Published : 27 Mar 2020 09:24 AM
Last Updated : 27 Mar 2020 09:24 AM

அஞ்சலி: வசனங்களால் வாழ்கிறார்! - இயக்குநர் விசு

ரிஷி

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மோதிரக் கையால் நடிகர்கள்தாம் குட்டுப்பட வேண்டுமென்பதில்லை, இயக்குநர்களும் குட்டுப்பட்டிருக்கின்றனர். அவர்களில் முதன்மையானவர் விசு. மீனாட்சிசுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட இவரை, ரசிகர்கள் விசு என்ற பெயராலேயே அறிந்துவைத்திருக்கிறார்கள்.

விசுவின் முந்தைய தலைமுறை இயக்குநர் ஸ்ரீதர் போல், இவரும் முதலில் எழுத்தாளராக அறிமுகமாகி பின்னர் இயக்குநரானவர். தனது ஒரு படம்போல் இன்னொரு படம் இருந்துவிடக் கூடாது என்று இயங்கியது ஸ்ரீதரது சிறப்பு என்றால், பெரும்பாலான படங்களை ஒரே விதமாக உருவாக்கி வெற்றிகளைக் கொடுத்தவர் விசு.

திரையில் மட்டுமே!

திரைப்படங்கள் யதார்த்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்துடன் இயக்குநர் மிஷ்கின் விடாப்பிடியாகத் திரைப்படங்களை உருவாக்குவதுபோல் இயக்குநர் விசுவும் அதே கருத்துடன் ஆனால், மிஷ்கினுக்கு எதிரான துருவத்தில் நின்றுகொண்டு படங்களை உருவாக்கியவர். கணியன் பூங்குன்றன் போன்ற ரோபாட் தன்மை கொண்ட துப்பறிவாளனையோ அம்மையப்ப முதலியார் போன்று வீட்டுக்கு நடுவில் அட்சர சுத்தமாகக் கோடு போடும் தந்தையையோ உலகத்தில் காண முடியாது. அவர்களைத் திரையில்தான் பார்க்க முடியும்.

நாடகம் தொடர்பான மேன்மை யான எண்ணம் கொண்டிருந்த காரணத்தாலேயே, தனது படங்கள் நாடகம்போல் உள்ளன என்னும் விமர்சனத்தை விசனப்படாமல் பெருமிதத்துடன் எதிர்கொண்டவர் விசு. அதுதான் அவரது வெற்றி. தொடக்க காலத்தில் இவர் கதை, வசனம் எழுதிய படங்களை இயக்கியவர்களும் உயிர்த்துடிப்பான வசனங்களை எழுதி, அதனால் பெயர் பெற்றவர்களே. முதலில் எழுதிய ‘பட்டினப்பிரவேசம்’ படத்தை இயக்கியவர் கே. பாலசந்தர். தொடர்ந்து எழுதிய ‘அவன் அவள் அது’, ‘கீழ்வானம் சிவக்கும்’ போன்ற படங்களை முக்தா வி.சீனிவாசன் இயக்கினார்.

இரும்புக் கயிறு

எஸ்பி. முத்துராமன் இயக்கிய ‘குடும்பம் ஒரு கதம்பம்’ ஒரு நடிகராக விசுவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. என்றபோதும் அவர் இயக்குநராகத் தடம்பதித்தது அடுத்து வெளியான ‘கண்மணி பூங்கா’வில் தான். தணிக்கைத் துறையினரால் வயது வந்தவர்களுக்கான படமாக ‘ஏ சான்றிதழ்' வழங்கப்பட்ட இந்தப் படம், பெரிதாகப் பேசப்படாவிட்டாலும் அதன் பின்னர் விசு சிறந்த குடும்பப் பட இயக்குநராக முத்திரை பெற அச்சாரம் போட்டது.

விசுவை வெற்றிகரமான இயக்குநராக வெகுமக்கள்திரளிடம் கொண்டு சேர்த்த படம், ‘மோடி மஸ்தான்' என்னும் மேடை நாடகத்தின் அடிப்படையில் உருவான ‘மணல் கயிறு’தான். விசுவின் திரைப்பட வரலாற்றில் அசைக்க முடியாத இரும்புக் கயிறான அந்தப் படத்தில், காது கேளாத மாமாவைப் போன்று அவர் உருவாக்கிய எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு சேது விநாயகம், கமலா காமேஷ், கிஷ்மூ, மனோரமா, பூபதி போன்ற நடிகர்கள் உயிர் தந்தனர் .இப்படி திறமைமிக்க நிலையக் கலைஞர்களைத் தொடர்ந்து அவர் பயன்படுத்திய தன்மை, நாடக மேடையில் ஏற்பட்ட பழக்கமாக இருந்திருக்கலாம். நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்த பாக்யராஜிடமும் இந்த அம்சத்தைக் காண முடியும்.

மின்சார விருது

1986-ல் வெளியான ‘சம்சாரம் அது மின்சாரம்’ விசு இயக்கிய திரைப்படங்களில் மாபெரும் வெற்றிபெற்றது. சிறந்த பொழுதுபோக்குச் சித்திரம் என்பதற்காக தங்கப்பதக்கம் பெற்ற முதல் தமிழ்ப்படம் இது. இது பின்னர், சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் ‘குடும்ப புராணம்’ என்னும் பெயரில் மலையாளத்தில் மறுஆக்கம் செய்யப்பட்டது. இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கும் இப்படம் சென்றது. இதன் இரண்டாம் பாகத்தை எழுதி முடித்து அதைத் திரைப்படமாக்கும் கனவோடு இருந்தவர் அந்தக் கனவு நிறைவேறாமலே நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

கமலுடனும்

‘தில்லுமுல்லு’, ‘நெற்றிக்கண்’, ‘புதுக்கவிதை’, ‘நல்லவனுக்கு நல்லவன்’, ‘மிஸ்டர் பாரத்’, ‘மன்னன்’ என நடிகர் ரஜினிகாந்தின் பல படங்களில் இவருடைய பங்களிப்பு இருந்திருக்கிறது. ‘பசி’ படத்தின் மூலம் நினைவுகூரப்படும் இயக்குநர் துரையின் இயக்கத்தில் உருவான படம் ‘சதுரங்கம்’. இந்தப் படத்துக்கு கதை, வசனம் எழுதியதன் மூலம் ரஜினிகாந்துடனான இவரது பயணம் 1978-ல் தொடங்கியது. கிட்டத்தட்ட இதே கதையைத்தான் ‘திருமதி ஒரு வெகுமதி’ என்னும் பெயரில் பின்னர் விசு படமாக்கினார். நடிகர் எஸ்.வி.சேகர் இந்தப் படத்தில் நடித்த வெகுளித்தனமான கணவன் வேடத்தில்தான், ரஜினிகாந்த் முந்தைய படத்தில் நடித்திருந்தார்.

கமல்ஹாசனை விசு இயக்கியதில்லை. ஆனால் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் கமல் நடித்திருந்த ‘சிம்லா ஸ்பெஷல்’ படத்துக்கு விசு கதை, வசனம் எழுதியிருந்தார். ரஜினியை இயக்க ஒரு வாய்ப்பு வந்தது. ஆனால், எந்தச் சூழலிலும் படைப்புரீதியான சமரசம் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த விசு, ரஜினியை இயக்கக் கிடைத்த அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். அந்தப் படம் ‘அண்ணாமலை’. பின்னர், அந்தப் படத்துக்கு வஸந்த் இயக்குநர் என நாளிதழ்களில் விளம்பரம்கூட வந்தது. ஆனால், இறுதியில் இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. பின்னர், சுரேஷ் கிருஷ்ணாவுக்கு ‘பாட்ஷா' கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.

விசு வசனம்

நடிகர் சிவாஜி கணேசனுடன் அவர் இணைந்து நடித்த படம் ‘ஆனந்தக் கண்ணீர்’. அதில்கூட அவரை நினைவுபடுத்துவது ‘தோராயமாக’ என்னும் சொல்லைப் பயன்படுத்தி டாக்ஸி டிரைவரிடம் அவர் பேசும் நீளமும் குழப்பமுமான அந்த வசனம்தான். இவ்வளவுக்கும் அந்தப் படத்தில் விசு வெறும் நடிகரே. ஆனால், விசு என்றவுடனேயே இயக்குநர்களுக்கு இப்படியான வசனங்களுக்கான நடிகர் என்றே தோன்றியிருக்கிறது.

ஆனால், விஜயகாந்த் நடிப்பில் அவர் இயக்கிய ‘டௌரி கல்யாணம்’ என்னும் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். திருமணப் பந்தியில் இலைகளில் மிச்சம் வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பொருட்களெல்லாம் பணத் தாள்களாகவும் நாணயங்களாகவும் தென்படும். ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தலைவனின் மனத் தாங்கலை, இதைவிடத் தெளிவாக வசனங்களால்கூட வெளிப்படுத்தியிருக்க முடியாத அளவுக்கு நயமான காட்சி.

எல்லாவற்றுக்கும் மேலாக, மேடையில் உருவாக்கப்பட்ட நாடகங் களைப் போன்ற திரைப்படங்களைப் படைக்கவே தான் திரைப்படத் துறைக்கு வந்தோம் என்பதில், அவருக்கு எள்ளளவும் சந்தேகம் இருந்ததில்லை. அந்தப் படங்களில் பல பெரும்பான்மையான ரசிகர்களை, குறிப்பாகத் தாய்க்குலத்தைக் கவர்ந்து வெற்றியை வாரிக்குவித்ததே அவரது சாதனைச் சரித்திரம். சினிமாவில் வசனங்களுக்கான முக்கியத்துவம் இருக்கும்வரை விசுவின் பெயரும் நிலைத்திருக்கும். ஏனெனில், அவர் வசனங்களால் வாழ்கிறார்!

கட்டுரையாளர், தொடர்புக்கு: chellappa.n@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x