Published : 29 Mar 2020 08:36 AM
Last Updated : 29 Mar 2020 08:36 AM

தெய்வமே சாட்சி 10: உடன்கட்டை ஏறுதல் அல்ல ஏற்றுதல்

ச.தமிழ்ச்செல்வன்

தெய்வமே சாட்சி தொடர் தொடங்கிய பிறகு வாசகர்கள் பலர், “எங்கள் ஊரிலும் இப்படிக் கொல்லப்பட்ட பெண் தெய்வம் உள்ளது” என்று கடிதம் அனுப்புகிறார்கள். இதில் வியப்பேதும் இல்லை. பெண் கொல்லப்பட்ட கதை இல்லாத ஊரென எதுவும் தமிழகத்தில் இருக்க முடியாது. புதிதாக உருவான சமத்துவபுர கிராமங்கள் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம். அங்கும் சென்று ஆய்வு செய்தால்தான் உண்மை தெரியும்.

ராஜபாளையம் நகரில் இது போன்ற தெய்வம் ஒன்றுள்ளதாக வாசக நண்பர் ஒருவர் அனுப்பிய செய்தியின் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொண்டோம். ராஜபாளையம் நகர் அம்பலப்புளி பஜாரில் சிவகாமிபுரம் தெருவில் ‘தீப்பாய்ஞ்ச நாச்சியாரம்மன்’ வழிபடப்படுகிறார். ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் மூன்றாம் செவ்வாயன்று அம்மனுக்கு விழா எடுக்கப்படுகிறது.

கடந்த மார்ச் 3-ம் தேதியன்று நடைபெற்ற விழாவில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். பணியாரம், அதிரசம் வைத்து பட்டுப் பாவாடை சாத்தி வழிபடுகின்றனர். கோழியைத் தீயில் வாட்டிப் படைக்கின்றனர். அருப்புக்கோட்டை, வில்லிபுத்தூர், ஆண்டிபட்டி, சட்டம்பட்டி உள்ளிட்ட ஏழெட்டு ஊர்களிலிருந்து நெசவாளர்களான சாலியர் சமூகத்து மக்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

குழந்தைகளின் திருமணம்

ஏழு தலைமுறைகளுக்கு முன்னால் சாலியர் சமூகத்தைச் சேர்ந்த நமச்சிவாயம் என்ற ஏழு வயதுப் பையனுக்கு ஐந்து வயதுப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். கணவனும் மனைவியுமான அக்குழந்தைகள் சேர்ந்து விளையாடி சந்தோஷமாக இருந்துவந்தனர். அப்படி ஒருநாள் ஒளிந்து பிடித்து விளையாடுகையில் கம்பு தானியம் சேமித்து வைத்திருந்த குலுக்கைக்குள் (குதிர்/பத்தாயம்) அவன் குதித்துவிட்டான். அதனால், அவளால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கே தேடியும் அவனைக் காணவில்லை.

மூன்று நாட்கள் கழித்துப் பிண நாற்றமடித்ததை வைத்துக் குழந்தையின் உடலை வெளியே எடுத்தனர். நமச்சிவாயத்தின் உடலை எரியூட்டியபோது, அந்தச் சிதையில் அவனுடைய மனைவியாகிய அந்த ஐந்து வயதுப் பெண் குழந்தையை அவளுடைய தந்தையே தூக்கிப் போட்டுவிட்டார். எரிந்துபோன அக்குழந்தை மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து எரிந்து கருகிய பட்டுப்பாவாடையுடன் அருகில் உள்ள புத்தூர் அய்யனார் கோயிலுக்குச் சென்று அய்யனாரிடம் அடைக்கலம் கேட்டாளாம். ‘என் கணவர் குடும்பம் செழித்து வளர வேண்டும். என் குடும்பம் சிதைந்து மண்ணாகப்போகட்டும்’ என்று சொல்லிவிட்டு அய்யனாரிடம் அவள் அடைக்கலமாகிவிட்டாள்.

தீப்பாய்ஞ்ச நாச்சியாரம்மன்

பின்னர், நடந்ததைக் கேள்விப்பட்டு அவளுக்குக் கோயில்கட்டி ‘தீப்பாய்ஞ்ச நாச்சியாரம்மன்’ என்று பெயர்சூட்டிக் கும்பிடத் தொடங்கினர். கோயில் என்றால், அதில் சிலை ஏதும் இல்லை. சுவரில் சந்தனம், குங்குமம் பூசி அந்தச் சுவரின் கீழே ஆண்டுதோறும் ஒரு புதுப் பட்டுப்புடவையை மடித்த நிலையில் வைத்து வழிபடுகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் சென்ற ஆண்டு வைத்த புடவையில் தீக்கங்கு பட்டுக் கருகிய தடம் தெரிகிறதா என்று பார்த்துவிட்டுப் பின் புதுப்புடவையை அங்கே வைக்கின்றனர். மாப்பிள்ளை வீட்டாரே வழிபட்டு வந்த கோயில் இப்போது ‘நாச்சியாரம்மன் வகையறா’ என்கிற வம்ச வழியினரால் முன்னெடுத்து நடத்தப்படுகிறது.

(கதை சொன்னவர்: வைரமுத்து, சிவகாமிபுரம் தெரு, ராஜபாளையம். சேகரித்தவர்: நந்தன் கனகராஜ்)

தமிழகத்தில் குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் போன்ற வழக்கங்கள் இருந்ததற் கான சான்றாக இந்தக் கதையும் தெய்வமும் திகழ்கின்றன. உடன்கட்டை ஏறும் பழக்கம் ஏதோ வட நாட்டில்தான் இருந்தது போலவும் அது ராஜாராம் மோகன்ராய் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் முயற்சியால் 1829-ல் தடை செய்யப்பட்டதாகவும் நாம் கருதிக்கொண்டிருக்கிறோம். தமிழகத்திலும் அப்பழக்கம் இருந்ததற்கான சான்றுகள் பல உள்ளன. ராமேசுவரம் செல்லும் வழியில் உள்ள அக்காள் மடம், தங்கச்சி மடம் ஆகிய இரு ஊர்களும் அக்காள் சிவகாமி நாச்சியாரும் தங்கை ராஜலட்சுமி நாச்சியாரும் தம் கணவரது மரணச் சேதி கேட்டுத் தீமூட்டித் தம்மை மாய்த்துக்கொண்ட இடங்கள் என்கிற கதையை நாம் அறிவோம்.

தமிழகத்தில் தலைவிரித்தாடிய சதி

தொல்காப்பியத்தின் ‘நல்லோள் கணவனொடு நனியழல் புகீஇ’ (புறத்திணையியல், நூற்பா-19) என்கிற பாடல், ‘பல்சான்றீரே பல்சான்றீரே’ எனத் தொடங்கும் சங்கப்பாடல் போன்ற பல இலக்கியச் சான்றுகளும் உடன்கட்டை ஏறும் பழக்கம் தமிழகத்திலும் இருந்ததைக் காட்டுகின்றன. உடன்கட்டை ஏற்றப்பட்ட நேரத்தில் ஆங்கில அதிகாரியால் காப்பாற்றப்பட்டு நெல்லைக்குக் கொண்டுவரப்பட்ட ‘கிளாரிந்தா’வின் (பாளையங்கோட்டையில் அவள் பாப்பாத்தி அம்மா என அழைக்கப் பட்டாள்) கதை இன்னொரு உதாரணம்.

உண்மையைச் சொன்னால் அது உடன்கட்டை ஏற்றுதல்தான், ஏறுதல் அல்ல. காதல் கணவனின் பிரிவைத் தாங்க முடியாமல் பெண் தானே தன் உயிரை மாய்த்துக்கொள்வதாகக் கதை கட்டப்பட்டு, அக்கதை காலங்கள் தாண்டிப் பரப்பப்பட்டும் வருவதால், அப்படிச் சாவதுதான் தலைக்கற்பெனப் பெண்களும் நினைக்கும் அளவுக்கு மூளைச்சலவை நடந்துள்ளது. மதப் பெரியவர்களும் இப்படிக் கணவனோடு தன்னையும் மாய்த்துக்கொள்ளும் பெண்களையே பதிவிரதைகளில் சிறந்தவர்கள் என்று புகழ்ந்துரைத்து வருவதாலும் இக்கருத்து ஆண், பெண் இருவர் மனங்களிலும் அழுத்தம் பெற்றது.

உயிரை மாய்க்கும் குற்றம்

எவ்வளவு ஆழ்ந்த காதல் இருந்தாலும் ஒவ்வோர் உயிரும் தனித்தனிதான். ஒவ்வொருவரது வாழ்வும் தனித்தனிதான். காதல் உள்ளிட்ட எதன் பெயராலும் ஓர் உயிரை மாய்த்தல் குற்றம் என்கிற ஜனநாயக யுகத்தில் உலகம் நுழைந்து சில நூறு ஆண்டுகள் ஆனபின்னும் சதிமாதாக்களைக் கொண்டாடும் தேசமாக இந்தியா இன்றைக்கும் நீடிப்பது அவமானம்.

முதலில் செத்துப்போன பெண்ணின் பேரால் தொடங்கப்படும் வழிபாடு காலப்போக்கில் தீப்பாஞ்ச நாச்சியாரம்மனாக மாற்றம் பெறுவதை அறிஞர் ஆறு.ராமநாதன் தன்னுடைய ‘தமிழர் வழிபாட்டு மரபுகள்’ (மெய்யப்பன் பதிப்பகம்) நூலில் விளக்குகிறார். 1987-ல் ராஜஸ்தான் மாநிலம் தியோராலா என்னும் கிராமத்தில் ரூப் கன்வர் என்னும் ஒரு படித்த இளம் பெண் தன் கணவனது உடலோடு எரியூட்டப்பட்ட துயரம் நாட்டையே உலுக்கியது. உலகெங்கும் கண்டனக்குரல்கள் எழுந்தன. நியாயமாய் 1829 சட்டப்படி இந்தப் பெண்ணே செய்திருந்தாலும் அது தவறு. சட்ட விரோதம். இதை ஆதரித்த, இதற்கு ஊக்கம் அளித்த, இதைச் சிறப்பித்துப் போற்றிய உற்றார் உறவினர் மீது அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், எடுக்கவில்லை. புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது.

தொடர்ச்சியான தலையீடு தேவை

இந்தச் ‘சதி தடைச் சட்டம்’, சதிமாதாக்களைப் போற்றுவதையும் கூடத் தடை செய்துள்ளது. ஆனாலும், என்ன? இன்றைக்கும் பல்லாயிரக் கணக்கான மக்கள் பங்கேற்கும் விழாக்களின் தெய்வங்களாக உடன்கட்டை ஏற்றப்பட்ட பெண்கள் கொண்டாடப்பட்டுவருகிறார்கள். இப்பெருவரலாற்றின் ஒரு பகுதிதான் ராஜபாளையத்தில் வழிபடப்படும் அம்மனும்.

1929-ல் குழந்தைத் திருமண தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும், இன்றைக்கும் சட்டப்படியான திருமண வயது (18) நிறைவடையாத பெண்களுக்குத் திருமணம் செய்யும் பழக்கம் பரவலாக இந்தியாவில் நீடிக்கிறது. சட்டத்தின் மூலம் மட்டும் இவற்றைச் சரி செய்துவிட முடியவில்லை. நம் வழிபாடுகளும் மத நம்பிக்கைகளும் பண்பாட்டு அசைவுகளும் கேள்வி கேட்பாரின்றித் தொடர்கின்றன.

ஒருபக்கம் சட்டங்கள் போய்க்கொண்டிருக்கும், மறுபக்கம் மரபு, பண்பாடு என்கிற போர்வையில் பிற்போக்கான சிந்தனைகள் தொடர்ந்துகொண்டே இருக்குமா? பெண்கள் செத்துக்கொண்டே இருப்பார்கள். நாம் சாமி கும்பிட்டுக்கொண்டே இருப்போமா? இதை மாற்ற அறிவியல்பூர்வமான, சக்திமிக்க, தொடர்ச்சியான தலையீடுகள் தேவை.

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x