Published : 15 Mar 2020 10:05 AM
Last Updated : 15 Mar 2020 10:05 AM

அன்றொரு நாள் இதே நிலவில் 49: பெண் பிறந்தால் மரம் நடுவோம்

பாரததேவி

களவாட வந்திருந்த அர்ச்சுனனுக்குச் சோளத்த அள்ளப் பயமாகயிருந்தது. நெசமாவே ஊர்க்காரக சொன்ன மாதிரி இந்தச் சோளத்த அள்ளுனா சாமி ஏதாவது செஞ்சிருமோன்னு பயப்படுதான். அதேநேரம், ‘ஆமா சாமியெல்லாம் இப்படி மத்தவக பொருள களவாண்டா ஏதாவது செஞ்சிருமின்னா நிறய கள்ளப்பயக சாமி உண்டியலவே இல்ல உடைச்சிட்டுப் போறாக. அவுகள சாமி பார்த்துக்கிட்டுத்தான இருக்கு’ன்னு நினைக்கவும் செய்தான்.

அதோட, அவன் அம்மா தினமும் போட்டு வைக்கிற மஞ்ச முடிச்சுல ரொம்ப நம்பிக்கையும் இருக்கு. ‘இம்புட்டு நாளா நம்ப களவாண்டு இருக்கோம் யார் கண்ணுலயாவது பட்டுருக்கோமா? ஏன்னா, அம்மா கும்புடுத சாமி நமக்குத் தொணையிருக்கு. இங்கயும் தொணையிருக்கும். நம்ம பாட்டுக்குச் சோளத்த அள்ளுவோம். அப்படி இந்தச் சாமி என்னதேன் செய்துன்னு பாப்போ’மின்னு நினைச்சவன் சாக்க கையில எடுத்தான். சுத்தியும் முத்தியும் பார்த்தான். அந்த அரை நிலா வெளிச்சத்தில் களத்தோரம் இருக்க பிஞ்சையில வானத்தில் இருக்க நட்சத்திரங்கள் எல்லாம் கீழே வந்து எறங்குன மாதிரி பருத்தி வெடிச்சிப் பூத்துப்போயி கிடக்கு. அது பக்கத்தில நீள நீள கம்பங்கருது நல்லா விளஞ்சி பால்மணம் வீசிக்கிட்டு இருக்கு. இவன் வந்த நேரத்துக்கு அத அறுத்திருந்தான்னா ஒரு சாக்கு அறுத்திருப்பான். இம்புட்டு மன உளைச்சலும் வீரசிங்கசாமிய பத்தி பயமும் இருந்திருக்காது. ஆனா, இந்த அர்ச்சுனனுக்குக் குமிஞ்சிக் கிடக்கிற சோளத்த விட்டுப்போவ மனசில்ல. இந்தச் சாமி அப்படி என்னதேன் செஞ்சிருவாரு, பார்ப்போமின்னு ஒரு வீம்பும் இருக்கு.

விரட்டியடித்தது எது?

கக்கத்தில இடுக்கியிருந்த சாக்க எடுத்தான். வானவெளிப் பொட்டலுக்கு மேகாத்து சிலசிலுன்னு அடிச்சிக்கிட்டு இருக்கு. ஆனா, இவனுக்கு வேர்த்துக் கொட்டுது. இவனைத்தாண்டி ஒரு கூகை அலறிக்கிட்டு ஓடுது. நட்சத்திரமா வெடிச்சிருக்க பருத்திக் காட்டத் தாண்டி இரண்டு நரிககூடப் பேசி வச்ச மாதிரி ஒண்ணுபோல ஊளையிடுதுக. இவனுக்கு முன்னால ஒரு ஊமைக்கோட்டான் பறவை வந்து நின்னுக் கிட்டு இவனையே குறுகுறுன்னு பார்த்துட்டு, கிறீச்சின்னு கத்திட்டுப் பறந்துபோக, இவனுக்கு ஒரு நிமிஷம் ஈரக்கொலையே கலங்கின மாதிரி ஆயிருச்சி. ஆனாலும், என்னதேன் நடக்குன்னு பாத்திருவோமிங்கிற வீம்பு அப்படியே மனசுக்குள்ள பதியம் போட்டு உட்கார்ந்துடுச்சு. கையில் இருந்த சாக்கைக் கீழே வைத்து, பரந்து இருந்த சோளத்தை ஒரு கையால் கூட்டிக் குமித்துக்கொண்டு இருக்கையில் குபீரென்று ஒரு சுழிக்காற்று நிறைய சருகு சண்டுகளோடு ஊசிக்குவியலாக இவனைச் சுற்றிவிட்டு வேகமாய்ப் பறந்துபோனது.

முகம், மூக்கு, வாய், கண்ணெல்லாம் ஒரே தூசியாகப் போனதில் ‘தூ தூ’ என்று சொல்லிக்கொண்டே எழுந்தவன் சுற்றிலும் பார்த்தான். சற்றுமுன் போன சுழிக்காற்றுக்கு மரங்களும் செடிகளும் பேயாட்டம் போட்டன. நெற்றுகள் நிறைந்த வானவ மரம் ஒன்று ‘கலகல’வென்று சிரித்துக் கும்மியடித்தது. இப்போது வானத்திலிருந்த அரை நிலா மேகத்துக்குள் நுழைந்துகொள்ள எங்கும் பரவலான இருட்டு படர்ந்திருந்தது. இதற்கு மேலும் பொறுமைகாக்க முடியாத அர்ச்சுனன் இடக்கையில் சாக்கைத் திறந்தவாறு பிடித்துக்கொண்டு வலக்கையால் சோளத்தைச் சாக்குக்குள் தள்ள முயன்றபோது கட்டை விரலில் சுரீரென்று ஏதோ கடித்தாற்போலிருக்க, கையை உதறினான். கட்டைவிரலில் ஆரம்பித்த வலி சுறுசுறுவென்று உடம்புக்குள் ஏற வலியில் துடித்துப்போனான். பாம்பாக இருக்குமோ என்று அவன் அந்த வலியோடு யோசிக்க, அவனைச் சுற்றிலும் பாம்புகள் நெளிந்துகொண்டு ஓடுவதுபோல் தோன்றியது. மேகத்தில் நுழைந்த நிலா இன்னும் விலகாததால் எங்கும் கனத்த இருட்டாயிருக்க அர்ச்சுனனுக்குள் பயமும் பதற்றமும் திகில் கொண்ட நெருப்பாய் நுழைந்தன. கீழே விழுந்த சாக்கைக்கூட எடுக்க மறந்தவனாய் அங்கே இருந்த வீரசிங்க சாமியைத் திரும்பிப் பார்த்தவாறே ஓடினான். சுரீரென்று முள்ளாய்த் தைத்த வலியும் அவன் கூடவே ஓடியது. அர்ச்சுனன் மட்டும் கொஞ்சம் நிதானமாக உற்றுப் பார்த்திருந்தால் தேள் ஒன்று தன் கொடுக்கைத் தூக்கியவாறு ஓடுவதைப் பார்த்திருப்பான்.

பெண்ணுக்கு மரியாதை

அந்தக் காலத்தில் வீட்டில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று தெரிந்த உடனே அந்தக் குழந்தையின் தந்தை தன் வீட்டுக்கொல்லையிலோ நிலத்திலோ இரண்டு பூவரச மரங்களை நட்டுவிட்டு வருவதோடு, மறக்காமல் தண்ணீர் ஊற்றி வளர்த்துவருவார்கள். அந்தப் பெண் வளர வளர பூவரச மரமும் வளர்ந்துகொண்டே வரும். அது மஞ்சள் மஞ்சளாய்ப் பூப்பதையும் பம்பரக்காயாகக் காய்ப்பதையும் பார்த்து சந்தோசப்படுவார்கள்.

அந்தப் பெண்ணுக்குக் கல்யாணமென்று பரிசம் போட்ட உடனே அந்த ரெண்டு பூவரச மரத்தின் அருகில் பொங்கல் வைப்பார்கள். பிறகு தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி, சாமி கும்பிடுவார்கள். அதோடு அந்த மரத்திலிருக்கும் அகல அகல பூவரச இலைகளைப் பறித்து அந்தப் பொங்கல் சோற்றை வீடு தவறாமல் கொடுப்பார்கள். பிறகு மறுநாள் அந்த இரண்டு மரத்தையும் வெட்டிவிடுவார்கள். பெண்ணுக்குப் பரிசம் போட்டு மூன்று மாதங்கள் கழித்து கல்யாணம் வைப்பதால் இந்த மூன்று மாதங்களுக்குள் அந்த மரமும் காய்ந்துவிடும். அந்த மரத்தில்தான் மணப்பெண்ணுக்குக் கட்டில், உட்காரும் பலா, உப்புமறவை, தயிர்பலா, பருப்பு கடையும் மத்து, பலசரக்குப் பெட்டி, வாசலில் போட்டு உட்கார முக்காலி, சிறுகட்டில் என்று அனைத்தும் செய்து பெண்ணுக்குச் சீர்வரிசையாக அனுப்பிவைப்பார்கள்.

(நிலா உதிக்கும்)

கட்டுரையாளர், எழுத்தாளர் தொடர்புக்கு:arunskr@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x