Published : 29 Mar 2020 09:17 AM
Last Updated : 29 Mar 2020 09:17 AM

பாடல் சொல்லும் பாடு 10: சந்திப்பிழை போன்ற சந்ததிப் பிழையா இவர்கள்?

கவிதா நல்லதம்பி

‘நான் விரும்பாத இந்த அடையாளத்தை எதைக் கொண்டு அழிப்பேன்? பாம்பு தன் சட்டையை உரித்தெறிவதுபோல, இந்த என் உடலைக் கழற்றி எறிய முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்? ஆயிரம் அவமானங்கள், கோடி ரணங்கள், கிண்டல்களில் எத்தனை முறை செத்து மீண்டிருக்கிறேன்! அனைத்தையும் மீறி நீண்ட என் பயணத்துக்கு ஒரே ஒரு அர்த்தம்தான். எனக்குப் பொருத்தமான உடலை நான் கண்டெடுத்துவிட்டேன்!

- லிவிங் ஸ்மைல் வித்யா, ‘‘நான் வித்யா’ என்னும் நூலின் பின்னட்டையில்.

சகோதரனுக்காக பீஷ்மர் செய்த பலவந்தமான பெண் எடுப்பால், சால்வ மன்னனோடு கொண்ட காதலை இழக்கிறாள் அம்பை. பீஷ்மரும் அவளை மறுதலிக்க, புறக்கணிப்பின் வலியில் கடுமையாகத் தவம் புரிகிறாள். பீஷ்மரைக் கொல்லும் ஆற்றல் வேண்டுகிறாள். மறபிறப்பிலே சிகண்டியாகப் பிறக்கிறாள். இல்லை துருபதனின் மகள் சிகண்டினியாக.

பெண்ணுக்கு ஆண் வேடம்

துருபதனின் மனைவி கணவனின் ஆண் பிள்ளை விருப்பத்தை நிறைவேற்றவும் பிறத்தியாள்களின் ஏளனத்திலிருந்து தன்னைக் காக்கவும் ஆண் பிள்ளையே பிறந்திருக்கிறதென்று மறைக்கிறாள். ஆணாகவே சிகண்டினி வளர்க்கப்படுகிறாள். சிவபெருமானின் அருளால், தன் மகள் மகனாகும் காலம் வந்துவிடும் என்று காத்திருக்கிறாள் தாய்.

பருவம் வந்ததும் மகனுக்கு மணமுடிக்கிறார்கள். மணமானதும் அவன் ஆணில்லை என்பது தெரிய, “உன் மகளுக்கு என் மகளைக் கேட்டு மணம் செய்திருக்கிறீர்” என அவமதிக்கிறார் பெண்ணின் தந்தை. சிகண்டினி வீட்டை விட்டு வெளியேறிக் கடுந்தவம் செய்கிறாள். அவள்மீது கருணை கொண்ட யட்சன் ஒருவனால் சிகண்டினி சிகண்டியாகிறாள்.

அர்ச்சுனனுக்கும் நாகர் இனப் பெண்ணான உலுப்பிக்கும் பிறந்தவன் அரவான். குருஷேத்திரப் போரில் பாண்டவர்களின் வெற்றியை உறுதிசெய்வதற்காக, களப்பலி ஆகிறான். இறக்கும் முன் அவன் வேண்டியவாறு, கண்ணனே பெண்ணாகி அவன் விருப்பம் தணிக்கிறார். இந்தப் பின்னணியில்தான் கூத்தாண்டவர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. அரவான் களப்பலி தெருக்கூத்தாக நடத்தப்பட்டுகிறது. திருநங்கையர் அரவானுக்கு மனைவியாகி, கைம்பெண் கோலம் பூண்டு தம் ஆற்றாமைகளை, அவமானங்களை அழுது தீர்க்கிறார்கள்.

இந்தப் பழம்சடங்குகளைத் தொடர்வதன் மூலம், புராணங்கள் திணித்த அடையாளங்களை இன்னும் ஏன் சுமக்க வேண்டும் என்று விழிப்புகொண்டு, தம் அறிவையும் உழைப்பையும் கருதிப் போராட்டங்களை முன்னெடுத்துத் தம் உரிமைகளை மீட்கும் முனைப்பில் இருக்கின்றனர் திருநங்கையர். இதை,

கடவுளுக்கு மனைவியாகி

ஒரே நாளில் விதவையான

ஒரு பரிசோதனைக் கவிதை நான்

- எனத் தொடங்கும் திருநங்கை கல்கி சுப்பிரமணியத்தின் கவிதை காட்டுகிறது. தம்மைப் போன்றவரின் வாழ்வை, அரவானுக்காக ஒரு நாளில் கட்டியறுக்கும் தாலி தீர்மானிப்பதில்லை. வலிமை மிக்க மனமும் தெளிவு பெற்ற அறிவும் தமக்கிருப்பதாக உறுதிகொள்கிறது.

இலக்கியம் காட்டிய வழி

பெண்போல் பிறந்து, பிறகு பெண் தன்மையை விடுத்து ஆண் தன்மைகளை விரும்புகிறவர்களைப் ‘பேடு’ என்றும் ஆணாகப் பிறந்து பெண் தன்மையை விரும்புகிறவர்களைப் ‘பேடி’ என்றும் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. இவர்களை உயர்திணையாகக் கொள்ளலாம் என்று தொல்காப்பியமும் அஃறிணையாகவும் அழைக்கலாம் என்று பிற்காலத்து இலக்கண நூல்களும் சுட்டுகின்றன. இதுதான் இன்றுவரை ‘அது’ எனத் திருநங்கையரை அவமதிப்பதில் தொடங்கி வெவ்வேறு சொற்களில் தொடர்கிறது.

தன் மகன் அநிருத்தனை வாணாசுரனிடமிருந்து மீட்க, பெண் வேடமிட்டு காமன் ஆடிய நடனத்தைப் பேடிக்கூத்து என்கின்றன இரட்டைக் காப்பியங்கள். மணிமேகலையைக் காணக் கூடிய கூட்டம், விராட பருவத்திலே பிருஹன்னளையாகிய அர்ச்சுனனின் பேடிக் கோலத்தைக் காணத் திரண்ட கூட்டத்தைப் போல இருந்தது என்கிறார் சாத்தனார். நாலடியாரோ, தன் வலிமையால் பிறன் மனைவியைச் சேர்ந்த ஆண் மறுபிறப்பில் பேடியாகப் பிறக்கிறான். இவ்வாறு பிறக்கிறவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக வீதிகளில் வாழ்வர் என்கிறது.

பலியாக்கப்படும் வாழ்க்கை

இறைமையில் நாயக நாயகி பாவத்தை ஏற்கும் ஆன்மிக மனம், மனித வாழ்வில் அதை அற்பமென்கிறது. தம் உறவுகளின் அரசுரிமைக்காகக் களப்பலியான அரவானின் வலி தியாகத்தால் மறைக்கப்பட்டிருக்கிறது. இங்கே பால்திரிபைத் தமக்குள் கண்டுணர்கிற திருநர்கள் தம் குடும்பத்தின் சமூக மதிப்புக்காகவும் கௌரவத்துக்காகவும் குடும்பங்களைத் தியாகம் செய்துவிட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கப்படுறார்கள். அரவான் களப்பலி கிருஷ்ணனைப் போன்றோரின் தந்திரங்களில் தீர்மானிக்கப்பட்டதைப் போல, திருநங்கையரின் வாழ்வு சமூக மதிப்பீடுகளில் பலியாக்கப்படுகிறது.

குடும்பத்தின் புறக்கணிப்பும் சமூகத்தின் அவமதிப்பும் அலட்சியம் தரும் வலிகளும் அவர்களைச் சுயமரியாதையுள்ள மனிதர்களாக வாழவிடாமல் ஆக்கிவிடுகின்றன. யாசிக்கிறவர்களாகவும் பாலியல் தொழிலாளிகளாகவும் மாற்றியிருக்கின்றன. பதின்ம வயதில் உணரப்படும் பால் திரிபு மாற்றங்களை அறிவியலாக அணுகாத நம் சமூகத்தில், பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்னரே திருநர்கள் குடும்பத்தைப் பிரிகிறார்கள். வன்முறைக்கு ஆளாகிறார்கள். யாரும் தம்மை அடையாளங்காண முடியாத இடத்துக்குச் செல்கிறார்கள். ‘நிர்வாணம்’ என்னும் வலி மிகு சடங்கில் முறையற்ற சிகிச்சையால் மரணத்திலும் கொடிய துயரடைந்தே தம் மனம் விரும்புகிற அடையாளத்தைப் பெறுகிறார்கள்.

மனத்தில் தோன்றும் காதலை மறைத்து, தனிமையில் அழுகிறார்கள் கி.ரா.வின் ‘கோமதி’யைப் போல. தகுதி பெற்றும் உடன்பிறந்தவர்களின் கௌரவத்துக்காக, வீடு திரும்ப இயலாமல், சொத்தில் பங்கு கோராமல் நிற்கிறார்கள் சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’யில் வருகிற சுயம்புவாக.

சமூக அங்கீகாரம் தேவை

மூன்றாம் பாலினர் என்னும் வகைமையும், கல்லூரிகளில் பயில்வதற்கான உரிமையும் அவர்களின் போராட்டங்களால் சாத்தியமாயின. இருபாலர் கல்லூரிகளில் பயில இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், பொறியியல் கல்லூரியில் சேர சட்டரீதியாகப் போராடவே நேர்ந்தது. இந்தியாவில் காவல் துறை உதவி ஆய்வாளராகப் பணியில் சேர்ந்த முதல் திருநங்கை பிரித்திகா யாசினி.

அவர் எழுத்துத் தேர்வுக்கு அனுமதி பெற்று, உடல் தகுதித் தேர்வையும் முடித்து, நேர்காணலைச் சந்தித்து பணியில் சேர்ந்ததுவரை அனைத்து நிலைகளையும் வழக்குகளைத் தொடுத்தே சாத்தியமாக்கியிருக்கிறார். ஏனெனில், திருநங்கைகளுக்கான தேர்வு விதிமுறைகள் அரசுத் தேர்வாணையம் போன்ற அமைப்புகளிடம் இல்லை. திருநங்கை சுவப்னாவும் வழக்குத் தொடுத்தே பிரிவு 4 தேர்வெழுதி வெற்றிபெற்றார்.

முதல் பெண் திருநங்கை நீதிபதி ஜோயிதா மண்டல், பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ், முதல் பாதிரியார் எஸ்தர் பாரதி, ஸ்விகி நிறுவனத்தின் சிஇஓ சம்யுக்தா விஜயன், கல்கி, வித்யா, ரேவதி, பிரியா பாபு என முன்மாதிரியாக நாம் காணும் திருநங்கையர் மிகப் பெரும் போராட்டங்களுக்குப் பின்பே தாம் விரும்பிய அடையாளத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

பால் திரிபுணர்ந்த குழந்தைகளைப் புரிதலுடன் அரவணைக்கும் குடும்பமும், கேலி பேசாத பள்ளியும், தடையில்லாக் கல்வியும், பணியும், தனித்துவமிக்க மருத்துவமும் கிடைக்குமெனில் அவர்களின் வாழ்க்கை அவமானங்களில் புதையுறாது. போராட்டங்களை மட்டுமே கொண்டிராது. அர்ஜென்டினா இயற்றிய பாலின அடையாளச் சட்டம், உலக அளவில் பாலின அடையாள உரிமைக்கான முன்மாதிரி. இச்சட்டம் ஒரு தனி மனிதன் தான் விரும்புகிற பாலின அடையாளத்தைத் தேர்ந்துகொள்ளும் உரிமையைச் சட்டப்பூர்வமாக வழங்குகிறது. நம் இந்தியச் சமூகம் அத்தகு புரிதலை நோக்கி நகர்வதே, நவீன மனங்களின் தெளிவைக் காட்டும்.

“எந்தவொரு சமூகத்தைச் சார்ந்தவளாகவும் நான் இருக்கவில்லை. நான் ஒரு திருநங்கை. என்னை ஒடுக்க இதுமட்டுமே போதும்’.

- நர்த்தகி நடராஜ்.

(பெண் வரலாறு அறிவோம்)

கட்டுரையாளர், உதவிப் பேராசிரியர்

தொடர்புக்கு: janagapriya84@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x