Published : 17 Mar 2020 09:33 AM
Last Updated : 17 Mar 2020 09:33 AM

விசில் போடு 23: ரொம்ப பேஜாரா போச்சு குமாரு!

‘தோட்டா’ ஜெகன்

‘ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை'ன்னு எழுதினார் வாலிபக் கவிஞர் வாலி. ஆனா, நம்மாளுங்க நம்மகிட்ட கேட்கிற கேள்விகளைப் பார்த்தா, ஏன்டா இப்படி கேட்குறீங்கன்னு கேட்கத் தோணுது.

வங்கியில போட்ட வைப்புத்தொகைக்கே கியாரண்டி இல்லாத இந்த காலத்துல, உன் வாழ்க்கைல நான் கொஞ்ச ஓவராத்தான் விளையாடிட்டேன்னு விதியே ஊக்கத்தொகை தருமளவு வாழ்நாள் முழுக்க தோல்விகளைப் பார்த்தவன்கூட சில கேள்விகளைக் கண்டா, நொந்து போயிடுவான். இன்னும் சொல்லப்போனா விறகே இல்லாம வெந்து போயிடுவான். ‘நீ கூவவே கூடாது’ன்னு ராத்திரி முழுக்க காவல் இருந்தாலும், விடியுற நேரத்துல சரியா கூவுற சேவலாட்டம், ஏதாவது ஒரு கேள்வியை கேட்டே ஆகணும்னு, இடம் பொருள் ஏவல் பார்க்காம கேள்வியை கேட்கிறதுதான் நம்மாளுங்க பழக்கம்.

பால்டாயிலைக் குடிப்பீங்களா?

கார் கதவை உடைச்சு ஹீரோ இன்ட்ரோ தருவாரா இல்ல கல்லணை மதகை ஜம்ப் பண்ணி இன்ட்ரோ தருவாரான்னு படம் ஆரம்பிச்சு ஓடிக்கிட்டு இருக்கிறப்ப, பக்கத்து வீட்டுக்கு பால் காய்ச்ச லேட்டா வந்த மாதிரி வந்துட்டு, 'பாஸ் படம் போட்டு எவ்வளவு நேரமாகுது'ன்னு கேட்பாங்க.

பத்து நிமிஷமாவதுன்னு சொன்னா, அதுக்காக பால்டாயிலை குடிச்சுட்டு படுத்துக்கவா போறீங்க? எடுத்த டிக்கெட்டுக்கு எப்படியும் படத்த பாக்கத்தானே போறீங்க? இல்ல நீங்க லேட்டா வந்தீங்கன்னு மறுபடியும் ஓடுன சீனை திரும்ப போட்டா காட்டப்போறாங்க? சாமி படத்துல இருக்குற பிள்ளையாரு மாதிரி நாலு கை இருந்தாகூட பரவாயில்ல, இருக்கிற ரெண்டு கையில மொத்த குடும்பத்துக்கும் இடைவேளைல அரை டன் பாப்கார்ன வாங்கிட்டு தள்ளாடி போறப்பத்தான், நெருங்கி வந்து ‘என்ன சினிமாவுக்கா?'ம்பான் நம்ம மானஸ்தன் நண்பன். தியேட்டர்ல படம் பார்க்க வராம, பாத்ரூம்ல குடம் வச்சு தண்ணி பிடிக்கவா வருவாங்க? ரிலாக்ஸ் பண்ண படம் பார்க்க வந்தா இப்படியா கேள்வியா கேட்டு கொலையா கொல்வீங்க?

பொண்டாட்டி பத்து மாசம் கெஞ்சி, புள்ளைங்க எட்டு நாள் கெஞ்சி, நாமளே முதலாளி காலை புடிச்சு, மேனேஜர் கைய புடிச்சு, 10 நாள் வேலையை ஒரே நாள்ல முடிச்சு, பர்மிஷன் வாங்கி குடும்பமா கிளம்பி பொருட்காட்சி போலாம்னு வீட்டு வாசலுக்கு வந்தா போதும், “என்ன, ஃபேமிலியா எங்க கிளம்பிட்டீங்க?'ன்னு கேட்கிறதுக்குன்னே மொபைல் போன்ல அலாரம் வச்சு காத்திருப்பாங்க. குடும்பமா போனா ஏதாவது நல்ல விஷயமாதான் போவோம், பின்ன ஊருக்கு நடுவுல ஜமுக்காளம் விரிச்சு விளக்குமாறு விற்கவா போவாங்க? இன்னமும் சில புத்திசாலிங்க இருக்காங்க, எங்க போறேன்னு கேட்டா நாகரிகம் இல்லன்னு தெரிஞ்சுக்கிட்டு, ‘எங்க இருந்து வரீங்க'ன்னு கேட்பாங்க. எங்க போயிட்டு வந்தா என்னப்பா உங்களுக்கு?

முத்தின சிங்கிள்

வெயில் காலத்துல கரண்ட் இல்லாத வீட்டுலகூட வாழ்ந்திடலாம். ஆனா, காத்தடிக்காத ரோட்டுல நடக்கிறது எம்புட்டு கஷ்டம் தெரியுமா? உடம்புல இருக்கிற ஊன் உருகி கரும்பு சாறு மாதிரி ரோட்டுல வழிய, ஜிஞ்சர் குடிச்ச மங்கியாட்டம் பஞ்சரான வண்டிய நாக்குல நுரை வர தள்ளிக்கிட்டு போறப்பதான், ‘என்ன சார் வண்டி பஞ்சரா?'ன்னு எதிர்ல வரவங்க எல்லாம் கேட்டுட்டு போவாங்க. பஞ்சரானதால தானேப்பா தள்ளிக்கிட்டு போறோம், பின்ன என்ன, பிரசவத்துக்கு பொறுமையா அள்ளிட்டு போக?

கல்யாணத்துக்கு வந்தோமா, கிப்ட் வச்சுட்டு சாப்டோமான்னு இல்லாம, கை கழுவுறப்பதான் ‘என்ன ரொம்ப வெயிட் போட்டுடீங்கன்னு' கேட்பாங்க. ஆமாங்க, பேண்ட் பாக்கெட்டுல ரெண்டு சிமென்ட் மூட்டை வச்சிருக்கேன்னு சொல்ல தோணும். ஊருக்குள்ள குண்டு போட்டாதான் தப்பு; உடம்புல குண்டு போட்டா என்ன தப்பு? முரட்டு சிங்கிளா சுத்துற அந்த வேதனையைவிட பெரிய வேதனை என்ன தெரியுமா? தெருவுல நடந்துபோறப்ப எதிர்படுற பாட்டிம்மா, ‘உன்கூட படிச்சவனுங்கெல்லாம் ரெண்டு புள்ளைங்களுக்கு அப்பாயிட்டான். உனக்கு எப்போ கல்யாணம்'ன்னு கேள்வி கேட்டு பாடாய்படுத்துவாங்க. நாம முத்தின சிங்கிளாய்ட்டோம்ன்றதை எவ்ளோ சிம்பாலிக்கா கேட்டு அலும்பு பண்றாங்க இந்த சீனியர் சிட்டிசன்ஸ்?

முக்கு வரை...

நாலு புள்ளைங்களுக்கு டாடியா வாழ்ந்த தாத்தா இறந்து வீடே சோகத்துல இருக்கும். சாவு வீட்டுக்கு வரப்போ பிரியதர்ஷன் பட ஹீரோ மாதிரி மேக்கப் போட்டு கடைசியா வந்துட்டு, ‘பாடிய எப்போ எடுப்பாங்க?'ன்னு சொந்தக்காரங்கக்கிட்ட கேள்வியை வேற கேட்பாங்க. பாடிய தூக்கிட்டு போகும்போது சுடுகாடு வரைக்கும் வராம, தெரு முக்கு வரைக்கும் வரப்போறதுக்கு எதுக்கு இந்தக் கேள்வி?

உலகத்தை சுத்தி வந்து மாம்பழத்தை வாங்க போன முருகரோட மயில் எப்போ வரும்னுகூட சொல்லிடலாம். ஆனா, இந்தத் தேசத்துல எப்பவுமே சரியா கணிக்க முடியாதது ரயில் வரும் நேரம்தான். எனக்கு தெரிஞ்சு ஒரு மணி நேரம், ஒரு நாள், ஏன் ரயிலே வராமகூட போயிருக்கு. இந்த லட்சணத்துல ரயிலு எப்போ வரும்னு காத்திருக்கும்போதுதான், நம்மகிட்ட வந்து, ‘ரயில் போயிடுச்சா'ம்பான் கேட்பாங்க. “நாங்க என்ன பிளாட்பாரத்துல பிச்சை எடுக்கவா வந்தோம்? நாங்க என்ன ரயில்வே ஸ்டேஷன்ல முறுக்கா விக்கிறோம்? ரயில் வந்திருந்தா நாங்க ஏன்யா இன்னமும் இங்க நிக்கிறோம்?”

இதெல்லாம் கேள்வியா?

புது வருஷத்துல வாக்கிங் போலாம்னு நாம போறதே ஒரு வாரம்தான். அதுலயும் எதிர்ல வரவங்க எல்லாம், ‘என்ன சுகரா?'ன்னு கேட்பாங்க. வேக்காடு தாங்காம மொட்டைமாடிக்கு தூங்க போனா, ‘என்ன கரண்ட் கட்டா?'ன்னுவாரு பக்கத்துக்கு வீட்டுக்காரரு. கேட்கிற கேள்விகளையும் சரியா கேட்கிறாங்களான்னா, அதுவும் இல்லை. எத்தனை குழந்தைங்கன்னு முதல் கேள்வியை கேட்டுட்டு, அப்புறம் கல்யாணமாகிடுச்சான்னு அடுத்த கேள்வியை கேட்பாங்க. பையன் அப்படியே, உங்க ஜாடையிலையே இருக்கானே எப்படின்னு கேட்கிறாங்க. அவனோ காபி பொடியை ஓசி வாங்க வந்த பக்கத்துக்கு வீட்டு பையன்.

கேட்க எல்லோருக்கிட்டையும் கேள்விகள் இருக்கு. ஆனா அதுக்கான தேவைகள் இருக்கானுதான் பார்க்கணும். ‘கரக்காட்டக்காரன்’ படத்துல கவுண்டமணி ‘என்னை பார்த்து ஏன்டா அந்த கேள்விய கேட்ட'ன்னு செந்தில எத்தி எத்தி உதைக்கிற மாதிரி, இந்த நிஜ வாழ்க்கையிலும் தேவையற்ற கேள்விகளை கேட்டு, நம்மள நோகடிக்கவே பொறந்திருக்கிறவங்களை ஏதாவது செய்யணும் குமாரு.

(சத்தம் கேட்கும்)

கட்டுரையாளர் தொடர்புக்கு: thinkthoatta@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x