Last Updated : 16 Aug, 2015 12:46 PM

 

Published : 16 Aug 2015 12:46 PM
Last Updated : 16 Aug 2015 12:46 PM

பார்வை: ஒரு அகல்யாவும் பல இந்திரன்களும்

தன் கணினித் திரையின் சுவரை அலங்கரிக்கும் படத்தை அடிக்கடி மாற்றும் பழக்கம் கொண்டவர் அவர். அந்தந்தக் காலங்களில் முன்னணியில் இருக்கும் ஒரு கதாநாயகியின் படத்தையே பெரும்பாலும் அவர் தேர்ந்தெடுப்பார். அவரது கணினித் திரையை இப்போது அலங்கரிப்பது ராதிகா ஆப்தேயின் படம். “ரஜினி படத்தில் அவர் நடிப்பதாக அறிவிப்புதான் வந்திருக்கிறது. அதற்குள் ராதிகா ஆப்தேவுக்கு இந்த இடமா?” என்று கேட்டால் சிரிக்கிறார். “ரஜினி படத்துக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை” என்றவர், “அகல்யா” என்று கண்களில் ஒளி வீச பதில் அளித்தார்.

கூகுள் தேடுபொறியில் அண்மையில் அதிகம் தேடப்பட்ட நடிகைகளில் ராதிகா ஆப்தேயின் பெயரும் இருப்பதை அறிய முடிகிறது. ரஜினி பட அறிவிப்பு வருவதற்கு முன்பே ராதிகா கூகுளின் செல்லப்பிள்ளையாகிவிட்டார். காரணம், அகல்யா.

14 நிமிடங்கள் ஓடும் ‘அகல்யா’ என்னும் குறும்படம் ராதிகாவின் புகழைப் பல மடங்கு பரப்பிவிட்டது. திரையரங்குகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் வெளியாகாமல், யூடியூப் தளத்தில் வெளியாகிய இந்தப் படம் அசாத்தியமான வரவேற்பைப் பெற்றது. லட்சக்கணக்கானவர்கள் பார்த்த இந்தப் படம் சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கில் பகிர்ந்துகொள்ளப்பட்டது. ராமாயணத்தில் வரும் அகலிகை கதையை நவீன பார்வையுடன் மறுவாசிப்பு செய்யும் படமாக இதைச் சொல்லலாம். அகல்யா, கௌதமன், இந்திரன் எனப் பாத்திரங்களின் பெயர்கள் அப்படியே இருக்க அவர்கள் நடந்துகொள்ளும் விதமும் அவர்களுக்கு நடக்கும் அனுபவங்களும் மாறுகின்றன.

காவல்துறை அதிகாரி இந்திரன் கௌதமன் வீட்டுக்கு ஒரு விசாரணைக்காக வருகிறார். கௌதமனின் மனைவி அகல்யா கதைவைத் திறக்கிறார். பார்த்த மாத்திரத்தில் அகல்யாவின் அழகு இந்திரனைக் கிறங்கடிக்கிறது. படத்தை எல்லோரும் பார்த்திருப்பார்கள் என்பதால் விரிக்க வேண்டிய அவசியமில்லை. கணவன் கௌதமனின் உருவில் அகல்யாவுடன் உறவுகொள்ள விழைந்த இந்திரன் கல்லாகிவிடுகிறான் என்பதுதான் 14 நிமிடப் படத்தின் அதிரவைக்கும் முடிவு.

ராமாயணக் கதையில் இந்திரன், கௌதமனின் உருவில் வந்து அகலிகையை ஏமாற்றுவான். இதை அறிந்த கௌதமர் ஏமாற்றிய இந்திரனை மட்டும் தண்டிக்காமல், ஏமாற்றப்பட்ட அகலிகையையும் சேர்த்தே தண்டிக்கிறார். பிற ஆடவன் தன்னைத் தொடுவதை அறிந்துகொள்ளாமல் இருந்ததற்காக அவளைக் கல்லாகிவிடும்படி சபிக்கிறார். சுஜாய் கோஷ் இயக்கியுள்ள ‘அகல்யா’வில் தவறு செய்ய முனைந்தவன் கல்லாக்கப்படுகிறான். கல்லாக வேண்டியவர்கள் காமுக எண்ணம் கொண்ட, பிறன் மனை விழையும் இந்திரர்கள்தான், குற்றமற்ற அகல்யாக்கள் அல்ல என்பதை அனாயாசமாகச் சொல்லிவிடுகிறது இந்தப் படம்.

இந்தப் படம் வந்த பிறகு இந்தப் படத்துக்கு இணையாக அகல்யாவாக நடித்த ராதிகா ஆப்தேயும் பிரபலமானார். படத்தில் வந்த இந்திரனைப் போலவே பலர் அவர் அழகில் மயங்கி கூகுள் தேடுபொறியில் அவரைப் பற்றிய செய்திகளையும் படங்களையும் தேடினார்கள். ஜூலை 20 அன்று படம் யூடியூபில் வெளியானது. ஜூலை 22 அன்று கூகுளில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் அப்துல் கலாமுக்கு அடுத்த இடத்தில் ராதிகா ஆப்தே இருந்தார். ஆயிரக்கணக்கானவர்கள் அவரைத் தேடு தேடென்று தேடியிருக்கிறார்கள்.

படத்தில் அகல்யாவின் அழகில் மயங்கிய இந்திரன் கல்லானான். பிறன் மனை நோக்காப் பேராண்மையை வலியுறுத்திய இந்தப் படம், அகல்யாவைக் கண்டு மயங்கிய இந்திரர்களை அதிகரிக்கச் செய்திருப்பது நகைமுரண்தான். இந்திரர்கள் அகல்யாக்களைப் பார்க்கும் விதம் மாறவே மாறாதா என்னும் கேள்வியை வலுவாக எழுப்புகிறது ஆண்களின் போக்கு. ஒவ்வொரு ஆணுக்கும் தனக்குள் இருக்கும் இந்திரனை இந்தப் படம் அடையாளம் காட்டிவிட்டது என்று இதைப் புரிந்துகொள்ளலாமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x