Last Updated : 04 Aug, 2015 12:33 PM

 

Published : 04 Aug 2015 12:33 PM
Last Updated : 04 Aug 2015 12:33 PM

அறிவியல் அறிவோம் 21: பூமியின் தூரத்துச் சகோதரி

இரண்டாவது பூமி (பெர்த் 2.0) என்று வானவியலாளர்கள் அழைக்கும் கிரகத்தை நோக்கிய தேடல் வெகு காலமாக நடக்கிறது. அதில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. நாஸாவின் கெப்ளர் கிரக-வேட்டை விண்கலத்தைச் சேர்ந்த வானவியலாளர்கள், இதுவரை கண்டறியப்பட்டிருப்பவற்றிலேயே பூமியுடன் அதிக ஒற்றுமை கொண்டிருக்கும் கிரகம் ஒன்றை தாங்கள் கண்டறிந்திருப்பதாகக் கடந்த வாரம் அறிவித்தார்கள்.

அதுக்கும் இதுக்கும் இடையே

பூமியின் விட்டத்தை விட ஒன்றரை மடங்குக்குச் சற்று அதிகமான விட்டம் கொண்டது அந்தக் கிரகம். அதன் பெயர் கெப்ளர் 452பி. அந்தக் கிரகம் நமது சூரியனைப் போன்ற ஒரு விண்மீனைச் சுற்றுகிறது. சுற்றுப்பாதையை ஒரு தடவை நிறைவு செய்ய 385 நாட்கள் ஆகின்றன. இதனால் மிதமான வெப்பநிலையும், மேற்பரப்பொன்று இருக்குமென்றால், நீரும் இருப்பதற்கு அதில் சாத்தியமுள்ளது.

புதிய கிரகத்தின் அளவை வைத்துப் பார்க்கும்போது, பாறைத்தன்மை கொண்ட கிரகத்துக்கும் நெப்டியூன் போன்ற வாயுக் கோளத்துக்கும் இடையிலான தன்மையில் இந்தக் கிரகம் இருக்கலாம் என்று தோன்றுகிறது. அந்தக் கிரகம் பாறைத்தன்மை கொண்டதாக இருப்பதற்கு 50-லிருந்து 62 சதவீதம் வரை வாய்ப்பு இருப்பதாக, ‘தி அஸ்ட்ரானமிகல் ஜர்னல்’ இதழில் ஜோன் ஜென்கின்ஸ் தெரிவிக்கிறார். இது, அந்தக் கிரகம் சார்ந்துள்ள விண்மீனின் அளவைப் பொறுத்தே அமையும். அப்படியென்றால் பூமியின் நிறையை விட ஐந்து மடங்கு நிறையை அந்தக் கிரகம் கொண்டிருக்கும் என்று பொருள்.

சூரியனுக்கு அண்ணன்

அப்படிப்பட்ட கிரகம் அடர்த்தியான, மேகமூட்டமான வளிமண்டலத்தையும், எரிமலைகளையும், பூமியைவிட இரு மடங்கு ஈர்ப்பு விசையைக் கொண்டிருக்கக் கூடும் என்கிறார் ஜென்கின்ஸ். செய்தியாளர் சந்திப்பின்போது இந்தக் கிரகத்தைப் பற்றி விவரித்த ஜென்கின்ஸ், சாப்மேன் மொழிபெயர்த்த ஹோமரின் இதிகாசத்தை முதன்முதலில் பார்த்த பரவசத்தை விவரித்துக் கீட்ஸ் எழுதிய வரிகளைக் கூறினார்: “வானகத்தை உற்று நோக்குபவர் புதிய கிரகம் ஒன்றைக் கண்டறிந்ததைப் போல நானும் உணர்ந்தேன்.”

இந்தக் கிரகத்துக்கு ஒளியூட்டிக்கொண்டிருக்கும் விண்மீனுக்கு நமது சூரியனைவிட 150 கோடி ஆண்டுகள் வயது அதிகம். சூரியனை விட 20% அதிக ஒளியையும் கொண்டது அது. உயிர் வாழ்க்கைக்கான அறிகுறிகளையும் அது கொண்டிருக்கிறது என்றும் ஜென்கின்ஸ் கூறுகிறார்.

பூமியின் சகோதரி

“கெப்ளர்-452பி-யை பூமிக்கு ஒன்றுவிட்ட, அக்காவாகக் கருதலாம். பூமியின் பரிணாமமடைந்துவரும் சூழலைப் புரிந்துகொள்வதற்கு இது ஒரு வாய்ப்பு நமக்கு” என்கிறார் அவர். “ஒரு விண்மீனைச் சுற்றியுள்ள பகுதிகளுள் உயிர் வாழ்க்கைக்குச் சாதகமாக இருக்கும் ஒரு பகுதியில் 600 கோடி ஆண்டுகள், அதாவது பூமியின் வயதைவிட நீண்ட காலம் இந்தக் கிரகம் இருந்திருக்கிறது என்பதை நினைத்துப்பார்க்கவே வியப்பாக இருக்கிறது. உயிரினம் வாழ்வதற்குத் தேவையான விஷயங்கள், சூழல்கள் இந்தக் கிரகத்தில் இருந்திருக்குமென்றால் உயிரினம் தோன்றுவதற்கு அடிப்படையான வாய்ப்பு அது” என்கிறார் ஜென்கின்ஸ்.

உயிர் வாழ்க்கைக்கான சாத்தியங்களைக் கொண்ட கிரகங்களின் சிறப்புப் பட்டியலில் கெப்ளர் 452பிக்கும் இடம் இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்க வேண்டுமென்றால் அந்தக் கிரகத்தின் நிறையை நேரடியாகக் கணக்கிட வேண்டும். அந்தக் கிரகத்தின் இழுவிசையால் அந்த விண்மீனின் சுழற்சியில் ஏற்படும் தடுமாற்றத்தை உற்று நோக்குவதற்கு ஏதுவான தொலைவிலிருந்து பார்க்க வேண்டும். அதற்குத் தற்போது சாத்தியமே இல்லை. ஏனெனில், கெப்ளர் 452பி பூமியிலிருந்து 1,400 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது.

பட்டியலில் முதலாக..

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் பட்டியலைக் கடந்த வாரம் கெப்ளர் வானியலாளர்கள் வெளியிட்டனர். அதில் இந்தக் கிரகம்தான் முதலாவது. இதுவரை கெப்ளர் விண்கலத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களின் எண்ணிக்கை 4,696-ஐத் தொடுகிறது. இவற்றில் பெரும்பாலானவை பூமியைப் போன்றே சிறியவை. “நாமெல்லாம் இந்தப் பிரபஞ்சத்தின் ரொட்டித் துணுக்குகள்,” என்கிறார் ஜெஃப் காக்ளின். இந்தக் கிரகங்களின் பட்டியலைத் தொகுத்தவர் இவர்தான்.

2009-ல் அனுப்பப்பட்ட இந்த விண்கலம் பால்வெளி மண்டலத்தில் சைக்னஸ், லைரா ஆகிய விண்மீன் தொகுப்புகளுக்கு இடைப்பட்ட பகுதியை அவதானிப்பதில் நான்கு ஆண்டுகளைக் கழித்தது. கிரகங்கள் கடந்துசெல்லும்போது விண்மீன்களின் ஒளி மங்குவதை அந்த விண்கலம் உற்று நோக்கிக்கொண்டிருந்தது. 2013-ல் அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. எனினும் அது திரட்டிய தரவுகளை வானியலாளர்கள் இன்னும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். அந்தத் தரவுகளை ஆராயும்போதெல்லாம் புதுப்புது கிரகங்கள் தலைகாட்டுகின்றன.

உயிர்கள் இருக்கின்றனவா?

இந்தக் கிரகத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியிட்ட செய்தியாளர் சந்திப்பு மிக முக்கியமான தருணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே சமயத்தில்தான் ஜெனீவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மிஷேல் மேயரும் டீடீயெய் கேலோஸும் பூமியிலிருந்து 50 ஒளியாண்டுகள் தூரத்தில் பேகஸி என்ற விண்மீனைச் சுற்றிவரும் ஒரு கிரகத்தைக் கண்டுபிடித்தார்கள். சூரியக் குடும்பத்துக்கு வெளியே சூரியனைப் போன்ற ஒரு விண்மீனுக்குச் சொந்தமான கிரகங்களில் முதல்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் அதுதான். அந்தக் கண்டுபிடிப்புதான் பெரும் வானியல் புரட்சிக்கு வித்திட்டது.

டாக்டர் கேலோஸ் தற்போது இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். செய்தியாளர் சந்திப்பில் அவர், “மகத்தான காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதேபோன்று ஊக்கத்துடன் கடுமையாக உழைத்தால் பிற கிரகங்களில் உயிர்வாழ்க்கை சாத்தியமா என்ற கேள்விக்கு விடைகாணப்பட்டுவிடும்” என்றார்.

10 சதவீதம்

பால்வீதியில் இருக்கும் 20 ஆயிரம் கோடி விண்மீன்களில் பூமியின் அளவில் இருக்கும் கிரகங்களைக் கொண்டிருப்பவை சுமார் 10 சதவீதமாக இருக்கலாம் என்பது கெப்ளர் வானியலாளர்களின் கணக்கீடு. கெப்ளர் 452பி அவற்றுள் ஒன்றாக இருக்கலாம். இவற்றில் 600 விண்மீன்கள் பூமியிலிருந்து 30 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கின்றன. அவற்றில் 60 விண்மீன்களில் பூமி போன்ற கோள்களுக்கான சாத்தியங்கள் இருக்கின்றன. வருங்காலத் தொலைநோக்கிகளின் நம்பிக்கை இந்த விண்மீன்கள்தான்.

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: ஆசை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x