Published : 22 Mar 2020 07:18 AM
Last Updated : 22 Mar 2020 07:18 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 50: சீர்வரிசை மரத்தைக் காங்கலை 

பரசுராமு தனக்கு மகள் பிறந்திருக்கிறாள் என்று கேள்விப்பட்ட உடனே மகளைக்கூடப் போய் பார்க்காமல் பிஞ்சைக்குப் போய் இரண்டு பூவரசங்கன்றுகளை நட்டுவிட்டு, கிணற்றுக்குள் மூழ்கி ஒரு குளிப்பு குளித்துவிட்டு வந்த பிறகுதான் மகளையே பார்த்து ‘சேனை’ தொட்டுவைத்தார்.

பிறகு மகள் மயிலரசி வளர வளர கண்ணும் கருத்துமாய், தான் நட்ட பூவரச மரத்துக்குத் தண்ணீரை ஊற்றிய பிறகுதான் சாப்பிடவே ஆரம்பிப்பார். பூவரச மரம் அகலமான இலைகளோடு பூவும் காயுமாய்ச் செழிக்க பரசுராமுவுக்குச் சந்தோசம் பொறுக்கவில்லை. தன் மகள் வாழ்க்கையும் இந்த மரத்தைப்போல் செழிப்பாய் இருக்கும் என்று நினைத்துக்கொண்டார். இனி வீடு ஏறிப் பெண் கேட்டு வரும் மாப்பிள்ளைகளில் நல்ல குணமான மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்து பெண்ணைக் கொடுத்துவிட வேண்டியதுதான் என்று எண்ணிக்கொண்டவர் தன் சொந்தத்தில் இருக்கும் மாப்பிள்ளைகளை எல்லாம் வரிசையிட்டு எடைபோட்டார்.

வாசலிலே பூசணிப்பூ

பெண்ணை பெற்ற பெண்களும் சும்மா இருக்க மாட்டார்கள். மார்கழி மாதத்தில் வாசல் தெளித்துக் கோலம்போட்டு முடித்துவிட்டு சாணி உருண்டையில் பிள்ளையார் பிடித்துவைக்கும்போது அதன் மீது ஒரு பூசணிப்பூவையும் ஒரு கண்ணுப்பீளைச் செடியையும் செருகிவைப்பார்கள். சாணி உருண்டையில் பூசணிப்பூ மட்டும் இருந்தால் எங்கள் வீட்டில் கல்யாணத்துக்கு ஒரு பெண் இருக்கிறாள் என்று அர்த்தம். பூசணிப்பூவுடன் கண்ணுப்பீளை செடியையும் வைத்தால் பெண்ணோடு ஒரு பையனும் இருக்கிறான், பெண் கேட்க வருகிறவர்களும் பெண் கொடுக்க வருகிறவர்களும் தாராளமாக வரலாமென்று அர்த்தம்.

தங்கள் வாசலில் ஒரு பூசணிப்பூவை மட்டும் வைப்பதில் பரசுராமுவுக்கும் அவர் மனைவி ராசம்மாவுக்கும் ரொம்ப வருத்தம். பூசணிப்பூவை வைத்ததுபோல் கண்ணுப்பீளை செடியையும் வைக்க ஒரு ஆண்பிள்ளை பிறக்கவில்லையே என்று இருவருமே மிகவும் கவலைப்பட்டார்கள். ஆனாலும், பிள்ளையே இல்லை என்று சொல்வதற்கு இல்லாமல் ஒரு பெண்ணாக மயிலரசி பிறந்தாளே என்று திருப்திப்பட்டுக்கொண்டார்கள். மயிலரசியைக் கண்ணும் பொண்ணுமாக வளர்த்தார்கள். மயிலரசியும் அழகுச் சிலையாக வளர்ந்தாள். தன் அய்யாவோடு சரிக்குச் சரியாய் விவசாய வேலைகளைச் செய்தாள். வீட்டிலிருந்த பசுக்களையும் கன்றுகளையும் தன் தம்பிபோல் பார்த்துக்கொண்டாள்.

ஆடி மாத விதைப்புக்காக நிலமெல்லாம் உழுது புரண்டு கிடந்தது. பரசுராமு அன்றைய தினம் உழுது களைத்துவிட்டுப் படுத்தார். மறுநாள் பூவரச மரத்துக்கு நாலு குடம் தண்ணி எடுத்து ஊத்தலாம் என்று போனவருக்கு, ‘திக்’கென்றிருந்தது.

இரண்டு பூவரச மரங்களில் ஒன்றைக் காணோம். ஒரு மரம் மட்டும் தன்னந்வுதனியாக நின்றுகொண்டிருந்தது. பரசுராமுவுக்குத் தன் உயிரையே பிடுங்கிப்போட்டது போலிருந்தது. அப்படியே துடித்துப்போனார். ஒரு மரத்தைக் காணாததால் தன் மகளின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்று பயந்தார். தன் ஆசை மகளுக்காக இந்தப் பூவரச மரத்தைத் தான் வளர்ப்பது தெரிந்தும் யார் இந்த நாச வேலையைச் செய்திருப்பார் என்று நினைத்து நினைத்துப் பார்த்தார்.

அத்துடன் அப்படியான பகைக்காரர்கள் தனக்கு இருக்கிறார்களா என்றும் யோசித்துப் பார்த்தார். ஆனால், அப்படியொரு பகைக்காரர் இருப்பதாக அவருக்குத் தோன்றவே இல்லை. உயிர்ப் புலன்கள் எல்லாம் ஒடுங்கியதுபோல் அவரால் நிற்கவே முடியவில்லை. அப்படியே கால்கள் துவள அங்கிருந்த மற்றொரு பூவரச மரத்தில் சாய்ந்துவிட்டார்.

பரசுராமுவின் வேதனை

தண்ணீர் ஊற்றுவதற்காகப் பிஞ்சைக்குப் போனவர் இன்னும் வரக் காணோமே, என்ன காரணம், பிஞ்சை வெள்ளாமைக்குள் யாரும் ஆட்டைக் கீட்டை விட்டிருப்பார்களோ இல்லை வரப்பு வாய்க்கா சண்டை என்று ஏதாவது வந்திருக்குமோ என்று நினைத்தவாறு ராசம்மா, மகள் மயிலரசியைத் துணைக்குக் கூப்பிட்டுக்கொண்டு வந்தாள். பிஞ்சையை வந்து பார்த்ததும் அவளுக்கும் ‘குபீ’ரென்றது. ஒரு பூவரச மரத்தைக் காணவில்லை.

அந்த மரம் இருந்த இடம் காட்டெருமைகளும் பன்றிகளும் தோண்டிய இடமாகச் சிதைந்து கிடந்தது. அவள் புருஷன், இன்னொரு மரத்தின் தூரில் வேர்த்து விறுவிறுத்துச் சரிந்து கிடந்தார். மயிலரசி தன் அய்யாவைக் கண்டுவிட்டு அவர் அருகில் சென்று ‘அய்யா, அய்யா’ என்று கூப்பிட்டாள். அவர் அசையவே இல்லை. அங்கே கிடந்த கலயத்தை எடுத்துக்கொண்டு கிணற்றில் இறங்கித் தண்ணீரை மோந்து கொண்டுவந்தவள் அவர் முகத்தில் ஒரு கைத்தண்ணியை அள்ளி அடித்தாள். அவர் குலுங்கி முழித்தார்.

ராசம்மா சொன்ன ஆறுதல்

தன் அருகில் பொண்டாட்டியும் மகளும் இருப்பதைப் பார்த்ததும், பேச முடியாமல் மரம் இருந்த இடத்தையே கையால் சைகை செய்து காட்டினார். ராசம்மா சுதாரித்துக்கொண்டாள். தானும் இப்போதைக்கு மரத்தைக் காணவில்லை என்று இடிந்துபோய் நின்றால் புருசனின் புத்தி பேதலித்துவிடும். பிறகு அவரைத் தன்நிலைக்குக் கொண்டுவருவது ரொம்பக் கஷ்டம் என்று நினைத்தவள், அவர் அருகே சென்று ஆறுதலாகப் பேசினாள். “நீரு என்னத்துக்கு இந்த மரம் போனதுக்காவ இம்புட்டுக்கு வருத்தப்படுதீரு.

எவனும் இருட்டுக்குள்ள பூவரச மரமின்னு தெரியாம வேற என்ன மரமோன்னு வெட்டிட்டுப் போயிருப்பான். இதுக்கெதுக்கு இப்படி இடிஞ்சிபோன மாதிரி உட்கார்ந்திருக்கீரு? ஒரு மரம் போனாப் போவுது. நம்ம கமலக்குழி நெடுவ வெறும் பூவரச மரத்தத்தேன் வச்சிருக்கோம். அதுல ஒரு மரத்த மக கல்யாணத்துக்கு வெட்டிக்கிடுவோம்” என்று ஆற்றித் தேற்றினாள். மகளும் அதுபோலவே, “ஆமாய்யா. அம்மா சொன்னது கணக்காதேன் நடந்திருக்கும். நீரு எந்திரியும். வீட்டுக்குப் போவோம்” என்று அய்யாவின் கைகளைப் பிடித்தாள்.

ஆனாலும், பரசுராமுவுக்கு மனசே தாளவில்லை. இந்த மரம் போனத நினைச்சா ‘சமணத்தடை’யாவில்ல (கெட்ட நேரம்) இருக்கு. இதனால நம்ம மவளுக்கு என்னமும் ஆயிருமோ என்று எதிரிலிருந்த மகளை ஏறிட்டு நோக்கினார். அவர் விழிகள் நிறையக் கண்ணீர் தேங்கியிருந்ததால், அந்தக் கண்ணீரில் மயிலரசி ஒற்றை மூக்குத்தட்டோடு மகாலட்சுமி மாதிரி மிதந்துகொண்டிருந்தாள். வாய் விட்டு அழப்போனவர் மகளும் மனைவியும் பக்கத்தில் இருந்ததால் அழுகையை அப்படியே தனக்குள் அடக்கிக் கொண்டார்.

அவர் நெஞ்சம் மட்டும் பொருமி விம்மியது. மகளைத் தன் உயிருக்குள் அடக்கிவிடுவதுபோல் அவள் கரங்களை இறுகப்பிடித்தார். தந்தையின் பாசம் மகளுக்கும் தெரிந்தது. அந்தப் பாசத்தில் நெகிழ்ந்து கரைந்துபோன மயிலரசியால் எதுவுமே பேச முடியவில்லை. தான் அழுதால் அய்யாவும் அம்மாவும் அழுதுவிடுவார்கள் என்பதால் அடிவயிற்றிலிருந்து எழுந்த அழுகையை அடக்கினாள்.

வடிவேலுவின் அதிர்ச்சி

அவர்கள் உட்கார்ந்திருந்த ஒற்றைப் பூவரசு மரம் காற்றுக்குச் சடசடத்தது. சந்தனக் குவியலாய் அதன் பூக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் விழ இவ்வளவு நேரமும் மரத்தில் அடைந்திருந்த ‘நாடவந்தான் குருவிகள்’ படையாய்க் கிளம்பி மேற்குத் திக்கம் நோக்கிப் பறந்தன.

உழவுக்காக வந்த பரசுராமுவுவின் பக்கத்துப் பிஞ்சைக்காரரான வடிவேலு, மரம் வெட்டிக் கிடந்த குழியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். “என்ன பரசு, மவளுக்காக ஆசை ஆசையா வளர்த்த பூவரச மரத்தை எவனோ வெட்டிட்டுப் போயிட்டான் போலுக்கே” என்று கேட்டதும் பரசுராமு அவரைப் பரிதாபமாய்ப் பார்த்தார். அவரால் எதுவும் பேச முடியவில்லை. கணவனுக்காக ராசம்மாதான் பேசினாள். அவளுக்கு வடிவேல், அண்ணன் முறை வேண்டும். “ஆமாண்ணே, எந்தப் பாவிப்பயலோ ராவோடு ராவா வந்து வெட்டிட்டுப் போயிருக்கான்” என்றதும் வடிவேலு கோபத்துடன் துள்ளினார்.

“மச்சான் இதை சும்மா விடக் கூடாது மச்சான். மகளுக்காக வளர்த்த சீர்வரிசை மரத்தவில்ல வெட்டிட்டுப் போயிருக்கான். அவனைக் கண்டுபிடிச்சி சரியான அவராதம் போடணும். இல்லாட்டா ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கணும். அப்பதேன் மத்தவங்களுக்குப் பயமிருக்கும். நாம பேசாம இருந்துட்டமின்னா இன்னைக்கு உம்ம மவளுக்காக வளர்த்த மரத்தை வெட்டிட்டுப் போனவன் நாளைக்கு எம் பொண்ணுக்காவ வளர்த்த மரத்தையும் வெட்டிட்டுப் போவ மாட்டான்னு என்ன நிச்சயம்? அதனால் நீரு ஊரு கூட்டம் போடாட்டாலும் நானு உமக்காவ ஊரு கூட்டத்தைக் கூட்டத்தேன் போறேன். இந்எத அநியாயத்தைக் கேக்கத்தேன் போறேன்” என்று தெறித்துக் குதித்தார்.

பரசுராமுவுக்கு மரம் போன கவலையைவிட இப்படி அபசகுணமாக நடந்ததால் மகளின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்றுதான் அவர் நொந்து நொறுங்கிக் கிடந்தார். பாசத்தோடு மகளின் தலையைத் தடவிக்கொடுத்தார். மகளை அப்படியே தனக்குள் அணைத்துக் கொண்டு அவள் உயிரைத் தன் உயிரோடு பத்திரப்படுத்திக்கொண்டு பாதுகாக்க வேண்டும் போலிருந்தது.

“வாய்யா வீட்டுக்குப் போவோம்” என்று மகள் கூப்பிட, “மச்சான் நீரு வீட்டுக்குப் போரும். இந்தா நானு நாலு ‘தாளடிய’ மட்டும் உழுதுட்டு வீட்டுக்கு வந்திருதேன். அதோட நம்ம பிஞ்சையச் சுத்தி கெடை போட்டவக நிறைய இருக்காக. அவுகளுக்குத் தெரியாம எவனும் இந்த மரத்த வெட்டிட்டுப் போயிருக்க முடியாது. நானு அதையும் விசாரிச்சிட்டு வாரேன்” என்றார் வடிவேலு.

(நிலா உதிக்கும்)
- பாரததேவி, எழுத்தாளர்.
தொடர்புக்கு: arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x