Published : 15 Mar 2020 10:03 AM
Last Updated : 15 Mar 2020 10:03 AM

நாயகி 08: தடையைத் தாண்டிய ஓட்டம்

ஸ்ரீதேவி மோகன்

எழுத்து அனைவருக்கும் வசப் படுவதில்லை. அது மூளையிலிருந்து செயல்படும் சாதாரண வேலையல்ல; இதயத்திலிருந்து உந்தித் தள்ளப்படும் கலை. படைப்பானது இயல்பான பிரசவம் போன்றது. தானாகவே பிறக்கும் நேரத்தில் அதையொரு குழந்தையைப் போல் வாரி அணைத்துக்கொள்ள வேண்டும். உச்சி முகர வேண்டும். ஆனால், பெண்களுக்கு இந்த சுகம் எளிதில் கிடைத்துவிடுவதில்லை.

யாரைப் பற்றியும் கவலைப்படாமல், நினைத்த நேரத்தில் அமர்ந்து எழுதும் சுதந்திரம் பெண்களுக்கு இன்னும் கிட்டவில்லை. அந்த நாள் கிட்டத்திலும் இல்லை. ஆனால், அதையும் மீறிக் கிடைக்கும் சிறு சிறு வாய்ப்புகளைப் பயன்படுத்தி, கதைகள் எழுதி தன்னை நிரூபிக்கிறாள் ‘தடை ஓட்டங்கள்’ கதையின் (தேவந்தி, ஆசிரியர்: எம்.ஏ. சுசீலாவடக்கு வாசல் பதிப்பகம், மின்னஞ்சல்: vadakkuvaasal@gmail.com) நாயகி.

குடும்பத்தின் சீரான ஓட்டத்தில், சின்னதாக ஒரு அபசுரம்கூடத் தட்டாதபடி எழுதினால் தனக்குப் பிரச்சினை இல்லை என எழுத அனுமதிக்கும் கணவர் ரவி, தொடரும் வீட்டு வேலைகள், குழந்தைகள், குடும்பப் பொறுப்புகள் போன்ற பல தடைகளுக்கு நடுவிலும் மக்கள் மதிக்கும் அளவு சிறந்த எழுத்தாளர் ஆகிறாள் அவள்.

மறுக்கப்படும் அங்கீகாரம்

அமெரிக்காவில் வேலை செய்யும் அவளுடைய மகன் பிரசாத், சிறந்த எழுத்தாளரின் மகன் என்பதால் அங்குள்ள தமிழ்ச்சங்கத்தால் பெருமைப்படுத்தப் படுகிறான். அப்போதுதான் தன் தாயின் இன்னொரு மதிப்புமிக்க பக்கத்தின் அருமையை உணர்கிறான் மகன். “உங்களின் கொஞ்சத்தைத் தள்ளி வைத்துவிட்டுத்தான் எங்களை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள் அம்மா! இனியாவது தொலைத்ததைத் திருப்பி எடுங்கள்” என்று தன் தாய்க்குக் கடிதம் எழுதுகிறான். அந்தச் சூழலில் அவள் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. ஆனாலும், அவள் மீண்டெழுகிறாள். மீண்டும் தன் ஓட்டத்தைத் தொடர நினைக்கிறாள்.

“வீட்டின் அறைக்கதவை அடைத்துக்கொண்டு ‘தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்று போர்டு போடுவது போல சிவப்பு விளக்கை எரிய விட்டுக்கொண்டு எழுத முடிகிறதா என்ன?” எனக் கேட்கிறாள் நாயகி. இது அவளது மனத்தில் ஒலிக்கும் குரல் மட்டுமல்ல, எழுத நினைக்கும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் கொதிக்கும் உலை.

“குடும்பம், குழந்தை, குட்டின்னு வந்தாச்சுன்னா அதோட திருப்திப்பட்டுக்கணும். அதுக்கு மேலே ஒரு பொம்பளைக்கு வேறென்ன?” என்ற இந்தக் கேள்வியை இந்தக் கதையின் நாயகி மட்டுமல்ல, பல பெண்களும் தம் வாழ்வில் கடந்து வந்திருப்பர்.

இதுபோன்ற பல கேள்விகளால் பெரும்பான்மைப் பெண்களின் திறமைகளுக்கு முடக்குவாதம் ஏற்பட்டுவிடுகிறது. கனவுகளுக்கு மலட்டுத் தன்மை வந்துவிடுகிறது. ஆனால், குடும்பத்தினரின் தேவைகளை முழுமைப்படுத்திவிட்ட நிறைவு மட்டும் நமக்குப் போதுமா? நமக்கான தேடல் என்று எதுவுமில்லையா?

இன்றும் எங்கோ ஒரு பெண் அதிகாரி, பெண் விஞ்ஞானி செய்த சாதனைகளை எண்ணி எண்ணி பூரித்துப்போகிறோமே ஏன்? அப்படியெனில் நம்மைத் தடுத்து நிறுத்தும் நங்கூரங்களை மீறிச் சாதிப்பது அவ்வளவு சுலபமானதல்ல என்பதை உணர்ந்ததனால்தானே?

முடியவில்லை, முடியவில்லை என முடங்கிக் கிடப்பதை விடவும் முடிந்தவரை முயன்றுவிட்டால் நம் சாதனைகள் என்றோ ஒருநாள் அங்கீகாரம் பெற்றுவிடும் என்பதை உணர்த்துகிறாள் இக்கதையின் நாயகி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x