Published : 28 Mar 2020 09:07 AM
Last Updated : 28 Mar 2020 09:07 AM

மருத்துவ அறிவியல் - கரோனா: உலகளாவிய தீர்வுக்கு நாம் தயாரா? - டென்னிஸ் காரெல் நேர்காணல்

நேர்கண்டவர்: கெவின் பெர்ஜர்; தமிழில்: சு. அருண் பிரசாத்

கரோனா வைரஸ் தொற்று ஏற்கெனவே கணித்திருக்கக்கூடிய ஒன்று என்று டென்னிஸ் காரெல் (Dennis Carroll) கூறியபோது அவர் குரலில் கடுமை இல்லை; மாறாக, இந்த நோய் பரவுவதால் பீதியடைந்திருக்கும் மக்களுக்கான அனுதாபமே வெளிப்பட்டது. விலங்குவழித் தொற்றுப் பரவலின் அச்சுறுத்தல், மனிதர்கள் அல்லாத விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் நோய்க் கிருமிகள் ஆகியவை குறித்து, பல பதிற்றாண்டுகளாக எச்சரிக்கை விடுத்துக்கொண்டுவருபவர் டென்னிஸ்.

அமெரிக்காவிலுள்ள நோய்க் கட்டுப்பாடு-தடுப்பு மையத்தில், தொற்று நோய்கள் குறித்துப் பல ஆண்டுகள் ஆய்வுசெய்துவந்த டென்னிஸ், 2009-ல் ‘பிரிடிக்ட்' (PREDICT) என்ற திட்டத்தைத் தொடங்கினார். உலகம் முழுக்க உள்ள விலங்குகளில் மறைந்திருக்கும், வெளிப்படக் காத்திருக்கும் வைரஸ் குறித்த புதுமையான, தனித்துவ ஆய்வுகளுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் வழிகாட்டியாக அவர் திகழ்ந்தார். நாட்டிலஸ் (Nautilus) இணைய அறிவியல் இதழுக்கு டென்னிஸ் அளித்த நீண்ட நேர்காணலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்:

கரோனா வைரஸ் வௌவாலிடம் இருந்து மனிதர்களுக்கு எப்படித் தொற்றியது?

அது எப்படித் தொற்றியது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால், உணவுக்கான விலங்குகளின் சந்தையில், அவற்றை நேரடியாகக் கையாளும் மனிதர்கள் அணுகக்கூடிய தொலைவில் இந்த வைரஸ் மறைமுகமாக இருந்திருக்கிறது என்பதை ஊகிக்க முடிகிறது. இரண்டாம் நிலை ஆதாரங்கள் மூலம் இது தொற்றியிருக்கலாம். 2002-ல் சீனாவில் சார்ஸ் (SARS) தொற்று ஏற்பட்டபோது, வௌவால்களுடனான மனிதர்களுடைய நேரடித் தொடர்பு (exposure) தொற்றுக்கான ஆதாரமாக இல்லை; சிவெட் பூனையை இரண்டாம் நிலை ஆதாரமாகக்கொண்டே தொற்றியது.

தொற்றுப் பரவலுக்கான (spillover) ஆற்றல் அளவு வௌவால்களிடம் அதிகமாக இருப்பதாகக் கூறலாமா?

ஆமாம். கரோனா வைரஸின் உயிர்த்தேக்கிகளாக (reservoirs) வௌவால்களை அடையாளம் கண்டுள்ளோம்; எபோலா வைரஸின் உயிர்த்தேக்கிகளாகக் குறிப்பிட்ட சில வௌவால் வகைகளை ஆவணப்படுத்தியுள்ளோம். மனிதர்களுக்கு அணுக்கமாகவோ விலகியோ இருக்கும் வகையிலான பிரத்யேகப் பழக்கவழக்கங்களின் அடிப்படையில், சூழலியல் அமைப்புகளுக்குள் இந்த வௌவால்கள் ஒவ்வொன்றும் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முயல்கிறோம். மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ் பிரித்தெடுக்கப்பட்ட வௌவால் இனம், மனிதர்கள் வாழும் இடங்களிலும் வாழக்கூடியது; ஆக, தொற்றுப் பரவலுக்கான வாய்ப்புகளை இது அதிகப்படுத்துகிறது.

“வைரஸ் அச்சுறுத்தல்களின் சூழலியல் - அதன் பன்மைத்தன்மை ஆகியவற்றைக் குறித்த மோசமான புரிதலை நாம் கொண்டிருப்பதால்தான், நோய் உருவாவதை மட்டுப்படுத்துவதில் நம்முடைய திறன் குறைவாக உள்ளது”, என்று ‘சயின்ஸ்’ இதழில் 2018-ல் எழுதினீர்கள். அவற்றைப் பற்றி என்ன மாதிரியான புரிதலை நாம் கொண்டிருக்க வேண்டும்?

நாம் புரிந்துகொள்ள வேண்டியவற்றில் முதன்மையானது: எதிர்காலத்தில் நாம் எதிர்கொள்ளவிருக்கும் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் அனைத்தும் ஏற்கெனவே நம்மிடையே இருந்துகொண்டிருக்கின்றன; காட்டுயிர்களிடம் அவை பரவியுள்ளன. தொற்றுப் பரவல் ஏற்பட்டு, மக்களுக்கு உடல்நலமில்லாமல் போகும்வரை அவற்றைப் பற்றி நம்மால் அறிந்துகொள்ள முடியாது என்பதைத்தான்.

புவியில் சுமார் 10 லட்சத்து 67 ஆயிரம் வைரஸ் வகைகள் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் 6 லட்சத்து 31 ஆயிரத்தில் இருந்து 8 லட்சத்து 27 ஆயிரம் வைரஸ் வகைகள்வரை மனிதர்களைத் தொற்றும் திறனைக் கொண்டிருக்கின்றன. ஒரு நிலையில் இது திகிலூட்டக்கூடியது; மற்றொரு நிலையில், இவை அனைத்துமே தொற்றுவதன் மூலம் உடல்நலமின்மை - மரணத்தை மனிதர்களுக்கு ஏற்படுத்தும் என்பது குறித்த எந்த உத்தரவாதமும் இல்லை.

சில வைரஸ் வகைகளால் எந்தப் பின்விளைவும் ஏற்படாது; வேறு சில வைரஸ் வகைகளோ நம்முடைய உயிரம்சத்தை மேம்படுத்தும் செயலில் ஈடுபடுகின்றன. நம்முடைய நுண்ணுயிர்க்கோளத்தின் (microbiome) ஓர் அங்கமாகவும் அவை மாறிவிடுகின்றன. பரிணாம வளர்ச்சியில் இது ஒன்றும் புதிதல்ல. வைரஸ் வகைகள் நம்முடைய எதிரிகள் என்ற கருத்தில் இருந்து விடுபட வேண்டும்; நமக்குத் தேவையான நேர்மறையான முக்கியச் செயல்பாடுகளிலும் அவை ஈடுபடுகின்றன.

வௌவால்களின் சுற்றுச்சூழலில் ஏற்பட்ட தொந்தரவுகள் காரணமாகத்தான், நம்முடன் அவை நெருக்கமாகிவிட்டனவா?

அவற்றின் சுற்றுச்சூழல் தொந்தரவுக்குக் காரணமே மனிதர்களான நாம்தான்; நாம் இதுவரை சென்றிராத சூழலியல் மண்டலங்களுக்குள் ஆழமாக ஊடுருவிவிட்டோம்.

50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, தொற்றுப் பரவல் நிகழ்வுகள் இப்போது அதிகரித்திருக்கின்றனவா?

ஆமாம். 1940-களில் இருந்து பதிவுசெய்யப்பட்ட தொற்றுப் பரவல்கள் அனைத்தையும் ஈகோஹெல்த் அலையன்ஸ் என்ற தன்னார்வ நிறுவனம் ஆய்வுசெய்தது. அதிலிருந்து, நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, தொற்றுப் பரவல் நிகழ்வுகள் இப்போது இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகரித்திருக்கின்றன என்று உறுதியாகத் தெரியவந்திருக்கிறது.

கட்டுமீறிய மக்கள்தொகை உயர்வு, காட்டுப் பகுதிகளில் மனிதர்களின் ஆக்கிரமிப்பு விரிவடைந்தது ஆகியவை இந்த அதிகரிப்புக்கு வழிவகுத்திருக்கின்றன. வேளாண்மைக்கு அதிக நிலங்கள் திருப்பிவிடப்பட்டதும், கால்நடை உற்பத்தி கணிசமாக உயர்ந்ததும் இதில் குறிப்பிடத்தக்கது.

ஒரு வைரஸை விலங்குவழித் தொற்றாக (zoonotic) மாற்றக்கூடிய குறிப்பிடத்தக்க அம்சம் ஏதேனும் இருக்கிறதா?

வைரஸ் வாழும் உயிரிகள் அல்ல என்று ஒருவர் வாதிடலாம். அவை டி.என்.ஏ. அல்லது ஆர்.என்.ஏ.வின் மேல்பகுதியைச் சூழ்ந்திருக்கும் புரத மேலுறைகள். இதைத் தாண்டி, தன்னிச்சையாக வாழும் இயங்குதிறன் அவற்றுக்கு இல்லை. தங்களுடைய நகல்களை உருவாக்குவதற்குத் தேவையான செல் செயல் பாடுகள் அனைத்தையும் கொண்டிருக்கும் சூழலியல் அமைப்பை அவை தேடுகின்றன.

விலங்குக் கூட்டத்துக்கு வெளியே அவற்றால் வாழ முடியாது; தங்கள் நகல்களை வைரஸ் உருவாக்குவதற்கு விலங்குகள் தேவை. நாமும் விலங்குகள்தாம்; தனித்த சிறப்புடையவர்களாக நம்மை நாமே கருதிக்கொள்கிறோம். வௌவால், சிவெட் பூனை போன்ற உயிரினங்களிடம் எந்தக் காரணத்துக்காக வைரஸ்கள் தொற்றுகின்றனவோ, அதே காரணத்துக்காகத்தான் மனிதர்களிடமும் தொற்றுகின்றன.

தற்போதைய தொற்றுப் பரவல் தவிர்க்க முடியாதது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

ஆம். இது ஊகித்திருக்கக் கூடியதுதான். போக்குவரத்து விதிகள் ஏதும் உருவாக்கப்படாமல், கார்கள் மோதி பாதசாரிகள் தொடர்ச்சியாக விபத்துக்குள்ளாவதைப் போன்றதுதான் இது. நாம் செய்ய வேண்டியதெல்லாம், பாதசாரிகள் சாலையைக் கடக்கும் பாதைகளை மேம்பட்ட வகையில் நிர்வகிக்கவும், போக்குவரத்து விதிகள் - வரைமுறைகளை எந்த அளவுக்குத் துல்லியமாக நிறுவியுள்ளோம் என்பதைக் கவனிப்பதுதான். ஆனால், நாம் அவற்றைச் செய்யவில்லை.

தொற்றுப் பரவலைக் குறைக்கும் வழிமுறையாக, அதுபோன்ற பாதுகாப்பு சாத்தியங்களை நாம் நிறுவவில்லை. அந்த வைரஸ் வகைகள் எங்கே பரவியிருந்தன, அவற்றின் சூழலியல் என்ன என்பதைப் பற்றிய மேம்பட்ட புரிதலை நாம் கொண்டிருந்தால், தொற்றுப் பரவல் அபாயத்தைக் குறைத்து, அதைச் சீர்குலைக்கும் ஆற்றலையும் நாம் பெற்றிருக்க முடியும்.

அரசுகள், கொள்கை வகுப்பாளர்கள் ஏன் எதுவும் செய்யவில்லை?

முன்னெப்போதும் இல்லாத வகையில், மக்கள்தொகை ஏற்றத்தால் உந்தப்பட்டு, விரிவடைந்து கொண்டிருக்கும் பிரச்சினை இது. புவியின் மிகப் பெரிய சூழலியல் அமைப்பில் நம்ப முடியாத இடையூறை ஏற்படுத்தும் வகையில், கடந்த நூறு ஆண்டுகளில் மக்கள்தொகை கட்டுமீறி உயர்ந்திருக்கிறது. நூறு கோடி மக்கள்தொகையை எட்டுவதற்கு மனித இனத்துக்கு 3 லட்சம் ஆண்டுகள் பிடித்தன. ஆனால், கடந்த நூறே ஆண்டுகளில் 600 கோடியை எட்டிவிட்டோம்; இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் மக்கள்தொகையில் மேலும் 400 அல்லது 500 கோடி உயரும்.

அரசுகளும் சமூகமும் பெருமளவு மந்தநிலையிலேயே நிர்வகிக்கப்படுகின்றன. உலகளாவிய ஒரு சமூகமாக மாறிவிட்ட இந்தப் புவி, நம் முன்னோர் வாழ்ந்த நிலைகளில் இருந்து எந்த அடிப்படைகளில் வேறுபட்டிருக்கிறது என்பதைப் பற்றிய குறைந்த அறிவையே நாம் கொண்டிருக்கிறோம். கொதிக்கும் நீரில் ஒரு தவளையை இட்டால், அது துள்ளிக் குதித்து வெளியேறிவிடும். ஆனால், அதே தவளையைப் பாத்திரத்தில் இட்டு நீரை மெதுவாகச் சூடுபடுத்தினால், குதித்து வெளியேறாமல் உள்ளேயே கிடந்து சாகும். அந்தத் தவளை வேறு யாருமல்ல, நாம்தான்.

கரோனா வைரஸ் பற்றி உங்களைக் கவலைகொள்ளச் செய்வது எது?

எல்லோரையும் கவலைகொள்ளச் செய்யும் வெளிப்படையான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், பேசப்படாத விஷயங்கள் என்னை மிகவும் கவலைகொள்ளச் செய்கின்றன. இது ஓர் உலகளாவிய நிகழ்வு. உலகம் முழுக்க ஒவ்வொரு சமூகத்தையும் இது தாக்குகிறது. ஆனால், அதன் தாக்கம் எல்லா இடங்களிலும் சமமாக இருக்கப்போவதில்லை. ஏனென்றால் சீனா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேம்பட்ட மருத்துவ வசதிகள் எல்லா இடங்களிலும் இல்லை. மிகக் குறைந்த வசதிகளைக் கொண்ட சுகாதார அமைப்புகள்மீது, அசாத்தியமான புதிய தேவைகள் வந்து விழும்போது, அவற்றை எதிர்கொள்ள முடியாமல் ஒட்டுமொத்த சுகாதார அமைப்புமே சீர்குலைந்துபோவதற்கான அதிக ஆபத்து இருக்கிறது.

குறிப்பாக ஆப்பிரிக்கப் பகுதிகள், உள்நாட்டுச் சீர்குலைவு அல்லது போர் பாதித்த பகுதிகள் போன்றவற்றைச் சொல்லலாம். இங்கெல்லாம் கரோனா வைரஸின் பாதிப்பு தீவிரமடையும்போது, சுகாதார அமைப்புகளின்மீது அதிக சுமை ஏற்றப்பட்டு, கரோனா மட்டுமல்லாமல் பொதுவான மருத்துவச் சிக்கல்களையும்கூட அவற்றால் எதிர்கொள்ள முடியாமல் போய்விடும். அரசு அமைப்புகளில் உள்ள யாரும் இதைப் பற்றிப் பேசுவதாகத் தெரியவில்லை.

ஆக்கப்பூர்வமாக, எந்த வகையில் நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்?

இந்த வைரஸ் வகை இயல்பாகவே மரபணு திடீர்மாற்றத்துக்கு (mutation) உள்ளாகக்கூடியவை. நாம் இன்றைக்குக் காணும் இதே நிலையையே, அடுத்த சில மாதங்களிலும் காண்போம் என்ற அவசியமில்லை; அந்த வைரஸ் மேலும் தீவிரமடையலாம் அல்லது வலுவிழந்து மறைந்தும் போகலாம். ஆனால், அதை நாம் கண்காணித்துக்கொண்டிருக்கிறோமா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.

நம்மிடம் இருக்கும் மாதிரிகளைப் பற்றிய போதுமான தரவுகளையும் வெளிப்படைத்தன்மையையும் நாம் கொண்டிருக்கிறோமா? ஈரானில் என்ன நடக்கிறது? இஸ்ரேலில் என்ன நடக்கிறது? இத்தாலியில் என்ன நடக்கிறது? அமெரிக்காவில் என்ன நடக்கிறது? நிகழ் நேரத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணிக்கப் போதுமான வெளிப்படைத்தன்மை இருக்கிறதா? உலகெங்கிலும் உதவி தேவைப்படும் சமூகங்களிடம் நம்முடைய அக்கறையை வெளிப்படுத்த வேண்டும்.

நாம் அனைவரும் ஒரே சூழலியல் அமைப்பின் அங்கம்தான். இது ஓர் உலகளாவிய பிரச்சினை; ஆகவே, இதை எதிர்கொள்வதற்கு உலகளாவிய தீர்வைக் கண்டறியும் வகையில் நாம் தயாராக வேண்டும். நம்முடைய தயாரிப்புகளும் எதிர்கொள்ளல்களும் நாடுகளை மையப்படுத்தியதாக (country-centric) இருந்தால், நாம் நிச்சயம் பெரும் சிக்கலில்தான் வீழ்வோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x