Published : 07 Apr 2020 08:58 AM
Last Updated : 07 Apr 2020 08:58 AM

கரோனா காலம்: உணவையும் விட்டுவைக்காத கரோனா!

இன்று உலகம் உச்சரிக்கும் ஒரே சொல் கரோனா. கரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் நாடுகள்தோறும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், உலகம் சுருங்கிக் கிடக்கிறது. இந்த இறுக்கமான சூழ்நிலையிலும் சில குறும்புக்கார மனிதர்கள் கரோனா வைரஸை வைத்துச் சிரிப்புமூட்டத் தவறவில்லை. எளிதில் வெல்ல முடியாத கரோனா வைரஸ் வடிவத்தில் உணவைச்செய்து சிலர் அசத்த முயல்கிறார்கள்.

கரோனா தோசை

கரோனா வைரஸ் போலவே பல்வேறு உணவு வகைகளைத் தயாரித்து, சமூக ஊடகங்களில் பலரும் உலவவிட்டு வருகிறார்கள். அதிலும் நம்மவர்கள் சளைத்தவர்களா? கரோனா வைரஸ் வடிவத்தில் தோசை, அடையை வார்த்து படங்களைப் பரப்புகிறார்கள். கரோனா தோசைகளும் அடைகளும் வைரஸ் தீவிரமாகப் பரவுவதற்கு முன்னதாகவே வேகமாகப் பரவிவிட்டன.

கரோனா பக்கோடா

ஒரு உணவு வகையை எத்தனை நாளைக்குத்தான் ஒரே மாதிரி செய்வது என்ற தீவிர சிந்தனையின் விளைவாக, கரோனா வைரஸ் வடிவத்தில் பக்கோடாவை பொரித்தெடுத்து இணையத்தில் உலவ விட்டார்கள். 'இந்த பக்கோடாவைத் தின்ன ஆசையா?' என்று ஓர் இணையவாசி ட்விட்டரில் பகிர்ந்துகொள்ளப்போக, அது வேகமாகச் சமூக ஊடகங்களில் பரவியது. இந்தியாவுக்கு வெளியேயும் இந்த கரோனா பக்கோடா பெரிய அளவில் வைரலானது. ஆனால், பார்ப்பதற்கு இந்த பக்கோடா போண்டா போல இருப்பதும் பட்டிமன்ற விவாதமாகியிருக்கிறது.

கரோனா பர்கர்

கரோனா வைரஸால் உலகமே அரண்டுகிடப்பதால், அந்த மனநிலையை மாற்றவும் மன உளைச்சலைக் குறைக்கவும் வியட்நாமில் உள்ள ஓர் உணவகத்தில் கரோனா வடிவத்தில் பர்கர் விற்பனை செய்யப்படுகிறது. பர்கரின் மேற்பகுதி கரோனா வைரஸ்போல் இருக்கிறது. பர்கரின் உள்ளே தக்காளி, முட்டைகோஸ், இறைச்சி ஆகியவற்றை வைத்துப் பரிமாறுகிறார்கள். இந்த பர்கரைச் சாப்பிடும்போது கரோனாவை வென்ற நேர்மறையான எண்ணம் உருவாகும், கரோனா வைரஸ் மீதான பயம் நீங்கும் என்று உணவக உரிமையாளர் குவாங்டன் நம்பிக்கை ஊட்டுகிறார்.

கரோனா முட்டை

ஈஸ்டர் பண்டிகை நெருங்கிவரும் வேளையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செப் ஜேன் பிரான்கோசிஸ், ஈஸ்டர் முட்டைகளைப் போல் சாக்லெட் செய்திருக்கிறார். இந்த ஈஸ்டர் முட்டைகளோ, கரோனா வைரஸ் வடிவில் உள்ளன. கரோனா வைரஸ் பிரான்ஸ் நாட்டினரையும் பாடாய்ப்படுத்திவரும் வேளையில், சாக்லெட் விரும்பிகள் விருந்தில் பங்கேற்கும்போது, கரோனா வைரஸைப் பற்றி மறந்துவிடக் கூடாது என்பதற்காக கரோனா வடிவில் சாக்லெட்டை செய்திருப்பதாகக் கூறுகிறார் ஜேன்.

கரோனா சாண்ட்விச்

கரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இத்தாலி. ஒரு மாதமாக முடங்கிக் கிடந்தாலும், பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகளில் தடையில்லை. இத்தாலி பேக்கரிகளில் கரோனா சாண்ட்விச் புதிய உணவாகத் தயாரிக்கப்பட்டுவருகிறது. வட்ட வடிவ பிரெட்டை, இப்போது கிரீடம்போல் தயாரித்துவருகிறார்கள். பிரெட்டுக்கு இடையே இறைச்சி, மசாலாவை வைத்துச் சுவையையும் கூட்டியிருக்கிறார்கள். அளவில் பெரிதாக இருக்கும் இந்த கரோனா சாண்ட்விச்சை 6 பேர் வரை சாப்பிடலாம்.

கரோனா கேக்

கரோனா வைரஸ் தாக்கத்தால் ஜெர்மனியில் வெளியே தலைகாட்டவே மக்கள் அஞ்சுகிறார்கள். இந்த இக்கட்டான தருணத்தில், மக்களைச் சிரிக்கவைக்க கேக் தயாரிப்பாளரான டோர்ஸ்டென் ரோத் எடுத்த முடிவுதான் கரோனா கப் கேக். இந்த கப் கேக்குகளுடன் கரோனா வைரஸ் அறிகுறிகள் பற்றி விழிப்புணர்வும் ஏற்படுத்திவருகிறார் டோர்ஸ்டென்.

கரோனா தொற்று அடங்கு வதற்குள் இன்னும் என்னென்ன உணவு வகைகள் எல்லாம், கரோனா வடிவத்தில் வரப்போகின்றன என்பதை காலம்தான் முடிவுசெய்யும் போலிருக்கிறது. n மிது கார்த்தி n

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x