு, என் வாழ்க்கையை மணமிக்கதாக்கும் மூலிகை மலர் போன்றிருந்தது.

கண்ணகன், திடீரென்று தன் முப்பத்து ஒன்பதாம் வயதில் இறந்து போனார். அவர் இறப்புக்குச் சென்றிருந்தேன். அப்போது அவர் தந்தை என் கரங்களைப் பிடித்து அழுதுகொண்டு சொன்னார்:

“என் மகன் எழுதிய கவிதைகளைப் பத்திரமாக எடுத்து வைத்திருக்கிறேன். அவற்றை நீங்கள் புத்தகமாகக் கொண்டுவர வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரமாகச் செய்யுங்கள்.”

என் நண்பரின் தந்தை கொடுத்த காகித உறையைச் சமீபத்தில்தான் பிரித்தேன். உள்ளே நூற்றுக்கணக்கான கவிதைகள். கருப்பு மசியில் மிக அழகான கையெழுத்தில் எழுதப்பட்ட தாள்கள். இப்போதைய பகல் பொழுதுகளில் அவரது கவிதைகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். இரவுகளில் ஒவ்வொரு கவிதையாகத் தட்டச்சு செய்துகொண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அந்த அமைதியில், அந்தக் கவிதைகளில் என் நண்பரின் குரலைக் கேட்கிறேன். தட்டச்சு செய்யும்போது வரும் கீபோர்டின் ஒலித்துணுக்குகள் மூலம், அவர் மீது நான் மலர்கள் தூவிக்கொண்டிருக்கிறேன்.

- யூமா வாசுகி, எழுத்தாளர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x