Published : 05 Apr 2020 09:14 AM
Last Updated : 05 Apr 2020 09:14 AM

பெண்கள் 360: தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது

தொகுப்பு: ரேணுகா

வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊருக்கு வந்தவர்கள் தங்களுக்கு கரோனா தொற்று அறிகுறிகள் இல்லையென்றாலும் சுயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை கேரள அரசு வெளியிட்டுள்ளது.

அதில், வெளிநாட்டிலிருந்து வரும் ஒரு பெண் தன்னுடன் பயணம் செய்தவர்கள், கார் ஓட்டுநர், இளநீர் வியாபாரி என வழியில் தான் சந்திக்கும் அனைவரையும் படம் எடுத்துக்கொள்வதுடன் அவர்கள் குறித்த விவரங்களையும் பெற்றுக்கொள்கிறார். மேலும், அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கரோனா தடுப்புப் பிரிவைத் தொடர்புகொண்டு தான் வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதாகவும் கரோனா பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் கூறுகிறார்.

பெற்றோரைத் தொலைபேசியில் அழைத்து கரோனா பரவலைத் தடுக்க தனக்குத் தனி அறை, சாப்பாட்டுத் தட்டு, குளியல் பக்கெட் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்யுமாறு கேட்கிறார். மூன்று வருடங்கள் பார்க்காமலேயே இருந்துவிட்டோம், நம்முடைய பாதுகாப்புக்காக இன்னும் 14 நாட்கள் பொறுத்துக்கொள்வோம் என்கிறார். வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு வந்தவர்கள், கண்டிப்பாக அரசுக்குத் தகவல் தருவதுடன் தங்களை 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்தக் காணொலி உணர்த்துகிறது.

நியாய விலைக் கடைகளில் விழிப்புணர்வு

நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் அன்றாட வருமானத்தை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்நிலையில் திருச்சி அருகில் நாச்சிக்குறிச்சி நியாயவிலைக் கடையில் நீண்ட பிளாஸ்டிக் குழாய் மூலம் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப் பட்டன. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மிக முக்கியமானது, ஒவ்வொருவரும் ஒரு மீட்டர் இடைவெளியைப் பின்பற்றுவது. இதைச் செயல்படுத்தும் விதமாகத்தான் தமிழகம், கேரள மாநிலங்களில் உள்ள சில நியாயவிலைக் கடைகளில் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.

கர்ப்பிணி கண்டுபிடித்த கருவி

இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் புனேவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மினால் தாகவே போஸ்லே என்பவரின் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் குறைந்த செலவில் உடனடியாக முடிவுகளை வெளியிடும் கரோனா பரிசோதனைக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். புனேவில் உள்ள ‘மைலேப் டிஸ்கவரி’ என்ற நிறுவனத்தில் கடந்த ஐந்து வருடங்களாக நுண்ணுயிரி ஆராய்ச்சியளராக மினால் பணியாற்றிவருகிறார். எட்டு மாதக் கர்ப்பிணியான இவர், ஆறு வாரங்களில் தன் குழுவினரோடு ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு கரோனா பரிசோதனைக் கருவியை வடிவமைத்துள்ளார்.

இந்தக் கருவியைக் கண்டுபிடித்த மறுநாளே அவருக்குப் பெண் குழந்தை பிறந்தது. தனியார் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனைக்கு ரூ.4,500 வசூலிக்கப்படுகிறது. தற்போது மினால் குழுவினர் கண்டுபிடித்துள்ள கருவியின் மொத்த விலையே ரூ.1,200. மேலும், இந்தக் கருவியின் மூலம் ஒரே நேரத்தில் நூறு பேருக்குப் பரிசோதனை செய்ய முடியும். பரிசோதனை முடிவுகள் இரண்டு மணிநேரத்தில் கிடைத்துவிடும் என்பது கூடுதல் சிறப்பு.

காய்கறி வாங்க வட்டத்துக்குள் வாங்க

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஒவ்வொருவரும் ஒரு மீட்டர் இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இதைக் கடைப்பிடிக்கும் வகையில் மகாராஷ்டிர அரசு மளிகைக் கடைகளுக்கு முன்னால் வெள்ளை நிறத்தில் வட்டங்களை வரைய அறிவுறுத்தியுள்ளது. காய்கறி, மளிகைப் பொருட்களை வாங்கவரும் மக்கள் போதுமான இடைவெளியில் நிற்கும் வகையில் இந்த வட்டங்கள் வரையப்பட்டுள்ளன. மகாராஷ்டிர மாநிலக் காவல் துறையினர் மேற்கொண்ட இந்த முயற்சிக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் சில கடைகளில் இந்த நடைமுறையைக் கடைப்பிடித்துவருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x