Published : 22 Mar 2020 07:18 AM
Last Updated : 22 Mar 2020 07:18 AM

வட்டத்துக்கு வெளியே: அர்த்தமுள்ள கொண்டாட்டம்

சாந்தி - நளினா பிரசிதா

வட்டத்துக்கு வெளியேக்ருஷ்ணிவீட்டிலும் வெளியிலும் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் இருப்பைப் பெருமிதப்படுத்தும் வகையில் மார்ச் 8 அன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பலரும் தங்களுக்குத் தெரிந்த வகையில் அந்த நாளைச் சிறப்பிக்கின்றனர்.

கொண்டாட்டங்கள் எல்லாம் அவற்றின் நோக்கத்தை நிறைவேற்றுவதில்லை என்றாலும் அவ்வப்போது சில திருப்பங்கள் நிகழாமல் இல்லை. மார்ச் 8 அன்று இரண்டு பெண் ஆளுமைகளைச் செய்தி வாசிக்க வைத்து மகளிர் தினக் கொண்டாட்டத்தை அர்த்தப்பூர்வமாக்கியது‘நியூஸ் 7’ தொலைக்காட்சி. சமூகத்தின் புறக்கணிப்புக்கு ஆளாகிற இரு தரப்புப் பெண்களைத் தேர்ந்தெடுத்ததற்காகவே அவர்களின் இந்த முயற்சியைப் பாராட்டலாம். அமில வீச்சுக்கு ஆளான சாந்தி, திருநங்கை நளினா பிரசிதா ஆகிய இருவரும்தான் அந்தப் பெருமைக்குரியவர்கள்.

அமில வீச்சால் வீழ்த்த முடியாது

சாந்திக்குப் பூர்விகம் சென்னை. இந்தியக் குடும்பங்களில் கணவன், மனைவி சண்டை இயல்பானதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான். ஆனால், தன் பெற்றோரின் சண்டை சாந்தியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியது. 2005-ல் கல்லூரியில் அவர் முதலாண்டு படித்துக்கொண்டிருந்தார். உறங்கிக்கொண்டிருந்த தன் அம்மா மீது சாந்தியின் அப்பா அமிலத்தை ஊற்றினார். அது அம்மாவின் பக்கத்தில் படுத்திருந்த சாந்தியின் மீதும் பட்டது. சாந்தியின் அம்மா இரண்டு கண்களிலும் பார்வையை இழக்க, சாந்திக்கோ வாழ்க்கை நரகமானது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆறு மாத சிகிச்சை முடிந்து திரும்பிய அம்மாவுக்கும் மகளுக்கும் வாழ்க்கை முள்பாதையை விரித்துக் காத்திருந்தது. ஆனால், அதையும் உறுதியுடன் எதிர்நின்று வென்றார்கள்.

வறண்ட பாலையில் வீசிய தென்றலாகக் காதல் வந்து சாந்தியின் மனக் கதவைத் தட்டியது. அதன் பலனாக இரண்டு குழந்தைகள் பிறந்தனர். ஆனால், அந்த வசந்தம் அவ்வளவு உவப்பானதாக இல்லை என்பதைப் பின்னாளில் சாந்தி புரிந்துகொண்டார். இரண்டு மகன்கள். மூத்தவன் எட்டாம் வகுப்பும் இளையவன் ஆறாம் வகுப்பும் படித்துவருகின்றனர். தற்போது இவர்கள் பி.சி.வி.சி அமைப்பின் பராமரிப்பில் இருக்கிறார். அங்கேயே கணக்காளராகப் பணிபுரிந்துவந்த சாந்தி, கழுத்து வலி காரணமாக ஓய்வில் இருக்கிறார்.

தன்னை வீழ்த்திவிட நினைத்த வாழ்க்கையோடு தினம் தினம் போராடிக்கொண்டிருக்கும் சாந்திக்குப் புத்துணர்வு அளித்திருக்கிறது ‘நியூஸ் 7’ தொலைக்காட்சியில் செய்தி வாசித்த அனுபவம். “மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதமா என்னை நியூஸ் வாசிக்கக் கூப்பிட்டாங்க. டி.வி.யில் பார்க்கும்போது நியூஸ் வாசிக்கிறவங்க மட்டும்தான் தெரியறாங்க. இங்கே வந்து பார்த்தப்போதான் இதுக்குப் பின்னால நிறையப் பேரோட உழைப்பு இருக்குன்னு தெரியவந்தது. ஒரு வாரம் பயிற்சி கொடுத்தாங்க. செய்தியெல்லாம் வாசித்துப் பழக்கம் இல்லாததால ஆரம்பத்துல கொஞ்சம் தடுமாற்றமா இருந்தது. அப்புறம் பயம் விலகிடுச்சு” என்கிறார் சாந்தி. மார்ச் 8 அன்று மதியம் 12 மணிக்கு நேரலையில் செய்தி வாசித்த பிறகு சாந்தி ஊரறிந்த முகமாகிவிட்டார்.

அழகு முக்கியமல்ல

சென்னை லயோலா கல்லூரியில் மூன்றாமாண்டு காட்சித் தொடர்பியல் படித்துவரும் திருநங்கை நளினா பிரசிதாவும் மகளிர் தினத்தன்று நேரலையில் செய்தி வாசித்தார். லயோலா கல்லூரியின் மாணவர் பேரவை இணைச் செயலாளராக இருக்கும் இவர், ‘நியூஸ் 7’ தொலைக்காட்சியில் மாணவப் பயிற்சியாளராக இருக்கிறார்.

“பாடமாகப் படிப்பதைச் செயல்படுத்தியது மகிழ்ச்சியாக இருந்தது. நியூஸ் 7 குழுவினரோடு இணைந்து செயல்பட்டதால் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். இங்கே பயிற்சி எடுப்பதும் பயனுள்ளதாக இருக்கிறது. என்னை டி.வி.யில் பார்த்த நண்பர்கள் நான் அங்கே வேலைக்குச் சேர்ந்துவிட்டதாக நினைத்தார்கள். பலரும் பாராட்டினார்கள். காட்சி ஊடகத்தில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற என் விருப்பத்துக்கு இந்த வாய்ப்பு தொடக்கப் புள்ளி” என்கிறார் நளினா.

நடிகைகளின் பேட்டி, சிறப்புத் திரைப்படங்கள் என்பன போன்ற மகளிர் தினக் கொண்டாட்டங்களுக்கு நடுவில் இப்படியொரு புது முயற்சிக்குப் பார்வையாளர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. “எப்போதும் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்று எங்கள் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியன் சொல்வார். மகளிர் தினத்தைச் சிறப்பிக்க அப்படியொரு முயற்சியாகத்தான் இதை எங்கள் ஆசிரியர் குழு முன்மொழிந்தது.

செய்தி வாசிக்க முக அழகு முக்கியம் என்ற கற்பிதத்தைப் பொய்யாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட சாந்தியைச் செய்தி வாசிக்கத் தேர்ந்தெடுத்தோம். சமூகத்தின் புறக்கணிப்புக்கு ஆளாகும் திருநங்கைகளைக் கவுரவிக்கும் விதமாக நளினாவைச் செய்தி வாசிக்க வைத்தோம். இந்த முயற்சிக்குப் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதைத் தொடரலாம் என நினைத்திருக்கிறோம்” என்கிறார் ‘நியூஸ் 7’ தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் கோசல்ராம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x