Published : 22 Mar 2020 07:18 AM
Last Updated : 22 Mar 2020 07:18 AM

முகங்கள்: வழிகாட்டும் விளக்குகள்

பார்வையிருந்தும் பலர் வாழ்க்கையில் திசைமாறிவிடும் நிலையில் பார்வையற்ற மாணவர்களுக்குத் திசைகாட்டி யாக உள்ளார் சமூக சேவகர் பத்மா நரசிம்மன். பார்வையற்ற கல்லூரி மாணவர்களுக்காக ‘தர்ஷினி’ என்ற அமைப்பை 20 வருடங்களாக இவர் நடத்திவருகிறார்.

சென்னை அடையாறில் வசித்துவரும் பத்மா, தன்னுடைய தோழிகளான மங்கை கிருஷ்ணசுவாமி, பாக்யம் அருணாசலம், வீணா பத்ரா, சௌமியா, சரோஜா சந்திரசேகர், ஹேமா ஸ்ரீதரன் ஆகியோருடன் இணைந்து 1992-ல் ‘அடையாறு எக்ஸ்னோரா பெண்கள் குழு’ என்ற அமைப்பைத் தொடங்கினார். பொருளா தாரத்தில் நலிவுற்ற பெண்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய வர்களுக்கு இந்த அமைப்பின்மூலம் உதவினர்.

இருப்பவர்களிடமிருந்து இல்லாதவர்களுக்கு

“சமூக சேவகி சரோஜினி வரதப்பன்தான் என் குரு. அவருடன் சேர்ந்து பணியாற்றிய தால்தான் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மை வளர்ந்தது. செல்வாக்குடன் இருக்கிறவர்கள் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையிலிருந்து தொடங்கியதுதான் என்னுடைய பணி. சமூகத்தில் மிகவும் இன்னல்களைச் சந்திக்கும் பார்வையற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற யோசனையை முன்வைத்தவர் என் தோழி மங்கை.

அவர் முன்வைத்த யோசனையால்தான் ‘தர்ஷினி’ என்ற அமைப்பைத் தொடங்கினோம்” என்கிறார் பத்மா நரசிம்மன். கல்லூரிகளில் படிக்கும் பார்வையற்ற மாணவர்களுக்குப் பாடங்களை வாசித்துக் காட்டுவது, தேர்வு நேரத்தில் பதில்களை எழுத உதவுவது, இசை, விளையாட்டு போன்ற துறைகளில் முன்னேற உதவுவது உள்ளிட்ட பணிகளை இந்த அமைப்பினர் செய்து வருகிறார்கள்.

தற்போதுவரை இந்த அமைப்பின் உதவியால் 400 முதுநிலைப் பட்டதாரிகள், 250 ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், 50 உதவிப் பேராசிரியர்கள், 20 முனைவர் பட்ட ஆய்வாளர்கள், 120 ஆய்வியல் நிறைஞர்கள், 3 தலைமை ஆசிரியர்கள், 30 இசைத் துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றவர்கள் என மொத்தம் 873 பேர் தங்களுடைய படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளனர். பொதுவாக ஒருவருக்குச் சிறியதாக ஏதாவது உதவினாலே அன்றைய தினம் ஏதோவொரு பெரிய விஷயத்தைச் செய்ததுபோல் சுயபெருமை உண்டாகும்.

ஆனால், நூற்றுக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை மேம்படப் பல ஆண்டுகளாக உதவிவரும் பத்மா நரசிம்மன், தன்னுடைய பேச்சின்போது ‘தனிமரம் தோப்பாகாது, ஒற்றுமையே பலம்’ என்பதை மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்.

“இருபது வருடங்கள் கடந்த எங்கள் அமைப்பால் இந்தச் சேவையைச் செய்ய முடிகிறது என்றால், அதற்குக் காரணம் பிரதிபலன் பார்க்காமல் உதவ முன்வந்த ஏராளமான தன்னார்வலர்களும் நன்கொடையாளர்களுமே. நாங்கள் செய்யும் சிறு உதவியை பெரும் வெற்றியாக மாற்றிக் காண்பித்த மாணவர்களும் இதற்குக் காரணம்” என்கிறார் பத்மா.

திறமையை நிரூபிக்க களம் தேவை

அடையாறில் உள்ள இந்திரா நகர் அரசு இளைஞர் விடுதியில் பார்வையற்ற மாணவர்களுக்குத் திங்கள், வெள்ளி ஆகிய இரண்டு நாட்களில் புத்தகங்களை வாசித்துக் காட்டுவது, வாசிக்கும் புத்தகத்தைக் குறுந்தகடு அல்லது பென்டிரைவில் பதிவுசெய்து கொடுப்பது, தேர்வு நேரத்தில் பரீட்சை எழுத உதவுவது, தேர்வுக் கட்டணம் செலுத்த உதவுவது, புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது, பார்வையற்றவர்களுக்கு வழிகாட்டும் வெள்ளைப்பிரம்பு, இசைக் கருவிகள் போன்றவற்றை வாங்கித் தருவது போன்ற உதவிகளைச் செய்துவருகிறார்கள் ‘தர்ஷினி’ அமைப்பினர்.

“முகாமுக்கு வரும் மாணவர்களுக்குக் காலை உணவு, தேநீர் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் நாங்களே செய்துவிடுகிறோம். இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் ஏதோவொரு திறமை இருக்கும். ஆனால், அதை வெளிப்படுத்துவதற்கான களம் சரியான நேரத்தில் கிடைக்காது. அதுவும் பார்வையற்ற மாணவர்கள் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம். இதுபோன்ற நபர்கள் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான களத்தைத்தான் எங்கள் அமைப்பினர் செய்துவருகிறார்கள். பார்வையற்ற மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தத் தொழில்துறையினர் வாய்ப்பு தர முன்வர வேண்டும்” என வலியுறுத்துகிறார் பத்மா நரசிம்மன்.

- ரேணுகா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x