Published : 20 Mar 2020 09:46 AM
Last Updated : 20 Mar 2020 09:46 AM

தரமணி 18: உணர்வுகளின் மீது இழையும் ஒளி!

ஆர்.சி.ஜெயந்தன்

‘இருள் என்பது குறைந்த ஒளி’ என்றார் மகாகவி பாரதி. ஒளிப்பதிவு எனும் கலை, ஒளியை உண்டு செழிப்பது. அதனால்தான், ஒளிப்பதிவை, ஒளியைக்கொண்டு ஓவியம் வரைவது (Painting with Light) என்றார்கள். மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பொருட்கள், இடங்கள், நிலப்பரப்பு, வனம், கடல், வானம் என எதுவொன்றையும் நீங்கள் ஒளிப்பதிவு செய்யலாம். உங்கள் படப்பதிவுக் கருவியாகிய கேமரா, படச்சுருள் அல்லது அதன் இடத்தை ஆக்கிரமித்துவிட்ட டிஜிட்டல் சென்சார் என இரண்டில் எந்த ஊடகத்தில் பதிவுசெய்தாலும் ஒளியின் வடிவில்தான் அனைத்தையும் பதிவுசெய்துகொள்கிறது. அப்படிப்பட்ட ஒளிப்பதிவுத் துறையுடன் தொழில்நுட்பம் பின்னிப் பிணைந்து கிடக்கிறது.

ஒளிப்பதிவாளர் என்பவர், தொழில்நுட்ப அறிவில் (Technical Knowledge) விற்பன்னராக இருந்தால் மட்டும் போதாது. அவர் தனது கற்பனையை, தொழில்நுட்பம் சாத்தியமாக்கும் அனுகூலங்களுடன் கச்சிதமாகப் பொருத்தும்போதுதான் அது கற்பனை சார்ந்த அறிவாக (Creative Knowledge) மாறி, ஒளிப்பதிவில் அவரது படைப்பாற்றலாக வெளிப்படுகிறது. படச்சுருளின் காலத்திலேயே ஒளிக்கற்பனையில் தனித்து ஒளிர்ந்த பி.சி.ஸ்ரீராம், ‘வானம் வசப்படும்’ படத்தின் மூலம் டிஜிட்டல் யுகத்தின் முதல் பரிசோதகராகக் களமிறங்கி, இன்றைய டிஜிட்டல் ஒளிப்பதிவில் மாபெரும் சாத்தியங்களைக் குழைத்துக்காட்டிய முன்மாதிரிக் கலைஞராகிறார்.

மீறல்களின் கலைஞன்

பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு என்பது, அவர் பங்கேற்கும் படத்தில் அவரது மேதமையைக் காட்டுவதாகவோ படத்தின் கதைப்போக்கை தொந்தரவு செய்வதாகவோ இருக்காது. காட்சிகளுக்கான மனநிலையை (Scene mood) ஒளியமைப்பின் வழியே நம்பகமாக உருவாக்கும் அவர், அக்காட்சிகளில் உலவும் கதாபாத்திரங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளின் மீது இழையவிடும் ஒளி, ஒவ்வொரு பிரேமிலும் மற்றுமொரு கதாபாத்திரம் ஆகிறது.

ஒளிப்பதிவுக் கலையில் ‘ஸ்டைல்’ என்ற ஒன்றை ஒளிப்பதிவாளர்கள் உருவாக்க முடியாது. ஆனால், பார்வையாளர்களை இது கண்டிப்பாகச் சென்றடையும் என்ற தன்னம்பிக்கையுடன் தான் பணியாற்றிய ஒவ்வொரு படத்திலும் சோதனைகளையும் மீறல்களையும் தொடர்ந்து செய்துபார்க்கும் பி.சி.ஸ்ரீராமின் ரசனையே அவரைத் துணிவுடன் இயக்குகிறது. ‘அக்னிநட்சத்திரம்’ படத்தின் ஒளியமைப்பில் அவர் கையாண்ட மீறல்களை இந்த இடத்தில் உதாரணமாகக் கொள்ளலாம்.

தஞ்சை, மதுரை, கோவை ஆகிய வட்டாரங்களிலிருந்து வந்து, தமிழ் சினிமாவுக்குப் பெரும் பங்களித்த படைப்பாளிகளின் கூட்டத்தைப் போலவே, சென்னை உருவாக்கிய திரைக்கலைஞர்களின் பங்களிப்பும் மறுக்க முடியாத ஒன்று. ‘ஆழ்வார்பேட்டை கேங்’ என்று வர்ணிக்கப்படும் மணிரத்னம், கமல், பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட நண்பர்களின் குழாம், பெருநகர வாழ்க்கையிலிருந்து முகிழ்த்த கதைகளை நம்பகமாகவும் எல்லை தாண்டாத சினிமா யதார்த்தத்துடனும் தாங்கள் கையாளும் ‘கிராஃப்ட்’ வழியாகச் சித்தரித்துக் காட்டியது. குறிப்பாக மணிரத்னம் - பி.சி.ஸ்ரீராம் இணை தந்த படங்கள், தமிழ் சினிமாவின் போக்கையும் சினிமா ரசனையையும் தரமுயர்த்தியவை.

உயிரூட்டும் ஒளியூட்டம்

பால்யம் தொடங்கி பி.சி.ஸ்ரீராமும் மணிரத்னமும் நண்பர்கள். நட்பின் அடிப்படையில் முகிழ்த்த இவர்களது கூட்டணியில் வெளியான முதல் படம் ‘மௌன ராகம்’. மணந்து கொண்டவன் காதலுக்காக இறைஞ்சி நிற்கும்போது, காதலின் இழப்பு ஏற்படுத்திய ஆறாத வடுவால் மௌன ராகம் இசைக்கிறாள் மனைவி. கணவனின் சிறு ஸ்பரிசம்கூட அவள் நினைவில் நகரும் கம்பளிப்பூச்சியாகிவிடுகிறது.

திருமணத்துக்குப் பிறகான காதலின் நிழலில் இளைப்பாற நினைத்தவனுக்கோ இதயம் நொறுங்கிப்போகிறது. துருவங்களாக விலக முயலும் புள்ளியில், காதல் எனும் மருந்தே அவர்களது காயங்களைக் குணப்படுத்திவிடுகிறது. இதை, நடிகர்களின் பங்களிப்புக்கு அப்பால், இயக்கம் - ஒளிப்பதிவு- இசை ஆகிய மூன்று அம்சங்கள் முன்வைத்த திரைமொழியே ‘மௌன ராக’த்தை வெகுஜன சினிமாவில் அரும்பிய தரமான கலைப் படைப்புகளில் ஒன்றாகவும் வெளியான காலத்திலேயே ‘கிளாசிக்’ ஆகவும் ‘மௌன ராக’த்தை மாற்றியது.

மத்தியதர வாழ்க்கையின் பின்னணியில் கருக்கொண்டு, யதார்த்தத்துக்கு அருகில் வரும் கதாபாத்திரங்களுடன் பார்வையாளர்கள் தங்களைப் பொருத்திக்கொள்ளும்விதமாகத் தனது கதாபாத்திரங்களையும் திரைக்கதையையும் எழுதியிருந்தார் மணிரத்னம். அக்கதாபாத்திரங்களுக்கான இயல்புகளை, அவை வாழ்ந்த, வாழும் வாழ்க்கையின் போக்கில் வெடிக்கும் முரண்களும் அதையொட்டி எழும் போராட்டமும் உருவாக்கும் மனவோட்டம், மனமாற்றம் உள்ளிட்ட உணர்வுகளை பி.சி.ஸ்ரீராம் ‘ஒளியும் நிழலும்’ கொண்டு பிரதிபலித்துக் காட்டினார்.

திரையரங்கின் தட்டையான திரையில் விழும் காட்சிகள் அனைத்தும் இருபரிமாண முறையில் பதிவான ‘இமேஜ்’தான். ஆனால், இரு கண்களால் காணும் நம் பார்வையின் இயல்பில், நாம் காண்பது அனைத்தும் முப்பரிமாணமே. இரு பரிமாண இமேஜ் மூலமே முப்பரிமாணம்போல் உருவகப்படுத்திக்காட்ட ‘லைட் அண்ட் ஷேடோ’ உத்தி ஒளிப்பதிவின் அடிப்படைகளில் ஒன்றாகப் பங்காற்றுகிறது. அதேநேரம், கதாபாத்திரங்களின் வாழ்வில் கவிந்திருக்கும் ஒளியும் இருளுமான உணர்வுகளின் நாடகத் தன்மையைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் இது ரசவாதம் செய்கிறது.

‘மௌன ராகம்’ படத்தில் இந்த இரு தளங்களிலும் நின்று பி.சி..ஸ்ராமின் ஒளியூட்டம் கதை சொல்வதைக் காண முடியும். உதாரணமாக, அந்தப் படத்தில் கணவனை அண்டாமல் விலகி வாழும் திவ்யா, வீட்டில் பூனைக்குட்டியை உற்சாகமாகத் துரத்திக்கொண்டு ஓடிவரும்போது ‘சுழற்படி’க்கட்டில் ஏறிவரும் கணவனை எதிர்கொள்ளும் காட்சியில் அந்தப் பூனையைப் போல ஓடியொளியும் ஒளியூட்டம் இரு கதாபாத்திரங்களின் ‘மனநிலை’யை அவை உரையாடத் தொடங்கும்முன்பே கண்ணாடிபோல் நமக்குத் துலங்கச் செய்துவிடுவதைக் காணலாம்.

‘பிரேமிங்’ பிதாமகன்

கதாபாத்திரத்தின் உடல் மீது விழும் ஒளியின் வழியே, அதன் முப்பரிமாணத்தை உணர வைப்பதன் மூலம், அதை உயிருள்ள சக மனிதனாக பார்வையாளரை ஏற்கச்செய்யும் செயல்முறையை ஒளிப்பதிவு சாத்தியமாக்குகிறது. ‘ஐ’ படத்தில் நாயகன் லிங்கேசனும் அவரைப் போன்ற பாடி பில்டர்களும் உடற்பயிற்சி செய்யும்போதும், உடல் வளர் கலைப் போட்டிகளில் பங்கேற்கும்போதும் அவர்களின் ‘உடற்கட்டு’களால் உருவான மேடு பள்ளங்கள் அவர்களது உடலின் கம்பீரத்தைத் தெரியும்படி செய்த ஒளியூட்டத்தை இந்த இடத்தில் நீங்கள் நினைவுபடுத்திப் பார்க்கலாம்.

சிறந்த ஒளிப்பதிவுக் கலைஞர் என்பவர், தான் ஒளியூட்டும் கதாபாத்திரத்தின் வீழ்ச்சி, எழுச்சி ஆகிய இரு உச்சச் சூழ்நிலைகளில் ஏதுவொன்றைக் காட்சிப்படுத்தும்போதும், அவற்றைக் காணும் பார்வையாளர் திரையிலிருந்து பார்வையை விலக்கிவிடாதபடி தனது ஒளியூட்டத்தில் மட்டுமல்ல; காட்சியின் கோணங்கள், நகர்வுகள், அசைவுகள் உள்ளடங்கிய ‘பிரேமிங்’ வழியாகவே இயக்குநரின் காட்சிக் கற்பனைக்கு (visualization) உயிர் தருகிறார். ‘மௌன ராக’த்தில் லட்சியத் துடிப்பும் இளமையின் துடிப்பும் மிக்க மனோகர் கதாபாத்திரம் அறிமுகமாகும் காட்சியில் பி.சி..ஸ்ராமின் ‘பிரேமிங்’ துடிப்பதை ரீவைண்ட் செய்து பாருங்கள்.

அதேபோல் கதாபாத்திரத்தின் தோற்றப்பொலிவு, தோற்றச் சிதைவு ஆகிய இரண்டு நிலைகளிலும் பி.சி.ராமின் ‘பிரேமிங்’ விலகல் இல்லாத ஈர்ப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் ஒன்று. ‘ஐ’ ‘ரெமோ’ ஆகிய படங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். ‘ரெமோ’ படத்தில் பெண் செவிலியர்போல் மாறு வேடமிடும் நாயகன், ஒப்பனை வழியே பெண்ணாக மாறிவிட்டாலும், தனது ஒளியூட்டத்தின் வழியாக அவரை ஆண் என்பதையே மறக்கச் செய்துவிடுகிறார்.

‘ஐ’யில் கூனன் லிங்கேசனின் தோற்றம், குறிப்பாக, ஒவ்வாமையால் நிரந்தரக் கொப்பளங்கள் மண்டி விகாரமாகிவிட்ட லிங்கேசனின் முகத்தைக் கண்டு பார்வையாளர்கள் சட்டென்று பார்வையை விலக்கிவிடாதவாறு அந்த முகத்தையும் தோற்றத்தையும் ஏற்றுக்கொண்டு, அதைப் பின்தொடரும் மனநிலையை, ஒளியூட்டம், ‘பிரேமிங்’ வழியான ஒளிப்பதிவே சாத்தியமாக்கியது. பி.சி.ஸ்ரீராமின் ஒளியுலகில் அடுத்த வாரமும் பயணிப்போம்.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x