Published : 21 Mar 2020 11:19 AM
Last Updated : 21 Mar 2020 11:19 AM

மார்ச் 14: கார்ல் மார்க்ஸ் நினைவு நாள் 02 - பொதுவுடமை இயக்கங்களின் முன்நிற்கும் கடமை

நக்கீரன்

மார்க்ஸிய சூழலியல்

விளாடிமிர் லெனின் மறைவுக்குப் பின்னரான சோவியத் ஒன்றியத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் பெருமளவு நசுக்கப்பட்டது. ஒருகட்டத்தில் சபோவெட்னிகி திட்டமும் ரத்து செய்யப்பட்டது. பொருளாதாரக் கட்டமைப்பை நோக்கி நாடு கறாராக நகர்ந்தது. முதலாளித்துவ நாடுகளை உற்பத்தியில் வெல்ல வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இயற்கைவளப் பாதுகாப்பு இயக்கம் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டது.

ஆனால், அதற்கான விலை பின்னர் கொடுக்கப்பட்டது. சோவியத் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட தொடர்ச்சியான வீழ்ச்சிக்கும், 1930-களில் தொடங்கிய தேக்கத்துக்கும் உயிரின வாழ்க்கைச் சூழல் சார்ந்த காரணிகள் பெரும் பங்காற்றின என்கிறார் பெல்லமி ஃபாஸ்டர்.

பேரிழப்புப் பாடங்கள்

பொருளாதாரத்தை மட்டுமே மையமாகக் கொண்டதால் சோசலிச உலகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்புகளுள் ஒன்றாக நிக்கோலாய் வாவிலோவின் பணியைச் சுட்டலாம். உலகின் பன்னிரண்டு விதை மையங்களைக் கண்டறிந்த அறிஞர் அவர். அதனால் ‘உயிர்ப் பன்மையின் தந்தை’ என்று இன்றும் போற்றப்படுபவர்.

உலகின் பல பகுதிகளிலிருந்தும் திரட்டிய விதைகளைக்கொண்டு ஒரு மாபெரும் விதைக் காப்பகத்தை சோவியத்தில் அவர் உருவாக்கினார். லெனினுடைய மறைவுக்குப் பிறகு அரசியல் காரணங்களுக்காக அவர் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு மரணமடைந்தார். அவர் உருவாக்கிப் பாதுகாத்த சோவியத்தின் விதைக் காப்பகமும் சிதைந்துவிட்டது.

அதன் எதிர்விளைவாக இன்று முதலாளித்துவ அமெரிக்காவின் கையில் உலகின் மூலவிதைகள் அனைத்தும் சிக்கிவிட்டன. அலாஸ்காவில் அமைந்துள்ள விதைகள் காப்பக மையத்தில், அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மாற்று அமைப்பு இல்லாததால் விதைகளின் முற்றுரிமை அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. இன்றைக்கு, ‘மரபீனி மாற்ற விதைகள்’ என்ற பெயரில் உலக வேளாண்மை, பெருவணிகத்தின் கரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு இதுவே முதன்மைக் காரணம்.

சோவியத் ஒன்றியத்தில் நிகழ்ந்த மோசமான சூழலியல் விபத்துகளான ஏரல் கடல் அழிவும், செர்நோபில் அணு உலைப் பேரழிவும் பாடங்களைக் கற்றுத் தந்துள்ளன. அதனால், இன்று சோசலிசமும் சுற்றுச்சூழலும் நேரடித் தொடர்புடையவை என்கிற புரிந்துணர்வு மீண்டும் உருவாகியுள்ளது. அதனால்தான், ‘பொருளாதாரக் கோட்பாடு என்கிற அளவுடன் மார்க்சியக் கோட்பாட்டைச் சுருக்கக் கூடாது' என்று மைக்கேல் லெபோவிட்ஸ் உள்ளிட்ட மார்க்ஸியப் பொருளாதார அறிஞர்கள் கூறத் தொடங்கியுள்ளனர்.

மார்க்ஸுக்குச் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இருந்ததா?

சமூகமும் அதன் சுற்றுச்சூழலும் ஓர் இயங்கியல் முழுமையாகப் பார்க்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஜெர்மன் தத்துவவியலில் மார்க்ஸும் எங்கெல்ஸும் இவ்வாறு அறிவித்துள்ளனர்: ‘ஆற்றுநீர் என்பது தூயநீரில் வாழும் மீன்களின் சாரம். தொழிற்சாலைக் கழிவும் நீராவிப் படகுகளும் மீன்களின் ஊடகமான தூயநீரைக் கிடைக்காமல் செய்துவிடுகின்றன'.

மனிதர்களின் செயற்பாட்டால் மீன்களின் இருப்பு அந்நியமாவதை இது விளக்குகிறது. மீன்கள் என்பதற்குப் பதிலாக வேறோர் உயிரினத்தையோ ஆற்றுநீர் என்பதற்கு மாற்றாக இயற்கைக் கூறுகளுள் ஒன்றான வானம், நிலம் போன்றவற்றையோ இட்டு நிரப்பலாம். இதில் நவீனச் சூழலியலின் சாரம் இருப்பதைக் காணலாம். அதனால்தான், ‘நவீன முதலாளியச் சூழலியல் மனசாட்சி பிறப்பதற்கு முன்னரே, இயற்கை கொள்ளையிடப்படுவதை மார்க்ஸ் கண்டித்தார்' என்று இத்தாலியப் புவியியல் அறிஞரான மசிமோ குவெய்னி கூறினார்.

அன்றைய மார்க்ஸியர்கள் இதைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தனர். ‘நிலத்திலிருந்து எடுத்ததை நிலத்துக்குத் திருப்பித் தரவேண்டும்' என்ற எங்கெல்ஸின் கூற்றை உள்வாங்கியிருந்த லெனின், மண் வளமிழக்காமல் மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். சூழலியல் சிக்கல்கள் - பாடும் பறவைகளின் மறைவைக் குறித்தும் ரோசா லக்சம்பர்க் எழுதியுள்ளார்.

இயற்கை சார்ந்த பொருள்முதல்வாதக் கோட்பாட்டாளரான நிக்கோலாய் புகாரின், ‘மனித சமூகம் உட்பட எந்தவோர் அமைப்பும் வெற்றிடத்தில் வாழ முடியாது. அது சுற்றுச்சூழலால் சூழப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளவில்லை என்றால், அது இந்த உலகத்துக்கு ஏற்றதாக இருக்காது' என்று இன்னும் தெளிவாக எழுதினார்.

நவீனச் சுற்றுச்சூழல் இயக்கத்தின் தாய் எனக் கருதப்படுபவரும், ‘மௌன வசந்தம்’ என்ற நூலின் வழி முதலாளித்துவ வளர்ச்சியின் அபாயங்களை உலகுக்கு அறிவித்தவருமான ரேச்சல் கார்சனும் ஓர் இடதுசாரிச் சிந்தனையாளர் என்பது பலரும் அறியாதது.

புவியின் உரிமையாளர் அல்ல

ஆனாலும், பிற்கால சோவியத் ஒன்றியத்தில் சோசலிச நாடுகளின் பொருளாதார வளர்ச்சியே, முதலாளித்துவ நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு விடை எனக் கருதப்பட்டதால் சுற்றுச்சூழல் கவனம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அந்த சோவியத் கொள்கையைப் பின்பற்றி வளர்ந்த இந்திய ஒன்றியப் பொதுவுடைமை இயக்கங்களும் அதே பார்வையைக் கொண்டிருந்தன எனலாம். ஆனால், கார்ல் மார்க்ஸ் அவ்வாறு கருதவில்லை. ‘ஒட்டுமொத்தச் சமூகம் அல்லது நாடு அல்லது ஒரே காலத்தில் நிலவும் அனைத்துச் சமூகங்களையும் ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டால்கூட, அவர்கள் இப்புவியின் உரிமையாளர்கள் அல்லர்' என்று அவர் அறிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் சிந்தனைகள் குறித்த மார்க்ஸின் கருத்துகளை மீளாய்வுசெய்யும் பணியில் நவீன மார்க்ஸியச் சிந்தனையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் வெளிவராத மார்க்ஸின் குறிப்புகளை ஆய்வுசெய்யும் கெவின் ஆண்டர்சன், சூழலியல் சிக்கல் குறித்த மார்க்ஸின் கருத்தில் முன்னேற்றத்தைக் காணமுடிகிறது என்கிறார்.

மற்றொரு மார்க்ஸியரான கோஹி சைட்டோ, மார்க்ஸின் சூழலியல் பார்வை பின்னாளில் பெரிதும் முன்னேற்றமடைந்துள்ளது என்கிறார். இவர்கள் இருவரும் எடுத்துக்காட்டுவதுபோல் மார்க்ஸ் இன்னும் சிறிது காலம் வாழ்ந்திருந்தால், அவரது கவனம் தொழில் வளர்ச்சியால் ஏற்படும் சூழலியல் அழிவு குறித்துத் திரும்பியிருக்கும்.

பொதுவுடமை இயக்கங்கள் செய்ய வேண்டியது…

மார்க்ஸியம், அடுத்த படிநிலையான பசுமை மார்க்ஸியம் நோக்கி நகர்வது காலத்தின் கட்டாயம். இயற்கை வளத்தை அழித்தால்தான் மேலும் பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கலாம் என்பது முதலாளித்துவக் கனவு. அதற்காகவாவது, பொதுவுடமை இயக்கங்கள் சூழலியலைக் காக்கும் கடமைக்கு முன்னுரிமை தரவேண்டும்.

பசுமை மார்க்ஸியர்கள் அதற்கு வழிகாட்டுகின்றனர். முதல் கட்டமாக மனிதமையச் சிந்தனையை (anthropogenic) ஒதுக்க வேண்டும். சூழலியலாளர்கள் பின்பற்றும் உயிரிமைய சிந்தனைகூட இப்போது தேவையில்லை. குறைந்த அளவு ஒன்றுக்கொன்று ஆதாரமாக இயங்கும் இணைப்படிமுறை வளர்ச்சி (co-evolution) என்கிற அளவுக்காவது மாறவேண்டும். சார்லஸ் டார்வின் - மார்க்ஸ் இருவரிடமும் வேர்கொண்டிருந்ததும் இதுதான்.

உபரி மதிப்பு என்பது உபரி உழைப்பு நேரத்துடன், மிகையாக உறிஞ்சப்பட்ட இயற்கையும்தான் என்கிற புரிதலே தற்காலத்தின் தேவை. இதைதான், ‘சூழலியல் சிக்கல், மார்க்ஸியர்களிடமிருந்து உற்பத்தி சக்திகள் குறித்த அவர்களது வழமையான கருத்தியலில் அடிப்படை மாறுதலைக் கோருகிறது' என்கிறார் மார்க்ஸியரான மைக்கேல் லோவி. இல்லையென்றால் புவிக்கோளத்தை அடுத்த தலைமுறையின் கையில் பாதுகாப்பாக விட்டு செல்ல வேண்டும் என்று மார்க்ஸியம் கூறுவது வெறும் விருப்பமாக மட்டுமே நின்றுவிடும்.

நிதர்சனம் என்ன?

சூழலியல் சிக்கல்களுக்குத் தனிநபரைப் பொறுப்பாக்கித் திசைதிருப்பும் பணிகளை முதலாளித்துவ அறிஞர்கள் மேற்கொள்கின்றனர். அதனால்தான் குண்டு பல்பிலிருந்து எல்.இ.டி. விளக்குகளுக்கு மாறுதல், மிதிவண்டிப் பயணம், சிக்னலில் வாகன இன்ஜினை நிறுத்துதல், ஆண்டுக்கு ஒருமுறை 10 நிமிட நேரத்துக்கு மின்சாரத்தை நிறுத்துதல் போன்ற பரப்புரைகள் நடக்கின்றன. ஆனால், உண்மையில், புவி வெப்பமாதலுக்குக் காரணமான மூன்றில் இரண்டு பங்கு பசுங்குடில் வாயுக்களை உலகின் 90 முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களே வெளியிட்டுள்ளன.

அத்துடன், மக்கள்தொகைப் பெருக்கமும் சூழலியல் சிக்கல்களுக்குக் காரணமாக முன்வைக்கப்படுகிறது. அதை உண்மையென நம்பும் மனநிலையும் மக்களிடம் உள்ளது. இதன்மூலம், லாப நோக்கிலான முதலாளித்துவ உற்பத்தி நடவடிக்கைளே அதற்கான உண்மைக் காரணம் என்பதை அவர்களால் மறைக்க முடிகிறது. ஆனால், இதற்கு எதிர்வினை, பசுமை மார்க்ஸியச் சிந்தனையாளரான பேரி காமனரிடமிருந்து வருகிறது. அவர் உண்மையைப் போட்டுடைக்கிறார்: ‘சூழலியல் மாசு, பெட் ரூமில் இருந்து உருவாகவில்லை; மாறாக, அது கார்ப்பரேட்களின் போர்டு ரூம்களில் இருந்து உருவாகிறது.'

வீழ்ச்சி நிறுத்தப்படுமா?

மார்க்ஸ் குறிப்பிட்டிருப்பதுபோல் சூழலியல் சீர்கேட்டுக்கு முதலாளித்துவக் கொள்கையே காரணம். ஆகவே, சுற்றுச்சூழல் சிக்கல்களில் பொதுவுடமை இயக்கங்கள் தீவிர முனைப்பு காட்ட வேண்டும். இல்லாவிட்டால் கருத்துமுதல்வாத மரபுவாதிகளும் வலதுசாரிகளும் சூழலியல் துறையைக் கைப்பற்றும் ஆபத்து இருக்கிறது. இதைத் தடுக்கவேண்டிய மாபெரும் பொறுப்பு, பொதுவுடமை இயக்கங்களுக்கு உள்ளது.

‘தற்போதைய நிலை எந்த மாற்றமும் இல்லாமல் தொடருமானால், அடுத்த நூற்றாண்டுக்குள் கழிவுகளை உறிஞ்சிக்கொள்ளும் வரம்பை நமது கோள் எட்டிவிடும். அதன் விளைவாக மக்கள்தொகை, தொழிற்சாலைக் கொள்திறன் என இரண்டிலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உடனடி வீழ்ச்சிக்கு வித்திடப்படலாம்’ என்று பேரி காமனர் எச்சரிக்கிறார்.

நம் காலத்தைய பேரி காமனர் விடுக்கும் இதே எச்சரிக்கையை, 1843-லேயே தன் அரசியல் பொருளியல் குறித்த முதல் நூலில் எங்கெல்ஸும் விடுத்துள்ளது வியப்பை அளிக்கிறது. ‘மனிதன் மீண்டும் ஒருமுறை குகையில் வாழும் நிலைக்குப் போய்ச் சேர வேண்டும். ஆனால், அந்தக் குகை அப்போது நச்சுவளியாலும் நாகரிகத்தின் கொள்ளை நோய் மூச்சுக்காற்றாலும் மாசுபடுத்தப்பட்டிருக்கும்.'

இந்நிலையை மாற்ற, பசுமையைக் காக்கும் வரலாற்றுக் கடமையில் சிவப்பு ஈடுபட வேண்டும்.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்

தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x