Published : 22 Mar 2020 07:18 AM
Last Updated : 22 Mar 2020 07:18 AM

வாசிப்பை நேசிப்போம்: நூலகம் என்னும் அற்புத உலகம்

வாசிப்புப் பழக்கத்தை அறிமுகப்படுத்திய என் அப்பாவுக்கே தெரியாது, எத்தனையோ நாட்கள் பத்தாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் ‘பொன்னியின் செல்வ’னை நான் மறைத்துப் படித்தது. ஆசிரியப் பயிற்சியா நூலகப் படிப்பா என்ற கேள்வி எழுந்தபோது நான் நூலகத்தையே தேர்ந்தெடுத்தேன். எனது நூலகமும் அதில் இருக்கும் புத்தகங்களும் எனக்கென ஒரு நிறை வான உலகைத் தினம் தினம் உருவாக்கு கின்றன.

பாலகுமாரனின் ஒவ்வொரு கதை மாந்தரும் படித்து முடித்துப் பல நாட்கள் கழிந்த பிறகும் என்னுடன் பேசிக்கொண்டு இருப்பார்கள். குறிப்பாக ‘தனிமைத் தவம்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ போன்றவை என்னைச் சிறையிலிட்ட படைப்புகளில் சில. நூலகராக இருப்பதில் பெருமைகொள்கிறேன். நூலகத்தில் எத்தனை பேர் இருந்தாலும் இங்கே நிலவும் அமைதியும் புத்தகங்களுக்குள் தங்களைப் புதைத்துக் கொள்ளும் குட்டி வாசகர்களும் அவர்களின் கண்களுக்குள்ளே வந்துபோகும் அனைத் துலகக் கதைமாந்தர்களுமாகக் கழிகின்றன என் நாட்கள்.

- தேவி பிரதாப், நூலகர், ரோஸ்மேரி பள்ளி, பாளையங்கோட்டை.


அந்த இரண்டு நூல்கள்

நான் அரசு வங்கியில் பணியாற்றி வருகிறேன். வேலைக்குச் செல்லும் இடம் வீட்டிலிருந்து இரண்டு மணி நேரப் பயண தொலைவில் உள்ளது. நான்கு மணி நேரப் பயணத்தின் பெரும் பகுதியைப் புத்தகங்கள் ஆக்கிரமித்துவிடும். நா.பார்த்தசாரதி எழுதிய ‘நித்திலவல்லி’, ‘பாண்டிமாதேவி’ போன்ற புத்தகங்களை வாசிக்கும்போது, நீண்ட நேரப் பயணம் இனிதானதாக மாறிவிடும். அந்தப் புத்தகங்களில் இருக்கும் ஒவ்வொரு வர்ணனையும் நம்மை ஈர்த்துவிடும். போர்க் காட்சிகள், காதல் காட்சிகள், இயற்கை வர்ணனை என்று ஒவ்வொரு பகுதியும் சிறப்பாக இருக்கும்.

பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை நடத்திவரும் சுதா மூர்த்தி எழுதிய இரண்டு புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்பு என் தாத்தாவின் மூலம் கிடைத்தது. ‘வெண்ணிலாவே நீ சிரிக்காயோ’ என்ற புத்தகம், இயல், இசை, நாடகம் என்று அழகான சோலையாக இருந்த வெண்ணிலா என்ற இளம் பெண்ணின் வாழ்க்கையைப் பற்றியது. அழகு தேவதையாக வலம்வந்த வெண்ணிலாவுக்கு வெண்புள்ளி என்ற தோல் நோய் வந்த பிறகு நடக்கும் திருப்பங்கள்தாம் இந்த நாவலின் மையம். தன்னைக் காதலித்துக் கரம்பிடித்த கணவனே ஒதுக்கும் வேதனை ஒருபுறம், புகுந்த வீட்டின் கொடுமை ஒருபுறம், பிறந்த வீட்டில் அனுபவிக்கும் வேதனை ஒருபுறம் என்று மும்முனைப் போராட்டத்தில் இருக்கிறாள். அவள் வாழ்க்கையை இந்த நோய் புரட்டிப் போடுகிறது.

தற்கொலைக்கு முயலும் அவளை ஏதோவொரு சக்தி தடுக்க, அதன்பின் அவள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நம் உள்ளத்தில் மிகவும் நெருக்கமான இடத்தைப் பிடிக்கிறது. பெண்களின் தன்னம்பிக்கைக்கு இந்த நாவலும் சான்று.

இரண்டாம் புத்தகம் ‘அனுபவங்கள் தந்த பாடங்கள்’. தான் சந்திந்த ஒவ்வொரு மனிதரிடம் இருந்தும் அவர் அறிந்துகொண்ட அனுபவங்களின் அழகான தொகுப்பு இந்நூல். ஒவ்வோர் அனுபவமும் ஒவ்வொரு பாடத்தைக் கற்றுத்தருகின்றன.

- சுந்தரி, தூத்துக்குடி.

அக்காவால் ஆன நன்மை

நான் தொடக்கப் பள்ளியில் படித்தபோது என் அக்கா வார இதழ்களையும் நாவல்களையும் படிப்பதைப் பார்த்து அவளைப் போலவே படிக்கத் தொடங்கினேன். கண்ணன், கல்கி, விகடன், கல்கண்டு, அம்புலிமாமா எனப் பாடப் புத்தகங்களுடன் அவற்றையும் ஆர்வமாய்ப் படித்தேன். கோடை விடுமுறையில் புத்தகம் வாசிப்பது முழுநேரப் பணியாகிவிட்டது. புத்தகம் வாசிக்காத நாட்களில் ஏதோ ஒன்று குறைந்ததைப் போல் மனத்தில் ஒரு நெருடல் தோன்றும்.

அதனால், எதையும் விடாமல் தேடித் தேடி நிறையப் புத்தகங்களை வாசித்தேன். திரைப்படம் தொடர்பான புத்தகங்களுக்கு வீட்டில் இடமில்லை. நூலகத்துக்குச் சென்று லக்ஷ்மி, இந்துமதி, ராஜம் கிருஷ்ணன், கல்கி போன்றோரின் புத்தகங்களை எடுத்துவருவேன்.

இளம் வயதிலேயே புத்தகங்களைப் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டதால் இன்றுவரை அப்பழக்கம் தொடர்கிறது. கடை கடையாக ஏறி இறங்கி வார, மாத இதழ்கள் வாங்குவதற்குச் சிரமப்பட்ட என் கணவர் சந்தா கட்டிவிடுகிறார். முடிந்தவரை துணுக்குகள், தகவல்கள், குறுக்கெழுத்துப் போட்டிகள் போன்றவற்றைப் பத்திரிகைகளுக்கு விடாமல் எழுதி அனுப்புவேன். நம்மையறியாமல் நமக்குள்ளே நல்ல மாற்றங்களை விளைவிக்கும் வாசிப்புப் பழக்கும் போற்றுதலுக்குரியது.

நம் சிந்தனை, வாழும் முறை, இரக்கச் சிந்தனை, மனித நேயம், நியாய உணர்வு, பெருந்தன்மை, தன்னம்பிக்கை, உறுதி, துணிவு போன்றவை அனைத்தும் தொடர் வாசிப்பினால் கிடைக்கும் நன்மைகள். நிறையப் படிப்பதால் பொது அறிவும் தகவல் அறியும் திறனும் அதிகரிக்கின்றன. வளமான கற்பனையும் பெருகும். இறுதிவரை படித்துக்கொண்டே வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்.

- அரு. லெட்சுமி, வெள்ளலூர் அஞ்சல், கோவை.

எழுபதிலும் இடைவிடாத வாசிப்பு

ஆறாம் வகுப்புப் படித்தபோதே கல்கி, ஆனந்த விகடன், தீபம், கணையாழி, கல்கண்டு, நாளிதழ்கள் போன்றவற்றை எல்லாம் வாசிக்கத் தொடங்கிவிட்டேன். எந்த ஊருக்கு, யார் வீட்டுக்குச் சென்றாலும் வாசிப்பதற்கு ஏதாவது புத்தகம் இருக்கிறதா என்று பார்ப்பேன். கிடைத்தால் வாசிக்கத் தொடங்கிவிடுவேன். உறவினர்களோ “இவ ஒருத்தி எப்பப் பாரு புத்தகமும் கையுமா இருக்கா. வந்த இடத்தில் எல்லோரும் சேர்ந்து பேசிச் சிரிக்கறதை விட்டுட்டு என்ன படிப்பு வேண்டியிருக்கு” என்பார்கள். பயணங்களில்கூடப் படிப்பேன். என் சகோதரனும் நண்பர்களும் சேர்ந்து ‘பொதிகைத் தமிழ் இலக்கியப் பேரவை’ என்ற அமைப்பை நடத்தினார்கள். அதில் பேசுவதற்காக திருக்குறளார் முனுசாமி, தீபம் நா.பார்த்தசாரதி, வல்லிக்கண்ணன், செங்கோட்டை ஜனார்த்தனன் ஆகியோர் எங்கள் வீட்டில் தங்கியிருக்கின்றனர்.

கடையில் பொட்டலம் மடித்துக் கொடுக்கும் காகிதத் தைக்கூட விடமாட்டேன். கவிஞர் வைரமுத்துவின் ‘தமிழாற்றுப்படை’, ‘கருவாச்சி காவியம்’, ஆ.ராசாவின், ‘அவிழும் உண்மைகள்’, கே.ஏ. குணசேகரனின் ‘வடு’, சி.ஏ. பாலனின் ‘தூக்குமர நிழலில்’, ‘தமிழகத்தில் தேவதாசிகள்’, பொ.வேல்சாமியின் ‘கோவில், நிலம் ‘சாதி’, பேரா. தொ.பரமசிவனின் ‘இந்து தேசியம்’, ‘செவ்வி’, டாக்டர் அம்பேத்கரின் ‘இந்தியாவில் சாதிகள்’, கலைஞரின் ‘பொன்னர் சங்கர்’, ‘தாய்’, ‘குறளோவியம்’, பெரியாரின் ‘இன்றும் என்றும்’ போன்ற பல நூல்களை வாசித்திருக்கிறேன்.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’, ‘பொய்மான்கரடு’, ‘தியாக பூமி’ போன்றவற்றை வாசித்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். லக்ஷ்மி, ஜெயகாந்தன், சாண்டில்யன், மணியன், தமிழ்வாணன், சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், சிவசங்கரி, வண்ணதாசன், கண்ணதாசன் ஆகியோரையும் வாசித்திருக்கிறேன்.

காலையில் செய்தித்தாள் வந்தவுடன், “என்ன செய்கிறாய்? வா, படித்துவிட்டு மற்ற வேலையைப் பார்” என என் வாசிப்பை ஊக்குவிப்பார் என் கணவர். எனக்கு எழுபது வயது ஆகிறது. இருந்தபோதும் வாசிப்பே என் மூச்சு.

- தீ. அம்மணி தீத்தாரப்பன், பெருமாள்புரம், திருநெல்வேலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x