Published : 17 Mar 2020 09:24 AM
Last Updated : 17 Mar 2020 09:24 AM

பேசும் படம்: கேமராவுக்குள் காட்டுயிர் உலகம்!

நெல்லை மா. கண்ணன்

சிறுவயதிலிருந்தே பறவைகள், விலங்குகளைப் பார்த்து ரசிப்பதும் அவற்றைப் பற்றி கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளுவதுமாக வளர்க்கப்பட்டதால் இருவாச்சி பறவையையோ தேவாங்கையோ பார்த்தால் ஒளிப்படம் எடுப்பதைவிட, அவற்றைப் பார்ப்பதும் அவற்றின் இயல்பை அறிவதிலும் முனைப்பு காட்டுகிறார் ஸ்ரீதேவி. கேமராவில் ஒரு பறவையைப் பார்க்கும்போது கண்களால் நேரிடையாகப் பார்ப்பதைத் தவறவிடுகிறோமே என்ற ஆதங்கம்தான் அவரிடம் வெளிப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த இவர் காட்டுயிர் ஒளிப்படங்களை பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்திவருகிறார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக தான் எடுக்கும் படங்களுடன் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்வதை தன்னார்வப் பணியாகச் செய்துவருகிறார்.

அப்பா இட்ட விதை

பள்ளி விடுமுறை நாட்களில் அனைவரும் பொழுதுபோக்குக்காக சுற்றுலாத்தலங்களுக்குத்தான் செல்வார்கள். ஆனால், ஸ்ரீதேவியின் அப்பாவோ காட்டுக்கு அழைத்துசென்றார். அப்படிதான் காடு அவருக்கு அறிமுகமானது. கேரளத்தில் உள்ள சின்னாறு காட்டுக்கு முதன்முதலில் குடும்பத்துடன் ஸ்ரீதேவி சென்றார். அங்கு சென்றபோது திடீரென்று அவருடைய அப்பா காரை நிறுத்தினார். “யானையோட வாசம் வருது.

இங்கே எங்கேயோதான் யானை இருக்கு. தொலைவில் யானையைப் பார்த்தவுடன் அப்பா காரிலிருந்து இறங்கிவிட்டார். திடீரென்று வேறொரு பக்கத்திலிருந்து இன்னொரு யானை வந்தது. எங்களுக்கு காட்டு யானைகளைப் பற்றிய அனுபவம் இல்லாததால், குடும்பத்தினர் அனைவரும் காருக்குள் இருந்தபடியே அழத் தொடங்கினோம். அப்பா ஒடிவந்து காருக்குள் ஏறிய பிறகுதான் எங்களுக்கு மூச்சே வந்தது” என்று தன்னுடைய சிறுவயது நினைவுகளை விவரிக்கிறார் ஸ்ரீதேவி.

இவருடைய அப்பா வால்பாறை, ஆழியாறு, பரம்பிக்குளம், டாப்சிலிப் போன்ற காட்டுப் பகுதிகளில் காட்டுயிர்களைப் பார்ப்பதையே ஓர் ஆரோக்கியமான பொழுதுபோக்காகத் தன்னுடைய குடும்பத்தினருக்குப் பழக்கப்படுத்தியிருக்கிறார். அதை இப்போதுவரை ஸ்ரீதேவியும் தொடர்கிறார்.

நேரில் பார்த்த மகிழ்ச்சி

திருமணம், கணவரின் பணிமாறுதல் காரணமாக திருநெல்வேலியில் குடியேறிய பிறகு தேவியின் பார்வையில் கூடுதல் கவனம் பெற்றவை பறவைகள். “வட கிழக்குப் பருவமழைக் காலத்தில் ஐரோப்பிய கண்டத்திலிருந்து நீளச்சிறகு வாத்து (Garganey), பூநாரை (Greater Flamingo), மங்கோலியாவிலிருந்து வரும் பட்டைத்தலை வாத்து (Barheaded Goose) போன்ற பறவைகளைப் பற்றி அறிந்திருக்கிறேன். முதன்முதலில் அவற்றை திருநெல்வேலி குளங்களில் பார்த்தபோது கிடைத்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க முடியவில்லை” என்கிறார்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திலும் கங்கைகொண்டான் மான் பூங்காவிலும் இவருடைய காட்டுயிர் ஒளிப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் விலங்குகளைக் கணக்கெடுப்பது, குறிப்பிட்ட விலங்குகளைப் பற்றி தகவல்கள் திரட்டுவது போன்ற வேலைகளை வனத்துறையுடன் இணைந்தும் மேற்கொண்டுவருகிறார்.

கட்டுரையாளர் தொடர்புக்கு:mkannanjournalist@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x