Published : 15 Mar 2020 10:49 AM
Last Updated : 15 Mar 2020 10:49 AM

முன்னோடி மகளிர் 1900- 1999: என்றும் ஒளிரும் விளக்குகள்

தடையில்லாமல் வழுக்கிச் செல்லும் நதியைப் போன்றதன்று பெண்களின் வாழ்க்கை. காட்டாற்றை எதிர்த்துக் கடக்கும் அளவுக்கு உறுதியை வேண்டுவது அது. எதிர்த்து நின்று வென்றவர்கள், பிறருக்கு வழிகாட்டிகளாக நிற்பதுடன் அவர்களின் கைப்பிடித்துக் கரைசேரவும் உதவுகிறார்கள். கடந்த நூற்றாண்டு தொடங்கி இன்றுவரை தங்கள் திறமையாலும் சமூகப் பார்வையாலும் சேவையாலும் குன்றின் மேலிட்ட விளக்காகச் சுடரும் பெண்கள் ஏராளம். அவர்களில் சிலர் அணையா விளக்காக நம் சமூகத்தில் ஒளிபாய்ச்சிக்கொண்டு இருக்கிறார்கள். இருள் நீக்கி ஒளி பெருக்கும் விளக்குகளில் சிலரைப் பற்றித் தெரிந்துகொள்வது உலக உழைக்கும் மகளிர் நாள் கொண்டாட்டத்தை அர்த்தமுடையதாக்கும்.

எழுத்துலக நாயகி- வை.மு.கோதைநாயகி

பெண்கள் எழுதுவது பெரும் பாவமென்று நம்பவைக்கப்பட்ட காலத்திலேயே கற்பிதத்தை உடைத்தவர் வை.மு. கோதைநாயகி அம்மாள். 1901 டிசம்பர் 1 அன்று சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்த இவர், பள்ளிக்கே சென்றதில்லை. புகுந்த வீட்டில் அனைவரும் கல்வியில் சிறந்து விளங்கியதால் கோதைநாயகியும் கற்றுத் தேர்ந்தார். முதல் நாடகத்தை இவர் சொல்ல, தோழி ஒருவர் எழுதினார். பிறகு, பாதியில் நின்றுவிட்ட ‘ஜகன் மோகினி’ இதழை வாங்கி, அதன் ஆசிரியராக 35 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழில் துப்பறியும் நாவல் எழுதிய முதல் பெண் இவர். அரசியல் ஆர்வம் கொண்ட இவர் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து சுதந்திரப் போராட்டத்திலும் பங்கேற்றார். 115 நாவல்களை எழுதியிருக்கும் இவர், அவற்றில் பெண்ணுரிமை, கைம்பெண் மறுமணம் போன்ற புரட்சிகரக் கருத்துகளை முன்மொழிந்திருக்கிறார்.

குறையொன்றும் இல்லை- எம்.எஸ். சுப்புலட்சுமி

மதுரையில் 1916 செப்டம்பர் 16 அன்று குஞ்சம்மாளாகப் பிறந்த அந்தக் குழந்தை பின்னாளில் இசையரசி மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமியானது வரலாறு. எம்.எஸ். என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர், கர்னாடக சங்கீதத்தில் மட்டுமல்ல, இந்துஸ்தானியிலும் நிபுணத்துவம் பெற்றவர். பாட்டி அக்கம்மா வயலின் வித்வான், அம்மா வீணைக் கலைஞர். அதனாலேயே பேசத் தொடங்கியபோதே பாடவும் தொடங்கிவிட்டார். பாரத ரத்னா, ராமன் மகசசே விருதுகளைப் பெற்ற முதல் இசைக் கலைஞர் இவர். 1938-ல் வெளியான ‘சேவாசதனம்’ படத்தில் தொடங்கிய நடிப்பு ஐந்து படங்கள்வரை நீண்டது. இசையறியா மனங்களையும் ஈர்க்கும் தன்மைகொண்ட குரலுக்குச் சொந்தக்காரரான இவர் பெண்களுக்குச் சிறந்த முன்னுதாரணமாக விளங்கினார். இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் இறவாப் புகழ் கொண்டவை.

ஓயாத மக்கள் தொண்டு-கேப்டன் லட்சுமி ஷெகல்

வீரமும் துணிவும் பெண்ணுக்கழகு என்பதை நிரூபித்தவர் கேப்டன் லட்சுமி ஷெகல். 1914 அக்டோடர் 24 அன்று சென்னையில் பிறந்தார். டாக்டர் லட்சுமி சுவாமிநாதனாக இருந்தவர் 1940-ல் சிங்கப்பூரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸைச் சந்தித்த பிறகு கேப்டன் லட்சுமியாக மாறினார். இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவான ஜான்சிராணி குழுவைத் தலைமையேற்று நடத்திய தீரத்துக்குச் சொந்தக்காரர் ஆனார். மருத்துவரான இவர், நாடு விடுதலைபெற்றதும் கான்பூரில் மருத்துவப் பணியைத் தொடங்கினார். புகலிடம் தேடி வந்தவர்களுக்கும் சமூகத்தில் மிகவும் பின்தங்கியவர்களுக்கும் சிகிச்சை அளித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திலும் இணைந்து சமூகநீதிக்கான போராட்டங்களில் பங்கேற்றார். தன் இறுதி மூச்சுவரை சமூகத்துக்காகப் பாடுபட்ட இவர், ‘போராட்டம் தொடரும்’ என்பதையே தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்தார்.

தன்னிகரில்லா நடனம்- பாலசரஸ்வதி

சென்னையின் பெருமிதங்களில் முதன்மையானவர் பாலசரஸ்வதி. ‘சிட்டு’ எனத் தோழிகளால் செல்லமாக அழைக்கப்பட்ட இவர், 1918 மே 13 அன்று பிறந்தார். பாட்டி தனம்மாள் சிறந்த வீணைக் கலைஞர், அம்மா ஜெயம்மாள் சிறந்த பாடகி. இவ்விரு ஆளுமைகளையும் மீறிய தனித்த ஆளுமையாகப் பரதநாட்டியத்தில் தடம்பதித்தார் தஞ்சாவூர் பாலசரஸ்வதி. புறக்கணிப்புகளையும் அவமானங்களையும் தாண்டி, புரவலர்களின் உதவியால் மேடையேறிய இவர், தூற்றிய வாய்களைத் தன் நாட்டியத் திறமையால் வாய்பிளக்க வைத்தார். அபிநயத்திலும் நிருத்யத்திலும் இவருக்கு நிகர் இவரே. ரசிகர்களால் ‘பாலாம்மா’ என அன்புடன் அழைக்கப்படும் இவர் சங்கீத நாடக அகாடமி விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷன், சங்கீத கலாநிதி உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கிறார். இந்தியத் திரைக்கலைச் சிற்பியான சத்யஜித் ராய், பாலசரஸ்வதியைப் பற்றி ‘பாலா’ என்ற தலைப்பில் 1976-ல் ஆவணப்படத்தை இயக்கியிருப்பது இவரது கிரீடத்தில் மற்றுமொரு வைரக்கல்.

எட்டுத்திக்கும் ஒலிக்கும் குரல்- கே.பி. சுந்தராம்பாள்

கொஞ்சிப் பேசும் பெண் குரல்களுக்கு நடுவே கணீர்க் குரலால் கவனம் ஈர்த்தவர் கே.பி. சுந்தராம்பாள். குழறலோ நடுக்கமோ சிறிதுமின்றிக் கம்பீரமாக ஒலித்த அந்தக் குரல்தான் பத்து வயதுச் சிறுமியை நாடக மேடையேற்றியது. 1908 அக்டோபர் மாதம் கொடுமுடியில் பிறந்த இவர், பின்னாளில் திரையுலகே வியந்துபோற்றும் கலைஞரானார். நாடக மேடையில் தன்னுடன் தோன்றிய எஸ்.ஜி.கிட்டப்பாவை மணந்தார். கிட்டப்பாவின் மறைவுக்குப் பிறகு மேடை நாடகத்துக்குச் சில காலம் ஓய்வு கொடுத்தவர், தேடிவந்த திரை வாய்ப்புகளில் தேர்ந்தெடுத்தவற்றில் மட்டுமே தோன்றினார். தமிழ்க்கவியான அவ்வையாரை, சுந்தரம்பாள் வடிவில்தான் தமிழ்ச் சமூகம் தரிசித்தது. நாத்திகரைக்கூடப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தும் வல்லமை கொண்ட பாடல்களைப் பாடியிருக்கிறார். 1951-ல் சென்னை மாகாண சட்டப்பேரவையில் காங்கிரஸ் சார்பில் இடம்பெற்றார். இந்தப் பொறுப்பு வகித்த முதல் திரைக்கலைஞரும் இவரே.

பகுத்தறிவுப் பகலவன்-மூவலூர் ராமாமிர்தம்

பெண்கள் பிழைத்துக் கிடப்பதே பெரும்பேறாக இருந்த காலத்தில் பெண்ணுரிமைக் குரல் எழுப்பியவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். 1883-ல் திருவாரூரில் பிறந்த இவர், பெண்களைச் சிறுமைப்படுத்தி, அடிமைப்படுத்தும் தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர்களில் முதன்மையானவர். தேவதாசிகளின் நிலை குறித்து இவர் எழுதிய ‘தாசிகளின் மோச வலை அல்லது மதிபெற்ற மைனர்’ நாவல் குறிப்பிடத்தகுந்தது. பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அவருடைய சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். பெண்களை அடிமைப்படுத்தும் கொடுமைகளைக் கண்டித்து ‘குடிஅரசு’ இதழில் இவர் எழுதிய கட்டுரைகள் அந்நாளில் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றன. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றார். தமிழகம் முழுவதும் பயணம் செய்து சுயமரியாதைக் கருத்துகளைப் பரப்பினார். அதற்காக பிரச்சார மேடையில் வைத்துத் தன் கூந்தல் வெட்டப்பட்டபோதும் கொண்ட கொள்கையில் உறுதியுடன் இருந்தார். பெண்களின் மறுமலர்ச்சிக்காக ஓயாமல் போராடிய அவரைப் போற்றும்விதமாகப் பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம்’ தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

நமக்குத் தொழில் நாட்டுக்குழைத்தல்- கமலாதேவி

சுதந்திரப் போராட்ட வீராங்கனை, சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி, நாடகக் கலைஞர், அரசியல்வாதி எனப் பல அடையாளங்கள் இருந்தாலும் பெண்கள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரின் நலனுக்காக உழைப்பதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர் கமலாதேவி. இவர் மங்களூரில் 1903 ஏப்ரல் 3 அன்று செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தார். அதனாலேயே இந்தியாவின் தேசியத் தலைவர்கள் பலரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது அவரது சமூகப் பார்வையை விசாலமாக்கியது. சிறு வயதிலேயே சுதேசி இயக்கத்தில் இணைந்தார். 14 வயதில் திருமணம். அடுத்த இரண்டே ஆண்டுகளில் கைம்பெண் கோலம். ஆனால், சமூக நிர்ப்பந்தங்களைப் புறந்தள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். கவிஞர் ஹரீந்த்ரநாத் சட்டோபாத்யாயவை மணந்தார்‌. நாடகங்கள் வாயிலாக விடுதலை உணர்வை ஊட்டினார். சங்கீத நாடக அகாடமியின் உருவாக்கத்தில் பங்கெடுத்தார். மேற்படிப்புக்காக லண்டன் சென்றவர் நாடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்த ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்க இந்தியா திரும்பினார். ஒத்துழையாமை இயக்கப் பேரணியில் பெண்கள் பங்கேற்பதைத் தடுக்கக் கூடாது என்று காந்தியை வலியுறுத்தினார். விடுதலைக்குப் பிறகு இந்தியா முழுவதும் பயணம் செய்து நம் பாரம்பரிய கலைகளை மீட்பதில் ஆர்வத்துடன் பங்காற்றினார். அனைத்திந்திய கைவினைக்கலை வாரியத்தைத் தொடங்கி 20 ஆண்டுகளுக்கு அதை நிர்வகித்தார்.

இணையில்லா அறிவியல் அறிவு

ஜானகி அம்மாள்மலர்களைப் பறித்துச் சூடிக்கொள்ள விரும்பிய பெண்களுக்கு மத்தியில் தாவரங்களை ஆய்வுசெய்தவர் ஜானகி அம்மாள். 1897 நவம்பர் 4 அன்று கேரள மாநிலம் தலச்சேரியில் பிறந்தவர். பெரும்பாலான இந்தியப் பெண்களுக்குத் தொடக்கக் கல்வியே கேள்விக்குறியாக இருந்தபோது அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் முடித்தார் ஜானகி. ஆயிரக்கணக்கான மலர்களின் குரோமோசோம் குறித்து ஆய்வுசெய்திருக்கிறார். அந்தத் திறமைக்கு மகுடம் சூட்டும்விதமாக மாசற்ற வெள்ளையில் அரிதாகப் பூக்கும் மலருக்கு இவரது பெயரைச் சூட்டியிருக்கிறார்கள் (Magnolia Kobus Janaki Ammal). கரும்பின் இனிப்புச் சுவையை அதிகரிக்க இவர் மேற்கொண்ட ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது. சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தனிப்பெண்ணான ஜானகி, ஆய்வுத் துறையில் மட்டுமல்ல சமூகத்திலும் கடந்துவந்த தடைகள் ஏராளம்.Ritintorum

மருத்துவ முதல்வர்- முத்துலெட்சுமி ரெட்டி

பிரசவத்தின்போது பெண்கள் இறப்பது விதி என்று நம்பப்பட்ட சமூகத்தில் இருந்து இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகப் புறப்பட்டார் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. 1886-ல் புதுக்கோட்டையில் பிறந்த இவர், சென்னை மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றிய முதல் பெண் மருத்துவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சைப் பிரிவில் சேர்ந்த முதல் மாணவி ஆகிய பெருமைகளைப் பெற்றவர். சிறந்த கல்வியாளர், சட்ட நிபுணர், சமூக சீர்த்திருத்தவாதி எனப் பன்முகம் கொண்டவர். சென்னை மாகாணசபை உறுப்பினராக இருந்தபோது பெண்களின் திருமண வயதை உயர்த்தும்விதத்தில் சட்டம் நிறைவேறத் துணை நின்றவர். தேவதாசி முறையை ஒழிக்கும் சட்டம் நிறைவேறியதில் இவர் பங்கு முக்கியமானது. ஆதரவற்ற பெண்களுக்காக 1930-ல் அவ்வை இல்லத்தைத் தொடங்கிய இவர், 1954-ல் சென்னை புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கினார். இவரது பிறந்தநாள் நூற்றாண்டைச் சிறப்பிக்கும்விதமாக ஒவ்வோர் ஆண்டும் ‘மருத்துவமனை நாள்’ கொண்டாடப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

வேருக்கு நீர் ஊற்றிய எழுத்து- ராஜம் கிருஷ்ணன்

சமூக அவலங்களுக்கு எதிராக எழுத்தையே வலுவான ஆயுதமாக உயர்த்திப் பிடிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் ராஜம் கிருஷ்ணன். 1925-ல் திருச்சியை அடுத்த முசிறியில் கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே மணம் முடிக்கப்பட்ட இவர், 16 வயதில் எழுதத் தொடங்கினார். 1952-ல் இவர் எழுதிய முதல் கதை ‘ஊசியும் உணர்வும்’ சர்வதேசப் பரிசை வென்றது (நியுயார்க் ஹெரால்டு டிரிபியூன்). இவர் எழுதிய ‘வேருக்கு நீர்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. சமூக அவலம்தான் இவரது எழுத்தின் கருப்பொருள். ‘சேற்றில் மனிதர்கள்’ (விவசாயிகளின் வாழ்க்கை), ‘கரிப்பு மணிகள்’ (உப்பளத்தில் வேலை செய்கிறவர்களின் நிலை), ‘முள்ளும் மலர்ந்தது’ (குற்றம் புரிந்தவனின் திருந்திய வாழ்க்கை), ‘மண்ணகத்துப் பூந்துளிகள்’ (பெண்சிசுக் கொலை) என்று ஒவ்வொரு நாவலும் ஒரு சிக்கலின் முடிச்சைப் பேசும், அந்த முடிச்சை அவிழ்க்கும் மந்திரத்தையும் சொல்லும்.

- க்ருஷ்ணி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x