Published : 22 Mar 2020 07:18 AM
Last Updated : 22 Mar 2020 07:18 AM

தெய்வமே சாட்சி 09: நோன்பிருந்தால் பாவம் கழியுமா?

நாட்டுப்புறத் தெய்வங்களில் பல வகைகள் உண்டு. குடும்ப தெய்வங்கள், குல தெய்வங்கள், ஊர்த் தெய்வங்கள், சாதிக்குரிய தெய்வங்கள், வட்டாரத்துக்குரிய தெய்வங்கள், தமிழகம் முழுதும் அறியப்பட்ட தெய்வங்கள் எனப் பல வகைகள்.

தெய்வமாக எழுப்பப்படுவதிலும் பல வேறுபாடுகள் உண்டு. பீடம் கட்டி வழிபடுவது, சாலையோரம் மூன்றடி உயரம் மட்டுமே இருக்கும் அளவில் ஒரு அறைபோல கட்டி உள்ளே விளக்கேற்றி வழிபடுதல், பெரியதாகக் கோயில் கட்டி வழிபடுவது, மரத்தில் சிவப்புத் துணி கட்டி வழிபடுவது என்று அத்தெய்வத்தை எழுப்புகிற மக்களின் பொருளாதார வசதிக்கேற்ப நாட்டுப்புறத் தெய்வங்களின் அமைப்பு வேறுபடும்.

பூசத்தாயின் கதை

இப்படியான வகைகளில் ‘பாடை எழுப்பப்பட்ட தெய்வங்கள்’, ‘பாடெழுப்பி விட்டிருக்கு’ என்று மக்கள் தம் பேச்சுவழக்கில் குறிப்பிடும் சாமிகளும் அடக்கம். அவை திருநெல்வேலி மாவட்டம் (இன்று தென்காசி மாவட்டம்) சங்கரன்கோவில் பகுதியில் நிறையக் காணப்படுகின்றன. பாடெழுப்புதல் என்றால் வெறும் கல் அல்லது கல்லில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்ட உருவத்துடன் கூடிய கல். அதை இறந்த இடத்தில் அல்லது சாமி இறங்கிக் குறி சொல்லும் இடத்தில் நட்டுவைத்து வழிபடுவது. சங்கரன்கோவில் ஒன்றியம் புன்னை வனம் கிராமத்தில் வணங்கப்படும் பல பாடெழுப்பின தெய்வங்களில் ஒன்று ‘பூசத்தாய்’.

1960-கள் காலகட்டத்தில் வாழ்ந்த பூசத்தாய் என்கிற பெண்ணை வெள்ளைச்சாமி என்பவருக்குக் கல்யாணம் செய்து கொடுத்தனர். ஒரு குழந்தையும் பிறந்தது. சீக்கிரமே அவர்களுக்குள் ஏதோ சடவு ஆகிவிட்டது. கோபித்துக்கொண்டு பூசத்தாய் கைக்குழந்தையுடன் ஆத்தா வீட்டுக்குப் போய்விட்டாள். போன இடத்தில் குழந்தைக்கு உடம்புக்கு முடியாமல்போய் இறந்துவிடுகிறது. அதையே காரணமாகச் சொல்லி, கணவன் ஊரைக் கூட்டி அவளைத் தீர்த்துவிடச் சொல்கிறான். ஊராரும் பேசித் தீர்த்து (விவாகரத்து) வைக்கிறார்கள். அப்புறம் வெள்ளைச்சாமி வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறான். தனியாளாகிவிட்ட பூசத்தாய் தன் சின்னாத்தா வீட்டுக்குப் போய் தற்கொலை செய்து கொள்கிறாள். அவளுக்குப் பாடை எழுப்பி வணங்கி வருகின்றனர்.

அதே ஊரில் காணப்படும் இன்னொரு பாடெழுப்பின சாமி ‘திருமலை ஆச்சி’. 1960-களில் அந்த ஊரில் வாழ்ந்த திருவுத்தேவர் என்ற எழுபது வயது முதியவருக்குப் பதினைந்து வயதான திருமலையைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். தன் விருப்பத்துக்கு மாறாக நடந்த இத்திருமணத்தால் மனம் உடைந்த திருமலை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள். அவள் விழுந்து செத்த கிணற்றுக்கு அருகில் பாடெழுப்பி விட்டுள்ளனர். சித்திரை மாதம் ‘நயினார் நோன்பு’ அன்று மட்டும் அவளை வழிபடுகின்றனர்.

வள்ளியம்மாளும் அழகம்மாளும்

கணவன் மனைவிக்குள் சண்டை வர, அச்சண்டையில் கீழே தள்ளப்பட்ட வள்ளியம்மாள் அப்படியே இறந்து விடுகிறாள். 1950-ல் இறந்த வள்ளியம்மாளுக்கும் புன்னைவனம் கிராமத்தில் பாடெழுப்பியுள்ளனர். தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த இவரை வைகாசி மாதத்தில் மட்டும் அச்சமூக மக்கள் வழிபடுகின்றனர். இடைப்பட்ட காலத்தில் வணங்குவது கிடையாது. அதே கிராமத்தைச் சேர்ந்த நல்லகண்ணு - வள்ளியம்மாள் தம்பதியின் மகள் லட்சுமியை வெளியூருக்குக் கட்டிக்கொடுத்து அனுப்புகின்றனர். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த இப்பெண் தன் கணவனோடு சண்டை போட்டுக்கொண்டு தாய் வீட்டுக்கு வந்து கிணற்றில் விழுந்து 1985-ல் தற்கொலை செய்துகொண்டாள். இந்தப் பெண்ணைப் பாடெழுப்பி வைகாசி மாதத்தில் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் வணங்குகின்றனர்.

சங்கரன்கோவில் ஒன்றியம் பெரியசாமிபுரத்தில் பாடெழுப்பப்பட்டுள்ள தெய்வம் அழகம்மாள். இப்பெண்ணின் கணவன் மொட்டையன் இவளுடன் சண்டை போட்டு மூத்த மகனை அழைத்துக்கொண்டு தன் ஊரான செம்பநல்லூருக்குச் சென்று விடவே, அழகம்மாள் தன் மற்றொரு கைக்குழந்தையை வயிற்றோடு சேர்த்துக் கட்டிக்கொண்டு கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள். இவள் கணவன் மீதே சாமி வந்து இறங்கி சொன்னபடி ஊருக்கு வடக்கே பாடெழுப்பி விட்டுள்ளனர். அழகம்மாளுக்கும் அவள் குழந்தைக்கும் என இரு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

(இக்கதைகளைச் சொன்னவர்கள்: சா.வள்ளியம்மாள், மூக்கம்மாள், கிருஷ்ணம்மாள், புன்னைவனம். முத்துலட்சுமி, மோகனா. சேகரித்தவர்: எஸ்.பரிமளா)

பெண்களின் சோகக் கல்

அடுக்கடுக்காக இப்படிப்பட்ட கதைகளோடு அவ்வட்டாரம் முழுவதும் பாடெழும்பி நிற்கிறார்கள் பெண்கள். சாதியால் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும் தாழ்த்தப் பட்டவர்களாகவும் இருக்கும் இம்மக்கள் பொருளாதாரரீதியாகப் படுமோசமான வாழ்க்கை நிலையில் இருப்பவர்கள். அதற்காக?

அதற்காகப் பெண்களைக் கொடுமைப் படுத்தாமலும் கொல்லாமலும் கொன்றுவிட்டுக் கும்பிடாமலும் இருக்க முடியுமா என்ன என்று இக்கதைகள் கேள்வி எழுப்புகின்றன. சாதி, மத, வர்க்க வேறுபாடுகளைக் கடந்து, நம் வாழ்வின் ஒவ்வொரு துகளிலும் பெண்ணின் மீதான வன்முறைக்கூறு பொதிந்திருக்கிறது என்பதன் சாட்சியாகவே இத்தெய்வங்களை நாம் பார்க்க வேண்டும்.

‘நடுகல் பீலி சூட்டி நார் அரி சிறுகலத்து உகுப்பவும்’
- என்று புறநானூற்றிலும் இன்னும் சில சங்கப் பாடல்களிலும்

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்ன முன்நின்று கல்நின் றவர்
- என்று திருக்குறளிலும் நடுகல் வழிபாடு குறித்துக் கூறப்பட்டுள்ளது.

போர்க்களத்தில் உயிர்ப்பலி ஆன வீரர்கள் நினைவாகக் கல் நாட்டுவது தமிழர் மரபு. நடுகல் நாட்டும் வழக்கம் குறித்துத் தொல்காப்பியமும் பேசியுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இந்தப் பாடை எழுப்பும் வழக்கத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால், இது வீரயுகத்தின் வீரக்கல் அல்ல. சோக யுகத்தின் சோகக்கல்.

ஒரு வரியில் முடியும் வாழ்க்கை

கணவனோடு சண்டை, கோபித்துக்கொண்டு தாய் வீடு வந்து தூக்கிட்டுக்கொள்வது என்கிற கதை தொடர்ந்துகொண்டிருக்கிறது. வாழப்போன இடத்தில் சாகாமல், பிறந்த மண்ணில் வந்து சாகணும் என்றுதான் பெண்கள் நினைக்கிறார்கள். பெண்களின் வாழ்க்கையில் ஒப்பீட்டளவில் அவர்கள் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் வாழும் காலம் பிறந்த வீட்டில் வாழும் காலம்தான். ஆகவேதான் அவர்கள் மனம் மீண்டும் மீண்டும் தாய் வீட்டை நாடுகிறது.

மக்களிடம் இந்தக் கதைகள் ஒரு வரியாக மட்டுமே எஞ்சி நிற்பதையும் இக்கதைகளின் வழி பார்க்க முடிகிறது. “70 வயசுக் கிழவனுக்குக் கெட்டி வச்சதுனால அவ கிணத்துல விழுந்து செத்தா”. அவ்வளவுதான் கதை. நீண்ட நெடிய மனித குல வரலாற்றில் நம் பெண்களின் வாழ்வு இப்படி ஒற்றை வரியில் முடிந்துபோகிறது. இந்த ஒற்றை வரியும் இல்லாமல் போன பெண் கதைகள் எத்தனையோ?

சித்திரை மாத ‘நயினார் நோன்பு’டன் இவ்வழிபாட்டை இணைக்கும் போக்கு பரவலாக உள்ளது. எமதர்மனின் ‘கணக்கப்பிள்ளை’யான சித்திரகுப்த நயினார்தானே பாவ புண்ணியக் கணக்கை எழுதுவார் என்று சொல்வார்கள். பெண்ணைக் கொன்ற பாவத்தைத் தொலைக்க இத்தெய்வங்களின் வழிபாட்டுடன் மக்கள் நயினார் நோன்பையும் பின்னர் இணைக்கின்றனர். அந்நாளில் விரதம் இருந்து பாட்டுப்பாடிப் பாவம் கழிக்கின்றனர். பெருந்தெய்வ வழிபாட்டுடன் இச்சிறுதெய்வ வழிபாடு இணைகிற புள்ளிகளில் இதுவும் ஒன்று.

பெண்களின் சாவுக்குக் காரணமாக வாழாமல், பெண்களைச் சந்தோசமாக வாழ அனுமதிக்கும் மனநிலையுடன் காலம் முழுவதும் நீங்கள் வாழ்ந்து விடலாமே? எதற்காகப் பாவத்தைச் சுமந்து வாழ்கிறீர்கள் என்கிற கேள்விகள் இக்கற்சிலைகளில் உறைந்து நிற்கின்றன.

(தேடல் தொடரும்)
- ச.தமிழ்ச்செல்வன், எழுத்தாளர்
தொடர்புக்கு:tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x