Published : 25 May 2014 11:49 am

Updated : 25 May 2014 11:50 am

 

Published : 25 May 2014 11:49 AM
Last Updated : 25 May 2014 11:50 AM

ஃப்ளாஷ் பேக் - இயக்குநர் பாண்டிராஜ் எழுதும் தொடர்: குழந்தைகளை கிழித்துவிடாதீர்கள்

புத்தகங்களே!
புத்தகங்களே!
சமர்த்தாய் இருங்கள்...
குழந்தைகளை கிழித்துவிடாதீர்கள்!
- கவிக்கோ அப்துல் ரகுமான்

விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்கு முன்பே, புத்தகங்களை வாங்கி அட்டை போட ஆரம்பித்துவிடுவோம். ஒருவரின் எதிர்காலம் புத்தகங்களை பராமரிக்கும் அழகி லேயே தெரிந்துவிடும்! எப்படா முழுப்பரீட்சை முடியும்? புத்தகத்தை வீசைக்கு போடலாமென ஒரு கூட்டம் அலையும். அப்படி புத்தகங்களை எடைக்கு போட்டு ஐஸ் வாங்கி சாப்பிட்டால்தான் ஒரு வருடம் படிப்பு முடிந்த உணர்வே வரும்.

எனக்கு எல்லா வருடமுமே பழைய புத்தகம் தான். அதில் என்ன கஷ்டம் என்றால், பழைய புத்தகங்களில் கூடுமானவரை முதல் பத்து பக்கமும் கடைசி பத்தும் இருக்காது. இல்லாத பக்கங்களை எல்லாம், எழுதி புத்தகத்தில் ஒட்டிக்கொள்ள வேண்டும். ஆனால் எனக்கு கிடைக்கும் பழைய புத்தகங்களோ ஒரு பக்கம் கூட கிழிந்தோ, கசங்கியோ இல்லாமல், நேர்த்தி யாக கையாளப்பட்டிருக்கும். அந்த பெருமைக் கெல்லாம் சொந்தக்காரர் அழகுசுந்தரம். பள்ளிக் கூடத்தில் சீனியர், வெளியே சொந்தக்காரர், கணக்கு பாடமெடுத்த சுப்பையா வாத்தி யாரின் மகன். ஒவ்வொரு புத்தகத்துக்கும் நேர்த்தியாக அட்டைபோட்டு, லேபிள் ஒட்டி, அ.சுப.அழகுசுந்தரம் என முத்துமுத்தாய் எழுதி யிருக்கும். புத்தகங்களை வைத்திருந்த அதே நேர்த்தி, இன்றும் அவரின் வாழ்வில் பிரதி பலிப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. எது எப்படியோ சீருடைகள், புத்தகங்கள் என பாதி வாழ்க்கை எனக்கு பழசிலேயே ஓடிவிட்டது.

புத்தகங்களுக்கு அட்டை போடவே தனி ரசனை வேண்டும். பிரவுன், காக்கி நிறங்களில் கிடைக்கும் ஷீட்டில் அட்டை போட்டு, லேபிள் ஒட்டி, அது செட்டாக, புத்தகங்கள் மேல் வெயிட்டான பொருளை தூக்கிவைத்து, ரெடி பண்ணுவோம். சிலர் நியூஸ் பேப்பர், மாத காலண்டர் ஷீட், கடைகளுக்கு பலசரக்கு பார்சலில் வரும் காக்கி அட்டையை வைத்தெல் லாம் அட்டை போடுவார்கள். ஒருபக்கம் காசும் மிச்சம், அதோடு உலகமே அழிஞ்சாலும் அந்த புத்தகத்திற்கு மட்டும் ஒண்ணுமாகாது. அந்த அட்டை அவ்வளவு கனமாக இருக்கும்.

கொஞ்சம் வசதியானவர்கள் புத்தகங்களை பைண்டிங் செய்வார்கள். பைண்டிங் பிரஸ்சில் புத்தகங்களை கொடுத்துவிட்டு, “அண்ணே ரெடியா? ரெண்டு வாரந்தான் இருக்கு.. அண்ணே ரெடியா? இன்னும் நாலு நாள்ல பள்ளிக்கூடம் திறந்திடுவாங்க” என்று டார்ச்சர் செய்துவிடுவார்கள். புத்தகங்களை மற்றவர்கள் களவாண்டு போகாமல் இருக்க, முன்னெச்சரிக்கையாக புத்தகத்தில் கிடைக்கும் இடத்திலெல்லாம் நம் பெயரை எழுதி வைத்துக்கொள்வோம். புத்தகத்தின் சைடுகளில், பெயரை எழுதிவைத்து ஒவ்வொரு பக்கமாய் புரட்டி நம் பெயர் 48-ஃபிரேம்சில் வருவதை ரசித்த நாட்கள் அவை.

புத்தகங்களுக்கு அடுத்து நோட்ஸ் வாங்குவதில் பெரும்போட்டியே நடக்கும். ஒரு சிலர் ‘கோனார்’ என்றால், எதிரணியோ ‘வெற்றி’யென சவுண்ட் விடுவார்கள். நமக்கு பிடித்த பெண்களிடம் நட்பை வளர்க்க (சத்தி யமா நட்புதாங்க!!!), நோட்ஸ் கடன் கேட்போம். “கோனார விட வெற்றிலதான் இந்த பதில் சிறப்பா இருக்காம், உன்னால வெற் றியை எனக்கு தர முடியுமா?”, என பூடக மாய் ஆரம்பிக்கும் சம்பாஷணைகள், காதலுக் கான சமிஞ்ஞைகள். இப்படியே கொஞ் சமாய் டெவலப் ஆகி, நோட்சுக்குள் மயிலிறகு வைத்துக்கொடுப்பது, கட்டிப்போட்டா குட்டிப் போடும் இலையை வைத்து, “இது வளர வளர நீ நெனைக்கிறதெல்லாம் நடக்கும்”, என பிட்டு போட்டு, ஒரு தனிப்படமே ஓட்டு வார்கள். மயில் தோகை வளர பெண்கள் அரிசியெல்லாம் போடுவார்கள். சில பெண்களின் பள்ளிக்கூட பை நாகலிங்க பூவால் மணத்துக்கிடக்கும். அப்போதெல்லாம் பையை விட பெண்கள் விரும்புவது ஒயர் கூடைதான். நம்ம பசங்க மஞ்சப்பையையே சுருக்கு பை போல சுருட்டி, கிழித்து, அழுக்கில் புரட்டி பையும் மையுமாய் வைத்திருப்பார்கள்.

வகுப்பில் திடீரென யாரவது ஒருவன் பேனா காணோம், நோட்டை காணோம் என்று பஞ்சாயம் கூட்டினால், ஒட்டுமொத்த வகுப்பை யும் பையை கவிழ்த்து கொட்ட சொல்லி செக் பண்ணுவார்கள். அப்படி கொட்டும்போது, சில பசங்களின் பையிலிருந்து பாச்சை, கரப்பான் எல்லாம் ஓடும். அவ்வளவு சிறப்பாக இருக்கும், பசங்களோட புத்தகப்பைகள்!!!

செய்வினை வாக்கியம், செயப்பாட்டு வினை வாக்கியமென அடுத்த சந்ததிக்கும் செய் வினையை வைத்துக்கொண்டே தான் இருக்கி றோம். ஆங்கில வகுப்பில் எஸ்ஸே படிப்பது, போலீஸ் எஸ்.ஐ.யை பார்ப்பது போன்ற நடுக்கத்தைதான் கொடுத்தது. ஔரங்க சிப்புக்கு எத்தனை மனைவி என்பதை மனப்பாடம் செய்து எழுதினோமே, அது எதற்கு? வேதியியலின் மூலக்கூறுகள், மூளை கோளாறுக்குதான் வழிவகுத்தது. நெஞ்சில் குத்தி குத்தி குருட்டு மனப்பாடம் போட்ட, எதுவுமே வாழ்க்கையை சொல்லிக் கொடுக்கவில்லையே? (a+b)2 = a2+b2+2ab, போன்ற சூத்திரங்கள் உங்கள் அன்றாட வாழ்விற்கு பயன்படுகிறதா? அன்று இந்த சூத்திரத்தை முட்டி முட்டி படித்தோமே, என்ற ஆத்திரத்தையே ஏற்படுத்துகிறது.

நாம் பிறருக்கு நல்லது செய்தும், பதிலுக்கு அவர்கள் நம்மை முதுகில் குத்தும்போது நியுட்டனின் மூன்றாம் விதியும் பொய்த்து தானே போகிறது. அறிவியலை அன்றாட வாழ்வோடு தொடர்புபடுத்தும் கல்வி முறை இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ ஜெகதீஷ் சந்திரபோஸ், சி.வி.ராமன், அப்துல் கலாம்கள் உருவாகியிருப்பார்கள். அதை செய்தோமா???

என் அனுபவத்தில் தமிழ் பாடத்தில் கற்ற ‘வஞ்சப்புகழ்ச்சி அணி’ மட்டும் ஆடியோ ரிலீஸ் நிகழ்சிகளில் பயன்படுகிறது. மற்றபடி, இந்த புத்தகங்கள் மதிப்பெண்களுக்காக என்னை தயார் படுத்தியதே தவிர, மனிதனாக வாழ தயார்படுத்தவில்லை. வள்ளுவரையும், கம்பனையும், அறிமுகம் செய்ததும், இளங்கோ வையும், தாகூரையும் தெரியப்படுத்தியதும் தான் இந்த புத்தகங்கள் செய்த மிகப்பெரிய உதவி. இந்த புத்தகங்களின் வரிகள் ஊட்டிய நம்பிக்கையை விட, சில ஆசிரியர்களின் வார்த்தைகள் ஊட்டிய தன்னம்பிக்கை அதிகம்!

எனக்கு மக்களின் வாழ்வியலை பேசும் நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தியவர்கள், அருணாசலம் மற்றும் மதன். அருணாசலம் என் ஊர்க்காரன், உயிர்த்தோழன். சாண்டில்யனை யும், கல்கியையும் ஒரு சேர கொடுத்து படிக்க சொன்னவன். அந்த எழுத்துக்களில் லயித்துக்கிடந்த வேளையில், நண்பர் மதன், கி.ரா.வின் ‘கோபல்லபுரத்து கிராமம்’, சா.கந்தசாமியின் ‘தொலைந்து போனவர்கள்’, தி.ஜானகிராமனின் ‘மரப்பசு’, அசோக மித்திரனின் ‘தண்ணீர்’ என்று அறிமுகம் செய்து வைக்க, நம் மண் சார்ந்த மக்களின் உலகத்தில் மெல்லமாய் உலவத் தொடங்கினேன். மேலும் எனக்கு மனிதர்களை படிக்கவும் ரொம்பப் பிடிக்கும். நடமாடும் புத்தக மாய் இருக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு செய்தியை சொல்லாமல் சொல்லி கொண்டிருக்கிறார்கள். அப்படி மனிதர்களை பற்றிய பதிவுகளான, நாஞ்சில் நாடனின் தலை கீழ் விகிதங்கள், ஜெயகாந்தன் மற்றும் புதுமைப்பித்தனின் சிறுகதைகள், கவிப் பேரரசு வைரமுத்துவின் ‘கள்ளிக்காட்டு இதி காசம்’, தங்கர் பச்சானின் ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ என பரிச்சயமாகி எஸ்.ரா.வில் வந்து பூரணம் அடைந்தேன். கி.ரா. முதல் எஸ்.ரா.வரை மண்ணை பற்றி மக்களை பற்றி எழுதப்படும் ஒவ்வொரு படைப்பையும் தேடித்தேடி படித்தேன், படிக்கிறேன்.

இப்படிப்பட்ட அனுபவங்களை வழங்கும் புத்தகங்களை படிக்கும் வாய்ப்பை மாண வர்களுக்கு பள்ளிக்கூடத்திலேயே உருவாக் கிட வேண்டும்.

அதற்கு ஒரே வழிதான்...

இப்போதோ பள்ளிகூடத்திற்குள் நூலகம் இருக்கிறது.. இனி வரும் நாட்களில், நூலகத் திற்குள் பள்ளிக்கூடம் இருக்கட்டும்!!!!

தொடர்புக்கு: pandirajfb@gmail.com


இயக்குநர் பாண்டிராஜ்ஃப்ளாஷ்பேக்குழந்தைகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author