Published : 15 Mar 2020 09:54 AM
Last Updated : 15 Mar 2020 09:54 AM

மகளிர் திருவிழா: மகிழ்ச்சிக் கடலில் திளைத்த மதுரை வாசகியர்

கி.மகாராஜன் - ந.சன்னாசி

‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில் மார்ச் 8 ஞாயிற்றுக்கிழமை மதுரையில் மகளிர் திருவிழா நடைபெற்றது. சர்வதேச மகளிர் நாளன்று மதுரை தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்ற விழாவில் ஏராளமான வாசகிகள் பங்கேற்றனர்.

பெண்களுக்கான சட்டங்கள் குறித்துப் பேசினார் மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுச் செயலரும், சார்பு நீதிபதியுமான வி.தீபா. “பெண்களைக் குத்துவிளக்கு என்று சொல்வார்கள். நான் அதை ஏற்க மாட்டேன். ஏனென்றால், குத்துவிளக்கு என்னும் அழகிய மாளிகையில் வாழ்ந்துகொண்டிருக்கும் திரிதான் பெண். தன்னைத்தானே அழித்துக்கொண்டு உலகுக்கு ஒளி தருகிறாள். ஒரு திரி எரிந்தால்தான் ஒரு குடும்பத்தின் இருட்டு விலகும். ஒரு ஊரின், நாட்டின் விளக்குகள் எரியும், வெளிச்சம் கிடைக்கும். ஆனால், பெண்களைச் சமூகம் எப்படி வைத்திருக்கிறது? பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு இன்னல்களுக்குப் பெண்கள் ஆளாக்கப்படுகிறார்கள். முற்காலத்தில் சாமி என்றும் இப்போது அறிவியல் என்றும் பலப் பல காரணங்களை அடுக்கிப் பெண்களை அடிமைப்படுத்தி வருகின்றனர்.

இப்போது பெண்களையும் பெண் குழந்தைகளையும் பாதுகாக்கப் பல்வேறு சட்டங்கள் வந்துவிட்டன. இதனால், நினைத்த நேரத்தில் பெண்களையும் குழந்தைகளையும் யாராலும் சுலபமாகத் தெருவில் தூக்கி வீசிவிட முடியாது.

பெண்கள் உயர்ந்தால் நாடு முன்னேறும். மனிதனை மனிதனாக்குவதும் மனிதனுக்கு வலிமையைத் தருவதும் பெண். நதி எப்படித் தான் போகும் இடத்தையெல்லாம் செல்வச் செழிப்பாக்கிச் செல்கிறதோ, அதைப் போலவே செல்லும் இடம் எல்லாம் நன்மையைச் செய்யும் தேவதைகள்தாம் பெண்கள். இதை மனத்தில் வைத்து அனைவரும் பெண்கள் முன்னேற்றத்துக்குப் பாடுபட வேண்டும்” என்றார் வி. தீபா. பின்னர், பெண்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசுகையில், “இன்றைக்கு உலகம் முழுவதும் செல்போன்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இணையப் பயன்பாட்டு அளவில் 12 சதவீதத்தை மட்டுமே செல்போன் வைத்திருப்பவர்கள் பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள 88 சதவீதத்தைக் குற்றவாளிகள் நமக்கே தெரியாமல் பயன்படுத்திவருகின்றனர். பல விளையாட்டுச் செயலிகள் குழந்தைகளின் மனத்தில் வன்முறையை விதைக்கின்றன. இதனால், செல்போன் செயலிகளைப் பயன்படுத்தும் போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்” என்றார்.

உயர் நீதிமன்றத்திலும் ஒவ்வொரு மாவட்டம், தாலுகா நீதிமன்றங்களிலும் இலவச சட்டப்பணிகள் ஆணைக்குழு உள்ளது. இந்தக் குழு பெண்கள், குழந்தைகள், முதியோர், இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய அனைவருக்கும் இலவசமாகச் சட்ட உதவிகளை வழங்குகிறது. இதைப் பெண்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

துணிச்சலே அழகு

பெண்கள் இன்னல்களில் இருந்து எப்படித் தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்றும் பதற்றமான பொழுதுகளில் எப்படித் துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என்றும் மதுரை அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் டி.கே.லில்லி கிரேஸ் பேசினார். “மக்கள்தொகையில் ஆண்களும் பெண்களும் சம அளவில் இருக்கிறோம். ஆனால், அதிகாரத்தில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. பெண்கள் மிகப் பெரிய சக்தி. ஆனால், அவர்களை மட்டம் தட்டி வைக்க வேண்டும் என நினைத்து அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்றவை பெண்களின் குணங்கள் எனப் பதிவுசெய்தனர். இந்த நான்கு குணங்களுடன் அடங்கிவிடுவது பெண்மையல்ல.

சுதந்திரம், கட்டுப்பாடுள்ள சுதந்திரமாக இருக்க வேண்டும். பயம் கலந்த சுதந்திரம் தேவையற்றது. பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக பெண்கள் இருக்க வேண்டும். பெண்களுக்கு உதவ ஏராளமான சட்டங்கள் உள்ளன. அனைத்துச் சட்டங்களையும் பெண்கள் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பெண்கள் எதற்கும் பயப்படக் கூடாது. பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முதல் பெண் துணிச்சலுடன் புகார் அளித்திருந்தால், அடுத்தடுத்து பெண்கள் பாதிக்கப்படாமல் தடுத்திருக்கலாம். எனவே, பயத்தைப் போக்க வேண்டும். பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்கிற கட்டுக்கதையை ஒழிக்க, சக பெண்களைப் பற்றித் தவறாகப் பேச மாட்டோம் என உறுதியேற்க வேண்டும். போலீஸாரைப் பெண்கள் வேற்றுக் கிரகவாசிகளாகப் பார்க்கின்றனர். மக்களுடன் மக்களாக இருக்கும் போலீஸாரைத் தவறாக நினைக்காமல், எந்தப் புகார் என்றாலும் தயக்கமின்றிக் காவல்துறையை அணுக வேண்டும்” என்றார்.

சுயமரியாதை தேவை

சைபர் குற்றங்கள் அதிகரித்துவரும் வேளையில் பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சொன்னார். பெண்கள் அனைவரும் காவலன் SOS செயலியைத் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று சொன்னதுடன் அதற்கான வழிமுறைகளையும் சொன்னார்.

வாசகியர் பலர் ஆர்வத்துடன் கேள்விகளைக் கேட்டுத் தெளிவுபெற்றனர். “பெண்கள் இப்போது சட்டென முடிவெடுத்துவிடுகின்றனர். விட்டுக்கொடுத்துப் போனால் குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும்” என்று ஒரு வாசகி சொல்ல, மதுரை கே.புதூரைச் சேர்ந்த அகிலாண்டேஸ்வரி தன் எதிர்ப்பைப் பதிவுசெய்தார். “விட்டுக்கொடுப்பதில் தவறில்லை. ஆனால், யார் விட்டுக்கொடுக்கிறார்கள் என்பது முக்கியம். ஏன் பெண் மட்டுமே விட்டுத்தர வேண்டும். இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததால் மனைவியைக் கணவன் கொடுமைப்படுத்துகிறபோது, அங்கே விட்டுக்கொடுத்து வாழ்வதில் என்ன பொருள்? அதைவிட அப்படியொரு வாழ்க்கையே தேவையில்லை எனத் தன் சுயமரியாதையைக் காத்துக்கொண்டு தனியே வாழ்வது நல்லது” என்று அவர் சொல்ல, வாசகியர் கரவொலி மூலம் அதை ஆமோதித்தனர்.

மதுரை மாடக்குளத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஞானேஸ்வரி, இணைப்பிதழ்கள் குறித்த தன் கருத்தைப் பதிவுசெய்தார். ‘பெண் இன்று’ இணைப்பிதழைத் தான் படிப்பதுடன் மறுநாள் கல்லூரிக்கு எடுத்துச் சென்று தன் தோழிகளையும் படிக்கச் செய்வதாகக் குறிப்பிட்டார். தன் சிந்தனையை மெருகேற்றும் விதத்தில் ‘பெண் இன்று’ கட்டுரைகள் அமைந்திருப்பதையும் ஞானேஸ்வரி குறிப்பிட்டார்.

மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியின் கலைப்பிரிவு மாணவிகளின் பரதம், இத்தாலி-எகிப்து நடனங்கள், பறையாட்டம், விழிப்புணர்வு நாடகங்கள் ஆகியவை பார்வையாளர்களைக் கவர்ந்தன. வாசகியர் ஆவலோடு எதிர்பார்த்திருந்த போட்டிகள் தொடங்கியதும் அவர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டது. பலூன் உடைத்தல், இசை நாற்காலி, கண்ணைக் கட்டிக்கொண்டு எதிரே நிற்பவர்களின் முகத்தில் பொட்டு வைத்தல், கண்ணைக் கட்டியபடி ஓவியம் வரைதல், நாணயங்களை வரிசைப்படி அடுக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வென்றவர்களுக்கு மட்டுமல்லாமல் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. சிந்தாமணி ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமிக்குச் சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.

பிற்பகல் நிகழ்ச்சிகளைச் சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளினி தேவி கிருபா தொகுத்து வழங்கினார். மகளிர் திருவிழாவை ‘இந்து தமிழ்’ நாளிதழுடன் லலிதா ஜூவல்லரி, பொன்வண்டு டிடர்ஜென்ட் பவுடர், பிரஸ்டீஜ் குக்வேர், பூமர் லெக்கின்ஸ், ஏஜெஜெ அல்வா, குஷ்பூஸ் பொட்டிக் ஆகியவை இணைந்து வழங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x