Published : 07 Apr 2020 08:53 am

Updated : 07 Apr 2020 08:53 am

 

Published : 07 Apr 2020 08:53 AM
Last Updated : 07 Apr 2020 08:53 AM

கரோனாவை எதிர்கொள்ள நவீனத் தொழில்நுட்பம்!

corona-virus

அபி

கரோனா வைரஸின் தீவிரப் பரவலைத் தடுப்பதற்கு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. இந்தப் பெருந்தொற்றுக்கு எதிராக ஆசிய நாடுகள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. வெவ்வேறு நாடுகளில் என்னென்ன தொழில்நுட்பக் கருவிகள் அந்த வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன ஒரு பார்வை:

இருப்பிடக் கண்காணிப்பு

செல்பேசியில் உள்ள இந்த வசதியைக் கொண்டு, மக்களின் இருப்பிடத்தைக் கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை அரசுகள் அதிகம் பயன்படுத்துகின்றன. கரோனா பாதிக்கப்பட்ட மனிதர், தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்பு எங்கெல்லாம் சென்றுவந்தார் என்பதை அவருடைய செல்பேசி இருப்பிடக் கண்காணிப்பின் மூலம் அறிந்து, அவருடன் தொடர்பு ஏற்பட்டிருக்கக்கூடிய சாத்தியமுள்ள தொலைவில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது கண்டறியப்படுகிறது.

குடிமக்களின் 30 நாட்கள் இருப்பிடத் தகவலைப் பயன்படுத்த, இஸ்ரேல் தன்னுடைய உள்நாட்டுப் பாதுகாப்பு முகமைக்கு அனுமதி வழங்கியுள்ளது. தென் கொரியா, சீனா, தைவான் ஆகிய நாடுகளிலும் வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர இருப்பிடக் கண்காணிப்பு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. என்றாலும் ஜெர்மனி, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளில் ‘தரவு பாதுகாப்புச் சட்டங்கள்’கடுமையாக உள்ளதால், பெயரிடப்படாத இருப்பிடத் தரவுகளைக் கொண்டு மக்கள் குழுக்களாகக் கூடும் பொது இடங்களை அடையாளம் கண்டுவருகின்றனர்.

# கரோனா அறிகுறி தென்படும் மனிதர்கள், தாங்களாகவே அதைப் பதிவுசெய்துகொள்ளும் வகையில் செயலி ஒன்றை பிரிட்டன் ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ‘C-19 Covid Symptom Tracker’ என்ற அந்தச் செயலி மூன்று நாட்களில் 7.5 லட்சம் பதிவிறக்கங்களைக் கண்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 100 மீட்டர்களுக்குள் இருந்தால், அதை அறிவித்து எச்சரிக்கும் ‘Corona 100m’ என்ற செயலியைத் தென்கொரியா வெளியிட்டுள்ளது.

# கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் வகையில் இந்தியாவிலும் ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பாதிக்கப்பட்டவரின் ஸ்மார்ட்போனில் இருக்கும் இருப்பிடக் கண்காணிப்பு வசதியை அடிப்படையாகக்கொண்டு இந்தச் செயலி செயல்படும்.

# சீனாவில் அலிபாபா, டென்சென்ட் உருவாக்கியுள்ள செயலிகள், மக்களின் உடல்நிலை - பயணங்களை அடிப்படையாகக்கொண்டு, வண்ணக் குறியீடுகளை வழங்குகின்றன. மிகப் பெரிய அளவிலான தரவுகளை அடிப்படையாகக்கொண்ட அல்காரிதம் மூலம் செயல்படும் இந்தக் குறியீடு, ரயில் நிலையம், வணிக வளாகம் போன்ற இடங்களில் ஒருவர் நுழைவதற்கும் நகரங்களுக்கு இடையே பயணிப்பதற்கும் சரியாக இருக்குமா என்பதைத் தீர்மானிக்க உதவுகிறது.

சி.சி.டி.வி.

கேரளத்தின் பத்தனம்திட்டை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், இத்தாலிக்குச் சென்று திரும்பிய நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. ஆனால், அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு சில இடங்களுக்குச் சென்றுவந்ததையும் பலரைச் சந்தித்திருந்ததையும், உள்ளூர் அதிகாரிகள் கண்டறிந்தனர். அவர்கள் சென்றுவந்த இடங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களைக்கொண்டு ஆய்வுசெய்ததில், அந்த மூவர் மூலம் தொற்று ஏற்படுவதற்குச் சாத்தியமுள்ள 900 பேரை அடையாளம் கண்டனர். தென் கொரியா, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் இந்த முறை பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

எந்திரன்கள் - தானியங்கி விமானங்கள்

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தொடங்கிய சீனாவின் வூகானில், மார்ச் மாதத் தொடக்கத்தில் தனிமைப்படுத்துதல் வார்டு புதிதாகத் தொடங்கப்பட்டது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், பாதிக்கப்பட்டவர்களின் உடல் வெப்பத்தைக் கண்காணித்தல், அவர்களுக்கு உணவு - மருந்து வழங்குதல், வார்டுக்குக் கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பணிகளை முழுக்க முழுக்க எந்திரன்களே மேற்கொண்டன. சுகாதாரப் பணியாளர்களுக்குத் தொற்று ஏற்படாமல் இருக்க, இந்தச் செயல்பாடு உதவுகிறது.

சீனாவின் சில பகுதிகளில், கேமராக்களும் ஒலிபெருக்கிகளும் பொருத்தப்பட்ட தானியங்கிக் கண்காணிப்பு விமானங்கள் மக்கள் கூட்டத்தைக் கலைப்பதற்கும், சாலையில் சுற்றித் திரியும் தனிமனிதர்களை வீடுகளுக்குத் திரும்புமாறு அறிவுறுத்துவதற்கும் காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்டன.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


கரோனா வைரஸ்கொரோனா வைரஸ்நவீனத் தொழில்நுட்பம்கண்காணிப்புசீனாஉலக நாடுகள்எந்திரன்கள்தானியங்கி விமானங்கள்Corona VirusCorona

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author