Published : 15 Mar 2020 10:02 AM
Last Updated : 15 Mar 2020 10:02 AM

நிகரெனக் கொள்வோம் 08: கறுப்பின் மீது ஏன் வெறுப்பு?

நாம் பெற்றெடுக்கும் பிள்ளைகள் தோற்றத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி நமக்கு ஏராளமான கருத்துகள் உண்டு. அழகுக்கு அதில் முன்னிலை. அழகு என்பது பல நேரத்தில் நிறமாகிறது. அக்கருத்தில் பொதுச் சமூகத்தின் தாக்கமே அதிகம். அந்தக் கருத்து உண்மை நிலையிலிருந்தோ அறிவியல் புரிதலில் இருந்தோ உருவாவதில்லை.

நமக்குப் பிறக்கும் குழந்தை நம்மைப்போல் இருக்கும் அல்லது நம் பெற்றோர், பாட்டி, பாட்டன், முப்பாட்டன், முப்பாட்டி போன்றோரின் உடல்கூறு அமைவுகளைக் கொண்டு பிறக்கும் என்ற இயல்பான புரிதல்கூட நம்மில் பலருக்கும் இருப்பதில்லை. இயல்பை மாற்ற முடியாது. ஆனால், நாம் பெறும் பிள்ளை ஆண்பிள்ளையாக இருக்க வேண்டும், அதைவிட முக்கியம் ஆழகான பிள்ளையாக இருக்க வேண்டும், அதிலும் பெண்பிள்ளை கறுப்பாக இருந்தால் இன்னும் கஷ்டம் என்பது போன்ற சுமைகளை நம்மில் பலர் சுமக்கிறோம். அதேநேரம் பெண்பிள்ளை வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். அழகை மட்டுமே விரும்புகிறவர்களுக்கு மத்தியில் இயல்பை ஏற்றுக்கொள்கிறவர்களும் உண்டு. ஆனால், சிவந்த நிறத்துடன் பிள்ளை வேண்டும் என்பது மறுக்க முடியாத பொதுப் புத்தியாக உள்ளது.

கொஞ்சுவதற்கு, அறிவார்த்தமாகச் செயல்பட, திருமணத்துக்கு, காதலுக்கு எனப் பலவற்றுக்கும் கறுப்பான பெண் தகுதியில்லை என்பதைப் பல வகைகளில் பேசுகிறோம். வெளுப்பான பெண்களைப் பெண்மையின் அடையாளமாக, போற்று வதற்குரியதாக, உயர்ந்த இடத்தைப் பெறுவதாக உணர்வதோடு, பல வகைகளில் தொடர்ந்து அதை வெளிப்படுத்துகிறோம்.

கறுப்பாகப் பிறந்தால்

 கரிக்கட்டையாட்டம் இருக்காளே, எவன் கட்டிக்கப் போறான்?

 கறுப்பி, கரிக்கட்ட, எருமை என்பது போன்ற பட்டப்பெயர்கள் வேறு.

 அவன் கறுப்பா பிறந்து, இவள் வெளுப்பா பிறந்திருந்தாகூட பிரயோஜனம்

 அவ்வளவு குங்குமப்பூ சாப்பிட்டேன். ஆனாலும், கறுப்பாதான் பிறந்திருக்கு. நல்ல வேளை, ஆண் பிள்ளை.

 பொண்ணு கறுப்பா இருப்பதால் அஞ்சு பவுனு நகையைச் சேர்த்துப் போடணும்னு சொல்லிட்டாங்க.

 கறுப்பா இருப்பதால் எந்த மாப்பிளையும் அமையல.

 கலர்தான் இப்படி. ஆனால், அவ பயங்கர அறிவு.

 கலருக்கு ஏத்த டிரஸ் வாங்கணும்னுகூடத் தெரியாது? ஏற்கெனவே லைட்டு போட்டுத்தான் பார்க்கணும்.

வெளுப்பாகப் பிறந்தால்

 பார்வையா லட்சணமா இருக்கு.

 நாலு பேரு பார்ப்பாங்க, மதிப்பாங்க.

 சுலபமா கல்யாணம் ஆகும்.

 தகதகன்னு ராஜா மாதிரி இருப்பான்.

 அவளுக்கென்ன அள்ளிக்கிட்டுப் போக வரிசையில நிப்பாங்க.

சரி, வெளுப்பாக இருந்தால் என்ன வந்துவிடப் போகிறது என்று கேட்டால் பலருக்கும் பதில் சொல்லத் தெரிவதில்லை. வெளுப்பாக இருப்பதற்கும் ஆண்கள் ரசிக்க ஏற்றவளாக இருப்பதற்கும் தொடர்பு இருப்பதைக் கடந்து பெரிதாக யாரும் பதில் சொல்வதில்லை. ஆனால், கறுப்பு நிறக் குழந்தை வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கும் பெற்றோர் பலரைப் பார்க்க முடிகிறது. பெற்றோர் மட்டுமல்ல ஆசிரியர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் எனப் பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம்.

சில வகுப்பறைகளில் இதைப் பற்றிப் பேசினோம். வகுப்பறை உரையாடலில் பொது வாகவே மாணவர்கள் அறிவார்த்தமாகப் பேசுவது குறித்து உரையாடலில் ஈடுபடும் ஆசிரியர்கள் அறிவார்கள். பேச்சோடு முடிக்காமல் எழுதவும் செய்தனர்.

மாணவர்கள் குறிப்பிட்டவை

 கறுப்புக்கு நகை போட்டு கண்ணால பார்க்கணும், செவப்புக்கு நகை போட்டு செருப்பால அடிக்கணும்.

 கறுப்பு அறிவு (எங்கள் ஆங்கில வாத்தியார் கறுப்பு. ஆனால், ரொம்ப அறிவு. எங்களையெல்லாம் மதிப்பார். நல்லா ஆங்கிலம் பேசுவார். எங்களையும் பேசவைப்பார்).

 கறுப்பு உழைப்பு (கறுப்பா இருக்கிறவர்கள் தான் கடுமையாக வேலை செய்வார்கள். தொழிற்சாலை, வயல், வீடுகட்டுவது என எங்கே பார்த்தாலும் கறுப்பு உழைக்கும்)

 கறுப்பாக இருப்பது யாருக்கும் பிடிப்பதில்லை.

 பள்ளியில் நல்லா ஆடத் தெரிகிறதா என்று பார்ப்பதில்லை. பார்க்க சிவப்பாக இருக்கிறோமோ என்றுதான் பார்க்கிறார்கள்.

 அதிகாரிகள், தலைவர்கள் என யார் வந்தாலும் அவர்களை வரவேற்க சிவப்பாக இருக்கிறவர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். அதுவும் மாணவியரைத்தான்.

 சிவப்பாக இருந்தால் படிக்கக்கூட வேண்டாம். வேலையும் செய்ய வேண்டாம்.

இவற்றைத் தவிரவும் பலவற்றைப் பேசினார்கள். நானும் மதுரை மீனாட்சி கல்லூரியில் ஆங்கிலத்துறைப் பேராசிரியராக இருக்கும் நளினியும் சில பள்ளிகளில் எழுதி வாங்கியவற்றை வாசித்து என்ன செய்வதென்ற யோசனையில் மூழ்கி செய்வதறியாமல் திகைத்தோம். சமூகத்துக்கு இதை எப்படிக் கொண்டுசெல்வது? சமூகத்தின் மன நிலையை வியாபாரமாக்கும் அழகு சாதனப் பொருட்களின் வியாபாரத்தைப் புரியவைக்க முடியுமா? அழகு என்கிற கொடுமையிலிருந்து பிள்ளைகளை மீட்பது எப்படி என யோசித்தபோது ஆசிரியர்களும் பெற்றோர்களும் குழந்தைகளிடம் பாடம் கற்கலாம் எனத் தோன்றியது.

குழந்தைகளின் குறிப்பாகப் பெண் குழந்தைகளின் ஆளுமையில் கறுப்பு - வெளுப்பு விஷயங்கள் தடைகளை ஏற்படுத்து கின்றன. அழகுசாதனப் பொருட்களின் வியாபாரம், சினிமா போன்றவை வெளுத்த பெண்களை மையப்படுத்தியே இருக்கின்றன. “என் புள்ள வெளுப்பா, எடுப்பா இருக்குறதால எப்பவும் பத்திரமா வச்சிருக்க வேண்டியுள்ளது” என்று ஆதங்கப்படும் பெற்றோரின் வார்த்தைகளில் பெருமிதமும் ஒட்டிக்கொண்டு இருப்பதை மறுக்க முடியாது.

இப்படியும் யோசிக்கலாம்

என் பிள்ளை என்னைப் போல் கறுப்பாக உள்ளது. என் தாத்தாவைப் போல் பொது நிறத்தில் உள்ளது. எங்களைப் போல் புத்திசாலியாக வாழும். சுத்தம் சுகாதாரம், ஆரோக்கியம் போன்றவை என் பிள்ளைக்கு முக்கியம். குழந்தைகள் நிறத்தால் பேதப்படுத்தப்படக் கூடாது. நம் குழந்தைகளை வளர்க்க பகுத்தறிவு தேவை என்ற உண்மையைப் புரிந்துகொள்ளாமல் அவர்களைக் கடைத்தேற்ற முடியாது. வண்ணங்களைக் கடந்து நம் குழந்தைகளின் நல் எண்ணங்களுக்குள் பயணம் செய்வோம்.

(சேர்ந்தே கடப்போம்)

கட்டுரையாளர், கல்விச் செயற்பாட்டாளர் தொடர்புக்கு: saalaiselvam@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x