Published : 22 Mar 2020 07:18 AM
Last Updated : 22 Mar 2020 07:18 AM

பார்வை: இவர்களுக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறோம்

உலக நாடுகளை அச்சுறுத்தும் ஒற்றைச் சொல்லாக மாறியுள்ளது ‘கரோனா’. இந்த நோய் தாக்காமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முதன்மையானது சுய சுத்தத்தைப் பராமரிப்பதுதான். அத்துடன் ஊரையும் சுத்தமாகப் பராமரித்தாக வேண்டும்.

அந்த வகையில் கரோனா வைரஸ் முதலில் தாக்கிய சீனாவில் அந்நாட்டு அரசு மேற்கொண்ட தூய்மை நடவடிக்கைகள் பிரமிக்க வைக்கின்றன. நாட்டின் அனைத்துச் சாலைகளிலும் கிருமிநாசினி தெளிப்பு, அந்தப் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு உடல் கவசம், மக்கள் அனைவருக்கும் உடல் பரிசோதனை, அறிகுறிகள் தென்படும் நபர்களை உடனடியாகத் தனிமைப்படுத்தி மருத்துவ சிகிச்சை மேற்கொள்வது போன்றவை அடங்கும்.

அலட்சியமாகச் செயல்படாதீர்கள்

‘சுத்தம் சுகாதாரம்’, ‘சுத்தம் சோறுபோடும்’ என்பன போன்ற பழமொழிகள் நம்மிடையே காலம்காலமாகப் புழங்கிவருகின்றன. ஆனால், வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ள நினைக்கும் அளவுக்கு நம்மில் பலரும் புறவெளியைச் சுத்தமாக வைத்துக்கொள்ள மெனக்கெடுவது இல்லை. நம் நாட்டில் பலரும் சாப்பிடுவதற்கு முன்பு கைகழுவுவதில்கூட அக்கறை செலுத்துவதில்லை. இந்தப் பின்னணியில் சில மணி நேரத்துக்கு ஒருமுறையாவது கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்; வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்; வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் ஆகியவற்றை கரோனா பரவல் கட்டாயமாக்கியுள்ளது.

உடலையும் வீட்டையும் சுத்தமாக வைத்துக்கொள்ள நினைக்கும் பலர் புறச்சூழலையும் நம் வீட்டிலிருந்து வெளியேறும் குப்பையைச் சுத்தம்செய்யும் அமைப்புசாராத் தொழிலாளர்களின் நிலையையும் சேர்த்துக் கவனிக்க வேண்டுமில்லையா? குழந்தைகளுக்கான டயபர்கள், சானிட்டரி நாப்கின்களை எத்தனை பேர் முறையாக அப்புறப்படுத்துகிறோம்? கரோனா... கரோனா... என ஊரே அஞ்சிக்கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் அசுத்தமான டயபரை ஒரு பழைய தாளில்கூடப் பொதியாமல் வெறும் கைகளில் எடுத்துவந்து, குப்பைத் தொட்டியில் பலரும் வீசிவிட்டுச் செல்வதைப் பார்க்க முடிகிறது.

நாயும் பூனையும் சானிட்டரி நாப்கின்களைக் குதறிப் பார்க்கும் காட்சி வெகு சாதாரணமாகிவிட்டது. பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின், டயபரை நாம் கைகளில் எடுப்பதையே அசௌகரியமாக நினைக்கும்போது, அவற்றை ஒரு துப்புரவுத் தொழிலாளியை வெறும் கைகளால் எடுக்கவைப்பது மனிதத்தன்மையற்ற செயல் அல்லவா?

யார் கவலைப்படுவார்கள்?

கரோனா தொற்றுநோயை மத்திய அரசு பேரிடராக அறிவித்துள்ளபோதும் இந்த ஆபத்தான சூழ்நிலையிலும் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவுத் தொழிலாளர்கள் முகக்கவசமோ, கையுறையோ வழங்கப்படாமல் வெறும் கைகளால்தான் குப்பையை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியே முகக்கவசம் கொடுக்கப்பட்டாலும், அது குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை மாற்றப்படுகிறதா, உரிய தரம் கொண்டதாக இருக்கிறதா என்பவை துணைக்கேள்விகள்.

கழிவுநீர்க் கால்வாய்களைச் சுத்தம்செய்யும் தொழிலாளிகளின் நிலையோ இன்னும் மோசம். சென்னை பெரியார் திடல் அருகே உள்ள பிரபல அரசியல் கட்சித் தலைவர் வீட்டின் முன்பாகச் சமீபத்தில் கழிவுநீர்க் கால்வாய் சுத்தம் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. அந்தப் பணியில் நான்கு ஆண்களும் மூன்று பெண்களும் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம். ஆண் தொழிலாளர்கள் வெறும் உள்ளாடைகளை அணிந்துகொண்டு சாக்கடைக் கழிவை எடுத்துக்கொடுக்க, பெண் தொழிலாளர்கள் வெறும் கைகளால் அவற்றை வாங்கி அப்புறப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.

அருகிலோ சிறு உயிரினங்களுக்குக்கூடத் தீங்கு விளைவிக்க நினைக்காத ஜெயின் கோயிலின் மணியோசை அந்த நேரம் பார்த்து ஒலித்துக் கவனத்தை திசைதிருப்பியது. இதுதான் நிதர்சனம். “கார்ப்பரேசன் எங்களுக்கு கிளவுஸ் கொடுக்கிறதுக்குள்ள, எங்க ஆளுங்க நிறையப் பேருக்கு கொரோனாவோ… கரோனாவோ.. அது வந்திடும்” என்கிறார் துப்புரவுத் தொழிலாளர் பூங்கொடி.

வீட்டிலிருந்து வேலை?

கழிவுநீர்த் தொட்டி அடைப்பைச் சுத்தம் செய்யும் குமார் என்பவரைச் சந்தித்தபோது, அவருடைய கைகளிலும் கால்களிலும் மனிதக் கழிவு ஒட்டிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. தன் கைகளை அவர் எத்தனை முறை கழுவினாலும், அந்தத் துர்நாற்றம் அவர் நினைவை விட்டு நீங்காது. “என்னம்மா பண்றது? ஊர் சுத்தமா இருக்கணுமின்னு பெரிய ஆபீஸருங்க சொல்லிட்டாங்க. அவர்கள் சொன்னா, நாங்க செஞ்சிதானே ஆகணும். மலக்குழில இறங்கி செத்துப்போனாக்கூட யாரும் கவலைப்பட மாட்டாங்க. இதுல நாங்க கரோனாவுல இறந்தா மட்டும் கவலைப்படவா போறாங்க?” என்று கேட்கிறார். அவருடைய கேள்விக்கு என்ன பதில் வைத்திருக்கிறோம்?

கரோனா பீதியால் ஊரே அல்லோலகல்லோலப் படும்போதும் சரோஜா வேலை செய்யும் வீட்டின் முதலாளி அம்மா, ‘‘நேரத்துக்கு வீட்டுக்கு வந்து எல்லா வேலையையும் செய்துகொடுத்துட்டுப் போ” என்று உரிமையாகக் கட்டளையிட்டிருக்கிறார். சரோஜாவால் அதை மறுக்க முடியாது.

“நாங்கள் தினமும் வேலைக்குப் போனாத்தானே சம்பளம் முழுசா கிடைக்கும். இல்லைன்னா ஒருநாள் சம்பளம், அரைநாள் சம்பளத்தைப் பிடிச்சுக்கிட்டுதான் தருவாங்க. வீட்டு வேலை செய்யும் எங்களுக்கு எவ்வளவு ஜுரம் வந்தாலும், வேலை செஞ்சிட்டுதான் போவோம். வீட்டுக்காரம்மா கொஞ்ச நல்லவங்களா இருந்தா டீ போட்டுக் கொடுப்பாங்க, ஒரு சிலர் வேலை முடிஞ்சதும் கொஞ்ச நேரம் படுத்துட்டு போன்னு சொல்லுவாங்க. ஆனா, கண்டிப்பா வேலை செய்தாகணும். இப்போ சொல்றாங்களே கரோனா - அந்த நோய் வந்தாலும் சம்பளம் இருந்தாதானே உடம்பைப் பாத்துக்க முடியும்?” எனச் சொல்லிவிட்டு வேலைக்கு ஓடுகிறார் சரோஜா.

நகராட்சி குப்பை அகற்றுவோர், பால் பாக்கெட் விநியோகிப்பவர்கள், செய்தித்தாள் விநியோகிப்பவர்கள் உள்ளிட்ட பலரும் இல்லையென்றால் நம்முடைய ஒரு நாள்கூட நகராது. மற்றவர்களைவிட பலரையும் அன்றாடம் சந்திக்கும் இவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட அதிக சாத்தியம் உண்டு. வீட்டிலிருந்து வேலை பார்ப்பது பற்றி இன்றைக்கு அதிகம் விவாதிக்கப்படுகிறது. ஆனால், மேற்கண்ட அன்றாடப் பணியாளர்கள், சாதாரணத் தொழிலாளர்கள் எப்படி வீட்டிலிருந்து பணியாற்ற முடியும்? பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டுமென அரசு சொல்வது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், இதுபோன்ற தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள். அப்போது எப்படித் தங்கள் அன்றாடச் செலவைச் சமாளிப்பார்கள்? கரோனா முன்தடுப்பு நடவடிக்கைகளுடன் இந்தக் கேள்விகளுக்கும் சேர்த்தே விடை காண வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

- எல். ரேணுகாதேவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x