Published : 13 Mar 2020 09:57 AM
Last Updated : 13 Mar 2020 09:57 AM

திரை வெளிச்சம்: குழப்பங்களின் பிடியில்..!

திரை பாரதி

கரோனா வைரஸ் தாக்குதலின் பதற்றத்தை ஒன்றுமில்லை என்று எண்ண வைத்துவிட்டன சமீபத்திய தமிழ்த் திரையுல நிகழ்வுகள். ஒரு பக்கம், காஷ்மீரிலும் கேரளத்திலும் கரோனா தடுப்பு நடவடிக்கையாகத் திரையரங்குகளை மூடி உத்தரவிட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலோ, தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்களே முன்வந்து தங்கள் கூட்டமைப்பின் சார்பில் ‘வரும் மார்ச் 27-ம் தேதி முதல் புதிய பட வெளியீடு இருக்காது’ என்று அறிவித்திருக்கிறார்கள். கரோனா பயம் தீவிரமாக இல்லை என்ற நிலையில் எதற்காக இந்தத் திடீர் தடா?

விஜயின் ‘மாஸ்டர்’, சூர்யாவின் ‘சூரரைப் போற்று’, நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்கள் கோடை விடுமுறை வசூலைக் குறிவைத்து வரிசையாக வெளியீட்டுத் தேதியை முடிவுசெய்திருக்கும் இந்த நேரத்தில் அவற்றைத் தடுத்தால்தான் தங்கள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று அவர்கள் நினைத்தி ருக்கிறார்கள். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற ஒன்று தற்போது இருந்தும் இல்லாமல் இருப்பது, விநியோகஸ்தர்களின் தயக்கமின்மைக்குக் காரணம் என்றாலும், அவர்கள் முக்கியக் காரணம் என்று சொல்வது சினிமா டிக்கெட்டுகளின் மீதான டி.டி.எஸ், கேளிக்கை வரிச்சுமை.

வருமானத்துக்கு வரி

‘விநியோகஸ்தர்கள் படங்களை விநியோகித்து அதன் மூலம் வரும் வருவாய்க்கு விதிக்கப்படும் 10 சதவீத டி.டி.எஸ் (TDS) வரியை முற்றிலுமாக ரத்துசெய்ய வேண்டும் என்றும், இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும்’ என்று முதல் கோரிக்கையை வைத்திருக்கிறார்கள்.

அதேபோல், தற்போது நடைமுறையில் இருக்கும் திரையரங்க நுழைவுக் கட்டணங்களுக்கான ஜி.எஸ்.டி (12%) வரியுடன் கூடுதலாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு எல்.பி.டி எனும் (8%) கேளிக்கை வரியை தனியே செலுத்துவதால் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்களுக்கும் இது கூடுதல் சுமையாக அமைகிறது என்றும் எனவே, அந்த வரியையும் (8%) முற்றிலும் ரத்து செய்யத் தமிழக அரசு முன்வர வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

முன்னணிக் கதாநாயகர்களின் படம் வெளிவரும்போது கேளிக்கை வரியாகக் கோடிகளில் வருமானம் வருவதை அரசு இழக்க விரும்புமா என்பது தெரியாத நிலையில், வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலை ஒட்டிக் கேளிக்கை வரியில் சலுகையைப் பெற்றுவிட முடியாதா என்ற அவர்களின் முனைப்பும் ஆதங்கமும் தெரிகின்றன.

தணிக்கையும் ரசனையும்

பெரிய படங்களுக்கான வெளியீடுகளில் இப்படிச் சிக்கல் முளைத்திருக்கிறது என்றால், கருத்துச் சுதந்திரத்துடன் செயல்படும் படைப்பாளிகளுக்குத் தமிழ் சினிமாவில் தணிக்கையும் அரசியலும் புதிய சவால்கள் ஆகியிருக்கின்றன. சமீபத்தில் வெளியான ‘திரௌபதி’, ‘ஜிப்ஸி’ ஆகிய இரண்டு படங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். ஒரு பக்கம் சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் வலியைப் பேசும் திரைப்படங்கள் அதிகரித்திருக்க, அவற்றுக்கு எதிர்நிலையில் நின்று ‘நாடகக் காதல்’ என்ற ஒன்றை சித்தரிக்க முயன்ற ‘திரௌபதி’ படம் கவனத்தைப் பெற்றிருக்கிறது.

இந்தப் படம் இதுவரை பத்துக் கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்துக்கொண்டிருப்பது பார்வையாளர்கள் மத்தியில் சாதி எப்படி வினையாற்றுகிறது என்பதைப் பட்டவர்த்தனமாகக் காட்டியிருக்கிறது. இதற்குமுன் சாதிப் புகழ்பாடும் படங்களும் கதாபாத்திரங்களும் தமிழ்த் திரைப்படங்களில் இடம்பெற்றிருந்தாலும், இந்தப் படம் உருவாக்கியிருக்கும் அலை, சினிமா எனும் கலையை அதன் அடிப்படையான நோக்கத்திலிருந்து கீழிறக்கக் கூடியது என்ற நடுநிலை விமர்சனங்கள் கவலையுடன் குவிந்து வருகின்றன.

அதேபோல் மத அடிப்படைவாத அரசியலின் விளைவுகள் பற்றிப் பேசிய ‘ஜிப்ஸி’ திரைப்படம் ஓராண்டுக்கு முன்னரே தயாரானபோதும் தணிக்கை, மறுதணிக்கை, தணிக்கை நடுவர் மன்றம் என இழுத்தடிக்கப்பட்டது. எந்தத் தீர்வும் கிடைக்காத நிலையில் 40க்கும் அதிகமான வெட்டுகள், சமூகத்தின் ஒரு தரப்பைச் சுட்டுகிறது என்ற காரணத்துடன் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளின் வண்ணத்தைக் கறுப்பு வெள்ளையாக மாற்றியது எனத் தனது படைப்பின் முழுமையை இழந்து திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெறமுடியாமல் போய்விட்டது. அரசியல் சார்ந்த விஷயங்களைப் படைப்பாளிகள் தொட்டால், அது ஆளும் வர்க்கத்துக்கு எதிர்நிலையில் இருந்தால் இங்கே அசலான அரசியல் சினிமாவே இனி எடுக்க முடியாதா என்ற கேள்வியைத்தான் சிறகொடிந்த ‘ஜிப்ஸி’ எழுப்பியிருக்கிறது.

ஆட்டி வைக்கிறதா அரசியல்?

படங்களில் எதிரொலிக்கும் அரசியலுக்கே இந்த நிலை என்றால், நேரடியாக அரசியலில் இறங்க நினைக்கும் முன்னணி நடிகர்களின் நிலை இன்னும் இக்கட்டாக மாறிக்கொண்டு வருகிறது.

கிட்டத்தட்ட சினிமா ஓய்வு பெறல் என்ற இடத்துக்கு வந்துவிட்ட ரஜினியின் அரசியல் அறிவிப்பு வழக்கம்போல் விவாதங்களைக் கிளப்பிக்கொண்டிருக்க, தற்போது வசூல் நாயகர்களாக இருக்கும் விஜய் போன்ற நடிகர்கள் தங்கள் படங்களில் அரசியல் கருத்துகளைப் பேசினாலும் அது பல வகைகளில் பிரச்சினைக்கு உள்ளாவது ‘சர்கார்’, ‘பிகில்’ தொடங்கித் தொடர்ந்து நடந்துவருகிறது.

விஜய் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரிச் சோதனைகளின் பின்னால் ஆட்டி வைக்கும் அரசியல் இருப்பதாகப் பேசப்பட்ட நிலையில், அவர், நடித்திருக்கும் ’மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. ‘அதில் விஜய்சேதுபதி வேண்டுமானால் விரிவாகப் பேசலாம்; விஜய் படத்தைப் பற்றிக்கூடப் பேசுவாரா என்பது சந்தேகம்தான். அவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகப்பட்டிருக்கிறார்’ என்கிறார்கள்.

இன்னொரு பக்கம், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்களின் முடிவில் எதிர்க்கட்சித் தலைவரைப் போய்ப் பார்த்து பூங்கொத்து கொடுத்தார் என்பதற்காகவே இரண்டு சங்கங்களிலும் செயல்பட முடியாத நிலைக்கு விஷால் தள்ளப்பட்டார் என்றும் விவாதிக்கப்பட்டது.

இருப்பினும், தற்போது தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் இரண்டு அமைப்புகளும், நீதிமன்றத் தீர்ப்பு, தேர்தல் மூலம் மீண்டு எழும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இவை மீண்டு எழுந்தால்தான் தமிழ்த் திரையுலகம் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கும் நிலையிலிருந்தும் குழப்பங்களின் பிடியிலிருந்தும் மீள முடியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x