Published : 25 Mar 2020 08:16 am

Updated : 25 Mar 2020 08:16 am

 

Published : 25 Mar 2020 08:16 AM
Last Updated : 25 Mar 2020 08:16 AM

மாய உலகம்: நான் ஏன் என் கதையைப் போல் இருக்கிறேன்?

why-am-im-like-a-story

நான் ஹமீது. வயது, நான்கு. பாட்டியோடு ஒரு சிறிய வீட்டில் வசித்துவருகிறேன். அப்பா ஏதோ ஒரு வெளியூருக்குப் போயிருக்கிறார். எதற்காக, எப்போது வருவார் என்று கேட்டால், ‘‘ரொம்ப தூரம் தள்ளிப் போயிருக்கிறார். அவர் வெளியில் போய் நாலு காசு சம்பாதித்தால்தானே உனக்குப் புதுச் சட்டை எல்லாம் வாங்க முடியும்?’’ என்பார் பாட்டி. அது சரி, எல்லோர் வீட்டிலும் ஓர் அம்மா இருக்கிறார். என் அம்மா எங்கே என்று இன்னொரு நாள் கேட்டேன். பாட்டி என் கண்களை உற்றுப்பார்த்து தழுதழுத்த குரலில் சொன்னார், ‘‘அம்மா அல்லாவிடம் போயிருக்கிறார்.’’

அப்படி என்றால் என்னவென்று புரியவில்லை என்றாலும் அப்பா, அம்மா இருவரும் என்னோடு இல்லை என்பது மட்டும் புரிந்தது. நம்பாதே ஹமீது, உன் பாட்டி பொய் சொல்கிறார் என்று நண்பர்கள் கிசுகிசுத்தபோது, அவர்களைக் கடிந்துகொண்டேன். ‘‘உனக்கு என்ன தெரியும் என் பாட்டியைப் பற்றி? எனக்காக வாழும் ஒரே உயிர். அவரை நம்பாமல் வேறு யாரை நம்புவது நான்?”

இது நடந்து பல நாட்கள் ஆகிவிட்டன. நோன்பு முடிந்து ஈகைத் திருநாளும் தொடங்கியிருந்தது. இந்தா, வைத்துக்கொள் என்று பாட்டி மூன்று பைசாவை என் கைகளில் வைத்து அழுத்தினார். ‘‘இப்போதைக்கு இவ்வளவுதான் ஹமீது. இதை வைத்து உனக்குப் பிடித்த ஏதாவது வாங்கிக்கொள்.”

பாட்டியின் விரல்களில் முத்தம் ஒன்றைப் பதித்துவிட்டு ஓட ஆரம்பித்தேன். ஊருக்கு வெளியிலுள்ள ஈத்கா மைதானத்தைச் சென்றடையும்வரை ஓட்டம் நிற்கவே இல்லை. நான் எதிர்பார்த்ததைப் போலவே ஏராளமான புதிய கடைகள் முளைத்திருந்தன. வண்ண வண்ணச் சட்டைகள், பொம்மைகள், ஊதுகுழல்கள், விளையாட்டுப் பொருட்கள் என்று எதைப் பார்த்தாலும் வாங்க வேண்டும் போலிருந்தது. என்ன அவசரம்? எல்லாக் கடைகளையும் நோட்டமிட்டுவிட்டு மூன்று பைசாவுக்குள் அடங்கும் சிறந்த பொருளைத் தேர்ந்தெடுப்பது என்பது லேசுபட்ட காரியமா?

ரங்கராட்டிணத்தைக் கடக்கும்போது ஒரு சுற்றுச் சுற்றினால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. இல்லை வேண்டாம், பிறகு இனிப்பு வாங்க பைசா மிச்சமிருக்காது என்று சொல்லியபடியே நடந்தேன். பொம்மைகளைக் கடந்து இரும்புப் பொருட்கள் விற்கும் கடைக்கு வந்து சேர்ந்திருந்தேன். இங்கே எனக்கு எதுவும் அகப்படாது என்று நினைத்தபடி வந்த வழியே திரும்பிய அந்தக் கணத்தில் அது என் கண்ணில் பட்டது.

கழுத்தைத் திருப்பி நன்றாக ஒருமுறை பார்த்தேன். ‘‘என்னப்பா இதுவா வேண்டும்?” என்றபடி கடைக்காரர் எடுத்து என்னிடம் கொடுத்தார். ‘‘இது மூன்று பைசா ஆகுமே, உன்னிடம் இருக்கா?” அதென்னவோ என்னைப் பார்க்கும் எல்லோருக்குமே என்னிடம் ஒரு பைசாவும் இருக்காது என்று அப்படி ஒரு நம்பிக்கை! ‘‘ஓ, இருக்கே” என்று சொல்லி பைசாவைக் கொடுத்துவிட்டு, அவர் காகிதத்தில் சுற்றிக்கொடுத்ததை வாங்கிக்கொண்டேன்.

ஹமீது என்று ஒரு குரல். பக்கத்து வீட்டுப் பையன் நின்றுகொண்டிருந்தான். ‘‘நான் இரண்டு பொம்மைகள் வாங்கி இருக்கிறேன். நீ என்ன வாங்கி இருக்கிறாய், காட்டு?”. அதற்குள் இன்னொரு பையனும் வந்துவிட்டான். கூடவே அவன் நண்பனும். நான் காகிதத்தைப் பிரித்துக் காட்டினேன். இது என்ன என்று அனைவரும் விழித்தார்கள். ‘‘இது தெரியாதா, சிம்டா’’ என்று சொன்னபோதும் ஒருவருக்கும் புரியவில்லை. இதை வைத்து என்ன செய்வாய்?

நான் சிம்டாவைப் பிடித்து நடித்துக் காட்டினேன். ‘‘சப்பாத்தி மாவைத் தேய்த்து, அதை இப்படித் தூக்கி அடுப்பில் காட்ட வேண்டும். பிறகு இப்படித் திருப்ப வேண்டும். சப்பாத்தி உப்பியவுடன் இப்படித் தூக்கி தட்டில் வைத்துக் கொடுக்க வேண்டும்.’’ எல்லோரும் சிரித்தார்கள். ‘‘ஆயிரம் தையல் போட்ட சட்டையைத் தூர வீசிவிட்டு ஒரு நல்ல சட்டையை வாங்காமல் இதை ஏன் வாங்கியிருக்கிறாய்?’’

‘‘இது எனக்கில்லை, பாட்டிக்கு. பாவம், அவர் கையைச் சுட்டுக்கொள்ளாத நாளே இல்லை” என்று சொல்லிவிட்டு, வீட்டை நோக்கி ஓடத் தொடங்கினேன்.

இந்தி இலக்கிய வானில் ஒரு நட்சத்திரமாக மின்னும் பிரேம்சந்த் எழுதிய நூற்றுக்கணக்கான சிறுகதைகளில் ஒன்று இது. ஹமீது போலவே இளம் வயதிலேயே அம்மாவை இழந்தவர் பிரேம்சந்த். அப்பா தொலைவிலேயே இருந்தார். வளர்த்தது எல்லாம் பாட்டிதான்.

ஹமீது அணிந்த அதே ஒட்டுப்போட்ட சட்டை. ஹமீது அனுபவித்த அதே வறுமை. ஹமீதின் மீது படிந்த அதே இருள். இருந்தும், இருளைக் கிழித்துக்கொண்டு ஹமீதின் இதயத்தில் துளிர்த்த அதே நம்பிக்கை ஒளி பிரேம்சந்தின் இதயத்திலும் துளிர்த்தது. அந்த ஒளியைத் தொட்டுத் தொட்டுதான் அவர் எழுதினார். எனவே, அவர் எழுத்து உண்மையானதாக இருந்தது. உயிரோட்டத்துடன் இருந்தது.

இனிப்புக்காக ஏங்கும் குழந்தைகளின் கதைகளை, அல்லாவிடம் சென்றுவிட்ட அம்மாக்களின் கதைகளை, பள்ளிக்கூடத்துக்குப் போக முடியாத குழந்தைகளின் கதைகளை, வேலையின்றித் தவிக்கும் அப்பாக்களின் கதைகளை, கோதுமை வாங்க முடியாத குடும்பங்களின் கதைகளை, விரலைச் சுட்டுக்கொள்ளும் பாட்டிகளின் கதைகளை பிரேம்சந்த் எழுதினார்.

ஆனால், ஒவ்வொன்றிலும் ஒரு ஹமீது இருக்குமாறு அவர் பார்த்துக்கொண்டார். அந்த ஹமீதிடம் மூன்று பைசா மட்டுமே இருந்தது. ‘‘இதையா வாங்கினாய்? எனக்காகவா வாங்கினாய்? ஏன் ஹமீது?’’ என்று தாளமாட்டாமல் இரவெல்லாம் பாட்டி விம்மி விம்மி அழுவதற்கு அந்த மூன்று பைசா போதுமானதாக இருக்கிறது.

பிரேம்சந்தை எடுத்து வாசிக்கும்போது ஹமீதின் இதயத்துடிப்பை நாம் உணர்கிறோம். ஹமீது சிம்டாவைத் தன் நெஞ்சோடு சேர்த்து வைத்துக்கொண்டு ஓடும்போது பிரேம்சந்த் ஓடுவதுபோல் உணர்கிறோம். ஒவ்வொரு கதையும் அதை வாசிக்கும் நம்மைப் பார்த்து கேட்கிறது, ’எங்கே உன் ஹமீது?’

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

நான் ஏன் என் கதையைப் போல் இருக்கிறேன்Like a storyமாய உலகம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author