Published : 14 Mar 2020 10:47 AM
Last Updated : 14 Mar 2020 10:47 AM

மார்க்ஸிய சூழலியல்: பசுமை என்பது புதிய சிவப்பு

நக்கீரன்

கார்ல் மார்க்ஸ் நினைவு நாள்: மார்ச் 14

பிரிட்டனின் மார்கரெட் தாட்சர் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்த நைகல் லாசன் ஒருமுறை சொன்னார்: 'பசுமை என்பது புதிய சிவப்பு'. அவர் அப்படிக் கூறியதற்குக் காரணம் இருந்தது. சந்தைப் பொருளாதாரம் அங்கு அறிமுகமானபோது, அதற்கு சுற்றுச்சூழல் இயக்கங்கள் பெரும் தடையாக நின்றன. பொதுவுடைமை இயக்கங்களுடன் சுற்றுச்சூழல் இயக்கங்களை ஒப்பிட்டு அவ்வாறு அவர் கூறினார்.

நியாயமாகப் பசுமை இயக்கங்களைவிட பொதுவுடைமை இயக்கங்களே இப்போராட்டங்களில் முன்னணிப் பங்கை வகித்திருக்க வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது. அரசியல், பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட பல தளங்களில் முன்னெடுத்த போராட்டங்களுடன் ஒப்பிடுகையில், பொதுவுடைமை இயக்கங்கள் முன்னெடுத்த சூழலியல் போராட்டங்களின் எண்ணிக்கை குறைவே. அதற்குக் காரணம், ‘மார்க்ஸியத்தின் அரசியல் பொருளாதாரக் கோட்பாடா? மானுட மையச் சிந்தனையா? அறிவியலைத் தீவிரமாக ஆதரிக்கும் மனநிலையா?’ என்று இனியும் பட்டிமன்றம் நடத்துவது ஆகாத செயல். மார்க்ஸின் சூழலியல் பார்வையான ‘வளர்சிதைமாற்றப் பிளவு’ (Metabolic Rift) கோட்பாட்டை முன்னெடுக்க வேண்டிய காலம் இது.

இன்று உலகளவில் பல மார்க்ஸிய சிந்தனையாளர்கள் பசுமை மார்க்ஸியத்தை முன்னெடுத்துவருகின்றனர். கார்ல் மார்க்ஸ்,
பிரடெரிக் எங்கெல்ஸ், சோவியத் காலத்தைய மார்க்சியர்களின் சூழலியல் குறித்த சிந்தனைகளை மீளாய்வு செய்துவருகின்றனர். ஆனாலும், தமிழகப் பொதுவுடைமை இயக்கத்தினரை அவை வந்தடைவதில் ஒரு தேக்கநிலை தென்படுகிறது. பசுமை மார்க்ஸியர்களுள் ஒருவரான ஜான் பெல்லமி ஃபாஸ்டர், மார்க்ஸியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே நிலவும் உறவு குறித்து மூன்றுவிதப் பார்வைகள் நிலவுவதை முன்வைக்கிறார்.

1) மார்க்ஸின் சிந்தனை சூழலியலுக்கு எதிரானது 2) மார்க்ஸ் சூழலியலைப் பேசினாலும், அவருடைய இறுதி தேர்வு, ‘புரோமிதிசியன் பார்வை'யே 3) சூழலியல் குறித்து ஆழமான விழிப்புணர்வை மார்க்ஸ் கொண்டிருந்தார் இவை மூன்றையும் தெளிவுபடுத்தினால்தான், நம் பொதுவுடைமை இயக்கங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே தொழிற்படும் சிந்தனையை மேற்கொண்டு நகர்த்த இயலும்.

மார்க்ஸின் சிந்தனை சூழலியலுக்கு எதிரானதா?

கார்ல் மார்க்ஸின் வாழ்க்கையிலிருந்தே இதைத் தொடங்கலாம். தன் ஆய்வுப் படிப்பை முடித்திருந்த மார்க்ஸ் இளம் ஹெகலியர்களுள் ஒருவராக அறியப்பட்டிருந்தார். இளம் ஹெகலியர்களுக்கு அப்போது பல்கலைக்கழகப் பணி வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருந்தன. எனவே, அவர் இதழியல் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார். 1842-ல், ‘ரெய்னிஷ் ஸய்டுங்’ என்ற இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அதில், முதன்முதலில் அவர் எழுதிய கட்டுரை, ‘சுள்ளிகளைக் களவாடுவது பற்றிய சட்டத்தின் மீதான விவாதங்கள்’ என்பதே. அவருடைய அந்த முதல் கட்டுரையே சூழலியல் பொருண்மை சார்ந்த கட்டுரை என்பது வியப்பான செய்தி.

அதில், ஏழைகள் இயற்கையுடன் பிணைந்து வாழும் உறவு, தனியுடைமையால் துண்டிக்கப்பட்டதை அவர் எடுத்துக்காட்டினார். சூழலியல் பொருளாதாரம் சார்ந்த அக்கட்டுரைக்கு பிறகே, மார்க்ஸ் அரசியல் பொருளாதாரத்தைப் பற்றியே கற்கத் தொடங்கினார் என்கிறார் பெல்லமி ஃபாஸ்டர். சுள்ளிகளைக் களவாடுவது என்ற ஐரோப்பிய பாணிச் சிந்தனையை, பிரிட்டிஷார் இந்தியாவிலும் அறிமுகம் செய்து காடுகளின் மீதான பழங்குடிகளின் உரிமையை ரத்துசெய்தனர். அதை எதிர்த்து பிர்சா முண்டா உள்ளிட்ட பழங்குடிகள் வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தினர்.

அவ்வாறான பழங்குடிகளின் போராட்டங்களுக்குப் பொதுடைமை இயக்கமும் துணை நின்றது. குறிப்பாக, வார்லி பழங்குடிகள் போராட்டத்தில் பங்கேற்ற கோதாவரி பாருலேகர்–சியாம்ராவ் இணையர் தொடங்கி, ராம்ப்பா பழங்குடியினர் போராட்டத்தை நடத்திய அல்லூரி சீதாராம ராஜு வரை நீண்ட வரலாறு அதற்குண்டு. தமிழகத்திலும் பழங்குடிகள் தொடர்பான போராட்டங்கள் பல இன்றளவும் பொதுவுடைமை இயக்கத்தினர் முன்னெடுப்பது நாம் அறிந்ததே.

16 – 17-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவின் அறிவியல் பார்வை என்பது இயற்கையின் ஆதிக்கத்தில் இருந்து மானுடம் தப்புவிப்பதை அனுமதித்தது. இயற்கையும் மானுடமும் எதிரெதிர் நிலையைக் கொண்டவை என்கிற பார்வையைச் சிந்தனையாளர்கள் கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில்தான் மார்க்ஸும் எங்கெல்ஸும், ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யை வரைந்தனர் என்பதை நினைவுக் கொள்ள வேண்டும்.

அதனால்தான், ‘வெற்றி’, ‘ஆதிக்கம்’, ‘வென்று அடிமைப்படுத்துதல்’, ‘தன் அதிகாரத்துக்கு உட்படுத்துதல்’ என்றெல்லாம் இயற்கையை வெற்றிக்கொள்ளுதல் குறித்து அவர்கள் எழுதினர். அதுவே அவர்களை சுற்றுச்சூழலுக்கு எதிரானவர்கள் என்று நிறுத்தப் போதுமான சான்றுகளாக அமைந்தன என்கிறார் பெல்லமி ஃபாஸ்டர்.

அன்று முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளின் வாதத்தைத் தகர்க்க வேண்டிய பொறுப்பு மார்க்ஸுக்கு இருந்ததால், தன் சிந்தனை முழுமையையும் அதை முறியடிக்கவே அவர் செலவிட வேண்டிய தேவையிருந்தது. தவிர, அவருடைய காலத்தில் தற்போதுள்ள அளவுக்குச் சுற்றுச்சூழல் பாதிப்புகள் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனாலும் ஒருவகையில் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் இயற்கையின் தேவையைவிட மானுடத் தேவையின் மீது மையல் கொண்டவர்கள் என்பது உண்மையே என்று ஒப்புக்கொள்ளும் பெல்லமி ஃபாஸ்டர், ஆனால், இருவரின் சொந்த நிலைப்பாட்டில் அது உண்மையாக இருந்ததில்லை என்கிறார்.

இயற்கை ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு

‘இயற்கையின் மீது ஆதிக்கம்’ என்ற கொள்கையைக் கொண்ட தத்துவவாதி பேக்கன், ‘இயற்கையின் மீது ஆட்சி செலுத்துவது என்பது அதனுடைய விதிகளைப் புரிந்துகொண்டு அவற்றைப் பின்பற்றுவதில் வேர்கொண்டுள்ளது’ என்று எழுதியதை, ‘இது முதலாளிய வளர்ச்சிக்காக இயற்கையை ஒத்திசைய வைக்கும் தந்திரம்' எனக் கண்டிக்கிறார் மார்க்ஸ்.

‘இயற்கையிலிருந்தே மனிதர் வாழ்கின்றனர். அதாவது இயற்கை அவர்களது உடலாக உள்ளது. மனிதர் இறவாமலிருக்க அவர்கள் தொடர்ந்து இயற்கையோடு உறவாட வேண்டும்… இயற்கை மனிதருள் இணைந்துள்ளது. மனிதர் இயற்கையின் ஒரு பகுதி' என்கிறார் அவர்.

‘இயற்கையின் மீது மானுட வெற்றிகளை வைத்துக்கொண்டு, நம்மை நாமே அளவு கடந்து புகழ்ந்துகொள்ள வேண்டியதில்லை. இத்தகைய வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மை வஞ்சிக்கிறது' என்கிற எங்கெல்ஸின் புகழ்பெற்ற கூற்றும் பரவலாக அறியப்பட்டது. இருந்தாலும், அவர்களது ‘இயற்கையின் மீதான ஆதிக்கம்’ என்ற கருத்து மானுடமைய வாதமாக மாறியபோது, ‘இயற்கையையோ அதன் விதிகளையோ சிறிதும் பொருட்படுத்த வேண்டியதில்லை’ என்கிற தவறான கருத்தும் இணைந்து உருவாகிவிட்டது.

எனவேதான் மார்க்ஸ் ஒரு ‘மானுடவாதி’ (Specisist) என்கிற குற்றச்சாட்டு சூழலியலாளர்களிடம் நிலவியது. ஆனால், அதே கருத்தியல் பொதுவுடைமை இயக்கத்தினரின் கருத்திலும் நிலவியது கெடுவாய்ப்பே. அதனாலேயே அவர்கள் தம் கொள்கைகளில் சூழலியலுக்கு முதன்மை இடமளிக்கவில்லை. அல்லாவிட்டால் பொதுவுடைமை இயக்கங்கள் சூழலியல் பாதுகாப்பில் உலகளவில் முன்னணியில் நின்றிருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.

மார்க்ஸின் எச்சரிக்கை

மார்க்ஸ்-எங்கெல்ஸின் கண்ணோட்டம், ‘இயற்கை X சமூகம்’ என்பதாக அமையவில்லை. மாறாக, அவை இரண்டுக்குமான உறவில் வளர்சிதைமாற்ற ஊடாட்ட செயல்முறை, ஆற்றல் வாய்ந்த ஒருபகுதியாக இருப்பதைக் காணமுடியும் என்கிறார் பெல்லமி ஃபாஸ்டர். மார்க்ஸ் பின்பற்றிய சூழலியல் பார்வை ‘வளர்சிதைமாற்றப் பிளவு’ (Metabolic Rift) என்பதாகும். இது, லீபிக் என்ற அறிவியலாளர் முன்வைத்தது.

இங்கிலாந்தில் தொழிற்புரட்சியின் அடிப்படையில் நகரமயமாக்கம் தொடங்கியது. அதனால் உணவுப் பொருட்களும் அதனுடன் இணைந்து நுண்சத்துக்களும் நாட்டுப்புறத்திலிருந்து நகர்புறத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. அவை, முன்பு நாட்டுப்புறங்களிலேயே புழங்கியபோது அதன் ஊட்டச்சத்துகளான நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்றவை அங்கேயே மறுசுழற்சிக்கு உட்பட்டு மீண்டும் அம்மண்ணுக்கே அளிக்கப்பட்டன.

ஆனால், நகரமயமாக்கத்துக்குப் பிறகு அவை மானுட விலங்குகளின் கழிவின் வடிவில் நகரத்தில் மாசாக மாறி, நகரத்தை மாசுப்படுத்தின என்றார் லீபிக். அன்றைய லண்டன் நகரில் வசித்த 45 லட்சம் மனிதர்களின் கழிவு தேம்ஸ் ஆற்றில் கலந்து, அதை மாசுபட்ட ஆறாக மாற்றியது.

லீபிக் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் அறிவுசார்ந்த வேளாண்மையின் முதன்மைக் கொள்கையானது, ‘திருப்பி அளித்தல் விதி’ என்பதாக இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டார் மார்க்ஸ். எனவே, மனிதருக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பிளவை ‘வளர்சிதைமாற்றப் பிளவு’ என்றார் அவர். இது முதலாளிய உற்பத்தி முறையில் தவிர்க்க முடியாதது. எனவேதான், வளர்சிதைமாற்றப் பிளவின் விளைவானது இயற்கை வளங்களை மீட்க முடியாத அளவுக்குப் பெரும் அபாயத்தில் சிக்க வைத்துவிடும் என்று எச்சரித்தார் மார்க்ஸ். அது இன்று உண்மையாகிவிட்டது.

ஆனால், மார்க்ஸின் இந்தக் கருத்தியல் பிற்கால மார்க்ஸிய அறிஞர்களாலும் இயக்கத்தினராலும் தொடர்ச்சியாக வளர்த்தெடுக்கப்படாத காரணத்தால் இன்று பசுமைச் கோட்பாட்டுச் சட்டகத்துக்கு வெளியே மார்க்ஸ் நிறுத்தப்பட்டுவிட்டார். இதுவே, மார்க்ஸின் மீதும், மார்க்ஸியத் தத்துவத்தின் மீதும் தவறான புரிதலை உருவாக்க வழிவகுத்தது என இன்றைய பசுமை மார்க்சிய அறிஞர்கள் கருதுகின்றனர்.

மார்க்ஸுக்கு புரோமிதிசியப் பார்வை இருந்ததா?

புரோமிதிசியப் பார்வை என்பதை, ‘தொழில்நுட்ப ஆதரவு அல்லது சுற்றுச்சூழல் எதிர்ப்புப் பார்வை’ என்று சுருக்கமாகப் புரிந்துகொள்ளலாம். மார்க்ஸ் புரோமிதிசியப் பார்வையுடையவர் என்பது பொதுவான குற்றச்சாட்டு. ஆனால், ‘பிரவுதானின் பொருளாதார முரண்பாடுகளின் ஒருங்கமைவு' பற்றிய தனது விமர்சனத்தில், புரோமிதிசியப் பார்வையைக் கண்டித்து, வேறு எவரையும்விட மார்க்ஸ் கடுமையாக எழுதியுள்ளார். ஆனாலும், தொழில்நுட்ப புரோமிதிசியத்துக்காக அவர் தொடர்ந்து தாக்கப்பட்டார் என்று சுட்டிக்காட்டுகிறார் ஃபாஸ்டர்.

இத்தனைக்கும், ‘இயற்கையிலிருந்து அறிவியல் தொடங்கினால் தான், அது உண்மையான அறிவியலாக இருக்கும்' என்ற இயற்கை சார்ந்த பொருள்முதல்வாதத்தைத் தெளிவாக முன்வைத்தவர் மார்க்ஸ். அறிவியல் மட்டுமன்றி, மனித உழைப்பின் அந்நியமாதல் என்கிற கருத்தும் தொடக்கத்திலிருந்தே இயற்கையிலிருந்து மனிதர் அந்நியமாதல் என்ற தவறான புரிதலுடன் தொடர்புபடுத்தப்பட்டிருந்தது.

ஆனால், இந்தக் கருத்தோடும் மார்க்ஸ் வேறுபடுகிறார். இயற்கையின் பங்களிப்பை மறுத்து, உழைப்பு மட்டும்தான் செல்வத்தின் ஒரே மூலாதாரம் என்கிற இயற்கை கடந்த பார்வையைக் கொண்டிருந்ததற்காக ஜெர்மன் சோசலிசவாதியான ஃபெர்டினன்ட் லாசெல் என்பவரைத் தீவிரமாக விமர்சித்தவர் மார்க்ஸ். உழைப்பு என்பது மனிதர் - இயற்கை இருவரும் இணைந்து பங்கேற்கும் செயல்பாடு என்பதை ‘கூலியுழைப்பும் மூலதனமும்' என்ற கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

மார்க்ஸின் இந்தச் சூழலியல் பார்வை தொடக்க கால சோவியத் ஒன்றிய ஆட்சியில் பிரதிபலித்துள்ளது. வரைமுறையற்ற உற்பத்தியில் லெனின் உறுதியாக இருந்தார் என்பது பொதுவான கருத்து. ஆனால், இயற்கை மதிப்புக்குரியது என்று கருதியவராக அவர் இருந்துள்ளார். ‘சபோவெட்னிகி’ (Zapovedniki) என்ற இயற்கைப் பாதுகாப்புத் திட்டம் ஒன்றை அவர் உருவாக்கியது துணிச்சலான செயல். ‘பாதுகாக்கப்பட்ட இயற்கை’ என்று அதைப் பொருள் கொள்ளலாம். அதன்படி, வேட்டை, காடுபடுபொருட்கள் சேகரித்தல், சுற்றுலா அனைத்தும் தடை செய்யப்பட்டன. இயற்கையின் சமநிலையை உறுதிப்படுத்தல், உயிர்ப் பன்மையை நிலைப்படுத்தல் ஆகியவையே அதன் நோக்கம். சுருக்கமாகச் சொன்னால், பொருளாதார நோக்குக்காக இயற்கை பலி கொடுக்கப்படவில்லை.

(அடுத்த வாரம் நிறைவடையும்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x