Published : 09 Aug 2015 12:05 PM
Last Updated : 09 Aug 2015 12:05 PM

பெண்களின் இரட்டை சுதந்திரப் போர்

இந்திய சுதந்திரப் போர் என்பது வரலாற்றில் இந்திய ஆண்களின் போராகவே பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. விதிவிலக்காக, ஜான்சி ராணி, சரோஜினிநாயுடு முதலான சில பெயர்களை ஆங்காங்கே பார்க்கலாம். உண்மையில் வரலாறு பல பெயர்களை மறைத்திருக்கிறது. இந்திய ஆண்களுடையதாகச் சித்தரிக்கப்படும் சுதந்திரப் போராட்டத்தைவிடப் பெண்களின் போராட்டம் இரண்டு மடங்கு சிரமமானது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன் இந்திய ஆண்களை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டிய நிலை அவர்களுக்கு. ஆகவே அவர்களுடைய போராட்டத்தை இரட்டைப் போராட்டம் என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்ட சில பெண்களின் பெயரை, ஆண்களை மையமாகக் கொண்ட வரலாறு இருட்டடிப்பு செய்துவிட்டது. அவர்களில் சிலரைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

சந்திரமுகி பாசு (1860–1944):

பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பெண் பட்டதாரிகள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சந்திரமுகி பாசுவும் காதம்பிணி கங்குலியும்தான். வங்கமொழியைத் தாய்மொழியாகக் கொண்ட சந்திரமுகி பாசு கிறிஸ்தவக் குடும்பமொன்றில் 1860-ல் பிறந்தார். டேராடூனைச் சேர்ந்த ‘உள்நாட்டு கிறிஸ்தவர்களுக்கான பள்ளி’யில் 1880-ல் ‘ஃபர்ஸ்ட் ஆர்ட்ஸ்’ என்ற கலையியல் பட்டப் படிப்புக்கான தேர்வில் வெற்றிபெற்றார். அதற்கான நுழைவுத் தேர்வில் 1876-லேயே சந்திரமுகி வெற்றிபெற்றிருந்தாலும், வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் 1878-வரை அவரது பெயர் இடம்பெறவில்லை. இத்தனைக்கும் தேர்வில் முதலாவதாகத் தேர்ச்சி பெற்றிருந்தார். எனினும் அவரது பெயர், வெற்றிபெற்றவர்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. பாலினப் பாகுபாடுதான் இதற்குக் காரணம்.

1878-ல் விதிமுறைகள் மாற்றப்பட்டபின் சந்திரமுகி மேல்படிப்புக்கு அனுமதிக்கப்பட்டார். அதற்குப் பிறகு பேதூன் கல்லூரியில் பட்டம் படித்து 1883-ல் பட்டம் பெற்றார். சந்திரமுகியுடன் கல்லூரியில் சேர்ந்த காதம்பினி கங்குலியும் 1883-ல் பட்டம் பெற்றார். 1886-ல் பேதூன் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். 1886-ல் பேதூன் கல்லூரியும் பேதூன் பள்ளியும் பிரிக்கப்பட்ட பின் பேதூன் கல்லூரியின் முதல்வராக சந்திரமுகி ஆனார். இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே இளங்கலைக் கல்லூரி ஒன்றில் தலைமைப் பொறுப்புக்கு வந்த முதல் பெண்ணும் சந்திரமுகிதான்.

காதம்பினி கங்குலி (1861 – 1923):

இந்தியாவில் பட்டம் பெற்ற முதலாவது பெண் என்ற சிறப்பை சந்திரமுகி பாசுவுடன் காதம்பினி பகிர்ந்துகொண்டாலும் இந்தியாவில் அலோபதி படித்து மருத்துவரான முதல் பெண் காதம்பினிதான். 1886-ல் இந்தச் சிறப்பை அவர் பெற்றார். ஆனந்தி கோபால் ஜோஷி என்ற பெண்ணும் அதே ஆண்டில் மருத்துவப் பட்டம் பெற்றிருந்தாலும் அவர் படித்தது அமெரிக்காவில். காதம்பினியின் சாதனை இப்போதுதான் சாதனையாகக் கருதப்படுகிறதே தவிர அவரது காலத்தில் அவருக்கு அவ்வளவு எளிதாக அங்கீகாரம் கிடைத்துவிடவில்லை. 1892-ல் இங்கிலாந்து சென்ற அவர் எல்.ஆர்.சி.பி, எல்.ஆர்.சி.ஆஸ், ஜி.எஃப்.பி.எஸ் போன்ற படிப்புகளை முடித்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்பினார்.

இந்தியா வந்து தனது மருத்துவத் தொழிலைத் தொடங்கியவர் பிறகு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டார். குறிப்பாக, பெண்கள் முன்னேற்றத்துக்காகத் தொடர்ந்து பாடுபட்டார். தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் உரிமைகளுக்காக நடை பெற்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவுக்கும் வகையில் கல்கத்தாவில் ஒரு கூட்டத்தை அவர் நடத்தியதும் குறிப்பிடத் தக்கது.

ரமாபாய் ரானடே (1863 – 1924)

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ரமாபாய் ரானடேவுக்கு 11 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. நீதிபதி மஹாதேவ் கோவிந்த ரானடேதான் அவருடைய கணவர். நல்ல அறிவாளியாகவும் புரட்சிகரமான கருத்துகளைக் கொண்டவராகவும் அவர் இருந்ததால் கல்வியறிவற்ற தன் மனைவியைப் படிப்பதற்கு அனுமதித்தார். திருமணத்துக்குப் பிறகு தனது தாய்மொழியான மராத்தியைப் படிக்க ஆரம்பித்த ரமாபாய், ஆங்கிலம், வங்கமொழி ஆகியவற்றிலும் நிபுணத்துவம் பெற்றார். பிறகு சமூகப் பணிகளிலும் ஈடுபடத் தொடங்கினார். பம்பாயில் ‘இந்துப் பெண்களுக்கான சமூக கிளப்’ ஒன்றைத் தொடங்கினார். புனேயில் ‘சேவா சதன் சொஸைட்டி’யைத் தொடங்கினார். புனேவில் ‘ஹுஜுர்பகா’ என்ற பெண்கள் பள்ளியையும் தொடங்கினார். 1883-ல் ஒரு பொதுக் கூட்டத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றினார். பொதுக் கூட்டத்தில் ஆங்கிலத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பெண் ரமாபாய்தான்.

உஷா மேத்தா (1920-2000)

குஜராத்தைச் சேர்ந்த உஷா மேத்தா ஒரு காந்தியவாதி. அவருக்கு 5 வயது நடந்தபோது காந்தி ஆசிரமத்துக்குச் சென்றிருந்தார். காந்தியின் தாக்கம் அவருக்கு அப்போது தொடங்கியது. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கப்பட்டபோது அந்த இயக்கம் பற்றிய செய்தியும் தகவல்களும் கசிவதை ஆங்கிலேய அரசு தடுத்துக்கொண்டிருந்தது. அப்போது துணிவுடன் ‘காங்கிரஸ் ரேடியோ’வைத் தொடங்கியவர் இவர். இதற்காக ரகசிய போலீசாரால் கைதுசெய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். மேற்படிப்புக்காக வெளிநாட்டுக்கு அனுப்புகிறோம் என்றெல்லாம் அவரிடம் சொல்லிப்பார்த்தார்கள். அப்படியும் அவர் அசைந்துகொடுக்கவில்லை. ரகசியத்தைக் காப்பாற்றினார். 1998-ல் அவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்பட்டது.

- தொகுப்பு: தம்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x